பழங்குடியினருக்காக தேன் விற்கும் தோழிகள்! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 57 Second

கொடைக்கானலை சேர்ந்த இரு தோழிகள் ‘ஹூப் ஆன் எ ஹில்’ என்ற பெயரில் ஆர்கானிக் தேன் விற்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். பழங்குடி மக்கள் எடுத்து வரும் தேனை சந்தையின் விலையில் வாங்கி ஏற்றுமதி செய்து வருகின்றனர் இந்த இருவர். இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கப்பட்டது குறித்து இந்த நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவரான நிஷிதாவிடம் கேட்ட போது…

‘‘நான் கொடைக்கானலில்தான் வசித்து வருகிறேன். பழங்குடி மக்களிடையே வேலை செய்வதற்காக 2016 காலகட்டங்களில் நானும் என் தோழி பிரியா ஸ்ரீயும் கொடைக்கானலில் இருக்கிற பளியர் பழங்குடி மக்களை சந்தித்தோம். அவங்களை சந்தித்து விட்டு திரும்ப வரும் போது காட்டிலிருந்து எடுத்து வந்த தேனை எங்களுக்கு அவங்களின் அன்பின் அடையாளமாக கொடுத்தாங்க. நாங்களும் அதை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்திட்டோம். அதன் பிறகு அதை சுவைத்து பார்த்த போது, அந்த தேனின் சுவை கடைகளில் கிடைக்கும் தேன் ேபால இல்லை. மிகவும் சுவையாகவும், அடர்த்தியாகவும் இருந்தது. அந்த தேன் பற்றி என் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

அவங்க உடனே அந்த தேன் வேண்டும்ன்னு சொல்லி அதை வாங்கி அனுப்ப சொன்னாங்க. நானும் பழங்குடி மக்களிடம், தேன் கிடைச்சா கொடுங்கன்னு சொல்லி வச்சிருந்தேன். நான் சொன்ன சில காலகட்டங்களிலேயே 100 லிட்டர் தேன் அவங்களுக்கு கிடைத்திருப்பதாக எனக்கு தகவல் அனுப்பினாங்க. நான் அதில் கொஞ்சம் கொஞ்சமாக பேக் செய்து, என் நண்பர்களுக்கு அனுப்பி வைச்சேன். அதை சுவைத்தவர்கள், தொடர்ந்து தேன் வேண்டும் என்று என்னிடம் கேட்க ஆரம்பித்தார்கள். நானும் ஒவ்வொரு மாதமும் எனக்கு தேன் வேண்டும்னு பழங்குடியினரிடம் சொல்லிடுவேன். அவங்களும் கொடுப்பாங்க.

அதை நான் மார்க்கெட் ரேட்டில் உள்ள விலைக்கு என் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு கொடுக்க ஆரம்பிச்சேன். தேன் விற்பனையான தொகையினை நான் பழங்குடி மக்களிடம் கொடுத்திடுவேன். அதைப் பெற்றுக் கொண்டவர்கள் இதே தேனைத்தான் நாங்க கடைக்கு தருகிறோம். ஆனால் அவங்க இவ்வளவு பணம் தருவதில்லை. இதில் பாதியளவு தான் கொடுக்கிறார்கள் என்று என்னிடம் சொன்னார்கள். பழங்குடி மக்களுக்கு சும்மாதானே கிடைக்கிறது என மேம்போக்காக நினைத்துக் கொண்டு அவர்கள் காட்டிலிருந்து எடுத்து வரும் பல பொருட்களையும் குறைந்த விலைக்கே கடைக்காரர்கள் வாங்குகிறார்கள். இந்த பிரச்சனைகளை பற்றி எல்லாம் அவர்கள் என்னிடம் சொல்லவே அவர்களின் உழைப்பிற்கும் பொருளுக்கும் சரியான விலை கிடைக்க வேண்டும்னு நினைச்சேன். மேலும் அவர்களின் பொருட்களுக்கு ஒரு பிராண்ட் அமைக்க விரும்பினேன்.

