சிறுகதை-தாரா!! (மகளிர் பக்கம்)

Read Time:28 Minute, 12 Second

கனவு போல் தோன்றியது.கனவாகவே இருந்துவிடக்கூடாதா கடவுளே என மனம் அரற்றியது. பெரிய சாலை விபத்து.முப்பது வயது பாலனின் மரணம்.இருபத்தைந்து வயதே ஆன அவன் மனைவி சியாமளா கண் பார்வையையும்,ஒரு காலையும் இழந்து,ஒரு வயது கூட நிறையாத பெண் குழந்தையுடன், ஏன் உயிர் பிழைத்தேன் என நிதம் செத்துபிழைக்கிறாள். தாராவின் பள்ளி, கல்லூரி என ஒன்றாக வாழ்ந்த நெருங்கிய தோழி சியாமளா. பாலனும், சியாமளாவும் காதல் திருமணம் என்பதால் இருவர் வீட்டு பக்கமும் அவ்வளவாக அங்கீகாரம் இல்லை.ஆஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து பாலனின் அண்ணன் வீட்டிற்குதான் அழைத்து சென்றுள்ளார்கள்.

தாரா கண்ணீருடன் கணவன் சந்திரனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். தாராவும் சந்திரனும் ஆத்மார்த்தமான அன்பான ஜோடி. தொடர்ந்து அழுது கொண்டிருந்த அவளை தோள்களில் சாய்த்து ஆறுதல் மட்டுமே சொல்ல முடிந்தது அவனால். மாதங்கள் ஓடின. ஒரு நாள் சியாமளா தாராவை போனில் அழைத்து, ‘‘தாரா, நான் நாளைக்கு செக்கப்புக்கு ஆஸ்பிட்டல் போறேன். நீயும் வர்ரீயா?’’ என்றாள். சியாமளா வேலைக்காரப் பெண் துணையுடன் வந்திருந்தாள். டாக்டரை பார்த்தார்கள். எல்லாம் முடிந்தது. சியாமளா
மிகவும் பலவீனமாக இருந்தாள்.

சியாமளா, ‘‘தாரா கொஞ்சம் பாப்பாவைப் பிடி.இதோ வரேன்”என்று சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு போனாள்.போய் ரொம்ப நேரமாகியும் அவளை காணாததால் ஆஸ்பிட்டல் முழுதும் தேடி ஓய்ந்து போன வேளையில் குழந்தை விடாமல் அழ ஆரம்பித்தாள். சியாமளா கொடுத்து சென்ற பையில் பால் புட்டி இருக்கா எனத்தேட, பால் புட்டியுடன் ஒரு பேப்பரும் கையில் சிக்கியது. பால் புட்டியை குழந்தை வாயில் வைத்துவிட்டு கைகள் நடுங்க பேப்பரை பிரித்து படித்தாள்.

‘‘தாரா, என்னை மன்னித்துவிடு. நான் பாலனிடமே போகிறேன். என்னுடைய இந்த நிலைமையில் யாருக்கும் நான் பாரமாக இருக்க விரும்பவில்லை.குழந்தையையும் என்னுடன் சாகடிக்க மனதில் தைரியம் இல்லை.அவளுக்கு நீதான் தாயாக இருக்க வேண்டும் என உன் கால்களைப் பிடித்து மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் தாரா பிளீஸ்.நான் இந்த உலகை விட்டே கிளம்புகிறேன்”என்று முடித்திருந்தாள். அப்படியே அதிர்ந்துப் போய் கணவனுக்கு போன் செய்தாள் தாரா.

எல்லாம் முடிந்தது. மாதங்கள் ஓடின. தாரா, சந்திரன் தம்பதிக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்க நந்தினி என பெயர் சூட்டி, சியாமளாவின் பெண் தாரிணியுடன் சேர்த்து வளர்த்தனர். நாளடைவில் சந்திரனுக்கு தாரா தங்கள் குழந்தையை சரியாக கவனிக்க தவறுகிறாள் என்ற எண்ணம் மேலோங்கியது. ‘‘என்ன தாரா, நந்தினிக்கு ஏன் அடிக்கடி உடம்புக்கு வருது? நீ தாரிணியை கவனிக்கும் பொறுப்பில், நம் பெண் நந்தினியை சரியாக கவனிப்பதில்லை. நம் பெண்ணை நன்றாக கவனிக்கப் பார்” என்று கடிந்து கொள்ள ஆரம்பித்தான்.

