சீரகம் அறிந்ததும் – அறியாததும்!! (மருத்துவம்)
சீரகம் செரிமானத்துக்காக உணவில் சேர்க்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதுவே, அளவுக்கு அதிகமானால், செரிமான கோளாறுகளை உண்டு பண்ணும் என்பது பலரும் அறிந்திடாத விஷயமாகும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, சீரகத்தை அதிகமாக எடுத்துக் கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
சீரக விதைகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது செரிமான பிரச்னைகளுக்கு காரணமாகவும் அமைந்துவிடுகின்றன. அதுமட்டுமல்லாது, இரைப்பை பகுதியில் அதிக வாயு வெளியேற்றத்திற்கு காரணமாகி, நெஞ்சு எரிச்சலுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றன.
சீரக விதைகளில் உள்ள அதிகப்படியான கார்மினேட்டிவ்விளைவு, ஏப்பங்களை அதிகளவில் ஏற்படுத்த காரணமாக அமைகின்றன. சீரக விதைகளை நாம் அதிகளவில் நீண்ட காலம் தொடர்ந்து பயன்படுத்தி, வந்தால், அதில் உள்ள எளிதில் ஆவியாகும் தன்மை கொண்ட எண்ணெய், நமது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. பெண்கள், தங்கள் கர்ப்ப காலத்தில் சீரகத்தை அதிகம் பயன்படுத்தி வந்தால் அது கருச்சிதைவை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளது.சீரக விதைகளை அதிகம் நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் பட்சத்தில், மனப்பிறழ்வு, மயக்கம் மற்றும் குமட்டல் உணர்வுகள் ஏற்படும்.
சீரகத்தை அதிகம் சேர்த்துக் கொள்ளும்பட்சத்தில், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி காலத்தின்போது அதிக உதிரப்போக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உணவில் சீரகம் அதிகரிக்கும் பட்சத்தில், அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை திடீரென்று பாதியாக குறைத்துவிடும். இதனால், வேறு சில பிரச்னைகள் தோன்றக்கூடும். எனவே நீரிழிவு குறைபாடு கொண்டவர்கள், தங்களது உணவில் அதிகளவில் சீரகத்தை சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
பாலூட்டும் தாய்மார்கள், கட்டாயம் தங்களது உணவில் அதிக அளவில் சீரகம் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது பால் சுரப்பை பெருமளவில் குறைத்துவிடும். அதற்காக சீரகத்தை உணவில் சேர்த்துக் கொள்வதை முற்றிலும் தவிர்த்து விடக் கூடாது. அதுவும் செரிமான கோளாறை ஏற்படுத்தக் கூடும். அதனால், எதுவும் அளவோடு இருந்தால் ஆபத்து இல்லை.