பிரபலமாகி வரும் வாக்-இன் திருமணங்கள்!! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 47 Second

“மேரேஜ் என்றால் வெறும் பேச்சு இல்லை மீனாட்சி சுந்தரேசா…’’ என்னும் பாடலுக்கேற்ப ஒரு திருமணத்தை நடத்தி முடிப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. இந்த வைபோகத்தை ஆதி முதல் அந்தம் வரை அனைத்தும் குடும்பத்தினரே பார்த்து பார்த்து செய்து வந்தனர். ஆனால் அந்தக் காலம் இப்போது மாறிவிட்டது. திருமண மண்டபம் மற்றும் தேதி மட்டும் குறித்துவிட்டால் போதும், மண மேடையின் அலங்காரம், சாப்பாடு, தாம்பூலப் பைகள் என அனைத்தும் பார்த்துக் கொள்வதற்காகவே ஆரம்பிக்கப்பட்டதுதான் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள். இவர்கள் நம்முடைய பாதி வேலையினை முற்றிலும் குறைத்துவிடுகிறார்கள். அதனால் திருமணம் செய்பவர்கள் தங்களின் அலங்காரம், உடைகளில் கவனம் மற்றும் விழாவிற்கு வரும் விருந்தாளிகளை பார்த்து பார்த்து கவனிக்க முடிகிறது.

முன்பு தங்களின் மகன் அல்லது மகளின் திருமணத்திற்கு பெற்றோர்களே பார்த்து பார்த்து செய்து வந்ததால், அவர்கள் ஒரு வித பதட்டத்தோடுதான் இருப்பார்கள். சில விசேஷங்களை அவர்கள் முழுதாக அனுபவிக்க முடியாமல், போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்து திருப்தி கொண்டிருக்கிறார்கள். இனி இந்தப் பிரச்னைக்கு அவசியம் இல்லை. அவர்கள் அழகாக அலங்காரம் செய்து கொண்டு ஜாலியாக விழாவினை கொண்டாடலாம் என்கிறார் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சுதா சுந்தர்ராமன். இவர் தன் தோழி அனுராதா ராம்கோபாலுடன் இணைந்து ‘பிரேர்னா’ என்ற பெயரில் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறார்.

‘‘பிரேர்னா என்றால் இன்ஸ்பிரேஷன்னு அர்த்தம். எங்களை பார்த்து மற்ற பெண்கள் நம்முடைய கலாச்சாரம் மாறாமல் அதை பின்பற்ற வேண்டும், வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்கணும் என்ற யோசனை அவர்களுக்கு வரவேண்டும் என்பதற்காகவே இந்த பெயர் வைத்தோம். குறிப்பாக நாங்க முன்னேற விரும்பும் பெண்களுக்கு முன் உதாரணமாக இருக்க விரும்பினோம். கிட்டதட்ட 10 வருடங்களா இந்த ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

நானும் அனுராதாவும் பள்ளி அல்லது கல்லூரி தோழிகள் கிடையாது. எங்க இருவரின் மகள்கள்தான் தோழிகள். அவர்கள் மூலமாகத்தான் நாங்க இணைந்தோம். இருவருக்குமே சொந்தமா பிசினஸ் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதன் பிறகுதான் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஆரம்பிக்க திட்டமிட்டோம். இப்போது எங்களின் ெதாழிலில் நாங்க வெற்றியும் கண்டுள்ளோம்’’ என்றவர், இந்த தொழில் மேல் ஈடுபாடு வந்த காரணத்தை பகிர்ந்தார்.

