நுரையீரலை காப்போம்!! (மருத்துவம்)

Read Time:11 Minute, 34 Second

ஒரு மனிதன் உயிர்வாழ்வதற்கு அவசியமானது சுவாசம். அதாவது, உணவு உண்ணாமல், தண்ணீர் குடிக்காமல் கூட மனிதன் ஓரிரு நாட்கள் உயிர்வாழ முடியும். ஆனால் சுவாசிக்காமல் சில நிமிடங்கள் கூட உயிர்வாழ முடியாது. இந்த சுவாசிக்கும் பணியை இடைவிடாது செய்வது நுரையீரல்தான். ஆனால், இன்றைய சூழ்நிலையில் மாசடைந்த காற்று அதிகம் இருப்பதால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலும் அதிகம் இருக்கிறது. அவற்றிலிருந்து நம்மைப் பாதுக்காத்துக் கொள்ளவும் நுரையீரலின் செயல்பாடுகளையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் மருத்துவர் எஸ். சகாய அந்தோனி.

நுரையீரல் என்பது சுவாசிக்கும் உறுப்பு. அதாவது, காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தத்தில் சேர்ப்பதும், ரத்ததில் உள்ள கார்பன்-டை ஆக்ஸைடை பிரித்து உடலிலிருந்து வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கிய பணியாகும். மேலும், ரத்தத்தில் அவ்வப்போது சின்னசின்ன மிக நுண்ணிய ரத்த கிளாட்கள் உருவாகும். அவற்றை சரிசெய்வதும் நுரையீரலின் பணியாகும்.
நுரையீரலின் செயல்பாடுகள் என்றால் அது நாம் சுவாசிக்கும் மூச்சுக்குழலில் இருந்து தொடங்குகிறது. அதாவது, மேலே உள்ள ஃப்ரேங்ஸ் அடுத்து லேரிங்ஸ் அதிலிருந்து மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும் காற்று டிரக்கியா (Trachea) மூச்சுக் குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது.

அங்கிருந்து, மூச்சுக்குழாய் மார்புப் பகுதியில் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரலுக்குச் செல்கிறது. நுரையிரலுக்குள் நுழைந்தவுடன் மீண்டும் சிறு சிறு காற்றுக் குழாய்களாக ஒவ்வொன்றிலிருந்தும் கிளைகள் பிரியும். பின்னர் அவற்றிலிருந்து இன்னும் சிறு பொடிபொடி கிளைகளாக பிரியும். இந்த குழாய்களை சுற்றி ரத்தக் குழாய்கள் இருக்கும். அதாவது, முதல் நிலை மூச்சுக்குழல் (Primary bronchi), இரண்டாம் நிலை மூச்சுக் குழல், மூன்றாம் நிலை மூச்சுக்குழல், மூச்சுக் குறுங்குழல் (bronchiole) என்று படிப்படியாகப் பிரிந்து கடைசியாக சின்னச் சின்ன பலூன்கள் மாதிரி தோன்றும் குட்டிக்குட்டி பைகளுக்குள் செல்லும்.

இவற்றை காற்று நுண்ணறைகள் (Alveoli) என்று அழைக்கிறோம். நாம் இழுக்கும் மூச்சுக்காற்று இந்த குழாய்கள் வழியாக காற்று நுண்ணறைகளுக்குள் வந்து சேர்ந்து அங்கிருக்கும் ரத்தத்துடன் கலந்துவிடும். அங்கு ரத்தத்தில் கார்பன் – டை – ஆக்ஸைட் அளவு அதிகம் இருக்கும். அவற்றை, நாம் மூச்சு வெளிவிடும்போது, அங்கிருக்கும் கெட்ட காற்று வெளியே வந்துவிடும். இதுதான் பொதுவாக, நுரையீரலின் பணியாகும்.

நுரையீரலுக்கு ஏற்படும் பாதிப்புகள்

நுரையீரலை தாக்கும் நோய்கள் என்றால், ஒன்று, காற்றுக்குழாய்களில் நோய்கள் வரலாம். மற்றொன்று, நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளை சுற்றியிருக்கும் டிஷுக்களில் நோய்கள் வரலாம். அடுத்ததுபடியாக, நுரையீரலுக்கும் இதயத்துக்கும் செல்லும் ரத்தகுழாய்களில் நோய் வரலாம். இதில் பொதுவாக வரும் பாதிப்பு என்றால், நுரையீரலின் காற்றுக் குழாய்களில் ஏற்படும் பாதிப்புதான். இது வைரல்தொற்று மற்றும் பாக்டீரியா தொற்றுகளால் ஏற்படுகிறது.

மேலும், நம்மூர் சீதோஷன நிலைக்கு இந்த வைரல் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் ஆண்டு முழுக்கவே இருக்கும். அதேசமயம், சீசன்களில் இது அதிகமாக இருக்கும். குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு உடலில் நோயதெரிப்பு சக்தி குறைவாக இருப்பதனால், இதுபோன்ற சீசன்களில் இந்த வைரல் தொற்றுகள் நுரையீரல் பூராவும் பரவி, நோய்களை உண்டாக்குகிறது. அது சிலருக்கு சில நேரங்களில் நிமோனியாவாகவும் மாற வாய்ப்பு உண்டு. இப்படி நிமோனியாகவாக மாறும்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உண்டு. எனவே, நிமோனியா கட்டத்திற்கு போகும் முன்பே வைரல் தொற்றை கட்டுப்படுத்த, தடுப்பூசிகள் எடுத்துக் கொண்டால், இதனை கட்டுப்படுத்தலாம்.

