அன்று டைரி எழுதினேன்… இன்று கதை புத்தகம் வெளியிடுகிறேன்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 6 Second

புத்தகம் படிக்கும் பழக்கம் முற்றிலும் மறந்துவிட்ட நிலையில் இன்றைய சிறுவர், சிறுமிகள் செல்போனே கதி என்று இருக்கிறார்கள். இவர்களுக்கு புத்தகம் படிக்க வேண்டும் என்ற பழக்கம் முற்றிலும் மறந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். புத்தகம் படிப்பது எவ்வளவு அவசியம் என்று நாம் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பக்கம் புரிய வைத்துக் கொண்டிருக்கிறோம். அதே சமயம் மற்றொரு பக்கம் அவர்களே அதே எழுத்து மேல் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அஞ்சலி டெல்லியை சேர்ந்தவர். 17 வயது நிரம்பியுள்ள இவருக்கு எழுத்து மேல் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக கவிதை மற்றும் கதைகளை எழுத ஆரம்பித்து, அதனை
புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார். ‘‘‘என் அப்பா, சாதாரண ஏழை விவசாய பெற்றோருக்கு சிவகங்கையில் மகனாக பிறந்தார். அவரின் கடின உழைப்பு மற்றும் படிப்பினால்தான் அவர் உயர்ந்தார். இளம் வயதிலேயே மூன்று பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக பதவி வகித்தார். மேலும் சுப்ரீம் கோர்ட்டில் குழந்தைகள் மற்றும் வயதானவர்களின் நலனுக்காக நீதிபதியாக செயல்பட்டு வந்தார். இந்திய அரசின் தலைமை நீதியரசராகவும், டெல்லியின் தேசிய லோக் அதாலத் நீதிமன்றத்தின் உறுப்பினர் மற்றும் முன்னாள் மாஜிஸ்திரேட்டராகவும் அப்பா செயலாற்றி வருகிறார். அவர் தன்னுடைய பணியில் செய்த சாதனைகளை பற்றி நான் என்னுடைய டைரியில் எழுதி வருவேன்.

என்னுடைய ஐந்து வயது முதலே நான் அவரைப் பற்றி எழுத ஆரம்பித்தேன். இப்போது அவரைப் பற்றி நான் எழுதிய டைரிகளே ஒரு மலை போல் குவிந்து இருக்கிறது. அது தான் என்னை எதிர்காலத்தில் எழுத்து மேல் ஆர்வத்தினை தூண்ட ஆரம்பித்தது.பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே நான் கவிதைகள் மற்றும் கதைகளை எழுத ஆரம்பித்துவிட்டேன். நான் இயற்கையை நேசிப்பவள். முப்பத்தி ஐந்து வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா சென்று இருக்கேன்.

அதனால் உலக மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட அதை பயின்று வருகிறேன். எனக்கு தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம், பிரெஞ்சு மொழிகள் பேச, எழுத தெரியும். ஆனால் ஆங்கிலத்தில் தான் 200க்கும் மேற்பட்ட கவிதை மற்றும் கதைகளை நான் எழுதி இருக்கேன். என்னுடைய கவிதை மற்றும் கதைகள் இரண்டுமே தேசப்பற்று, மதங்கள் பற்றிய ஆய்வு, தெய்வ பக்தி, இயற்கை சார்ந்துதான் இருக்கும். தினமும் இரவு நேரம் தான் எழுதுவேன். எழுத்து மேல் மட்டுமில்லை எனக்கு பலதரப்பட்ட விஷயங்கள் மேல் ஆர்வம் உண்டு. என்னுடைய ஆர்வத்திற்கு என் பெற்றோர் எப்போதும் தடை விதித்ததில்லை.

அதனால் விளையாட்டு, பரதம், ஓவியங்கள் என அனைத்தும் பழகி வருகிறேன். இதைத்தவிர பகவத் கீதையினை குழந்தைகளுக்கு கற்றுத் தருகிறேன். ஆகாஷவாணியில் குழந்தைகளுக்கான ஒழுக்கம் குறிப்பாக பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து சொற்பொழிவுகள் ஆற்றி வருகிறேன். நான் எழுதிய கவிதைகளுக்கு நானே பியானோவில் இசை கம்போஸ் செய்து பாடுவேன். ஆஸ்திரேலியாவில் உள்ள இசைப்பள்ளியில் என்னுடைய கவிதைகளை பாடல்களாக பாடச் சொல்லி அழைப்பும் வந்தது’’ என்றவரின் ரோல் மாடல்
அவரின் அப்பாவாம்.

‘‘அவரைப் பார்த்துதான் நான் வளர்ந்தேன். கிராமத்தில் விவசாயிக்கு மகனா பிறந்திருந்தாலும், கடின உழைப்பு மற்றும் கல்வியால் மட்டுமே அவர் உயர்ந்திருக்கார். அதனால் நான் பல விஷயங்கள் செய்தாலும் என்றும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். எப்போதும் தேனீ போல் சுறுசுறுப்பாக இருப்பார். நேர்மை தவறாதவர். அவரைப் போல் நானும் செயல்பட வேண்டும் என்ற ஆர்வம் தான் நான் பல துறைகளில் ஈடுபட காரணம்.

ஒரு முறை அப்பாவிடம் அவர் வளர்ந்த கிராமம் பற்றி பேசிக் ெகாண்டு இருந்தேன். அப்போது என்னுள் ஒரு எண்ணம் எழுந்தது. அதை அவரிடம் சொன்னேன். அவர் நிறைய தான தர்மங்கள் செய்வார். அதை ஏன் அவரின் கிராமத்து மக்களுக்கு செய்யக்கூடாதுன்னு அவரிடம் கேட்டேன். அவருக்கும் என்னுடைய யோசனை பிடித்து போக. உடனே நானும் அவரும் கிராமத்திற்கு ஃபிளைட் ஏறினோம்.

அவர் வசித்த கிராமத்து மக்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சைக்கு உதவும் இலவச ஆம்புலன்ஸ் ஒன்று வழங்கினோம். மேலும் அங்குள்ள மக்களுக்கு பொது மருத்துவம், கண் மருத்துவம் ேபான்ற மெடிக்கல் கேம்ப் அமைத்தோம். அதன் பிறகு கிராமத்து இளைஞர்கள் நீதித்துறை, ஐ.ஏ.எஸ், ஐ.எப்.எஸ், ஐ.பி.எஸ் கனவுகள் நிறைவேற இலவச பயிற்சி மையம் மற்றும் இலவச சட்ட ஆலோசனை மையம் ஒன்றையும் திறந்து வைத்தோம்.

எனக்கும் அப்பாவை போல் நீதிபதியாக வேண்டும் என்பதுதான் கனவு. அதே சமயம் எனக்கு பிடித்த கதை, கவிதை, ஓவியம், பியானோ போன்றவற்றிலும் ஆர்வம் செலுத்துவேன். என்னைப் பொறுத்தவரை பிடித்த விஷயத்தை செய்ய யோசிக்கக்கூடாது. அப்போதுதான் நாம் வாழும் வாழ்க்கையின் முழுமையை உணரமுடியும்’’ என்றார் அஞ்சலி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வாழ்க்கை + வங்கி = வளம்!! (மகளிர் பக்கம்)
Next post என் குழந்தைகள்தான் என்னை வாழவைத்தார்கள்!! (மகளிர் பக்கம்)