அப்படித்தான் ‘ஹூப் ஆன் எ ஹில்’ உருவாச்சு’’ என்றவர் நிறுவனம் தொடங்கிய கதையை பற்றி சொல்லத் தொடங்கினார்.‘‘காடுகளில் இருந்து கிடைக்கும் தேன், மிளகு, காட்டு இஞ்சி, பட்டை, வேர்கள், கிழங்குகள் போன்ற பொருட்களை எடுத்து வந்து அதை கடைகளில் விற்றுதான் அவங்களோட வாழ்க்கையை நடத்துறாங்க. இந்த பொருட்களை எடுக்கிறதுக்கு காடுகளுக்குள் போகும் பழங்குடி மக்கள் பல விலங்குகளை தாண்டி, பல கிலோ மீட்டர்கள் நடந்துதான் அதனை கொண்டு வருகிறார்கள்.

இந்தப் பொருட்களை காட்டில் இருந்து எடுக்க அவர்களுக்கு மட்டுமே உரிமையுண்டு. அதே சமயம் அவர்கள் கொண்டு வரும் ெபாருட்களுக்கான சரியான விலை கிடைப்பதில்லை. அவர்களிடம் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கி அதை விட ஐந்து மடங்கு அதிகமா விலை வைத்து கடைக்காரங்க விற்கிறாங்க. இது எல்லாமே பழங்குடி மக்களுக்கு தெரிஞ்சிருந்தாலும் உள்ளூர் வியாபாரிகளின் கெடுபிடிகளால் கேள்வி கேட்க முடிவதில்லை.

பழங்குடி மக்கள் கடுமையா உழைச்சாலும் அவங்களுக்கு கிடைக்கிறது என்னவோ சொற்ப வருமானம்தான். அவங்களால் இந்த வருமானத்தில் தங்களின் அத்தியாவசிய தேவைகளை கூட நிறைவேற்றிக் கொள்ள முடிவதில்லை. இந்தப் பிரச்னையை தவிர்க்கவே நானும் பிரியாவும் ஒரு நிறுவனம் தொடங்க நினைத்தோம். பழங்குடி மக்கள் கொண்டு வரும் தேன் எல்லாவற்றையும் நல்ல விலைக்கு நாங்க வாங்கிக் கொள்வோம். பிறகு அதனை ஒரு நிறுவனத்தின் கீழ் விற்க திட்டமிட்டோம்.

இதற்காக நாங்கள் சுற்றுவட்டாரங்களில் வாழும் பழங்குடியினரை சந்தித்து அவர்கள் எடுக்கிற தேனை எல்லாம் நாங்களே நல்ல விலைக்கு வாங்கிக்கொள்வதாக சொன்னோம். அவர்களும் தேனை எங்களிடம் கொண்டு வந்து தரத் தொடங்கினார்கள். கொடைக்கானலில் நாங்க தங்கியிருந்த வீட்டில் ஹூப் பறவை அடிக்கடி வந்து செல்லும். அந்த பறவையின் பெயரையே எங்களின் நிறுவனத்தின் பெயராக வைத்தோம்.

தேனில் பல வகைகள் இருக்கிறது. தேன் பொதுவாகவே இனிப்பு சுவை கொண்டது என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் தேனில் பல விதமான சுவைகளும் உண்டு. ஒரு தேனீ எந்த மரத்தில் தேன்கூடு கட்டுகிறதோ அந்த மரத்தில் உள்ள இலையின் சுவை அந்த தேனில் இருக்கும். உதாரணமாக நவாப்பூ மரங்களில் இருந்து எடுக்கும் தேன் கசப்பாக இருக்கும். இதை பிட்டர் தேன் என்பார்கள். இந்த வகை தேனை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம்.

மலை இடுக்குகளில் இருந்து எடுக்கும் தேனீற்கு ‘பெருந்தேன்’ என்று பெயர். இதில் சிறுதேன் என்ற வகையும் உண்டு. இந்த வகை தேன் மண்ணில் உள்ள புற்றுகளில் இருக்கும். யூகலிப்ட்ஸ் மரத்தில் இருக்கும் தேனை யூகலிப்ட்ஸ் தேன் என்ற பெயரில் விற்போம். மற்ற மரங்களில் இருந்து எடுக்கும் தேனை மல்டி ஃபிளேவர்ஸ் தேன் என்று விற்பனை செய்கிறோம். கொடைக்கானலில் இருக்கும் பழங்குடி மக்கள் பக்கத்தில் இருக்கும் பழனி மலைக்கு தான் தேன் எடுக்க செல்வார்கள்.