‘‘நான் ஐ.டி துறையில் வேலை பார்த்து வந்தேன். கை நிறைய சம்பாத்தியம் இருந்தாலும், அதை விட்டுவிட்டுதான் இந்த தொழிலில் ஈடுபட ஆரம்பிச்சேன். அதற்கு காரணம் எங்க காலனியில் நடைபெறும் விழாக்கள்தான் முன்னோட்டமாக அமைந்தது. எங்க காலனியில் புது வருடப் பிறப்பு, நண்பர்கள் வீட்டு விசேஷங்கள், கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்கள் என அவ்வப்போது பல நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அந்த விழாக்களை எல்லாம் நானும் அனுராதாவும் முன்னின்று செய்வோம்.

அப்படித்தான் தெரிந்தது எங்க இருவருக்கும் ஒரே ஆர்வம் என்பது. அதன் பிறகு படிப்படியாக வளைக்காப்பு, பிறந்தநாள் விழாக்கள் என செய்யத் துவங்கினோம். அதன் அடுத்த கட்டமாக திருமண ஆர்டர்களும் வர ஆரம்பிச்சது. ஒரு திருமண விழா ஆர்டர் எடுத்தால், திருமண அழைப்பிதழ் பெயர் சரி பார்த்து அச்சிடுவது முதல் திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் தாம்பூலம் வழங்குவது வரை என அனைத்து வேலைகளும் நாங்கதான் பார்ப்போம். இதுவரை முப்பது திருமணங்களை நாங்க நடத்தியிருக்கோம். சிலர் சாப்பாடு, போட்டோகிராபி போன்றவற்றை அவங்களே அரேன்ஜ் செய்துப்பாங்க. ஒரு சிலர் அதையும் எங்களை செய்து தரச் சொல்லிக் கேட்பாங்க.

அதையும் நாங்க செய்து தந்துள்ளோம். சின்னச் சின்ன விழாக்கள் பொறுத்தவரை அதை முழுதுமா நாங்களே பார்த்துக் கொண்டோம். திருமணம் பொறுத்தவரை அவர்களுக்கு என தனிப்பட்ட கேட்டரிங் மற்றும் புகைப்பட கலைஞர்கள் இருப்பார்கள். அதனால் அவர்களாக எதையும் கேட்கும் போது மட்டுமே செய்து தருகிறோம். திருமணம் பொறுத்தவரை பெரும்பாலான வாடிக்கையாளர்கள் எங்களிடம் கேட்பது, பாரம்பரிய முறைகள் மாறாமல் நடத்தி தர வேண்டும் என்பதுதான். அவர்களுக்கு என்ன தேவை என்பதை கேட்டறிந்து அதற்கு ஏற்ப செய்து தருகிறோம். எங்களுடைய எழுதப்படாத ஒரு வரையறையும், கலாச்சாரம் மாறாமல் பாரம்பரிய முறைப்படி நடத்தி தரவேண்டும் என்பதுதான்.

இந்தக் காலத்தில் இருக்கும் மக்கள் கொஞ்சம் மாடர்ன் டிரெண்டுக்கு ஏற்ப திருமணங்களை செய்ய விரும்புறாங்க. அதிலும் முக்கியமா, டி.ஜே ஆட்டம், பாட்டம் இல்லாமல் ஒரு விசேஷம் நடப்பதில்லை. தங்கள் கல்யாணத்தில் என்ன இருக்கணும் அது எப்படி நடக்கணும்னு கல்யாண பெண்ணும், மாப்பிள்ளையும்தான் முடிவு எடுக்குறாங்க. குறிப்பாக அவர்கள் மண்டபத்திற்குள் நுழையும் தருணம், அந்த சமயம் டி.ஜே என்ன பாட்டு போடணும் என அவங்க தான் தேர்ந்தெடுக்குறாங்க. அவர்களின் விருப்பத்திற்கும் தடை செய்யாமல் அதே சமயம் பாரம்பரியம் மாறாமலும் நாங்க விழாவினை நடத்தி தருகிறோம். ஒரு திருமணத்தில் மிகவும் முக்கியமானது மேடை அலங்காரம்.

