விமான ஊழியர்களுக்கும் உளவியல் அவசியம்! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 57 Second

‘‘பொறுத்தார் பூமி ஆள்வார்’’ என்னும் பழமொழிக்கு ஏற்றது போல் ஒரு மனிதன் பொறுமையுடனும், அதே சமயம் நிதானத்துடனும் செயல்பட்டால், வெற்றியடையலாம். அப்படி அவன் நிதானத்துடன் செயல்பட வேண்டுமென்றால் அவனது மனநலம் மற்றும் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம். அதிலும் குறிப்பாக சில சிக்கலான வேலையில் இருப்பவர்கள். உதாரணத்திற்கு மருத்துவம், விமானத் துறை மற்றும் இதர சவாலான வேலைகளில் ஈடுபடுபவர்கள்.

அவர்களுக்கு மனரீதியாக பல பிரச்சனைகள் இருந்தாலும், அவர்களின் வேலை காரணமாக, தாங்கள் சாதாரணமாக இருப்பது போல் காட்டிக்கொள்வார்கள். அதிலும் விமானத் துறையில் இருப்பவர்கள் மருத்துவர்களை அணுகுவது என்பது மிகவும் சவாலான ஒன்று. இந்த சவால்களை எதிர்கொள்ளும் விதமாக சிலர் மனநல மருத்துவரை அணுகினாலும் ஆச்சரியமே.

இந்த சவாலான மனிதர்களை பற்றியும், சைக்காலஜி எனப்படும் மனநலம் பற்றியும் அவர்களின் கருத்துக்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார் திருச்செங்கோட்டை சேர்ந்த ரேவதி மோகன். உளவியல் ஆலோசகரான இவர் ‘பர்பில் கவுன்சிலிங் கேர்’ என்ற பெயரில் விமானத்துறையில் ஈடுபட்டு வருபவர்களுக்கு ஆலோசனை அளித்து வருகிறார்.

“தற்போது உலகிலேயே அதிக பெண் விமானிகள் இந்தியாவில்தான் உள்ளனர். என்னுடைய ஆராய்ச்சிக்காக உலகில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் விமான ஊழியளர்களை நான் பேட்டி எடுத்தேன். விமான துறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம மரியாதை இருக்கிறதா? ஏதேனும் பாகுபாடுகள் உள்ளதா..?, எதற்காக அவர்கள் இந்த துறையை தேர்ந்தெடுத்தார்கள், உளவியல் குறித்து அவர்களின் கருத்து? அவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் உடல் தகுதிக்கு முன்னுரிமை கொடுக்கிறார்களா? இப்படிப்பட்ட பல கேள்விகளை அவர்களிடம் கேட்டு அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தேன்.

அதன் தொடர்ச்சியாக விமான பணியாளர்களின் வாழ்க்கை சுவாரஸ்யங்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பல சவால்கள் குறித்தும், ‘‘Insights Beyond the Skies’’ என்ற புத்தகம் ஒன்றை எழுதி வருகிறேன். இந்த புத்தகத்தில் இந்த துறையை பற்றி பல விஷயங்களை ஆராய்ச்சி துறையினருக்கு தெரிவிப்பது மட்டுமில்லாமல், ஒரு சாமானிய மனிதருக்கும் அதை புரியும் விதத்தில் எழுதி வருகிறேன்’’ என்று கூறும் ரேவதி எழுதிய மூன்று புத்தகங்களுக்கு ‘‘இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’’ விருது கிடைத்துள்ளது.

‘‘விமான உளவியல்… விமானத் துறையில் இருக்கும் பணியாளர்களுடைய செயல்பாடுகள், குணாதிசயங்கள், செயல் திறங்கள், அவர்களின் உணர்வுகள் என இவை அனைத்தையும் குறிப்பிடுவதுதான் விமான உளவியல். இதில் பொலிட்டிகல், ஏவியேஷன், ஸ்போர்ட்ஸ், கவுன்சிலிங் மற்றும் க்ளினிகல் என பல பிரிவுகள் உள்ளன. அதில் ஏவியேஷன் சைக்காலஜி என்பது விமானிகளுக்கு மட்டுமில்லாமல், விமான பணிக் குழுவில் இருக்கும் அனைவருக்குமான உளவியல்.

நான் அந்த துறையில் பல பணிகளில் ஈடுபட்டவர்களை சந்தித்து பேசி இருக்கேன். அப்போது அவர்கள் தங்கள் துறைச் சார்ந்த பல அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நான் சந்தித்த அனைத்து விமான ஊழியர்களின் பதில்கள் ஒன்று ேபால்தான் இருந்தது. அவர்களுக்கு பிடித்து இந்த துறையினை தேர்வு செய்துள்ளதாகவும், அது தங்களின் கனவு, ஆசை என்பதை தாண்டி அவர்களின் தீராத காதல் என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.