நாளடைவில் அதுவே அவர்களுக்குள் பெரும் பிரச்னையாக தலையெடுக்க, வார்த்தைகள் தடித்து, ஒரு கட்டத்தில் தாரிணியை அனாதை இல்லத்தில் சேர்த்துவிடும் அளவிற்கு பேசிவிட்டான் சந்திரன். ‘‘நீங்களா இப்படி பேசுறீங்க சந்துரு? நீங்க சியாமளாவிடம் வைத்திருந்த பாசத்தின் மேல் நம்பிக்கை வைத்துதானே அவள் பெண்ணை நம்மிடம் கொடுத்துவிட்டு இறந்துவிட்டாள். நந்தினி பிறந்த பிறகு இப்படி பிரிச்சுப் பேசறீங்க? அனாதை இல்லம் என்று என்ன பேச்சு இது” என அழுதாள் தாரா.

ஆனாலும், தன் பெண்ணிற்கு செய்வது போல் யாரோ ஒருவரின் பெண்ணிற்கும் செய்ய சந்திரனின் பொஸசிவ் மனநிலை அவனைத்தடுத்தது. ஒரு நாள் தானாக அவன் தாரிணியை அனாதை இல்லத்தில் கொண்டு சேர்க்க தூக்கி கொண்டு போய் விட, விஷயம் அறிந்து அனாதை இல்லம் வந்து தாரிணியை பிடுங்கிக் கொண்ட தாரா ‘‘சந்துரு, கடைசியில் நீங்கள் இவ்வளவு தானா? இந்தப் பிஞ்சுக் குழந்தை என்ன கெடுதல் செய்தாள் உங்களுக்கு? இனி இது சரி வராது. நான் என் குழந்தைகளுடன் போய் விடுகிறேன், நீங்க உங்க விருப்பப்படி இருந்து கொள்ளுங்கள்”என்றவள் சில நாட்களில் அவளின் ஆபீஸ் பக்கமாக வீடு பார்த்து, வேலைக்காரம்மாவை அழைத்துக்கொண்டு குழந்தைகளுடன் சந்திரனை பிரிந்து போய்விட்டாள்.

அன்று மாலையே ‘‘என் பெண்ணை என்னிடம் கொடு” என்று சந்திரன் வந்து சண்டைப்போட்டு நந்தினியை தூக்கி சென்றுவிட்டான். ‘‘சிறிது நாட்களில் சரியாகிவிடும், அவரால் என்னைப் பிரிந்து இருக்க முடியாது.என்னாலும் தான்.தானாக வந்து என்னை தாரிணியுடன் அழைத்துக் கொள்வார் பாருங்கள்”என்று தன் தோழிகளிடம் நம்பிக்கையாக சொல்லி வந்தாள்.தினமும்
நந்தினியை போய் பார்த்து குழந்தையுடன் இருந்துவிட்டு வருவாள். சந்திரனும் தடுத்ததில்லை. ஒரு நாள், ‘‘உள்ளே வராதே, அங்கேயே நில்.என்ன அசிங்கம் செய்து வச்சிருக்க நீ இந்த குடும்பத்தில்”என்ற குரல் அவள் நந்தினியைப் பார்க்க வீட்டிற்குள் நுழைகையில் அவளைத் தடுத்தது.தாராவின் மாமியார்.

‘‘அத்தை வாங்க, எப்போ வந்தீங்க?

எப்படி இருக்கீங்க” என்று தடுமாற்றத்துடன் பேசினாள் தாரா. ‘‘வாயை மூடு.எவளோ பெத்த புள்ளைக்காக புருஷனையும், தான் பெத்த குழந்தையையும் விட்டு பிரிந்து போனவள்,
எங்கிருந்து வந்து என்னை அத்தைன்னு சொந்தம் கொண்டாடுறே? போ வெளியே.இனி நந்தினியை நீ இங்கு வந்துப்பார்க்க நான் அனுமதிக்க மாட்டேன்” என்று கத்தி மாமியார் கதவை அறைந்து சாத்தி பூட்டிக் கொண்டார்அடுத்த நாள் காலையில் வழக்கம் போல் நந்தினியைப் பார்க்கப் போனாள்.வீடு பூட்டப் பட்டிருந்தது.சிறிது நேரம் காத்திருந்துப்பார்த்து, சந்திரனுக்கு போன் செய்தாள்.அவன் அட்டெண்ட் பண்ணவில்லை. தொடர்ந்து கணவனுக்கு போன் செய்து கொண்டே இருந்தாள். நந்தினிக்கு உடம்பு முடியலியோ என்றெல்லாம் கவலையானாள்.

