சுவாச நோய்களை தடுக்கும் மூலிகை காபி!! (மருத்துவம்)
இயற்கை முறைப்படி நோய் வராமலும், நோய்கள் ஏற்படும் நிலையில் அதிக மருந்துகள் இல்லாமலும் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள சில எளிய நடைமுறைகளை கையாண்டால் போதும். நோயின்றி ஆயுளை காத்துக் கொள்ள முடியும்.தினமும் காலையில் மூலிகை காபி குடித்து பழகிக் கொள்ள வேண்டும். மூளையின் நரம்பு மண்டலத்தைத் தூண்டி தற்காலிகமாக புத்துணர்ச்சி தரும் பால் சேர்ந்த காபி, டீ குடிப்பதை முழுவதுமாக நிறுத்திக் கொண்டு, மாறாக சுக்கு, மிளகு, தனியா, துளசி ஆகியவற்றை வீட்டிலேயே அரைத்துத் தூளாக்கி வைத்துக் கொண்டு, அதைக் கொண்டு காபி தயாரித்து குடியுங்கள். இதில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்துக் கொள்வது மிகுந்த பயனைத் தரும். சளி, இருமல், இரைப்பு உள்ளிட்ட சுவாச நோய்கள் நெருங்காது. காபி, டீ குடிப்பதால் நரம்பு மண்டலம் தொடர்ந்து தூண்டப்பட்டு நாளடைவில் அது பலவீனமாகி விடுகிறது. இதை மூலிகை காபி தவிர்த்து விடும்.
மூலிகை காபியை விரும்பாதவர்கள் எலுமிச்சை சாறில் தேன் கலந்து தினமும் காலையில் குடிக்கலாம். ஒரு கப் வெந்நீரில் அரை எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து எலுமிச்சை – தேன் சாறு தயாரித்து குடிக்க வேண்டும். எலுமிச்சை மூலம் வைட்டமின் – சி உள்ளிட்ட சத்துக்கள் கிடைக்கும். தேன் கலப்பதால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும். சளி, இருமல் பிரச்னை வராது. மேலும் சளியையும் வெளியேற்றும். தினமும் மூலிகை காபி குடிப்போம், நோயின்றி நலமுடன் வாழ்வோம்.
– அ.சித்ரா, காஞ்சிபுரம்.
கோலத்தின் மனோ சக்தி
அன்னதானம் செய்தால் புண்ணியம். அதிலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தால் பெரும் புண்ணியமாகும். வசதி படைத்த செல்வந்தர்கள், அக்காலத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்துள்ளார்கள். ஏழை மக்களும் பல உயிர்களுக்கு அன்னதானம் செய்ய ஏற்பட்டதே பச்சரிசி மாவில் கோலம் போடும் முறையாகும்.
பச்சரிசி மாவினால் கோலம் போட்டால் அந்த மாவை ஆயிரக்கணக்கான எறும்புகள் சாப்பிடும். மேலும் மாவை தங்கள் வளைகளில் எடுத்துச் சென்று சேமித்து வைக்கும். ேகாலம் போடுவதில் இன்னொரு தத்துவமும் அடங்கி உள்ளது. பல புள்ளிகள் வைத்து, பல வடிவங்களில் போடப்படும் கோலம் பார்ப்பவரின் மனதைக் கவரும். சண்டையிட வேண்டும் என்ற எண்ணத்துடன் வீட்டுக்கு வரும் நபர், அழகான கோலத்தைப் பார்த்தவுடன் கோபம் தணிந்து வீட்டுக்குள் வருவார். இப்படிப்பட்ட மனோவசிய சக்தி கோலத்துக்கு உண்டு என்பதை உணர்ந்தே நம் முன்னோர்கள் கோலம் போடுவதை வழக்கமாக்கி உள்ளனர். அரிசி மாவில் கோல மிடுவோம். புண்ணியம் அடைந்து செல்வச் செழிப்புடன் வாழ்வோம்.