காலப்போக்கில் அழியக்கூடிய பொக்கிஷங்கள், நினைவுகளை காலம் முழுவதும் கொண்டு செல்லலாம்! (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 6 Second

கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பொழில் வாய்ச் சியான பொள்ளாச்சியில் உள்ள டீச்சர்ஸ் காலனியில் வசித்து வருகிறார் கோகிலா. ‘‘வாழ்வில் திரும்ப பெற முடியாத சில தருணங்களை வாழ்க்கை முழுவதும் கொண்டு செல்வதற்கான முயற்சியே என்னுடைய தயாரிப்புகள்’’ என கூறும் கோகிலா, பொழுது போக்கிற்காக ஆரம்பித்தது இப்போது அவரின் தொழிலாகவே மாறிவிட்டது.‘‘பொழுதுபோக்கிற்காகவும் எனது வீட்டை அலங்கரிப்பதற்காகவும் சின்னச் சின்ன வேலைப்பாடுகளுடன் கூடிய கலைப் பொருட்களை செய்ய ஆரம்பித்தேன். பிறகு அது நன்றாக வரவே எனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களும் கேட்கவே, அவர்களுக்கும் செய்து கொடுத்தேன்.

அது மிகுந்த வரவேற்பப் பெற்றதால் அதை ஒரு தொழிலாகவே செய்ய ஆரம்பித்தேன். தற்போது நான் உருவாக்கிய கலைப் பொருட்கள் மற்றும் பரிசுத் தொகுப்பு உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது’’ என்கிறார். திருமண வைபோகத்தில் காக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள்…

காலத்தால் எளிதில் அழிந்து போகக்கூடிய நினைவுகளை, பொக்கிஷங்களை காக்கும் முயற்சியாக திருமண வைபோகத்தில் பயன்படுத்தப்படும் மாலைகள், மஞ்சள் கயிறு, மோதிரம் மற்றும் மணமக்கள் போட்டோ ஆகியவைகளை பிரிசர்வேஷன் முறையில் பத்திரப்படுத்தி வீடுகளில் மாட்டிவைக்கும் அலங்கார பொருட்களாக செய்து தருகிறேன். கீ செயின், டாலர் செயின், மோதிரம், பிரேஸ்லெட் போன்றவைகளை வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்பவும் செய்து தருகிறேன்.

இன்ஸ்டாகிராமில் சந்தைப்படுத்துதல்…

அடுத்தகட்ட நடவடிக்கையாக என்னுடைய பொருட்களை @g_gift_ok_ah என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் என்னும் பெரிய தளத்தை தேர்ந்தெடுத்து அதில் பதிவு செய்து வருகிறேன். அது என்னுடைய வளர்ச்சிக்கு பெரிய அளவில் பயனுள்ளதாக இருந்து வருகிறது. எளிதாக என்னுடைய கலைப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்வதில் பெரும் பங்காற்றி வருகிறது. அதில் ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய 7 வயது மகளின் பால் பல்லை கொடுத்து ஏதாவது செய்து தருமாறு கூறினார். நான் அதை வெள்ளி மோதிரமாக செய்து அவர்களுக்கு கொடுத்தேன். அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

குழந்தை கால நினைவுகளை நீங்காமல் பாதுகாக்க…

வாழ்வில் உன்னதமான நிகழ்வு என்பது குழந்தை பேறு. அந்தக் காலகட்டத்தில் பயன்படுத்தப்படும் ப்ரக்னன்சி டெஸ்ட் கிட், தொப்புள் கொடி, குழந்தையின் நகம், முடி, அரைஞாண் கொடி, வளையல் போன்றவைகளை பாதுகாத்து பிரேஸ்லெட், டாலர் செயின், ஹோம் டெக்கராகவும் செய்து தருகிறேன்.

தாய்ப்பாலையும் பாதுகாக்கலாம்…

குழந்தைக்கு கொடுக்கப்படும் தாய்ப்பாலை DNA KEEPSAKE JEWELLERY ஆகவும், அம்மா, குழந்தை உருவ பெண்டன்ஸ் ஆகவும், தங்கம் மற்றும் வெள்ளி செயின்
களில் டாலராகவும் செய்து அணிந்து கொள்ளலாம்.

குழந்தையின் பாதச்சுவடு (3d இம்ப்ரஷன்)

சிறு குழந்தைகளின் கால் அச்சு மற்றும் கை அச்சு போன்றவற்றை 3டி முறையில் அச்சு எடுத்து அதை பிரேமாக செய்து தருகிறோம். இது போன்ற அழகான தருணங்களை தங்கள் காலம் முழுவதும் கொண்டு செல்ல 150க்கும் மேற்பட்ட வடிவங்களில் அலங்காரப் பொருட்களாக, கிஃப்டாக செய்து தருகிறேன்.

பெற்ற விருதும் அங்கீகாரமும்…

கடந்த 152வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நான் வரைந்த ஓவியத்திற்கு கலாம் உலக சாதனை விருது கிடைத்தது. மேலும் 2022ம் ஆண்டு நடைபெற்ற கோவை பிசினஸ் அவார்ட் என்னும் நிகழ்ச்சியில் பர்சனலைஸ்டு கிஃப்ட் அவார்டு என்னும் விருதையும் பெற்றுள்ளேன். சுய சக்தி என்னும் விருதை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.

இத்தனை காலம் எனக்கு உறுதுணையாய் இருந்து ஊக்குவித்த எனது தாய், தந்தையருக்கும், சகோதரிக்கும், எனது வாடிக்கையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
ஆசையோ… கனவோ… சிறியதோ… பெரியதோ… அதை முயற்சி செய்யாமல் மட்டும் இருக்கக் கூடாது. முடியும் என்பதே முதல் வெற்றி என தன்னம்பிக்கையுடன் கூறினார் கோகிலா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முகத்தை அழகாக்கும் கான்டூரிங் மேக்கப்! (மகளிர் பக்கம்)
Next post நீரிழப்பைத் தடுக்க…தவிர்க்க!! (மருத்துவம்)