கரும்புள்ளிகள் மறைய…!! (மருத்துவம்)
முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் பலரது முக அழகையே மாற்றிவிடுகிறது. இவ்வாறு கரும்புள்ளிகள் தோன்ற பல காரணங்கள் உண்டு. உதாரணமாக, ஊட்டச்சத்து குறைபாடு, செரிமானக் கோளாறு போன்றவைகளால் கூட கரும்புள்ளிகள் வரலாம். கரும்புள்ளிகளை தவிர்க்க, ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் நார்ச்சத்துள்ள உணவுகளையும் அதிகம் சேர்த்துக் கொள்ள, இதனை தவிர்க்கலாம். இதற்கு சில எளிமையான வீட்டு சிகிச்சைகளே போதும். அவற்றைப் பார்ப்போம்.
முற்றிய வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து கொதிக்கும் நீரில் போட்டு, அந்த நீராவியில் ஆவி பிடித்தால் கரும்புள்ளி நீங்கும்.வெள்ளரிச்சாறு, புதினாச்சாறு, எலுமிச்சைசாறு மூன்றையும் சம அளவில் கலந்து கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் நீங்கும். சந்தனத்தூள், மஞ்சள் தூள் சம அளவு எடுத்து அதில் பால் கலந்து குழைத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவி சில நிமிடங்கள் காயவிட்டு பின் கழுவி வர, சில நாட்களில் கரும்புள்ளிகள் மறையும்.
வாழைப்பழத்தை மசித்து, அதனுடன் பால் கலந்து முகத்தில் பூசி சில நிமிடங்கள் வைத்திருந்து வெது வெதுப்பான நீரில் கழுவி வர கரும்புள்ளிகள் நீங்கும். முகம் பொலிவு பெறும்,
பப்பாளிப் பழத்தை மசித்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடம் கழித்து கழுவ கரும்புள்ளிகள் மறையும். முல்தானிமட்டியுடன் வெள்ளரிச்சாறு கலந்து பேக் போல போட்டு காயவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.
கொத்துமல்லியுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து விழுதாக்கி முகத்தில் தடவி அரைமணி நேரம் வைத்திருந்து கழுவ கரும்புள்ளிகள் மறையும். இதை வாரம் இரு முறை செய்யலாம்.
ஜாதிக்காயை அரைத்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவி வர கரும்புள்ளிகள் மறையும்.இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள் சீக்கிரம்போய் விடும்.மஞ்சளுடன் கறிவேப்பிலை சாறு சேர்த்து முகத்தில் தடவி வர கரும்புள்ளிகள் மறையும்.
பாதாம் பருப்பு விழுது அரை தேக்கரண்டி, கடலைமாவு 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு அரை தேக்கரண்டி மூன்றையும் கலந்து பசை போல் செய்து முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊறவைத்து கழுவி வர கரும்புள்ளி, வடுக்கள் மறையும்.