முன்பு மணமேடையில் இருக்கும் நான்கு தூண்களை மட்டுமே பூக்களால் அலங்கரித்திருப்போம். இப்போது மணமக்களின் ஆடைகளின் நிறத்திற்கேற்ப, அவர்கள் தேர்ந்தெடுக்கும் தீம்க்கு ஏற்ப மேடை அலங்காரம் செய்யப்படுகிறது. இதில் குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் சாப்பாடு. திருமணம் போன்ற சுப காரியங்களில் சைவம் மட்டுமே பரிமாறப்படும். தற்போது சில பெரிய வீட்டு திருமணங்களில் அசைவ உணவுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் மற்ற நாட்டின் பிரதான உணவுகளை பபே முறையில் பரிமாறவே விரும்புகிறார்கள்’’ என்றவர், ஈவென்ட் மேனேஜ்மென்ட் மட்டுமில்லாமல், கேட்டரிங்கும் செய்து வருகிறாராம், ‘‘சில ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் பேக்கேஜ் போல் ஒரு விலையினை நிர்ணயித்து இருப்பார்கள். எங்களை பொறுத்தவரையில் மணமக்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் என்ன தேவை என்பதை பொறுத்து, அதற்கு ஏற்ப வசதிகள் செய்து தருகிறோம்.

திருமணத்தில் திருப்தியும் சந்தோஷமும்தான் முக்கியம். விலை இரண்டாம் பட்சம்தான். எங்களிடம் 25 பேர் குழுவாக இணைந்து செயல்பட்டு வராங்க. கோவிட் காலத்தில் ஏற்பட்ட பல இன்னல்களை தாண்டி நாங்கள் இவ்வளவு முன்னேறக் காரணம் எங்களுக்கு அமைந்திருக்கும் டீம்தான். நாங்கள் இந்தியா மட்டுமில்லாமல் அயல் நாடுகளிலும் திருமணங்களை நடத்தி தருகிறோம். அங்கிருக்கும் இந்தியர்கள் தங்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் மாறாமல் திருமணம் செய்ய விரும்புகிறார்கள்.

அதனால் பூக்கள் முதல் தாம்பூலப்பை வரை அனைத்தும் இங்கிருந்து ஏற்றுமதி செய்துடுவோம். அயல் நாடுகளில் திருமணங்கள் மட்டுமில்லாமல் அங்கு வாழும் தமிழர்களின் இதர விழாக்களுக்கும் நாங்கள் இங்கிருந்து பொருட்களை ஏற்றுமதி செய்கிறோம். இது வரை வெளிநாடுகளில் மட்டுமே 12 திருமண நிகழ்ச்சியினை நடத்தி இருக்கிறோம். சில வெளிநாட்டினர் வாக்-இன்-வெட்டிங் செய்வாங்க.

அதாவது அவர்கள் இந்தியாவில் விரும்பிய இடத்தில் திருமணம் செய்து கொள்ள விரும்புவார்கள். நாங்க திருமணத்திற்கான அனைத்தும் தயார் செய்து வைத்திடுவோம். மணநாளுக்கு 2 நாட்கள் முன்பு மணமக்கள் வந்து திருமணம் செய்து கொண்டு அடுத்த இரு தினங்களில் தங்களின் நாட்டிற்கே சென்று விடுவார்கள். எங்களின் முக்கிய குறிக்கோள், ‘உங்க வீட்டு கல்யாணத்தை ஒவ்வொரு தருணமும் நீங்க அனுபவிக்க’ வேண்டும் என்பதுதான்’’ என்ற சுதா, அனு தோழியர்கள் 2020 மற்றும் 2023-ன் ‘யுவ சக்தி’ மற்றும் ‘வுமன் அச்சீவர்ஸ்’ விருதினை பெற்றுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஏப்பம் வருவது ஏன்? !! (மருத்துவம்)
Next post மாடர்ன் உடைகளின் பெஸ்ட் காம்போ டெரக்கோட்டா நகைகள்! (மகளிர் பக்கம்)