வாழ்க்கை+வங்கி=வளம்! (மகளிர் பக்கம்)

Read Time:21 Minute, 38 Second

சிறு மற்றும் கிராமப்புற சமுதாயத்திற்கு இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பாக சுயஉதவிக் குழுக்கள் திகழ்கின்றன. ஆண்கள் மற்றும் பெண்கள் சிறு சிறு குழுக்களாக வருமானத்திற்கான ஆதாரங்களை சுதந்திரமாக ஏற்படுத்திக் கொள்ள சுயஉதவிக் குழுக்கள் வழிவகை செய்கின்றன. சுயஉதவிக் குழுக்கள், ஏழை மக்கள், குறிப்பாக கிராமப்புற சமூகங்களைச் சேர்ந்த பெண்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.

தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வாங்கி (நபார்டு) சுய உதவி குழு மற்றும் வங்கிகளின் இணைப்புத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. குழுவாக ஒன்றிணைந்தவர்களுக்கு இடையில் சேமிக்கும் பழக்கத்தைத் தொடங்கி, அந்தப் பணத்தைத் தேவையான குழுவின் உறுப்பினர்களுக்குக் கடனாக வழங்கும் செயல்முறைகள் பல இடங்களில் பின்பற்றப்படுகின்றன. நபார்டு 1996ம் ஆண்டு வங்கிகள் மற்றும் சுய உதவிக்குழுக்களை இணைக்கும் திட்டத்தை ஒரு கள ஆய்வின் மூலம் மேற்கொண்டு அதே ஆண்டு செயல்படுத்தியது. இத்திட்டம் வேகமாக வளர்ந்து, 2002ம் ஆண்டு இது உலகிலேயே மிகப்பெரிய சிறு நிதி திட்டமாக அமைந்தது.

சுய உதவிக் குழுவும் வங்கிக்கடனும்

சுய உதவிக் குழு வங்கியில் கணக்கு தொடங்கவும், கடன் பெறவும் வங்கிகள் நிர்ணயித்துள்ள அடிப்படை விதிமுறைகள் பின்வருமாறு:

(1) சுயஉதவிக் குழுவில் உறுப்பினர் எண்ணிக்கை 10 நபர்களுக்கு குறையாமலும் 20 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மற்றும் மக்கள் குறைவாக உள்ள மலைப்பகுதி போன்ற கடினமான பகுதிகளில் குறைந்த பட்சமாக 5 உறுப்பினர்களைக் கொண்டும் குழு துவக்கப்படலாம்.

(2) உறுப்பினர்கள் ஒரே கிராமம் அல்லது ஒரே பகுதியில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.

(3)ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட குழுவில் உறுப்பினராக இருக்கக் கூடாது.

(4)குழுவில் இயக்குநர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்று இருவரை தீர்மானத்தின் மூலம் முன்மொழியவேண்டும்.

(5)ஒரு உறுப்பினர் தொடர்ந்து மூன்று முறை சுய உதவிக் குழுவின் கூட்டத்திற்கு வராமல் இருந்தால் அந்த உறுப்பினர் வங்கியில் சுயஉதவிக் குழுவின் மூலம் கடன் பெற இயலாது.

(6)குழுவின் சட்ட திட்டங்களுக்கு எதிராகச் செயல்படும் உறுப்பினர் வங்கியின் கடனுதவித் திட்டத்தில் இணைய முடியாது.

(7)குழுவின் இயக்குனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் வங்கியின் சேமிப்பு, கடன் மற்றும் இதர சேவைகள் குறித்த விழிப்புணர்வை அனைத்து உறுப்பினர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும்.

(8)மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சுய உதவி குழுவில், மன வளர்ச்சி குன்றியோர்கள் மற்றும் 18 வயதிற்குக் குறைவான மாற்றுத் திறனாளி சார்பாக அவர்களின் பெற்றோர்களோ (அ) பாதுகாவலர்களோ குழுவில் பிரதிநிதியாக செயல்படலாம்.

