சதுரங்க யுத்தம்!! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 30 Second

ஜெயிக்கறமோ தோக்குறமோ மொதல்ல சண்டை செய்யணும். இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா விஷயத்தில் அதுதான் நடந்திருக்கிறது. கூடவே உலகத்தில் தாயைவிட உயர்ந்த சக்தி எதுவுமே இல்லை என்பதும் இதில் நிரூபணம் ஆகி இருக்கிறது. இரண்டாம் இடம் என்றாலும் பிரக்ஞானந்தா எட்டியது மிகப் பெரிய உயரம். அந்த உயரத்திற்கு காரணம் அவரது அம்மா நாகலட்சுமி. பிரக்ஞானந்தாவின் வெற்றியில் அம்மா நாகலட்சுமி அடைந்த சந்தோஷம் விலை மதிப்பில்லாதது. ஒவ்வொரு சர்வதேச போட்டியிலும் பங்கேற்க வைப்பதற்காக ஸ்பான்சர் கேட்டு அலைந்து திரிந்து எல்லாக் கதவுகளையும் தொடர்ந்து தட்டியவர். வாழ்க்கை முழுமையும் மகனின் கனவுகளுக்கு ஒப்புக்கொடுத்தவர். மகன் விளையாடிய நிகழ்வை பூரிப்போடு நாகலட்சுமி பார்த்த காட்சிகள் வலைத்தளங்களில் வைரலானது.

“பிரக் நன்றாக விளையாட வேண்டும் என அவன் விளையாட்டின் மீது நான் கவனம் வைத்திருந்த நேரத்தில், புகைப்படத்தை யார் எப்போது எடுத்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. பலரும் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்ததை நானும் கவனித்தேன்’’ என்றவர், ‘‘அந்த இரவு நேரத்திலும் தமிழக முதல்வர் எங்களை அழைத்து வாழ்த்தியது மகிழ்ச்சியாக இருந்தது. நானும் முதல்வரிடம் பேசினேன். செஸ் விளையாட்டில் பிரக் கடக்க வேண்டிய தூரங்கள் இன்னும் அதிகம் இருக்கிறது” என ஊடகங்களுக்கு தெரிவித்தார் தாயார் நாகலட்சுமி.

பிரக்ஞானந்தாவின் தந்தை ஏற்கனவே ஊடகங்களுக்கு பேட்டியில், “எனது மகள் வைஷாலியை மட்டுமே செஸ் வகுப்பில் சேர்த்து விட்டிருந்தேன். காரணம், அவள் சிறப்பாக விளையாடினாள். செஸ் போட்டிகளில் பெரிய நிலைக்குச் செல்ல நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். எங்களின் குடும்பச் சூழ்நிலையால் பிரக்ஞானந்தாவை நாங்கள் செஸ் பயிற்சியில் ஈடுபடுத்தவில்லை” எனச் சொல்லியிருந்தார்.

தன்னைவிட நான்கு வயது மூத்தவரான அக்காவிடம் இருந்து செஸ் விளையாட்டுக்கான அடிப்படை நுணுக்கங்களை தனது 4 வயதில் இருந்தே பிரக்ஞானந்தா கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். தம்பி செஸ் விளையாட்டில் முன்னேறுவதற்குத் தேவையான வசதிகளை வீட்டில் செய்து கொடுத்திருக்கிறார் அக்கா வைஷாலி. காரணம், வைஷாலியும் செஸ் உலகில் நன்கு அறியப்பட்ட வீராங்கனை மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர். பெரும்பாலான சர்வதேச போட்டிகளில் அக்காவும் தம்பியுமாகவே கோப்பைகளை வென்று ஊடகங்களில் கவனம் பெற்று வந்தனர்.

தன் வயது சிறுவர்களுடன் நேரத்தைச் செலவிடாமல் ஐந்து வயதிலேயே செஸ் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய பிரக்ஞானந்தா, 2013ல் 8 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியிலும், 2015ல் 10 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியிலும் உலகின் சிறந்த ஆட்டக்காரராக வெற்றி பெற்று மாஸ்டர் பட்டத்தை பெற்றார். 2016ல் தன் 12ம் வயதில் உலகின் இளம் சர்வதேச செஸ் மாஸ்டர் புகழை அடைந்தவர், நடப்பு சாம்பியனும் உலகின் தலை சிறந்த ஆட்டக்காரருமான மேக்னஸ் கார்ல்சனை ஏற்கனவே இரண்டு முறை வென்றிருக்கிறார்.

