என் குழந்தைகள்தான் என்னை வாழ வைத்தார்கள்! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 45 Second

சிறு தானிய உணவுகள் உடலுக்கு நல்லது என்றாலும் அதை முறையாக செய்யும் விதம் பலருக்கு தெரியவில்லை. இந்தப் பிரச்னையை போக்க சிறு தானிய உணவு வகைகளை எல்லோரும் எளிமையாக சாப்பிடும் விதத்தில் ‘ஆறுவிட்டா’ என்ற பெயரில் உணவு வகைகளை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார் ஆர்த்தி. கடலூரை சேர்ந்த இவர் தன் வாழ்வில் சந்தித்த மோசமான நிகழ்வில் இருந்து தன்னை மீட்டெடுக்கவே சொந்தமாக சிறு தொழில் ஒன்றை தொடங்கினார். இன்று அது ஒரு நிறுவனமாகவே மாறி நிற்கிறது.

‘‘என் சொந்த ஊர் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்புடையூர். நான் சரியா படிக்க மாட்டேன். அதனால் எங்க வீட்டில் எனக்கு சீக்கிரமே கல்யாணம் செய்து வச்சிட்டாங்க. கல்யாணத்திற்குப் பிறகு எனக்கு ரொம்ப நாளாகவே குழந்தை பாக்கியம் இல்லை. நான்கு வருடங்கள் கழித்துதான் எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இரண்டு வருடங்கள் கழித்து இரண்டாவது முறை கர்ப்பமானேன். ஆனால் அந்த குழந்தை ஐந்தாவது மாதத்தில் கருவிலே கலைந்து விட்டது. அதன் பின்னர் மருத்துவர்களின் ஆலோசனையின் பெயரில் நான் மீண்டும் கருத்தரித்தேன். இந்த முறை என் கருவில் இரட்டை குழந்தைகள் இருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். அதைக் கேட்டதும் எனக்கும் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் அந்த சந்தோஷம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. காரணம், என்னுடைய கர்ப்பப்பையில் ஏதோ பிரச்னை இருப்பதாகவும், அதற்கு முறையாக சிகிச்சையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். இரண்டு குழந்தைகள் என்பதால் நான் மிகவும் கவனமாக இருந்தேன். அதனால் மருத்துவர்கள் சொன்னபடி பிரசவிக்கும் வரையில் நான் எந்த வேலையும் செய்யாமல் பெட்ரெஸ்ட்டில் இருந்தேன்.

கருத்தரித்த நாள் முதல் கிட்டத்தட்ட ஒன்பது மாதம் வரை நான் படுக்கையில்தான் இருந்தேன். ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் பிறந்தது. ஆனாலும் அவைகள் ஆரோக்கியத்தில் பிரச்னை இருப்பதால், இன்குபேட்டரில்தான் வைத்திருந்தார்கள். பிரசவத்தினால் என்னாலும் எழுந்து சென்று குழந்தைகளுக்கு பாலூட்ட முடியவில்லை. அதனால் தாய்ப்பாலை கூட பம்ப் முறையில் எடுத்துதான் என் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இப்படி கடினமான சூழ்நிலையிலும் பத்து நாட்களுக்கு மேல் அந்த குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லை. முதல் நாள் ஒரு குழந்தையும் அதற்கடுத்த நாள் இன்னொரு குழந்தை என இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டது. நான் ரொம்பவே மனமுடைந்து போனேன். நான் நிர்கதியாய் நிற்பது போல் உணர்ந்தேன். பலரும் எனக்கு ஆறுதல் சொல்கிறேன் என்ற பெயரில் திரும்பத் திரும்ப என்னை காயப்படுத்திக் கொண்டேதான் இருந்தார்கள்.

இதனால் விரக்தியின் உச்சத்தில் இருந்த நான் தற்கொலைக்கு முயன்றேன். ஆனால் என் வீட்டில் என்னை காப்பாற்றிவிட்டார்கள். அந்த நாட்கள் நரகத்தில் வாழ்ந்தது போல இருந்தது. அந்த நேரத்தில்தான் நான் வேறு ஏதாவது செய்து என்னை திரும்பவும் பழைய நிலைமைக்கு மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது’’ என்றவர் தொழில்
முனைவோராக மாறியது குறித்து விவரித்தார்.

‘‘எனக்கு வீட்டை அலங்கரிக்க பிடிக்கும். எப்போதும் சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக்கொள்வேன். பலரும் எப்படி இவ்வளவு அழகாகவும் சுத்தமாகவும் வைத்திருக்கிறாய்னு கேட்பாங்க. வீட்டை அலங்கரிப்பது மட்டுமில்லாமல், நான் நன்றாக சமைக்கவும் செய்வேன். குறிப்பாக சிறு தானிய உணவு வகைகள். அதனால் என் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் என்னை சிறு தானிய உணவுகளை செய்து தரச் சொல்லி கேட்பார்கள். அது குறித்து ஒரு நாள் என் தோழியிடம் பேசிக் கொண்டிருந்த போதுதான் எனக்கு இதையே ஏன் ஒரு தொழிலாக செய்தால் என்ன என்று எண்ணம் ஏற்பட்டது. இது குறித்து என் தோழியிடம் கூறினேன். அவளும் நல்ல ஐடியா என்று சொல்ல, முதலில் சிறு தானிய உணவுகளில் சத்து மாவு செய்வது பற்றி ஒரு கட்டுரை எழுதி கொடுக்க சொல்லி அவளிடம் கேட்டேன். அவளும் எழுதி தர, அதை என் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டேன்.