இந்தப் பகுதியில் இரண்டு பருவமழைக் காலம் இருக்கும் என்பதால் வருடத்தில் இரண்டு முறை தேன் எடுத்து வருவார்கள். பழங்குடியின மக்கள் ஒரு வாரகாலம் அடர்ந்த காட்டிற்குள் சென்று தேனை எடுத்து வந்து எங்களிடம் கொடுப்பார்கள். அந்த காலகட்டங்களில் கிடைக்கும் தேனை எல்லாம் வாங்கி சேகரித்து வைத்துக் கொள்வோம். தேன் கெடாத பொருள் என்றாலும், அதனை நாங்க பெரும் அளவில் ஸ்டாக் செய்யாமல் ஆர்டர்கள் வர வர விற்பனை செய்திடுவோம். பழங்குடி கொண்டு எல்லா தேனையும் எடுத்து வருவதில்லை. தேன் எடுக்கும் போது பாதி தேன் ராட்டையை மட்டுமே அறுத்துக் கொண்டு வருவார்கள். மீதி ராட்டையை தேனீகள் சாப்பிடுவதற்காக விட்டு விடுவார்கள்.

நாங்கள் நிறுவனம் ஆரம்பித்த ஆரம்ப காலகட்டங்களில் நிறுவனத்தில் வேலை செய்வதற்காக பக்கத்து ஊர்களில் காட்டு வேலைக்கு செல்லும் பெண்களை இங்கு வேலைக்காக நியமித்தோம். அவர்கள் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதற்கான பயிற்சியும் அளித்தோம். நண்பர்கள் மூலமாக அவர்களின் நண்பர்கள் என வெளிநாட்டில் இருந்தும் ஆர்டர்கள் வரத்துவங்கியது. அதனால் பல லிட்டரில் தேன் தேவைப்பட்டது. அந்த சமயத்தில் தேனை ராட்டைகளோடு கொண்டு வந்து எங்களிடம் கொடுத்து விடுவார்கள். நாங்க தேனை மட்டும் எடுத்துவிட்டு அந்த ராட்டையினை குப்பையில் போட்டு விடுவோம். ஆனால் இதனை கொண்டும் பல பொருட்களை தயாரிக்கலாம் என்று கேள்விப்பட்டோம்’’ என்றவர் தேன் ராட்டைகளை கொண்டு மதிப்பு கூட்டும் பொருட்கள் தயாரிக்க ஆரம்பித்துள்ளார்.

‘‘தேன் ராட்டைகளை சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்தால் மஞ்சள் நிறத்தில் தேன் மெழுகு கிடைக்கும். இந்த தேன் மெழுகினை வைத்து பல பொருட்கள் செய்யலாம். ஆனால் இந்தியாவில் இந்த தேன் ராட்டைகளை வைத்து பொருட்கள் செய்யலாம் என்பது பலருக்கும் தெரியாது. தேன்மெழுகினால் ராப்பர்களை செய்து வருகிறார்கள். துணிகள் மேல் தேன்மெழுகினை தடவி இந்த ராப்பர்களை தயாரிக்கிறார்கள். உணவு வகைகளை சேமிக்கவும் வேறு இடங்களுக்கு அனுப்பிவைக்கவும் இந்த ராப்பர்கள் பயன்படுத்தப்படுகிறது.

ராப்பர்கள் மறு பயன்பாட்டிற்கு உகந்தது எளிதில் மக்கக்கூடியது. உணவுப்பொருட்களை ஃப்ரெஷ்ஷாக வைக்க பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக்கால் ஆன ராப்பர்களுக்கு இது சிறந்த மாற்று. நான் ராப்பர்கள் மட்டுமில்லாமல் தேன் மெழுகினை வைத்து மெழுகுவர்த்தி, கிரையான்ஸ்களும் செய்ய தொடங்கினேன். இந்தப் பொருட்களை எல்லாமே நாங்களே ஒவ்வொன்றாக பல கட்ட சோதனைகளுக்கு பின்னர் தயாரித்தவை.

இந்தப் பொருட்களை செய்வதற்கு எனக்கு இரண்டு வருடம் ஆனது. தற்போது எங்க நிறுவனத்தில் 7 பெண்கள் வேலை செய்கிறார்கள். இவர்கள் அனைவரும் காட்டு வேலைக்கு சென்றவர்கள். தற்போது இங்கு ஒரு நிலையான வேலை மற்றும் அதற்கான ஊதியம் கிடைப்பதால், மகிழ்ச்சியாக வேலை பார்க்கிறார்கள்’’ என்றார் நிஷிதா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
Next post மாதவிலக்கு!! (அவ்வப்போது கிளாமர்)