FIDE 23 உலகக் கோப்பை செஸ் போட்டி பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்வதற்கு முன்பாக, கால் இறுதிப் போட்டியில் குகேஷ் உட்பட முதல் பத்து தரவரிசைக்குள் இந்தியர்கள் நால்வர் இருந்தனர். இதில் மூவர் வெற்றி வாய்ப்பை இழக்க பிரக்ஞானந்தா மட்டுமே அரை இறுதிக்கு முன்னேறினார். ஆனந்துக்கு அடுத்து முதன் முறையாக இந்தியர் ஒருவர் FIDE போட்டியின் அரை இறுதிக்கு, அதுவும் சிறு வயதிலேயே முன்னேறிய நிகழ்வு விவரிக்க முடியாத தருணமாகவே அமைந்தது. சமூக ஊடகங்கள் வாயிலாக வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருந்தார் பிரக்ஞானந்தா.

அடுத்த 20 நகர்வுகளையும் சேர்த்தே யோசிக்கும் கார்ல்சனை வெல்வதே பிரக்ஞானந்தாவின் உச்சகட்ட சவாலாக இருந்தது. அதைவிட ஒருசில நகர்த்தல்களில் தோல்வி அடையப்போகிறோம் எனத் தெரிந்தும் எதிராளியை கடைசி வரை பயம் கொள்ளச் செய்த பிரக்ஞானந்தாவின் தன்னம்பிக்கையும் எதற்கும் அசராத அவரின் மனப்பாங்கும் பாராட்டுக்குரியதாக இருந்தது. தனது 18 வயதிலேயே உலக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து, நம்பர் ஒன் வீரருக்கு தோல்வி பயத்தை காட்டியதே ஆகப்பெரும் சாதனை. உச்ச நிலை வீரர்களுடனான ஆட்டத்தில் கூட அவரின் நிதானமும், கவனமும் அபாரமானதாக இருந்தது. இந்த ஆட்டங்கள் அனைத்தும் அவருக்கு மிகப்பெரிய அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.

கடந்த 10 வருடங்களாக உலக செஸ் தர வரிசையில் நம்பர் 1 இடத்தில் கோலோச்சுபவர் கார்ல்சன். மொத்த 125 போட்டிகளில் தோல்வியை எதிர்கொள்ளாமல் ஆடியவர். துரித வடிவான ரேபிட் செஸ் போட்டிகளில் கார்ல்சன் கில்லி மற்றும் ஆல்ரவுண்டர்.இந்த உலகக் கோப்பை போட்டியின் முந்தைய சுற்றுகளில் பிரக்ஞானந்தா செஸ் பிளேயர் நகமுராவை வென்ற போது, கார்ல்சன் தனது ஆட்டத்தை இடையில் விட்டுவிட்டு பிரக்ஞானந்தாவிடம் வந்து தோளில் தட்டி கொடுத்து வாழ்த்தினார்.

பிரக்ஞானந்தாவின் பார்வையில் கார்ல்சன்தான் அவரின் செஸ் ஆதர்சம். மேதமையின் உச்சம். கார்ல்சனுக்கும் உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதி ஆட்டம் இதை விட சுவாரஸ்யமானதாக அமைந்திருக்க முடியாது. காரணம், கிட்டத்தட்ட தன்னைவிட பாதி வயதுடைய பிரக்ஞானந்தாவுடன் உலகக் கோப்பைக்காக மோதியதே.சிங்கத்தின் எதிரே சிறுத்தையாய் அமர்ந்திருந்ததே பிரக்ஞானந்தாவுக்கு கிடைத்த வெற்றிதான். செஸ் விளையாட்டில் சிறு கவனச் சிதறல் கூட ஆட்டத்தைக் கைநழுவச் செய்து விடும். வாழ்க்கையைப் போலவே சதுரங்கத்திலும் தோல்விகள் கொடுக்கும் பாடங்கள் மகத்தானவை. பிரக்ஞானந்தாவின் நிதானமும், நம்பிக்கையும், இன்னும் அவரின் வெற்றிநடையை உறுதி செய்யட்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உடலுறவின் போது விந்து விரைவாக வெளிப்படுதலை தடுக்கும் சில முறைகள்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post தரமே எனது தாரக மந்திரம் ! (மகளிர் பக்கம்)