அதைப் பார்த்து பலர் ஆர்டர் மூலம் செய்து தரச்சொல்லிக் கேட்டார்கள். சிலர் உடனடியாக பணத்தை அனுப்பி தங்களுக்கு டெலிவரி செய்ய சொன்னார்கள். அவர்கள் அன்று கொடுத்த பணத்தைக் கொண்டுதான் நான் சிறு தானிய உணவுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கினேன். எனக்கு வந்த ஆர்டர்களை அனுப்பி வைப்பதற்குள் அடுத்தடுத்து ஆர்டர்கள் வரத் தொடங்கியது. அதில் கிடைத்த சம்பாத்தியம் தான் என்னுடைய தொழிலுக்கான முதலீடு என்று சொல்லலாம்’’ என்றவர் தன்னுடைய தொழிலினை எவ்வாறு விரிவுபடுத்தினார் என்பதைப் பற்றி விவரித்தார்.

‘‘எங்க வீட்டில் சிறு தானிய உணவு வகைகளை அடிக்கடி செய்வது வழக்கம். அப்படித்தான் எனக்கு இந்த உணவுகள் பழக்கமானது. அதனாலேயே பல வகை சிறு தானிய உணவுகளை குறித்து அறிந்து வைத்திருந்தேன். அதுவே எனக்கு இந்த தொழிலை தொடங்க எளிதாக இருந்தது. என்னுடைய நிறுவனத்திற்கு என் குழந்தைகளின் பெயர்களை வைத்தேன். சத்துமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மற்ற உணவுகளையும் அறிமுகம் செய்தேன்.

உணவுகள் மட்டுமில்லாமல் சரும பாதுகாப்பு மற்றும் அழகு சாதனப் பொருட்களையும் தயாரிக்க ஆரம்பித்தேன். முடி மற்றும் சரும பிரச்னைகளுக்காக பாரம்பரிய மருத்துவ பொருட்களை தயார் செய்தேன். அதோடு வாடிக்கையாளர்கள் கேட்கும் உணவு வகைகளையும் தயாரித்து கொடுத்தேன். இதுவரை 50க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். நான் செய்யும் உணவு வகைகள் எல்லாம் பொடி வகையில் தான் இருக்கும்.

அதனை அப்படியே உணவில் கலந்து சாப்பிட வேண்டியதுதான். சில வாடிக்கையாளர்கள் தங்களுக்கு இருக்கும் பிரச்னைகளை என்னிடம் கூறி அதற்கான உணவினைப் பற்றி ஆலோசனைக் கேட்பார்கள். அந்த நோய்க்கு எந்த வகையான உணவினை கொடுத்தால் சரியாக இருக்கும் என பார்த்து அவர்களுக்கு தனியாகவே செய்து கொடுக்கிறேன். ஒரு பொருள் தயாரிப்பதை விட அதை எவ்வளவு நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்பதை பொறுத்துதான் பலரும் அதை வாங்குவார்கள்.

நான் இயற்கையாக தயாரிக்க வேண்டுமென்பதால் எந்த ஒரு கலப்படமும் செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். இதனால் அந்த உணவுப் பொருளை எவ்வளவு நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் அதில் குறிப்பிட்டு இருப்பேன். ஆர்டர்கள் அதிகரிக்க அதிகரிக்க தனிஒரு ஆளாக செய்யமுடியவில்லை.

அதனால் ஆட்களை நியமித்தேன். கணவரில்லாமல் தனியாக இருக்கும் பெண்கள், வறுமையில் வாடும் பெண்கள் என பார்த்து பார்த்து வேலைக்கு அமர்த்தினேன். என் வீடு தான் என் நிறுவனம். இங்கே இருந்துதான் எல்லா பொருட்களையும் தயார் செய்து அனுப்புகிறேன். சில மாணவர்கள் பகுதி நேரமாக என்னிடம் வேலை பார்க்கிறார்கள். அவர்களை நியமிக்க காரணம், படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால் அதற்கான வருமானம் வீட்டில் இருக்காது. இதில் வரும் வருமானம் அவர்களின் படிப்பு செலவிற்கு பயனுள்ளதாக இருக்கும். என் நோக்கம் கஷ்டப்படுபவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்யணும் என்பதுதான்.

என் வாழ்க்கையே எனக்கு ஒரு பாடம். இழப்பு என்பது எல்லோரும் வாழ்க்கையில் ஏதாவது ஒருவிதத்தில் சந்திக்க நேரிடும். அதை கண்டு துவண்டுவிடாமல், மீண்டும் அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்க வேண்டும்.

ஒவ்வொரு இழப்பும் நம்மை கடினமானவராக மாற்றிவிடும். என் குழந்தைகளின் இறப்பு என்னை யோசிக்க வைத்தது. அதே சமயம் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் நான் இந்த நிலைமைக்கு வந்திருப்பேனா என தெரியாது. என் குழந்தைகள்தான் எனக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். பலர் ஒரு துயர சம்பவம் ஏற்பட்டால், விதியின் மேல் பழியை போடுகிறார்கள். அதை நம் மதியால் வெல்ல முடியும் என்பதற்கு நானே ஒரு உதாரணம். என்னைப் போல் பல பெண்கள் தொழிலதிபராக வர வேண்டும்’’ என்றார் ஆர்த்தி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நடுத்தர மக்களின் பெஞ்ச் மெஸ்! (மகளிர் பக்கம்)
Next post மனவெளிப் பயணம்!! (மருத்துவம்)