சுய சக்தியாய் அசத்தும் லட்சியப் பெண்! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 25 Second

சிதம்பரம் அருகே சின்னஞ்சிறு கிராமம் பள்ளிப்படை. அங்கே ஒரு ஆரி வேலைப்பாடு கொண்ட துணிக்கடையில் தனி மனுசியாக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார் ரேணுகாதேவி. இவர் ஆரி வேலைப்பாடுகள் கொண்ட பிளவுஸ்களை வடிவமைப்பது மட்டுமில்லாமல் கலைநயம் மிக்க பொருட்களையும் செய்து வருகிறார். பொதுவாக ஆரி வேலைப்பாடுகளை நகர பெண்கள்தான் அதிகம் விரும்புவார்கள். பள்ளிப்படை என்ற சின்ன கிராமத்தில் விலை உயர்ந்த ஆரி பிளவுஸ் உடைகளுக்கான ஒரு தையல் கடை இருப்பது ஆச்சரியம் தான். இங்கும் தன்னுடைய பிசினசை மிகவும் சக்சஸா செய்து கொண்டிருக்கும் ரேணுகாதேவி தான் கடந்து வந்த பயணம் குறித்து விவரித்தார்…

‘‘கிராமத்துப் பெண்கள் ஆரி டிசைன்களை அணியமாட்டார்கள்னு யார் சொன்னது? இவர்கள்தான் இப்போது விதம் விதமா டிசைன்கள் செய்து தரச்சொல்றாங்க’’ என்று பேசத் துவங்கினார் ரேணுகா.‘‘என் சொந்த ஊர் விருத்தாசலம். நான் பள்ளியில் படிக்கும் போதே எனக்கு தையல் கலை மேல் தனிப்பட்ட ஆர்வம் உண்டு. வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தில் துணிகளில் நூல் வேலைப்பாடுகளை செய்வேன். எனக்கு அதில் ஒரு அலாதி பிரியம்.

அம்மா துணியை எல்லாம் வீணாக்குறன்னு திட்டுவாங்க. நான் அவங்களிடம், ‘எதிர்காலத்தில் எம்பிராய்டரி மாஸ்டராக போறேன்னு’ சொல்லிட்டு என் வேலையை தொடர்வேன். நூல் வேலைப்பாடுகள் மட்டுமில்லாமல் கைவினைப் பொருட்களும் செய்வேன். சின்னச்சின்ன பொருட்களை செய்து அதனைக் கொண்டு என் வீட்டை அலங்கரித்து அழகு பார்ப்பேன். பத்தாம் வகுப்பில் இருந்தே ஆரி வேலைப்பாடுகளை செய்ய கற்றுக்ெகாள்ள ஆரம்பிச்சேன்.

அப்பா எனக்கு பள்ளிக்கு செல்ல பாக்கெட் மணி கொடுப்பார். அதை சேமித்து வைத்து அதில் பிளவுஸ் பிட் துணிகளை வாங்கி, அதில் நூல் வேலைப்பாடுகளை செய்து பார்த்து பயிற்சி எடுத்துக் கொள்வேன். அப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக நூல் வேலைப்பாடுகளை கற்றுக் கொண்டேன். இதற்கிடையில் +2 முடிச்சதும் திருமணமாகிவிட்டது. அதன் பிறகு டிகிரி படிக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை என் கணவரிடம் தெரிவிக்க அவரும் படிக்க சொல்லி ஊக்குவித்தார்.

பி.பி.ஏ. முடித்தேன். அதே சமயம் ஆரி வேலைப்பாடுகளை வீட்டில் இருந்தபடியே செய்து வந்தேன். எனக்கு தெரிந்த கைவிணைப்பொருட்களை செய்து என் வீட்டை அலங்கரித்தேன். இன்று வரை நான் எந்த விதமான டெய்லரிங் பயிற்சியும் எடுத்துக் கொண்டதில்லை. எல்லாமே நானாகவே கற்றுக் கொண்டது தான். என் சிந்தனையில் தோன்றும் டிசைன்களை உருவாக்குவேன். சில சமயம் வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு பிடிச்ச டிசைனை காட்டுவாங்க. அதனையும் வடிவமைச்சு தருவேன்’’ என்றவர் கிராமத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் ஆரி வேலைப்பாடு பயிற்சி அளித்து வருகிறார்.

‘‘நானும் என் கணவர் இருவரும் இணைந்துதான் இந்த தொழிலை செய்து வருகிறோம். என் கணவர் ஏஜென்சி தொழிலில் ஈடுபட்டு வந்தார். கொரோனா காலத்தில் சரியான வருமானம் இல்லை. அதனால் வேறு என்ன செய்யலாம்னு யோசனை இருந்தது. அந்த சமயத்தில்தான் நான் வீட்டில் செய்வதை ஒரு கடையில் வைத்து செய்யலாம்னு சொன்னேன். உடனே கடைக்கான இடத்தை வாடகைக்கு பிடித்தோம். கஹானா ஆரி ஒர்க் என்ற பெயரில் கடையினை நடத்த ஆரம்பித்தோம். கடையில் உள்ள வேலைகளை நான் பார்த்துக் கொள்வேன்.

வெளி வேலையான கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவது என அனைத்தும் அவர் பார்த்துக் கொள்கிறார். அவரின் ஒத்துழைப்பு இல்லைன்னா என்னால் இப்பொழுது இந்த தொழிலை சிறப்பாக செய்திருக்க முடியாது. என்னுடைய இந்த கடுமையான உழைப்பிற்கு ‘சுய சக்தி’ என்ற விருது கிடைச்சிருக்கு. அதை நினைக்கும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. பெண்களால் என்ன செய்திட முடியும். தனியா பிசினஸ் பண்ண முடியாது. அதில் நிறைய சவால் இருக்கும், அதை அவர்களால் சமாளிக்க முடியாதுன்னு சொல்வார்கள்.

அவங்களுக்கு சவால் விடும் வகையில் நான் இன்று ஜெயித்திருக்கிறேன். தையல் தொழிலில் முழுமையாக கவனம் செலுத்தி வருவதால், என்னால் கலை வேலைப்பாடுகளில் அதிக அளவில் ஈடுபட முடியல. ஆனால் நேரம் கிடைக்கும் போது கைவினைப் பொருட்களும் ஓவியங்களும் வரைந்து கொடுக்கிறேன். தற்போது என்னுடைய பிசினசை பெரிய அளவில் உருவாக்கணும். இடம் வாங்கி அதில் சொந்தமா ஒரு வீடு கட்டணும். மேலும் பல டிசைன்களை உருவாக்கி எனக்கான தனிப்பட்ட ஒரு அடையாளத்தினை ஏற்படுத்திக் கொள்ளணும்.

பெண்களுக்கு நான் கொடுக்கும் அட்வைஸ். உங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வாங்க. நாம பெண்கள்தானே நம்மளால் முடியுமான்னு முடங்கிடாமல், உங்கள் மேல் நம்பிக்கை வைத்து திறமையினை வெளிப்படுத்துங்கள். கண்டிப்பாக வெற்றி காண முடியும். பெண்கள் அச்சம் தவிர்த்தாலே உச்சத்தை தொட்டு விடலாம்’’ என்றார் கம்பீரமாக ரேணுகாதேவி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வெட்டிங் ரீல்ஸை விரும்பும் 2k கிட்ஸ்! (மகளிர் பக்கம்)
Next post வாய் துர்நாற்றத்தை போக்கும் வழிகள்!! (மருத்துவம்)