மேலும் சிறு வயதில் புத்தகத்தில் பார்த்த விமானம், வானத்தில் பறக்கும் போது ஆச்சரியமாக இருந்ததாகவும், அதே சமயம் நேரில் பார்க்க மிகவும் பிரமாண்டமாக தோன்றும் அந்த விமானம் எவ்வாறு வானத்தில் பறக்கிறது என்ற ஆர்வத்தில் இந்த துறையை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது என்றும் குறிப்பிட்டார்கள். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த விமானியின் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரும் மருத்துவத் துறையை சேர்ந்தவர்கள். ஆனால் இவர் மட்டும் விமானத் துறையில் இருக்கிறார். மற்றொருவர் கப்பல் துறையில் பத்து வருடம் பணிபுரிந்து அதில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு விமானத் துறை சார்ந்து படித்துள்ளார். இதைக் கேட்கும் போது, அவர்கள் இந்த துறையை தேர்வு செய்வதை ஒரு லட்சியமாக கருதுவது புரிந்தது.

எல்லாவிதமான வேலையிலும் வேலைபளு, மன உளைச்சல், நீண்ட காலமாக குடும்பத்தை பிரிந்து இருக்கும் சூழலும் உருவாகும். வேலை பளு காரணமாக தூக்கமின்மையும் சேர்ந்து கொள்ளும். ஒரு விமானப் பணியில் இருப்பவர் எந்த நேரத்திலும் வெளிநாடு செல்லும் சூழல் ஏற்படும். இதனால் மாற்று நேர மண்டல சூழ்நிலையை எல்லோரின் உடல்நிலையும் ஏற்றுக்கொள்ளாது. இதை எல்லாம் கடந்து ஒரு சிலர் அவங்க வேலையின் மேல் கொண்ட பிரியத்தால் எதையும் பொருட்படுத்தாமல் இந்த துறையில் சாதித்து வருகிறார்கள். அதில் ஒருவர் தூக்கமின்மை, உடல் ஒத்துழைக்கவில்லை போன்ற காரணத்தால் இந்த வேலையை விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும், என்னால் இந்த துறையில் இருந்து விலக முடியவில்லை.

அதனால் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பேராசிரியராக பணிபுரிவதாக தெரிவித்தார். மேலும் இவர்கள் மனோதத்துவ மருத்துவரை பார்ப்பதற்கும், மற்ற துறையில் உள்ளவர்கள் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. காரணம், இவர்களின் வேலை தினசரி இருநூறுக்கும் மேற்பட்ட மக்களின் உயிரை சார்ந்து இருக்கு’’ என்றவர் இவர்களுக்குள் பல பிரச்னைகள் இருந்தாலும் அது சார்ந்த உளவியல் ஆலோசனை பெற தயங்குவதாக தெரிவித்தார்.

‘‘பலருக்கு ஆலோசனை சொல்லும் இவர்கள் தங்களுக்கு என்று வரும் போது அதில் தயக்கம் காட்டுகிறார்கள். காரணம், உலகத்தை உலுக்கிய 2015 German Wing Flight விபத்து பயணிகளை மட்டுமின்றி விமானிகளையும் மற்ற விமான தொழில்நுட்ப வல்லுனர்களையும் உலுக்கியது. ஒரு தனிநபராக, ஒவ்வொருவரின் மனநலமும் முக்கியமானது என்று அந்த விபத்து உணர்த்தியுள்ளது. இதனால் ஒரு சில விமான நிறுவனங்கள் Psychometric Assessment மூலமாக அவர்களின் கீழ் பணி புரிந்தவர்களை தற்காலிகமாக வேலையைவிட்டு நீக்கியது. தங்களுக்கு பிடித்த வேலையில் இருந்து நீக்கப்பட்டால், அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? அதனாலேயே இவர்கள் மனநலம் தொடர்பான வார்த்தையினை பயன்படுத்த தயங்குகிறார்கள்.

அதற்கு முக்கிய காரணம் வேலை பறி போய் விடுமோ என்ற பயம். ஆனால் இந்த கருத்திற்கு நேர் மாறாக ஒரு சிலர், மனநல ஆலோசகரை சந்திப்பதில் தவறில்லை. மற்ற தொழில் வல்லுநர்களை போலவே, மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம் என்கிறார்கள். இதனை புரிந்து கொண்டும் கோவிட் காலத்திற்கு பிறகு விமான நிறுவனங்கள் தற்போது நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளனர். முக்கியமா இந்த துறையில் இருக்கும் பணியாளர்கள்களின் உடல் மற்றும் மனநிலையை மேம்படுத்திக் கொள்வதை கருத்தில் கொண்டு நிறைய மாற்றங்கள் வந்துள்ளது.

ஒவ்வொரு விமான நிலைய அலுவலகத்திலும் ஒரு உளவியல் நிபுணர் இருப்பார். விமான ஊழியர்கள் ஒவ்வொருவரும் அவங்க வேலையை மன நிம்மதியுடன் கையாள வேண்டியது அவசியம். ஏனெனில் பலரின் உயிர் மட்டுமில்லாமல் கோடிக்கணக்கான தொகை முதலீடு செய்து விமான நிறுவனம் விமானத்தை தயாரிக்கிறது. இவர்கள் சரியாக இருந்தாலும் சில சமயங்களில் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானங்கள் பழுதடைவது போன்ற நிலைமையில் அவர்கள் சரியாக செயல்படணும் எனும் போது அவர்களின் மனநிலை சரியா இருப்பது மிக அவசியம்” என்றார் மனநல ஆலோசகர் ரேவதி மோகன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post அவள் நானில்லை… வைரலான சிம்ரன் வீடியோ!! (மகளிர் பக்கம்)