மதியத்திற்கு மேல் தான் சந்திரன் போன் கால் அட்டெண்ட் செய்தான். ‘‘என்னங்க, என்னாச்சு? நந்தினி நல்லா இருக்கால ? நீங்க எப்படி இருக்கீங்க… யாருக்கும் ஒண்ணும் இல்லையே ? ஏன் வீடு பூட்டி இருக்கு” பதட்டத்துடன் உளறிக்கொட்டினாள்.சந்திரனோ, பதட்டம் ஏதுமின்றி, ‘‘நாங்கள் அந்த ஊரிலிருந்தே கிளம்பி விட்டோம்.இனி என் அம்மாவுடன்தான் நானும் என் குழந்தையும் இருப்போம், இங்கு எங்கள் ஊரில்” என்றான்.

தாராவிற்கு பூமி பிளந்து இவளை அப்படியே முழுமையாக விழுங்கிவிட்டது போலிருந்தது. அழுதாள். ‘‘எதற்கு இவ்வளவு பெரிய தண்டனை சந்துரு? நான் மற்றவர்களிடம் நம் அன்பின்பால் நம்பிக்கையுடன் பேசிக்கொண்டிருக்க, நீங்கள் என்னை இவ்வளவு பெரியதாக தண்டித்தது எந்த விதத்தில் நியாயம் சந்துரு. என்னால் முடியலை சந்துரு. நீங்களா இப்படி?’’ அரற்றினாள். மறுமுனையில், ‘‘எல்லாம் நீயாக தேடிக் கொண்டது. நந்தினி வளர வளர உண்மைத் தெரிந்தால், அவள் மனம் மிகவும் பாதிக்கப்படும் .அதனால் தான் என் அம்மா முடிவுபடி கிளம்பிவிட்டோம். யாரோ பெற்ற குழந்தைக்காக, உன் குடும்பத்தையே நீ இழந்துவிட்டாய் ” என்றான் கடுமையாக.

தொடர்ந்து தாரா தினமும் போன் செய்து, வீடியோ காலில் அழைத்து நந்தினியை பார்த்துப் பேசினாள். நாளடைவில் அதையும் தடுத்த சந்திரன், போன் நம்பரையே மாற்றி விட்டான். நடை பிணமாக வாழ்ந்தாள் தாரா. ஏதோ சபதம் எடுத்தவள் போல் தாரிணியை கண்ணும் கருத்துமாக வளர்த்தாள்.தாரிணியிலேயே நந்தினியையும் சேர்த்துப்பார்த்து வளர்த்தாள். தாரிணியும் நன்றாக படித்தாள். மெடிக்கல் சீட்டும் கிடைக்க, தாராவும் அந்த ஊருக்கே மாற்றல் கேட்டு வாங்கி,கூடவே சென்று வீடு எடுத்து இருவரும் தங்கிக் கொண்டனர்.

ஒரு நாள் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் சாமான்கள் எடுத்துக்கொண்டிருந்த தாராவிற்குள் தொண்டையை அடைப்பதை போல் ஏதோ ஓர் உணர்வு. உடலெங்கும் ரத்தம் ஃபாஸ்ட் ஃபார்வர்டில் ஓடுவது போல் ஒரு பரபரப்பு. கண்களை சுழற்றிப் பார்த்தவள் கண்முன் சிறிது தூரத்தில் சந்திரன். திரும்பியவன் தாராவைப் பார்த்து அதிர்ந்தான். அனிச்சையாக இருவர் கால்களும் ஒருவரை ஒருவர் நோக்கி நகர்ந்தன. அருகில் வந்து நின்றவர்கள், கண்களாலேயே இத்தனை வருடக்கதைகளையும் பரிமாறிக் கொண்டனர். ஆழத்தில் இருந்த புரிதல், அன்பு, சந்திரன் தன் மகள் மேல் கொண்ட பொஸசிவ் குணத்தால் ஆழத்திலேயே வைக்கப்பட்டுவிட்டது. இன்று பார்வை பரிமாற்றத்தில் ஆழ்மனதில் புதைந்துக் கிடந்த அன்பும், காதலும், வயதும், பிரிவும் தந்த பக்குவத்தில் மென்மையாக நிகழ்ந்தது.

