இல்லத்தை வளமாக்கும் வலம்புரி சங்கு!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 17 Second

பண்டைய காலம் முதல் இன்றைய நவநாகரீக காலம் வரை எந்தவொரு ஆன்மிக நிகழ்ச்சியாக இருந்தாலும் சங்கின் முழக்க ஒலி கொண்டு துவங்குவதுதான் வழக்கமாக இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்படி ஒரு மகத்தான சக்தி சங்கின் முழக்கத்திற்கு உள்ளது. நாம் வசிக்கும் வீட்டில் எத்தனை அறை இருந்தாலும், பூஜை அறைக்கு நாம் என்றுமே தனி கவனம் செலுத்துவது வழக்கம். ஒரு அறை மட்டுமே உள்ள வீடாக இருந்தாலும் அதில் சின்ன மாடம் போல் அமைத்து அதையே நாம் பூஜை அறையாக மாற்றி வைத்திருப்போம்.

நாள் முழுவதும் வீட்டில் இருந்தாலும், பூஜை அறையில் நாம் இருக்கும் நேரம் குறைவுதான் என்றாலும், அந்த அறையில் நாம் கடவுள் முன் கேட்கும் விஷயம் ஒன்று தான். குடும்பத்தில் இருப்பவர்கள் எந்தக் குறையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றுதான் நாம் நித்தமும் பிரார்த்தனை செய்கிறோம். நம் வீட்டின் செல்வம், வலம் என அனைத்தையும் அங்கு நாம் வைத்திருக்கும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்பது நம்முடைய அசைக்க முடியாத நம்பிக்கை.

அந்த அறையில் கடவுளின் புகைப்படம், விக்ரகம், விளக்கு, பீடங்கள், மணி, சங்கு என பல பூஜை பொருட்களை வைத்திருப்போம். சுவாமிக்கு எவ்வாறு தினமும் விளக்கேற்றி வழிபடுகிறோமோ அதேபோல் நம் பூஜை அறையில் இருக்கும் சங்கினையும் வழிபடுவது விசேஷம். ஆனால் பலருக்கு சங்கிற்கு எவ்வாறு பூஜை செய்ய வேண்டும் என்பது தெரியாது. நம் இல்ல பூஜை அறையில் சங்கு இருந்தால் அதை வழிபடும் முறை மற்றும் பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

இல்லத்தில் வலம்புரி சங்கு இருந்தா கடன் தீரும், கஷ்டங்கள் விலகும், செல்வம் பெருகும் என்பது ஐதீகம். ருத்ராட்சம், சாளக்கிராமம், சங்கு இவை அனைத்தும் இயற்கையான முறையில் உருவாகும் பொருட்கள். இவை அனைத்தும் பூஜிப்பதில் முதன்மையானது. அதில் ஒரு முக்கியமான பொருள் சங்கு. இவற்றை பூஜித்து வந்தால், இல்லறத்தில் நன்மை பெருகும் என்பதால் அதனை பலர் இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள்.

ருத்ராட்சம் – சிவனுக்குரியது, சாளக்கிராமம் – விஷ்ணுவிற்குரியது, வலம்புரி சங்கு – லட்சுமிக்குரியது. வீட்டில் சங்கினை வைத்து பூஜை செய்து வந்தால் மகாலட்சுமி அவ்விடத்தில் வசித்து வருவாள் என்பது நம்முடைய அசைக்க முடியாத நம்பிக்கை. அவ்வாறு பூஜிக்கும் பொருட்களில் முதன்மையாக இருப்பதுதான் இந்த வலம்புரி சங்கு.

குப்பையிலிருந்து கோபுரம்!

*செல்வத்தை அள்ளித்தரும் மகாலட்சுமியின் பார்வை பட்டால் குப்பைமேட்டில் இருப்பவன் கூட பணக்காரன் ஆகிவிடுவான் என சான்றோர் கூறுவர். மகாலட்சுமியின் பார்வையானது ஒருவர் இழந்த செல்வம், பெயர், புகழ் போன்றவற்றை திரும்ப பெற அருள்பாலிக்கும்.

*ஆயிரம் சிப்பியானது ஒரு இடம்புரி சங்கு. ஆயிரம் இடம்புரி சங்கானது ஒரு வலம்புரி சங்கு. வலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம். ஆனால், வலம்புரி சங்கை வீட்டில் எப்படி வைத்திருக்க வேண்டும் என சில குறிப்புகள் கூறப்படுகின்றன.

*வலம்புரி சங்கை வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவ்வாறு வைத்திருக்கும் பட்சத்தில் அதனை சுத்தமாகவும், தினமும் பூஜித்து வர வேண்டியது அவசியம்.

*சித்ரா பௌர்ணமி, ஆனி மாத வளர்பிறை அஷ்டமி, ஆடி மாத பூர நட்சத்திரம், புரட்டாசி மாத பௌர்ணமி போன்ற ஆன்மீக சிறப்பு நாட்களில் வலம்புரி சங்கில் பால் வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்து வந்தால் தம்பதிகள் நல்ல ஆயுளுடன் இருப்பார்கள்.

* நாள் தோறும் வலம்புரி சங்கில் நீர் மற்றும் துளசி போட்டு அதை தினமும் குடித்து வந்தால் ஆரோக்கியம் சிறக்கும்.

* பஞ்சமி திதி நாளில் வலம்புரி சங்கில் தூய்மையான பசும்பால் ஊற்றி பூஜை செய்து வந்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.

* பிறந்த குழந்தைக்கு வலம்புரி சங்கு மூலம் பால் ஊற்றினால், குழந்தை நல்ல ஆரோக்கியம் பெறும். மேலும், இதனால் குழந்தை மேல் யாருடைய கண் திருஷ்டியும் படாது என்று நம்பப்படுகிறது.

*செவ்வாய் தோஷம் உள்ள நபர்கள் வலம்புரி சங்கில் பசும்பால் ஊற்றி 27 செவ்வாய் கிழமைகள் அம்மனுக்கு பூஜை செய்து வந்தால் தோஷம் விலகும், தடைபட்ட திருமணம் வெகு விரைவில் நடக்கும்.

*உங்கள் வீட்டில் வலம்புரி சங்கை வைத்து பூஜித்து வந்தால் பில்லி, சூனியம், செய்வினை தாக்கம் அண்டாது.

இல்லத்தில் வலம்புரி சங்கை வைத்து பூஜை செய்யும் வழிமுறை

வாழை இலை அல்லது தட்டில் பச்சரிசி அல்லது நெல் வைத்து அதன் மீது வலம்புரி சங்கை வைத்து பூஜை செய்ய வேண்டும். வலம்புரி சங்கினை வடக்கு அல்லது தெற்கு முகம் பார்த்துதான் வைக்க வேண்டும். வலம்புரி சங்கில் தண்ணீர் மற்றும் துளசி வைத்து பூஜை செய்வது சிறப்பு. வலம்புரி சங்கை வைத்து பூஜை செய்யும் போது மலர்கள், தங்கம் அல்லது பணம் வைத்தும் பூஜை செய்யலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வீட்டை வண்ண மயமாக்கும் N-சக்தி பெண்கள்! (மகளிர் பக்கம்)
Next post அகம் காக்கும் அகத்தி!! (மருத்துவம்)