மடோனா செபஸ்டீன்-ஃபிட்னெஸ் டிப்ஸ்!! (மருத்துவம்)

Read Time:6 Minute, 8 Second

மலையாளத்தில் 2015 -ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் திரைத்துறையில் நாயகியாக அறிமுகமானவர் மடோனா செபஸ்டீன். விஜய் சேதுபதி நடித்த ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார். இப்படம் நல்ல வரவேற்பை பெற அதனையடுத்து ப.பாண்டி, கவன், ஜூங்கா, வானம் கொட்டட்டும், ஷியாம் சிங்க ராய், கொம்பு வெச்ச சிங்கம்டா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் போன்ற மற்ற மொழி படங்களையும் தேர்வு செய்து தனது இயல்பான நடிப்பால் திறமையை நிரூபித்து வரும் மடோனா செபஸ்டீன் தற்போது, தமிழில் லியோ, மலையாளத்தில் இரண்டு படங்கள், தெலுங்கில் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார். மடோனா தனது ஃபிட்னெஸ் குறித்து பகிர்ந்து கொள்கிறார்:

ஒர்க்கவுட்ஸ்

பள்ளி பருவத்திலேயே திரைத்துறைக்குள் நுழையும் வாய்ப்பு கிட்டியது. எனது ஆரம்பகால சினிமா பயணத்தை பாடகியாக வேண்டும் என்ற கனவுடன் தான் தொடங்கினேன். ஆனால், விதிவசத்தால் நடிகையானேன். நடிகையாக களமிறங்கியதும்தான், ஒரு நடிகை உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியமானது என்பதை தெரிந்து கொண்டேன். அது முதல் எனது ஒர்க்கவுட் பயிற்சிகளும் தொடங்கியது.

தினமும் குறைந்தது ஒரு மணிநேரமாவது ஒர்க்கவுட் பயிற்சிகளை மேற்கொள்ளுவேன். இத்தனை வேலை பளுவுக்கும் இடையில் இப்படி எனக்காக ஒரு மணி நேரத்தை ஒதுக்குவது மனதை ரிலாக்ஸாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

உடற்பயிற்சி வழக்கம்

அரைமணி நேரம் தீவிரமான நடைப்பயிற்சி. பின்னர், ஸ்ட்ரெச் பயிற்சி தொடங்கி யோகா, நடனம் என தொடரும். சூட்டிங் இல்லாத நாட்களில் ​​நீச்சல் பயிற்சியை
மேற்கொள்ளுவேன்.

டயட் பிளான்

டயட்டை எடுத்துக்கொண்டால், சீரியஸ் டயட் கன்ட்ரோல் எல்லாம் என்னிடம் இல்லை. பிடித்த அனைத்து உணவுகளையும் உண்பேன். அதே சமயம், ஆரோக்கியமான உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். அதுபோன்று, நான் ஒரு பாடகியாகவும் இருப்பதால், குரலை பாதுகாப்பதற்காக பால் அருந்துவதை மட்டும் நிறுத்திவிட்டேன். மற்றபடி, எனது டயட்டில் காய்கறிகளுக்கு முக்கிய இடம் உண்டு.

சாலட் வகைகள் நிறைய எடுத்துக் கொள்வேன். அதுபோல சவுத் இந்தியன் உணவுகள் எல்லாமே விரும்பி சாப்பிடுவேன். இனிப்பு வகைகளும் எனக்கு பிடித்தவைதான். மற்றபடி சைவம், அசைவம் என்பதெல்லாம் இல்லை பிடித்தவற்றை சாப்பிடுவேன். எதுவாக இருந்தாலும், அளவோடு சாப்பிடுகிறேன். அதுவே, முன்பிருந்ததைவிட தற்போது எனது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

பியூட்டி

பொதுவாக பியூட்டி சீக்ரெட் என்று எடுத்துக் கொண்டால், தோல் வறண்டு போகாமல் பார்த்துக் கொண்டாலே பார்ப்பதற்கு அழகாக தெரியும். எனவே, உடலை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்வது முக்கியம். அந்த வகையில், எனது பியூட்டி சீக்ரெட் தினசரி மாய்ஸ்சரைஸுடன் தொடங்குகிறது. இரவில் படுக்கச் செல்வதற்கு முன்பு முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள நைட் க்ரீமை பயன்படுத்துவேன்.

நான் எப்போதும் சிம்பிளான மேக்கப்பையே விரும்புகிறேன். அதுதான் எனது தோற்றத்துக்கும் ஒத்துவரும். வீட்டில் இருக்கும்போதும் சரி, வெளியில் செல்லும்போதும் சரி கண்களை அழகாக காட்ட ஐலைனர் மற்றும் மைல்டான லிப்ஸ்டிக் இதுவே, எனது அதிகபட்ச மேக்கப்பாக இருக்கும். பொதுவாக, நான் பியூட்டி சலூன்களுக்கு செல்வதை அதிகம் விரும்புவதில்லை. அதற்கு பதிலாக, அழகு சிகிச்சைகள் செய்து கொள்ள வீட்டிலேயே நேரத்தை செலவிட விரும்புவேன்.

அந்தவகையில், கூந்தல் பராமரிப்புக்காக, வாரம் தோறும் எண்ணெய் சிகிச்சைகள் மேற்கொள்ளுவேன். இதை தவிர, மென்மையான சருமத்துக்காக தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்துகிறேன். வாரத்தில் ஒருநாள் கட்டாயமாக உடல் முழுவதும் எண்ணெயை தடவி குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது ஊறவிட்டு பின்பு குளித்துவிட்டு வருவேன். அது எனது சருமத்தை பளபளப்பாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. அதுபோன்று மனதை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருந்தாலே, சருமம் அழகாக காட்சியளிக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இதற்கெல்லாம் கட்டணம் செலுத்தவேண்டும்! (மகளிர் பக்கம்)
Next post கவுன்சலிங் ரூம்!! (மருத்துவம்)