மனதிற்கு நிம்மதி அளிக்கும் கைத்தறி! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 14 Second

இந்தியர்களின் பாரம்பரியமும் பண்பாடும் குறித்து பேசுகையில் முக்கியமான ஒன்றாக பெரிதும் சொல்வது கைத்தறி. ஒவ்வொரு ஊரின் பாரம்பரியமும் அவர்கள் உடுத்தும் உடைகளில் தெரியும் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு அதன் செயல் முறையும் சிறப்புமிக்கது. அந்த வகையில் கைத்தறி ஆரம்ப காலத்தில் கடைபிடிக்கப்பட்டாலும் நாளடைவில் குறைந்து வந்தது.

தற்போது அதனை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அதற்கான உற்பத்தியினை பெருக்கும் வகையிலும் மக்கள் பலவிதங்களில் கைத்தறி நெசவை கற்றும், கற்பித்தும் வருகின்றனர். அதற்கான ஒரு முயற்சியாக கைத்தறி கலையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் மட்டுமில்லாமல், மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளித்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுகின்றனர் சென்னை ‘ஷட்டில்ஸ் அண்ட் நீடில்ஸ்’ கைத்தறி கலைக்கூடத்தின் நிறுவனர்கள் கல்யாணி பிரமோத் மற்றும் நரேஷ் தம்பதியினர்.

‘‘நெசவிற்கு தேவையான பல இயந்திரங்களை வெளிநாட்டிலிருந்து வாங்கி பெரிய பெரிய நிறுவனங்களுக்கு விநியோகம் செய்துட்டு இருந்தேன். ஒரு விஷயத்தை நாம கேட்டு தெரிந்து கொள்வதற்கும், அதையே படிப்படியா கற்றுத் தெரிந்துகொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு’’ என்ற நரேஷ், இந்த எண்ணத்தில்தான் இந்த கைத்தறி நெசவை கற்றுக்கொண்டதாக சொன்னவர், சின்னக் குழந்தைகளும் சுலபமா கற்றுக்கொள்ளும் ஒரு விஷயம்தான் இந்த கைத்தறி என்கிறார்.

‘‘ஷட்டில்ஸ் அண்ட் நீடில்சை துவங்கி ஆறு வருடமா நடத்திட்டு வர்றோம். ஆரம்பத்திலிருந்தே கைத்தறிக்கான பயிற்சி வகுப்புகள் எடுத்துட்டு இருக்கோம். இதில் அதிக ஈடுபாடு இருக்கவங்க, தினமும் புதுசா கத்துக்கணும்னு நினைக்கிறவங்களும்தான் அதிகமா இருக்காங்க. பொதுவா கைத்தறியை ஒரு வேலையா பார்க்கிறவங்க மத்தியில் இதையே ஒரு கலையா பார்க்கிறவங்களும் இருக்காங்க. இதனை அறிவு சார்ந்த ஒரு விஷயமாகவும் பார்க்கலாம்.

அதுமட்டுமில்லாமல், நெசவு செய்யும் போது மனசுக்கும் அமைதி கிடைக்கும். நெய்தலில், கணக்கும் ரொம்ப முக்கியம். அதே சமயம் நம்மளுடைய சிந்தனையும் கூட. இங்கு வரும் அனைவரும், உயர்ந்த வேலையில் இருப்பவர்கள். உதாரணத்திற்கு பல் மருத்துவர், பள்ளி தாளாளர் என பல துறையினை சார்ந்தவங்கதான் இந்த பயிற்சிக்கு விரும்பி வராங்க.

ஒரு விஷயத்தை நாம செய்யும் போதுதான் அதனுடைய உண்மையான தரம், அதற்கான உழைப்பு இதெல்லாம் புரியும். சாதாரணமா ஒரு புடவையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு துணி வாங்கும் போது அது பார்க்க, சாதாரணமாகத்தான் தெரியும். ஆனால் அதனுடைய செயல்முறையினை பார்க்கும் போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஏனென்றால், பெரிய தறியில் பல வண்ண நூல்களை பயன்படுத்திதான் ஒரு துணியை நெய்தல் செய்ய முடியும்.

பெரிய தறி என வரும் போது அதன் வேலைப்பாடுகளும் அதிகம். அது ரொம்ப கஷ்டம்னுதான் நிறைய பேர் நினைச்சிட்டு இருக்காங்க. ஆனால் நாங்கள் இங்கு பயன்படுத்தும் தறிகள் அனைத்தும் 16 முதல் 24 இன்ச் அளவுக்குதான் இருக்கும். ஒரு சின்ன இடம் இருந்தா போதும். மேலும் இதை எல்லாம் சுலபமா எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்வது சுலபம்’’ என்றவரை தொடர்ந்தார் கல்யாணி பிரமோத்.