(9)சுயஉதவிக்குழு வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி குறைந்தது 6 மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும்.

(10)சுயஉதவிக்குழு இதர வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்கியிருப்பின் கடன் வழங்கும் வங்கிக்கு மாற்றம் செய்யும்போது இதர வங்கியில் சேமிப்புக் கணக்கு துவங்கிய தேதியையே குழுவின் சேமிப்புக் கணக்கு தொடங்கிய தேதியாகக் கொள்ளலாம்.

(11)சுயஉதவிக் குழுவின் நிதியிலிருந்து குழுவின் 50% உறுப்பினர்கள் உட் கடன் பெற்று இருக்க வேண்டும் என்று சில வங்கிகள் அறிவுறுத்துகின்றன. உறுப்பினர்கள் கடன் பெற்று திருப்பிச் செலுத்தும் செயல்பாட்டின் கண்காணிப்பாக இது அமைகிறது.

(12) குழுவின் அனைத்து உறுப்பினர்களும் குழுவின் நிதிக்கு தொடர்ச்சியாக சேமிப்பு தொகை செலுத்தி இருக்க வேண்டும்.

(13)குழுவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் உறுப்பினராக இருக்க கூடாது.

(14)சுய உதவி குழுக்களின் கூட்டம் மாதத்தில் இரண்டு கூட்டங்கள் நடத்த வேண்டும். அதில் 75% உறுப்பினர்கள் பங்குகொண்டிருக்க வேண்டும்.

(15)சரியான முறையில் கணக்குப் புத்தகங்களைப் பராமரித்து வருதல் வேண்டும்.

வங்கிகள் வகுத்துள்ள தகுதி அடிப்படைகளைப் பெற்றுள்ள சுய உதவிக் குழுக்கள் மட்டுமே கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

வங்கி நிதியுதவி

(அ)தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.50000 முதல் ரூ.10 லட்சம் வரை நிதியுதவி வங்கிகள் வழங்குகின்றன,

(ஆ)தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விரும்பும் சுய உதவிக் குழுக்கள் கிராமப்புற, பழங்குடி பகுதிகளை சேர்ந்தவையாக இருக்க வேண்டும். குழுவில் 10 முதல் 15 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மாற்றுத் திறனாளிகள் 5 பேர் இருக்க வேண்டும். ஒவ்வொரு சுய உதவிக் குழுவுக்கு 10,000 முதல் 15,000 ரூபாய் சுற்று நிதி வங்கியின் மூலம் அரசு வழங்குகிறது. ஒவ்வொரு குழுவுக்கும் கடன் அளவு 50,000 முதல் 10 லட்சம் ரூபாய் என்று தகுதிக்கு ஏற்றவாறு நிர்ணயிக்கப்படுகிறது. கடனுக்கு ஆண்டுக்கு 7% வட்டி வசூலிக்கப்படுகிறது.

(இ) சுயஉதவிக்குழு வங்கியிலிருந்து கடன் பெற விண்ணப்பிக்கும் போது இடையீட்டு ஒப்பந்தத்தில் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கையெழுத்திட்டு வங்கியிடம் வழங்கவேண்டும்.

(ஈ) இதர வங்கிகளில் கடன் பெறவில்லை என்ற கடிதத்தை கடன் பெறும் போது இணைந்து வங்கியிடம் வழங்கவேண்டும். அந்தப் பகுதிகளில் இயங்கும் பிற வங்கிகளிடமிருந்து இந்தச் சான்றிதழை எழுத்து மூலம் பெற்று வழங்கலாம்.

(உ)குழுவிற்கு கடன் கோரும் தீர்மானம் உறுப்பினர்களின் குடும்ப அட்டை, குழு உறுப்பினர்களின் புகைப்படம் வங்கிக் கடன் மனுவுடன் இணைக்கப்பட வேண்டும்.

(ஊ) குழுவின் தீர்மான நகலுடன் வரவு செலவு, சேமிப்பு மற்றும் உள்கடன் அறிக்கைகளை இணைக்க வேண்டும்.