இதுதான் பொதுவாக நுரையீரலை தாக்கும் பிரச்னைகள், இது தவிர வேறு பிரச்னை என்றால், அது புகைப்பதனால் ஏற்படுவது. அதில் ஒன்னு, சிஓபிடி என்று சொல்வோம். அது ஆஸ்துமா மாதிரியானது. அதாவது, தொடர்ந்து புகைப்பதனால், மூச்சுக் குழாய் வீங்கி பாதிப்புகள் ஏற்படும். இவர்களுக்கு எப்போதும் சளி இருந்துகொண்டே இருக்கும். இந்நிலையில்தான், அவர்களுக்கு இன்ஹேலர்ஸ் கொடுக்கப்படும்.

அதுபோன்று நுரையீரலை பாதிக்கும் இன்னொரு நோய் டி.பி. டி.பி. நோய் சமீபகாலமாக அதிகரித்து வருவதாகவும் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த டிபி வர காரணம், கூட்டம் அதிகமுள்ள இடத்தில் இருப்பது. டி.பி நோயாளிகள் இருமும்போது அருகில் இருப்பது. அதாவது, அவர்களுக்கு டிபி இருக்கிறது என்று தெரியாமலே இருப்பது போன்றவற்றால் வருகிறது.

நுரையீரலை பாதுகாக்கும் வழிகள்

புகை பிடிப்பதை தவிர்ப்பது. நுரையீரலை பாதிக்கும் முக்கிய காரணிகளில் முக்கியமானது புகைபழக்கம். மாசு நிறைந்த காற்றை சுவாசிக்காமல் இருப்பது. பயணம் செய்யும்போது, வண்டிகளில் இருந்து வெளிவரும் புகையில் சல்பர் அதிகளவில் இருக்கும். இதை அதிகளவில் சுவாசிக்கும் போது, நுரையீரலை பாதிக்கும். இதை தவிர்க்க, தூசு நிறைந்த பகுதிகளுக்கு செல்லும் போதோ அல்லது வெளியில் செல்லும்போது, மாஸ்க் அணிந்து செல்வதை வழக்கப்படுத்திக் கொள்வது நல்லது.

உடற்பயிற்சி செய்வது நுரையீரலை பாதுகாக்கும். இளம் வயதிலிருந்து 40 வயது வரை உள்ளவர்கள் ஜிம் செல்வது, ஜாகிங் செல்வது அத்லடிக் பயிற்சிகள் மேற்கொள்வது, கார்டியாக் பயிற்சிகள் மேற்கொள்வது போன்றவற்றைச் செய்யலாம். வயது முதிர்ந்தவர்கள், அவர்களால் முடிந்தவரை சின்னசின்ன உடற்பயிற்சிகளையாவது செய்ய வேண்டும். உதாரணமாக, நடைப்பயிற்சி மெல்லிய கார்டியாக் பயிற்சிகள் செய்யலாம் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது செய்ய வேண்டும்.

அதாவது, பொதுவாகவே, அனைத்து வயதினருமே குறைந்தபட்சம் வார்த்திற்கு ஒன்றரை மணி நேரமாவது உடற்பயிற்சிகள் செய்தால், பெரும்பாலான நோய்களை தவிர்க்கலாம். காரணம், உடற்பயிற்சிகள் செய்வதினால், ரத்தஓட்டம் சீராகி, நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதனால், நுரையீரல் பாதுகாக்கப்படும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதயம் சம்பந்தபட்ட நோய்களையும் தவிர்க்கலாம். அதே சமயம், அதிகளவில் உடற்பயிற்சிகள் செய்வதை தவிர்க்க வேண்டும். மெல்ல மெல்ல உடற்பயிற்சி நேரத்தை கூட்ட வேண்டுமே தவிர, எடுத்தவுடன் உடலை வருத்தும் அளவிற்கு அதிரடியாக பயிற்சிகள் செய்யக் கூடாது.

இதுதவிர, பிராணயாமம், நாடி சுத்தி, ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி போன்றவற்றை தினமும் கடைப்பிடிப்பது நுரையீரலுக்கு பலம் சேர்க்கும்.தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இது மிகமிக முக்கியமான ஒன்று. நுரையீரலில் முக்கியமாக பார்க்கப்படுவது மியுகோசல் பேரியர். இது நுரையீரலில் சுரக்கும் ஒரு வழவழப்பான திரவமாகும். இது மூச்சுப்பாதையில் இருக்கும் குழாய்களில் நீர் போன்று உருவாகும்.

இது நாம் சுவாசிக்கும்போது உள்ளே போகும், மாசு, தூசு அனைத்தையும் இழுத்துக்கொள்ளும். பின்னர், மெதுவாக வாய்வழியாக வெளியே தள்ளிவிடும். நாம் அதை விழுங்கிவிடுவோம். எனவே, உடலில் போதுமான அளவு தண்ணீர் இருந்தால், இந்த மியுகோசல் பேரியர் நன்கு வேலை செய்யும். இதனால், நுரையீரலுக்கு செல்லும் தொற்றுகள் கட்டுப்படுத்தப்படும். தவிர்க்கப்படும். அதனால், நுரையீரல் பாதுகாப்புக்கு நீரும் மிக மிக முக்கியமானது.

இதுதவிர, ஆரோக்கியமான உணவுமுறை. ஒரு பேலன்ஸ் டயட்டை பின்பற்றுவதும் நுரையீரலை பாதுகாக்கும். நிறைய காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளும்போது, உடலில் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதன்மூலம் நுரையீரல் பாதுகாக்கப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முகப் பொலிவை மேம்படுத்தும் நவீன சிகிச்சை முறைகள்!! (மருத்துவம்)
Next post வாய்துர்நாற்றம் தடுக்கும் வழிகள்!!! (மருத்துவம்)