‘‘நாம கற்றுக் கொண்ட இந்தக் கலையினை மற்றவர்களுக்கும் சொல்லித் தரணும் என்ற எண்ணத்தில்தான் நாங்க இந்த ஸ்டுடியோவை துவங்கினோம். நான் கல்லூரியில் டெக்ஸ்டைல்ஸ் பிரிவில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தேன். தற்போது சிறப்பு வகுப்புகள் எடுக்கும் விரிவுரையாளராக இருக்கேன்’’ என்று பேசத் துவங்கினார் கல்யாணி பிரமோத். ‘‘இங்கு நாங்க பயன்படுத்தும் அத்தனை தறிகளும், காஷ்மீரி யார்ன்ஸ் என்று அழைக்கப்படும்.

இதற்கான நூல்களை ஜப்பான், நியூசிலாந்து போன்ற வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறோம். மேலும் இங்கு பயன்படுத்தும் அத்தனை நூல்களும் 100% காட்டன் நூல்கள் மட்டுமே. இதர நூல்கள் எல்லாம், சென்னையில் எங்களின் தேவைக்கேற்ப நிறத்தில் உற்பத்தி செய்து வாங்கிக் கொள்கிறோம். எங்கள் தேவை போக வெளி இடங்களுக்கு ஆர்டரின் பேரில் நூல்களும் விநியோகம் செய்து வருகிறோம். மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் பெங்களூரிலும் ஒரு கிளை நிறுவனத்தை துவங்க உள்ளோம்’’ என்றவர் துணி நெய்வதால் ஏற்படும் சங்கடங்கள் பற்றி விவரித்தார்.

‘‘துணிகளை நெய்யும் போது, சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்படும். குறிப்பாக கை, கால்கள் மற்றும் முதுகுத் தண்டு வலி ஏற்படும். ஆனால் நாங்க பயன்படுத்தும் ஆஷ்ஃபோர்ட் தறிகள் அளவில் சிறியது என்பதால், பெரிதாக கை, கால்கள் வலி ஏற்படாது. இந்த காரணத்திற்காகவே எங்களிடம் பயிற்சிக்கு வருவதில் சின்ன குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். உதாரணத்துக்கு 2, 3 வது படிக்கும் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வரை யார் வேண்டும் என்றாலும் இந்த தறியினை சுலபமா இயக்கலாம். இவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மாதம் ஒரு வாரம் அல்லது 5 நாட்கள் வீதம் பயிற்சி கொடுப்போம்.

அந்த ஐந்து நாட்களிலே அவர்கள் அனைத்து விதமான தறிகளை இயக்கவும், பலவிதமான பொருட்களை உருவாக்கும் அளவிற்கு பயிற்சி பெற்றுவிடுவார்கள்’’ என்ற கல்யாணி இம்மாதம் 7-ம் தேதி தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு இவர்களிடம் பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு ஒரு கைத்தறி கண்காட்சி நடத்த உள்ளார்.

‘‘இந்த கண்காட்சி நடத்த முக்கிய காரணம் கைத்தறி என்பது ஒரு வேலை என்பதை தாண்டி அது ஒரு அற்புதமான கலை. இந்தக் கலையினை அனைவரிடமும் சுலபமாக கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கான ஒரு முயற்சிதான் இது. இது மட்டுமில்லாமல் இந்தக் கலை சிறப்புக் குழந்தைகளுக்கு ஒரு நல்ல தெரபி என்று குறிப்பிடலாம்.

அவர்கள் நெசவு செய்ய அன்றாடம் பயன்படுத்தும் பை மற்றும் பர்ஸ்களை விற்பனை செய்வதன் மூலம் அது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்கள் நெய்யும் பைகளை நாங்க எங்களின் விற்பனை பக்கத்தின் மூலம் மக்களுக்கு கொண்டு செல்கிறோம். இதனை ஒரு வேலையாக இல்லாமல் என் மனதிற்கு நிம்மதியினை கொடுக்கக்கூடியது என்பதால் செய்து வருகிறோம்’’ என்கிறார் புன்னகை மாறாமல் கல்யாணி பிரமோத்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பெண்களை குறிவைக்கும் வன்முறை கும்பல் மணிப்பூர் கலவரம்!! (மகளிர் பக்கம்)
Next post கவுன்சலிங் ரூம்!! (மருத்துவம்)