கடன் தேவையும் கடன் அளவும்

சுயஉதவிக் குழுவிற்கு தவணைக்கடன் / சுழல் நிதி / நடப்பு மூலதனக்கடன் அவர்களின் சேமிப்புத் தொகையின் அளவின் நான்கு அல்லது ஐந்து மடங்குவரை வழங்கப்படுகிறது. குழுவின் செயல்பாடு மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அளவு ஆகியவற்றின் அடிப்படையில் கடன் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. சுயஉதவிக் குழு செய்யும் பணிகளின் அடிப்படையில் கடனின் அளவும் மாறுபடும். அரசின் வழிகாட்டுதலின்படி உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

ஒரு குழு வங்கியிலிருந்து பெறும் கடன் செய்யும் தொழிலில் உற்பத்திக்கான முதலீடாகவும், மற்றொரு பகுதி குழு உறுப்பினரின் நுகர்வுச் செலவுகளுக்காக தேவைப்படுவது இயல்பு. உற்பத்தியாளராக குழு முழுவதும் இயங்கி அதற்குத் தேவையான கடன் தொகையை கேட்டு வங்கியிடம் விண்ணப்பிக்கும்போது வங்கி அதற்கு முன்னுரிமை வழங்குகிறது.

பொதுவான கடன் அளவு

முதல் முறை – குறைந்த பட்சம் ரூ. 25,000 / கடன் எல்லை இதில் எது அதிகமோ.இரண்டாம் முறை – குறைந்த பட்சம் ரூ. 50,0000 கிராமப்புற சுயஉதவிக் குழுக்களுக்கு மற்றும் ரூ. 75,000 நகர்ப்புறங்களுக்கு. 50% கடன் எல்லை இதில் எது அதிகமோ.மூன்றாம் முறை – சிறிய கடன் திட்டத்தில் 40% கடன் கொடுப்பதில் எது குறைவோ அதாவது அதிகபட்சமாக ரூ. 2,00,000.

சுய உதவிக் குழுவிற்கு சுழல் நிதிக் கடன்

சுய உதவிக் குழுக்கள் வங்கிகளிடமிருந்து சுழல் கடன் பெற்றுக் கொள்ளலாம். உறுப்பினர்களின் மொத்த கடன் தேவை, பயன்பாடு, திருப்பிச் செலுத்த இயலும் காலம் ஆகியவை நிதிக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும். ஒவ்வொரு நிதி ஆண்டின் துவக்கத்திலும் சுழல் நிதி, குழுவின் சேமிப்பு மற்றும் நிலுவையில் உள்ள கடன் தொகை ஆகியவை ஆய்வு செய்யப்படும். வங்கி வழங்கும் கடன் அனைத்து உறுப்பினர்களின் கூட்டுப் பொறுப்பில் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு உறுப்பினரும் கடனை எந்த நோக்கத்திற்காக வாங்குகின்றனர் என்பதை வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும். கடனின் அளவை நிர்ணயிப்பது வங்கியின் தன்னிச்சையான முடிவாகும். வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் குழு உறுப்பினர் ஒவ்வொருவரின் வீட்டிற்கும் வந்து கள ஆய்வு செய்து கடன் பெற விண்ணப்பித்த நபரையும் அவரின் இருப்பிடத்தையும் உறுதி செய்து கொள்வார்.

வங்கிக்கும் கடன் பெறும் குழுவிற்கும் இடையே கையெழுத்தாகும் ஒப்பந்தம் நான்கு பிரிவுகள் கொண்டது. கடன் வழங்கும் வங்கியின் பெயர், முகவரி, கடன் பெறும் நபரின் பெயர், முகவை, குழுவின் பெயர், கடன் தொகை, கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம், கடனின் நோக்கம், கடனுக்கான வட்டி விகிதம், கடனுக்கான பரிசீலினைக் கட்டணம், காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை, ஆவணக்கட்டணங்கள், பிற கட்டணங்கள், அடமானமாக வங்கியால் ஏற்கப்படும் சொத்து அல்லது மதிப்புமிகு பொருட்கள், பொறுப்புறுதிகள் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் விரிவாக எழுதப்பட்டிருக்கும்.