சந்திரன் சற்றே இளைத்து, லேசான வழுக்கையுடன் இருந்தான். தாராவிற்கு முன் நெற்றியில் காதோரம் நரைத்தமுடி, கண்களில் பல வருடங்களாக தேங்கியுள்ள சோகம். அவள் நிறையவே இளைத்திருந்தாள். சுயநினைவிற்கு திரும்பி பரஸ்பரம் தம் தம் நிலைமைகளை பரிமாறிக்கொண்டனர்.தாராவின் கண்கள் நந்தினியை தேட,‘‘நந்தினி இங்கு வரவில்லை” என்றான் சந்திரன். அவன் போன் ஒலிக்க, தள்ளி சென்று பேசியவன் திரும்பி வந்து ‘‘அவசரமாக போக வேண்டும்” என்று கிளம்பிவிட்டான்.

அன்றிரவு இருவரின் தூக்கமும் தொலைந்திருந்தது. யார் போன் அவ்வளவு அவசரமாக கிளம்ப? ஒரு வேளை வேறு கல்யாணம் செய்து கொண்டாரோ? என கண்களின் ஓரம் வழிந்த கண்ணீருடன் சேர்த்து அவன் நினைவையும் துடைத்தெறிய பாடுபட்டாள். சந்திரனோ, தான் இப்படி அவசரமாக கிளம்பிவிட்டதைப் பற்றி என்ன நினைத்திருப்பாள்? மிகவும் இளைத்திருக்கிறாளே பாவம். நந்தினியின் ஏக்கமாகத்தான் இருக்கும். இங்கும் நந்தினி வளர்ந்த பின் உண்மையை தன் பாட்டி மூலம் அறிந்து கொண்ட நாள் முதல் என் செயலால், என்னை வெறுத்துவிட்டாள் என்பதை எப்படி அவளிடம் சொல்வேன்?

தன் தாயுடன் போய் விடுகிறேன் என்று குதித்தவளை கண்டு கவலையில் சந்திரனின் அம்மாவின் உடல் நலம் பாதித்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட, அங்கு வைத்து பாட்டி பேத்தியிடம் அழுது நந்தினி அவள் அம்மாவிடம் போய்விடக்கூடாது என்று சத்தியம் வாங்கி கொண்டதை எப்படி சொல்வது?

சத்தியத்திற்கு கட்டுப்பட்டு நந்தினி இங்கே இருந்தாலும், தந்தையிடம் நெருக்கம் குறைந்து, ஒட்டவைத்தாலும் மறையாத விரிசல் போல் இருக்கிறது அவளது பாசம் என்னிடம் என்று எப்படி சொல்வது? மானசீகமாக இந்த நிகழ்வுகளை தாராவிடம் பகிர்ந்தான்.அவ்வப்போது இருவரும் அங்கே இங்கே என பார்க்க நேர்கையில் இருவரும் இதுவரை நடந்தவற்றை சுருக்கமாக பேசிக் கொண்டனர்.காரணங்களை இவர்களே ஏற்படுத்தி அடிக்கடி சந்தித்துக் கொண்டனர், ஒரே கல்லூரியில் படிக்கும் தாரிணியும், நந்தினியும் நெருக்கமான தோழிகள் என்பதை அறியாமலே.

தாரிணிக்கு அப்பா இல்லை, நந்தினிக்கு அம்மா இல்லை என்று தோழிகள் பகிர்ந்து கொண்டனர்.தாரிணி அவள் அம்மாவிடம் கொள்ளைப் பிரியமும், மரியாதையும் வைத்திருக்கிறாள் என்பதை நந்தினி புரிந்து வைத்திருந்தாள். ஒரு நாள், “அம்மா பயங்கர பசி, சீக்கிரம் சாப்பிட ஏதேனும் தாம்மா”என்றபடியே வீட்டிற்குள் வந்தவள், ஹாலில் ஒரு ஆண் அமர்ந்து காபி குடித்துக்கொண்டிருப்பதை ஆச்சரியமாக பார்த்தாள். கிச்சனுக்குள் போனவள் ‘‘இதென்னம்மா புதுசா இருக்கு, இப்படி நம் வீட்டுக்குள் ஆண்கள் யாரும் வந்ததில்லையே? உங்க ஜி.எம் அப்படி யாரேனுமா?’’ என்று கிசுகிசுத்தாள்.

