அழகை அள்ளித் தரும் பீச் பழம்! (மருத்துவம்)
விலை உயர்ந்த அழகு சாதனப் பொருட்கள்தான் சருமத்துக்கு அதிக பளபளப்பை தரும் என்று நினைப்பது முற்றிலும் தவறானது. இயற்கையாக எளிதாக விலை மலிவாக கிடைக்கும் மூலிகைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவையும் முக அழகுக்கும், சரும பளபளப்புக்கும் உதவும். அந்த வகையில், முகத்தை பளிச்சிடவும், சரும பளபளப்பை பெறுவதற்கும் பீச் பழம் பெரிதும் உதவுகிறது. இதனைக் கொண்டு முகத்துக்கு ஃபேஸ்பேக் தயாரித்து போட்டுவர நல்ல மாற்றத்தை உணரலாம்.
வறண்ட சருமம் உள்ளவர்கள், இந்த பழத்தின் ஒரு துண்டை வைத்து, முகத்தில் 20 நிமிடம் வரை தேய்த்து மசாஜ் செய்து, பத்து நிமிடத்திற்குப் பிறகு ஈரமான துணியால் துடைத்துவிட்டு, பிறகு வெதுவெதுப்பான நீரால் கழுவி வர முகம் பளிச்சிடும். இதனால் சருமத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் அரிப்பு போன்றவை வராமல் இருக்கும். இதனை வாரம் இருமுறை செய்ய வேண்டும். பீச் பழத்தின் விதையை நீக்கிவிட்டு, முட்டையின் வெள்ளை கருவை கலந்து விழுதாக்கி கொள்ளவும். பின்னர், அதனை முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் உள்ள கருமை நீங்கி முகம் அழகாக பளிச்சென்று பொலிவுறும்.
பீச் மற்றும் தக்காளியை நன்கு அரைத்து, அதனை முகத்திற்கு தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் படிப்படியாக மறைவதை காணலாம். நன்கு கனிந்த பீச் பழத்தை அரைத்து, அதில் சிறிது தேனை ஊற்றி பேஸ்ட் செய்து முகத்திற்கு தடவ வேண்டும். முகம் நல்ல நிறமாக மாறும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வரலாம். வேண்டுமென்றால், இதனோடு சிறிது எலுமிச்சைச் சாற்றையும் ஊற்றிக் கொண்டு, முகத்திற்கு தடவி, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் முகப்பரு நீங்கும். பீச் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகமுள்ளதால் இந்தப் பழத்தை வைத்து ஃபேசியல் செய்தால் சரும சுருக்கங்கள் நீங்குவதோடு சருமத் துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி சுத்தமாகவும் முகம் பொலிவுடனும் இருக்கும்.
பீச்பழத்துடன் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து கலந்து, தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து பின்னர், சீயக்காய் கொண்டு தலையை அலசிவிட வேண்டும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்து வந்தால், பீச் பழங்கள் முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தும்.