கூட்டுப் பொறுப்புக் குழு ஒப்பந்தம்

கடனுக்காக சுய உதவிக்குழுவினர் விண்ணப்பிக்கும்போது கடன் வழங்கும் வங்கி அந்த விண்ணப்பத்துடன் கூட்டுப் பொறுப்புக்குழு ஒப்பந்தத்தை ஒவ்வொரு உறுப்பினரும் கையெழுத்திட்டு வழங்க வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது. வங்கி வரையறுத்து எழுதிப் பெறும் கூட்டுப்பொறுப்பு ஒப்பந்ததில் கடன் கேட்டு விண்ணப்பித்த நபர் பெயரிடப்பட்ட தொடர்ந்து சிறப்பாக இயங்கும் சுயஉதவிக் குழுவின் உறுப்பினர் என்றும், ஒவ்வொரு உறுப்பினர் குழுவின் சட்டபூர்வ வாரிசு என்றும், நிர்வாகி என்றும், உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் நன்கு அறிவர் என்றும் குறிப்பிடப்பட்டு அவர்கள் நிரந்தரமாக வசிக்கும் இருப்பிட முகவரி பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகள் பின்வருமாறு:

(1) ஒவ்வொரு உறுப்பினரும் சுய உதவிக்குழுவின் வெற்றிக்காக உழைக்க வேண்டும். குழுவின் வணிக நலனுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எவரும் செயல்படக்கூடாது.

(2) வங்கியிலிருந்து பெறும் கடன் தொகைக்கு குழுவின் உறுப்பினர்கள் கூட்டாகவும், தனித்தனியாகவும் பொறுப்பாவார்கள்.

(3) உறுப்பினர்கள் குழுவை நிர்வகிக்கவும், அன்றாட நிர்வாகத்தைக் கவனிக்கவும், அது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளிலும் தங்கள் சார்பாக செயல்படவும் ஒரு குறிப்பிட்ட நபரை குழுவின் சட்ட திட்டங்களின்படி தேர்ந்தெடுத்து குழுத்தலைவராக நியமனம் செய்கிறார்கள். வாக்கெடுப்பு மூலம் குழுவின் தலைவரை எந்த நாளிலும் முன்னறிவிப்போடு நீக்கி, புதிய குழு தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம்.

(4) ஒவ்வொரு உறுப்பினரும் தங்களது அதிகாரம் பெற்ற பிரதிநிதிகள் குழுவின் நலனில் மேற்கொள்ளும் செயல்களின்படி நடக்கவும் அந்த நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் தரவும் உடன்படுகின்றனர்.

(5) சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு தலைவர் குறிப்பிடப்பட்ட பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரம் தருகிறார்கள்.

(a) சுய உதவிக் குழு உறுப்பினர்களின் சேமிப்புக் கணக்குகள், அவர்களுக்கு தரப்பட்ட கடன்கள், அவர்கள் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை போன்றவை தொடர்பான கணக்கு ஏடுகள் பராமரித்து ஒவ்வொரு வருடமும் அவற்றை குழு உறுப்பினர்களின் ஏற்புக்காகவும் ஒப்புதலுக்காகவும் வழங்குதல்.

(b) குழுவில் செலுத்தப்படும் தொகைக்குத் தேவையான ரசீதுகள் அல்லது ஒப்புதல் சான்றுகள் வழங்குதல்.

(c) குழுவின் உறுப்பினர்களுக்காக வழக்கு தொடுக்கவும், அவர்கள் மீது ஏதேனும் வழக்குகள் ஏற்பட்டால் அவர்களின் சார்பாக வாதாட வழக்கறிஞரை ஏற்பாடு செய்யவும் அது தொடர்பான செலவுகள் செய்யவும் சிறப்பு அதிகாரம் வழங்குதல்.

