நித்தியகல்யாணியின் பயன்கள்!! (மருத்துவம்)
நித்தியகல்யாணி இது சாதாரணமாக எல்லா இடங்களிலும் வளரக்கூடிய ஒரு செடி. ஐந்து இதழ்களையுடைய வெண்மை அல்லது வெளிர் ஊதாநிற மலர்களையும் மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் உடைய குறுஞ்செடி நித்தியகல்யாணி செடி ஆகும்.இதன் இலைகள் பூக்கள், தண்டு மற்றும் வேர்கள் என அனைத்துப் பகுதிகளும் மிகுந்த மருத்துவ பயன்கள் கொண்டவை. நித்யகல்யாணியின் தாவரவியல் பெயர் காதரென்தஸ் ரோளியஸ் ஆகும். இதனை சுடுகாட்டுப் பூ, கல்லறைப் பூ என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
நித்தியகல்யாணி செடி பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்குகின்றது. குறிப்பாக புற்றுநோய்க்கு இத்தாவரத்தின் வேரில் உள்ள குறிப்பிட்ட மருந்துப்பொருள் புற்றுநோய் மருத்துவத்தில் கீமோதெரபி சிகிச்சைக்கு பயன்படுவதாக அமெரிக்கா கண்டறிந்துள்ளது.தற்போது இதில் உள்ள மருத்துவக் குணங்கள் என்ன என்பதை பார்ப்போம்:
நித்தியகல்யாணி செடியின் வேர்ப்பகுதியை எடுத்து சுத்தம்செய்து அதனுடன் மிளகு, சீரகம் இரண்டையும் வெருகடி அளவு சேர்த்து நீர்விட்டு நன்கு காய்ச்சி பருகுவதால் பல்வலி, உடல்வலி ஆகியவை குணமாகும்.
நித்தியகல்யாணி பூக்கள் 10, இலைகள் 5, மாதுளை தோல் 10 கிராம் அளவு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு, அரை டம்ளராகச் சுருங்கக் காய்ச்சி அதனுடன் சுவைக்குத் தேவையான தேன் சேர்த்து தினம் இருவேளை சாப்பிட்டு வர, அதிக ரத்தப்போக்குடன் கூடிய மாதவிலக்கு குணமாகும். நித்தியகல்யாணி பூக்கள் 10 எடுத்து அதனுடன் சிறிது மிளகு சேர்த்து காய்ச்சிக் குடிப்பதால்
ஆஸ்துமா என்னும் மூச்சிரைப்பு குணமாகும். நித்திய கல்யாணிப் பூக்களை பத்து எடுத்து ஒரு டம்ளர் நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டிக் கண்களைக் கழுவ, கண் நோய்கள் குணமாகும். இதைக் கொண்டு ஆறாத புண்களைக் கழுவி வர விரைவில் ஆறும்.
நித்தியகல்யாணி பூக்கள் 10 முதல் 15 எடுத்து அதனோடு மஞ்சள் சேர்த்து நீரிலிட்டுக் கொதிக்க வைத்து தேன்சேர்த்துப் பருகிவர எவ்வகைப் புற்றுநோயும் விலகும்.நீரிழிவு நோயாளிகள் இதன் வேர்ச்சூரணத்தை 1 சிட்டிகை எடுத்து வெந்நீரில் கலந்து 2, 3 முறை உட்கொண்டால் சர்க்கரை குறைந்து நோய் கட்டுப்படும். நீரிழிவுக்கு இதன் வேர்ப்பொடியை தினசரி அரை டீஸ்பூன் வெந்நீரில் சாப்பிட்டு வர வேண்டும். மலரை கஷாயம் போட்டு குடிக்க பசியின்மை, அதிக பசி, அதிக தாகம், அதிமூத்திரம் போன்றவை குணமாகும்.