தடுமாறிய தாரா,‘‘நம் ஊரை சேர்ந்தவர். கடைத்தெருவில் திடீரென்று பார்த்தேன். வீடு வரை வந்துவிட்டார்” என்றாள் சுருக்கமாக.அடிக்கடி அவர் வருவதும், அதுவும் தாரிணி இருக்கும் நேரத்திலேயே, காபி டிஃபன் சாப்பிடுவதும், தாராவிற்கும், தாரிணிக்கும் ஏதாவது வாங்கி வருவதும் நிகழ, தாரிணி தாராவை கேள்வி கேட்க ஆரம்பித்தாள். ‘‘இதென்னம்மா புது பழக்கம்? அடிக்கடி அவர் இங்கு எதற்கு வருகிறார்? நமக்கு ஏதேனும் அவர் ஏன் வாங்கித் தரனும்? நீயும் வாங்கிக் கொள்கிறாய். எனக்குப் பிடிக்கல” பொரிந்தாள்.

தாரா என்ன பதில் சொல்வதென தெரியாமல் பேசாமல் இருப்பாள். சந்திரனிடம் வர வேண்டாம் என்று எப்படி சொல்வது? வேறு வழியில்லை, சொல்லிதான் ஆகனும். தாரிணியின் படிப்பு இந்த மனநிலையால் பாதிக்கப்படக்கூடாது என்று முடிவெடுத்தாள்.சந்திரனின் மனம் நோகாமல் எப்படி சொல்வதென இவள் யோசித்துக் கொண்டிருக்க,தாராவின் மௌனம் தாரிணிக்குள் சந்தேகத்தை வளர்த்தது. அவசரப்பட்டுவிட்டாள்.

ச்சே, இந்த வயதில் ஏன் அம்மாவிற்கு இப்படி போனது புத்தி? என்ற எண்ணம் அவளுள் ஓடினாலும் அவள் மனம் முழுமையாக அதை ஏற்க மறுத்தது. ஒரு நாள் ‘‘அம்மா இனி அவர் இங்கு வரக்கூடாது. நான் என் காலேஜ் ஆண் ஃப்ரெண்ட்ஸ் கூட ரோட்டில் நின்று பேசினால் கூட, பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கண்டிக்கும் நீங்க, இப்படி அடிக்கடி ஒரு ஆண் வீட்டிற்கு வந்து போவதை பார்ப்பவர்கள் தவறாக நினைக்க மாட்டார்களா?’’என்றாள் தாரிணி. தாரா மகளை மென்மையாக கண்டித்தாள்.

‘‘ஏன்ம்மா, எனக்கு வெளியில் அசிங்கமாக இருக்கு. உங்களுக்கு இந்த வயதில் அசிங்கமாக தெரியலையா நீங்க செய்வது” தாரிணி கத்த, தாங்க முடியாமல் தாரா மகளை கன்னத்தில் அறைந்துவிட்டாள். திகைத்த தாரிணி,‘‘யாரோ ஒரு ஆளுக்காக என்னை முதன் முதலாக அடித்து விட்டீர்கள். அவ்வளவு முக்கியமா அவர் உங்களுக்கு. ஓ.கே..நீங்க அவரோடயே இருந்துக்கோங்க. நான் போறேன்” என்று தன் உடை, புத்தகங்களை எடுத்துக் கொண்டு போக கிளம்பியவளை தடுத்து, மன்னிப்பு கேட்டு,துடித்து அழுதாள் தாரா. அவள் கையை உதறிவிட்டு அழுது கொண்டே போய்விட்டாள் தாரிணி.

அடுத்த நாள் தாரிணி ஹாஸ்டல் தோழியின் அறையில் எக்ஸாம்க்கு படிக்க என்று சொல்லி தங்கியுள்ளதாக அறிந்து பயம் தெளிந்தாள் தாரா.சந்திரன் மறுபடியும் என்னுடன் சேர்ந்து வாழ்வாரா என்று எதுவும் உறுதியாக தெரியாமல் நான் எப்படி தாரிணி உன்னிடம் உண்மையை சொல்ல முடியும்… கலங்கினாள் தாரா.