(6) சுயஉதவிக் குழுவின் உறுப்பினர் இறந்து விட்டால், கூட்டுப்பொறுப்பு ஒப்பந்ததின்படி, அவரது சட்டபூர்வமான வாரிசு குழுவிற்குச் செலுத்த வேண்டிய கடன் தொகையை செலுத்த வேண்டும். கடன் நிலுவையில் இல்லாத பட்சத்தில், அவரின் சேமிப்புத்தொகை வட்டியுடன் வாரிசுதாரரிடம் வழங்கவேண்டும்.

(7) உறுப்பினர்களின் அனுமதியின்றி புதியவர் ஒருவரை உறுப்பினராக சுயஉதவிக் குழுவில் இணைவதற்கு அனுமதிக்கக்கூடாது.

இந்த ஒப்பந்தத்தை ஏற்று சுயஉதவிக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் கையெழுத்திட வேண்டும். சுய உதவிக் குழு கடனுக்கான வட்டி விகிதம் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி வங்கிகள் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயிக்கின்றன. நபார்டு மறுநிதியளிப்புத் திட்டத்தின்படி வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி தற்போதைய அளவீடுகளின்படி 6 % ஆகும். மறுநிதியளிப்பு இல்லாத கடன்களுக்கான வட்டி விகிதம் 9%. இந்திய அரசு, சுய உதவி குழுக்கள் பெறும் கடனுக்கான வட்டி மானியம் சம்மந்தப்பட்ட குழுக்களுக்கு நேரடியாக அந்தந்த மாநில வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வழங்குகிறது.

சுய உதவி குழுக்கள் தாங்கள் பெற்ற வங்கி கடனை முறையான திருப்பிச் செலுத்தியிருக்க வேண்டும். வட்டி மானியம் பெறுவதற்கு சுய உதவி குழுக்கள் கடன் திரும்ப செலுத்துதல் குறித்த விவரங்களை இந்திய அரசின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்க இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். சுய உதவி குழுக்கள் கடன் திரும்ப செலுத்துதல் குறித்த விவரங்களை பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு மூலம் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்

கடன் வழங்கும் முறை

ஒரு குழுவிற்காக அங்கீகரிக்கப்படும் கடன் தொகை ஒரே தவணையாக அல்லது அந்தக் குழுவின் எழுத்து மூலமாக பெறப்பட்ட அனுமதியின்படி இரண்டு தவணைகளாக வங்கியால் வழங்கப்படும். குழுவினரின் முடிவின்படி, தொகையை அவர்கள் எடுத்து தேவையான உறுப்பினர்களுக்கு வழங்குவர்.

கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம்

வங்கியால் நிர்ணயிக்கப்படும் கால அளவு 24 முதல் 36 மாதங்கள் வரை வேறுபடுகிறது. மாத தவணைகளில் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயிக்கப்பட்ட கடன் தவணையை செலுத்தலாம். குறிப்பிட்ட தவணைக் காலத்திற்கு முன்னரே கடன் தொகை முழுவதையும் திருப்பிச் செலுத்தாவிட்டால் அதற்காக அபராத வட்டி கிடையாது.

நாடெங்கும் சுய உதவிக்குழுக்களின் பெருக்கமும் அவை வங்கிகளின் உதவியால் தங்கள் உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை வளமாக்கும் செயல்களும் போற்றத்தக்கவை. மேலும் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்னும் திட்டத்தின் வெற்றிக்கு சுய உதவிக்குழுக்களின் பங்களிப்பு தினமும் உயர்ந்து வருகிறது. வங்கிகளின் வாராக்கடன் அளவு சுயஉதவிக்குழு கடன் திட்டத்தில் மிகவும் குறைவு என்னும் புள்ளிவிவரங்கள் பொருளாதாரத் சந்தையில் இந்த அமைப்பின் உயர்வை இமயமென்று உயர்த்திக் காட்டுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post வானவில் உணவுகள்-செயற்கை நிறங்கள் உருவாக்கும் ஆபத்துகள்!! (மருத்துவம்)