முடி உதிர்வை தடுக்க எளிய வழிகள்!! (மருத்துவம்)
முடி உதிர்தல் என்பது பலரும் சந்திக்கும் பிரச்னை. அதற்கு பல காரணங்கள் உண்டு. எதனால் முடி கொட்டுகிறது என்று தெரிந்து அதற்கானதீர்வை தேர்ந்தெடுப்பதே சரியான பலன்தரும்.
முடி உதிர்வதற்கானபொதுவான காரணங்கள்:
பொடுகு,அதிவியர்வை, அழுக்கு மண் சேர்தல், மன உளைச்சல், போஷாக்கின்மை, எண்ணெய் தேய்த்து குளிக்காது இருத்தல், புழுவெட்டு, ஹார்மோன் பிரச்னை,தோல் நோய்கள்,இவற்றில்எந்த காரணத்தால்முடி உதிர்கிறது என்பதை கவனித்து,இதை சரிசெய்ய வேண்டும். அதுபோன்று, வாழ்வியல்முறை மாறுபட்டாலும், உணவில் செய்யும் தவறுகளாலும் கூட முடி உதிர்வு ஏற்படும்.
நாம் உண்ணும் உணவில் இரும்புச் சத்து, சுண்ணாம்பு சத்து குறைந்தால் முடி உதிர ஆரம்பிக்கும். இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்துள்ள பழங்களை, தினமும் சேர்த்துக் கொள்ளவேண்டும். வாரம் 2 முறை எல்லா வகை கீரை, முளை கட்டிய பருப்புகள், சாலட், ஜூஸ், நல்ல ஆரோக்கியமான உணவை உண்டு வந்தால், உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு முடி கொட்டாமல் காக்க உதவும்.
முடி உதிர்வை தடுக்க, அடர்த்தியாக வளர:
தேங்காய் எண்ணெயுடன், வைட்டமின் E ஆயில் 10/3 என்ற பங்கு அளவில் கலந்து, பூசிவர முடி வளர்ச்சி அடையும். தேங்காய்ப் பாலுடன், பச்சையான கற்பூரவல்லி இலை சேர்த்து, வெயிலில் காயவைத்து, முடியில் பூசினால், முடி அடர்த்தியாக வளரும். கரிசலாங்கண்ணி, ஆவாரம்பூ இரண்டையும் அரைத்து உலரச் செய்து பிறகு, எண்ணெயில் கலந்து காயவைத்து, தலைக்குத் தேய்த்து குளித்தால், உடல் சூட்டை தணித்து குளுமை அடையும், முடியும் உதிராது.
முட்டையின் வெள்ளைக்கரு, வால்மிளகு இரண்டையும் அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்தால், முடி வேருடன் கொட்டுவதை தடுக்கும். காய்ந்த செம்பருத்தி பூ, ஆவாரம்பூ, மருதாணி பூ, எல்லாவற்றையும் வெயில் படாமல் நிழலில் உலர்த்தி, சிறு துணியில் கட்டி தேங்காய் எண்ணெய்யில் போட்டு உபயோகித்து வந்தால், கடுமையான வெயில் காலத்தில் ஏற்படும் முடி உதிர்வை தடுத்து, மூல சூடு அடங்கும். வேப்பம் பூ, மருதாணி பூ இரண்டையும் வெயில் படாமல் காயவைத்து தேங்காய் எண்ணெய்யில் ஊறவைத்து தலைக்கு தேய்த்துவர, வெப்பத்தால் தலையில் ஏற்படும் பருக்கள், மற்றும் கட்டிகள் மறையும். வாரம் இருமுறை எண்ணெய் குளியல் எடுத்து வர முடி உதிர்வு நிற்கும்.