யாருக்காக கணவனையும்,பெற்றக் குழந்தையையும் பிரிந்து வந்தாளோ, அவளே இன்று களங்கம் சொல்லி பிரிந்து சென்றுவிட்டது தாராவை மறுபடியும் நடைபிணமாக்கியது. சந்திரனிடமும் விஷயத்தை சொல்லி, வீட்டிற்கு வர வேண்டாம். தாரிணி எக்ஸாம்ஸ் முடியட்டும் என்று சொல்ல, அவனும் நந்தினிக்கும் கூட எக்ஸாம்ஸ் முடிந்த பிறகு என்ன செய்லாம்னு பார்ப்போம் என்றான். குரூப் ஸ்டடிக்காக ஹாஸ்டல் வந்திருப்பதாக தாரிணி சொன்னாலும், நந்தினி அவளுக்குள் ஏதோ சங்கடம் இருப்பது போல் உணர்ந்தாள்.எக்ஸாம்ஸ் முடியக்காத்திருந்தாள். பரீட்சை முடிந்ததும்,‘‘தாரிணி, என் வீட்டிற்கு வாயேன்’’ என்று அழைத்துச்சென்றாள்இருவரும் அரட்டை அடித்துக் கொண்டே சாப்பிட, உள்ளே நுழைந்த வரை பார்த்து முகம் சுளித்தாள் தாரிணி.‘‘இவள் தாரிணி, என் காலேஜ் ஃப்ரெண்ட். தாரிணி இவர் என் அப்பா” என்றாள் நந்தினி.

தாரிணி திகைத்து பார்க்க அவரும் திகைத்தாலும், மறைத்துக் கொண்டு முதன்முறையாக பார்ப்பது போல் நடிப்பாக பேசினார். தாரிணி வெறுப்புடன் கிளம்ப எழுந்தாள். தாரிணி வா, நாம் மாடியில் என் ரூமிற்கு போவோம் . ‘‘நந்தினி, நீ உன் அப்பாவிடம் தைரியமாக, சரளமாக பேச மாட்டியா?’’ நந்தினி மௌனமானாள். சாரிப்பா, பர்சனலா கேள்வி கேட்டுட்டேன்.‘‘ஆமாம்ப்பா, எனக்கும் என் அப்பாவிற்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளி. பாட்டியால்தான் நான் இன்னும் இங்கு இருக்கேன்.” தன் வீட்டிற்கு அடிக்கடி வரும் சந்திரனின் நோக்கம் பற்றி முழுதும் தெரிந்துகொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் தாரிணி, நந்தினியை, உன் அம்மா எங்கே? ஏன் அப்பா மேல் கோபம் ?அவரைப் பற்றி நிறைய கேள்விகள் கேட்டாள்.

உடைந்து போன நந்தினி அழுது கொண்டே, சந்திரன், தாரா பற்றி பாட்டி சொல்லியறிந்த உண்மைகளை சொன்னாள். தன் தாயை தான் பிரிந்து தவித்துக் கொண்டிருப்பதை சொல்லி வாய்விட்டு அழுதாள்.ஒருநாள் அப்பாவின் அலமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு போட்டோவை யாருக்கும் தெரியாமல் என் அறைக்கு எடுத்து வந்து பார்த்தேன். தினமும் ரகசியமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்.இப்படி ஒரு நிலை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது தாரிணி…” பெருமூச்சுடன் நந்தினி போய் மறைத்து வைத்திருந்த போட்டோவை எடுத்துக்கொடுத்தாள். “பார் தாரிணி நீயே என் அப்பா, அம்மாவின் கல்யாண போட்டோவை”வாங்கிப் பார்த்த தாரிணிக்கு கண்கள் இருண்டது. போட்டோவையே வெறித்துப் பார்த்தாள். தாராவும் சந்திரனும் மணக்கோலத்தில் இருந்தனர் அந்த போட்டோவில்.

