ஓவியமும் பரதமும் தந்த பரிசுதான் ஆர்க்கிடெக்சர் படிப்பு! (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 48 Second

கட்டிட வடிவமைப்பாளர், ஓவியர், பரதக்கலைஞர் என பன்முகம் கொண்டவர் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஷிவானி. தற்போது கட்டிட வடிவமைப்பாளர் துறை சார்ந்த கல்லூரியில் படித்து வந்தாலும் மற்ற இரண்டு துறைகளிலும் முறையாக பயின்று பட்டம் பெற்றுள்ளார். இவர் காமெடி நடிகர் வையாபுரியின் புதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘‘எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் ஏற்பட காரணம் என் அம்மா. அவங்க கார்ட்டூன்கள் வரைவதில் வல்லவர். நான் எல்.கே.ஜி, யு.கே.ஜி படிக்கும் போதே அம்மா கார்ட்டூன் வரைவதைப் பார்ப்பேன். எனக்கு அவங்க வரைவதை பார்க்க ரொம்பவே பிடிக்கும். அவங்களை போல் நானும் ஓவியம் வரையணும்னு எனக்குள் ஆர்வம் ஏற்பட்டது. நான்காம் வகுப்பு படிக்கும் போது, நானும் அம்மாவிடம் சின்னச் சின்ன எளிதான ஓவியங்களை வரைய கற்றுக்கொள்ள ஆரம்பிச்சேன். பென்சிலில்தான் நான் வரைவேன்.

என்னுடைய பென்சில் ஆர்ட்டினை பார்த்து அம்மா ரொம்பவே வியந்தாங்க. என் அப்பாவும் அண்ணணும் என்னுடைய குட்டிக் குட்டி ஓவியங்களை பார்த்து என்னை மேலும் ஊக்குவித்தாங்க. எனக்கு ஓவியத்தின் மேல் உள்ள ஆர்வத்தினைப் பார்த்து அப்பா என்னை ஓவியப் பயிற்சி பள்ளியில் சேர்த்துவிட்டார். ஆனால் சில காலம்தான் நான் அங்கு பயிற்சி எடுத்தேன். காரணம், அங்கு குழந்தைகள் வரையக்கூடிய ஓவியங்களுக்கான பயிற்சி மட்டும்தான் அளித்து வந்தாங்க. எனக்கோ பெரியவர்கள் வரையக்கூடிய ஓவியங்களுக்கான பயிற்சி எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அப்பாவிடம் என் தேவையினை எடுத்துக் கூறினேன்.

அப்பாவும் என் ஆவலை புரிந்து கொண்டு சென்னை கே.கே.நகரில் அமைந்துள்ள காமாட்சி கலைக்கூடத்தில் என்னை சேர்த்துவிட்டார். அங்கே எனக்கு குருவாக ஓவியங்கள் வரைய கற்றுத்தந்தது வெங்கடாஜலபதி அவர்கள். அவர்தான் நான் சிறு வயதில் வரைந்த ஓவியங்களைப் பார்த்து இதை ஒரு படிப்பாக படிக்க ெசான்னார். அவரின் வழிகாட்டலில் ஓவியத்தில் டிப்ளமோ படிப்பு படிச்சேன். அதன் பிறகு கலர் பென்சில், ஷேடிங் பென்சில், வாட்டர் கலர், அக்ரிலிக் பெயின்ட், ஆயில் பெயின்ட் என அனைத்து மீடியம்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்திருக்கிறேன்.

ஓவியங்களை பொறுத்தவரை அதற்கு என தனிப்பட்ட அளவு எல்லாம் கிடையாது. சிறிய அளவு முதல் மெகா சைஸ் வரையிலும் வரையலாம். என்னுடைய ஓவியங்கள் பெரும்பாலும் A3 முதல் A4 அளவில்தான் இருக்கும். கேன்வாஸ் பெயின்டிங்கினை அக்ரிலிக்கில் செய்கிறேன். மனிதர்களை பார்த்து அப்படியே வரையும் போட்டோ ஸ்கெட்சஸும் வரைவேன். பார்பார்ட் எனும் வண்ணமயமான போட்ரைட் ஓவியங்களும் எனக்கு வரைய பிடிக்கும்.அதைத் தவிர வாட்டர் கலர் கொண்டும் பெயின்டிங் வரைகிறேன்.

பள்ளியிலும் சரி கல்லூரி காலத்திலும் சரி நேரம் கிடைக்கும் ேபாது எல்லாம் என்னுடைய பொழுதுபோக்கு ஓவியங்கள் வரைவது மட்டும்தான். அது என்னுடைய உயிர் மூச்சாகவும் மாறிவிட்டதுன்னுதான் சொல்லணும்’’ என்றவருக்கு பரதம் மேல் ஏற்பட்ட ஈடுபாடு குறித்து விவரித்தார். “கலை சார்ந்த எந்த ஒரு விஷயமும் எனக்கு பிடிக்கும். ஒரு பக்கம் ஓவியம் என்றால் மறுபக்கம் நடனம் மீதும் எனக்கு தனிப்பட்ட ஆர்வமுண்டு. எப்படி ஓவியம் வரைவதை முறையாக பயின்றேனோ அதேபோல் தான் பரதமும் நான் கற்றுக் கொண்டேன்.

அதில் அரங்கேற்றம் மட்டுமில்லாமல், பரதக்கலை குறித்து பட்டமும் பெற்றேன். என்னுடைய எல்லா விருப்பத்திற்கும் முழு ஊக்கம் அளிப்பது என் குடும்பத்தினர்தான். அவர்கள் இல்லாமல் என்னால் இரண்டு கலைகளிலும் பட்டம் பெற்றிருக்க முடியாது. நான் துவண்டு விழும் நேரமெல்லாம் என் அண்ணன் ஷரவன் எனக்கு ரொம்பவே சப்போர்ட்டாக இருப்பார்.

நான் இப்போது படித்து வரும் கட்டிடக்கலை சார்ந்த பட்டப்படிப்பும் கலையை அடிப்படையாகக் கொண்டது. என்னுடைய இந்த படிப்பிற்கு நான் கற்றுக் கொண்ட ஓவியங்கள் பெரிய ்அளவில் உதவி செய்கிறது. புதுமையான வித்தியாசமான கட்டிடங்களை நாங்கள் வரைய நான் கற்ற ஓவியக்கலை மிகவும் உதவியாக இருந்து வருகிறது. அதே சமயம் ஐந்து வருட படிப்பினை சோர்வில்லாமல், மனம் தளராமல் என்னை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள பரதநாட்டியக் கலையும் பெரிதும் உதவுகிறது.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நான் கற்ற இந்த இரண்டு கலைகளும் தந்த பரிசுதான் கட்டிட வடிவமைப்பு படிப்பு. இந்த துறையில் மிகச் சிறந்த கட்டிடக் கலைஞர் என்று பெயர் எடுப்பேன். அதே சமயம் பரதமும் தொடர்வேன்’’ என்ற ஷிவானி ஓவியப் போட்டிகளில் பல பரிசுகள் மற்றும் விருதுகளைப் பெற்றுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தப்பு செய்தா சுட்டிக் காண்பிப்பதுதான் உண்மையான ஃப்ரெண்ட்ஷிப்!! (மகளிர் பக்கம்)
Next post ஒரு வயது வரை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாத உணவுகள்! (மருத்துவம்)