அம்மா என்று மனம் அரற்றியது. நந்தினி சொன்ன விவரங்கள் ரீவைண்ட் ஆக,தாரிணிக்கு அவளைப் பற்றிய உண்மை நிலை, தான்தான் தாராவின் வளர்ப்பு மகள், எனக்காகத்தான் தன் கணவர் சந்திரனையும், மகள் நந்தினியையும் பிரிந்து தியாகம் செய்துள்ளவள். அவளை எவ்வளவு அவமானமாகப் பேசி நோகடித்து விட்டேன். துடித்துப் போனாள். ‘‘அவசரம் நந்து, உன்னிடம் பிறகு பேசுறேன்”என்று வேகமாக கிளம்பியவள் கனவில் மிதப்பதுபோல் வீடு வந்து சேர்ந்தாள். அம்மா என்று அலறிக்கொண்டே ஓடிப்போய் தாராவைக் கட்டிக் கொண்டாள். என்னை மன்னிச்சிடும்மா என்று கதறி அழுதவள் தாராவின் கைகளை எடுத்து தன் கன்னங்களில் அடித்துக்கொண்டாள்.

திகைத்து நின்றுக் கொண்டிருந்த தாராவிடம், ‘‘உண்மை தெரியாமல் உன்னை எப்படி எல்லாம் காயப்படுத்திவிட்டேன் அம்மா” ஓவென்று அழுதாள். தாரிணி ஓடி வந்ததைக் கண்டு பயந்த நந்தினியும் அவள் பின்னாடியே வந்து அந்த வீட்டிற்குள் நுழைய, அங்கு தாராவை பார்த்து மூச்சடைத்து நின்றாள். தாரிணி தாராவை கட்டிக்கொண்டு அம்மா என்று அழுவதைப் பார்த்து திகைத்து நின்றாள்.

தாரிணியும், நந்தினியும் ஒருவர் பின் ஒருவராக அவசரமாக ஓடியதை பார்த்து குழப்பத்துடன் அவர்கள் பின்னாடியே வந்த சந்திரன், இரு பெண்களும் தாராவின் வீட்டினுள் நுழைவதை பார்க்க திகைப்பாக இருந்தது. உள்ளே வந்தவர், மூன்று பெண்களையும் ஆசுவாசப்படுத்தி, ‘‘நந்தினி, உன் அறையில் என்ன நடந்தது? ஏன் இருவரும் இப்படி ஓடி வந்தீர்கள்?’’ என்றார்.இரு பெண்களும் நடந்த போட்டோ மேட்டரை சொல்ல, நந்தினி ஓடிச் சென்று அப்பா, அம்மா என்று இருவரையும் கட்டிக்கொண்டு அழுதாள்.

தாரிணி தயக்கத்தோடு மெல்ல ஒதுங்கி நின்று அவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் முத்தமிட்டு அழுவதை பார்த்தாள். மெல்ல வாசல் பக்கம் நகர்ந்தாள். நீரிலிருந்து நிலத்தில் எடுத்து போடப்பட்ட மீனை போல துடித்தது அவள் இதயம். உயிர் பிழைக்க வழி தேடி, தான் இறக்கிறோமோ என்ற துடிப்பல்லவா மீனிற்கு அது. அந்த மீனின் நிலையில் வாசல் நோக்கி போய்க்கொண்டிருந்தவள் குறுக்கே வந்து நின்றார் சந்திரன். ‘‘எங்கே போகிறாய் என் மூத்த மகளே, உன் தங்கயைப் பிரிய, உன் அப்பா, அம்மாவை விட்டு விலக எப்படித் துணிந்தாய் மகளே? என்றார்.

கடலின் அலை ஓடி வந்து,நிலத்தில் துடித்துக்கொண்டிருந்த மீனை நீருக்குள் இழுத்து, உயிர் கொடுத்து தழுவிக்கொண்டது போல், இனிமையாக சுவாசித்து, உயிர் பிரியவில்லை என உறுதி செய்வது போல் ‘‘அப்பா…’’ என்று கட்டிக்கொண்டாள். தாராவும் நந்தினியும் வந்து அவர்கள் இருவரையும் கட்டிக்கொள்ள, மடை திறந்த வெள்ளமாய் அங்கே பாசமும், அன்பும் பகிர்தல் கரை புரண்டோடியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உணவுகளை பாரம்பரிய முறையில் பதப்படுத்துவதே எங்களின் யு.எஸ்.பி!!! (மகளிர் பக்கம்)
Next post கண்ணைக் கட்டிக்கொள்ளாதே-தொற்றும் மதுவும் புகையும் கண்ணுக்குப் பகை! (மருத்துவம்)