அன்பளிப்பாகும் விதைகள்! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 55 Second

நவீன வாழ்க்கை முறைகளில் இருந்து நம்மை வேறுபடுத்தி காட்டுவது நாம் கடைபிடித்து வரும் சில பழக்க வழக்கங்கள்தான். அதிலும் விருந்தோம்பல் என்பது நமது தமிழரின் அடையாளம் எனவும் சொல்லலாம். குறிப்பாக வீட்டிற்கு வரும் சொந்தங்களை வெறும் கையோடு அனுப்ப மனமின்றி தங்களிடம் இருக்கும் காய்கள், பழங்கள் இதர உணவுப் பொருட்கள் மற்றும் வரும் காலத்தில் அவர்களுக்கு உதவியாக இருக்கும் பல பொருட்களையும் தாம்பூலம் என்ற பெயரில் வழங்கி வந்தனர்.

காலப்போக்கில் மக்கள் ஒவ்வொரு விஷயத்தையும் வித்தியாசமான முறையில் அவர்களின் முயற்சிக்கேற்ப செய்து வருகின்றனர். பழங்களை தாம்பூலமாக கொடுத்து வந்தவர்கள், ஒரு காலகட்டத்தில் பழம் தரும் செடிகளையும் மரக்கன்றுகளையும் அன்பளிப்பாக கொடுத்தார்கள். அதையே தற்போது பார்ப்பதற்கு அழகாகவும், எளிதில் அனைவரும் எடுத்து செல்லும் வகையிலும் தருகிறார்கள். ஒரு சிலரே தங்களின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையிலும் அதே சமயம் இயற்கை முறையிலும் இந்த தாம்பூலத்தை தொடர்கின்றனர். அதில் புதியதொரு முயற்சியினை செய்து வெற்றியும் கண்டுள்ளார் திருநெல்வேலியை சேர்ந்த இளைஞர் பவன் குமார்.

‘‘மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படிச்சிட்டு 7 வருஷமா கார்டெனிங் தொழிலை செய்து வருகிறேன். ஆரம்பத்தில் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மூன்று மாதங்களா வேலை செய்து வந்தேன். அந்த வேலை சரியாக அமையாததால் பகுதி நேர வேலையாக செடிகளை பராமரித்து விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். தோட்ட வேலைகூட மற்ற இடங்களில் வேலை தேடி செல்லும் போது என்னுடைய கை செலவிற்கு வேண்டும் என தொடங்கினேன். பகுதி நேரமாக ஆரம்பித்தது, தற்போது முழு நேர ெதாழிலாகவே மாறிவிட்டது. செடிகளை விற்பது மட்டுமில்லாமல் விசேஷங்களுக்கு அன்பளிப்பாகவும் கொடுத்து வருகிறேன். தற்போது செடிகளுக்கு பதிலாக பழம், காய் மற்றும் பூக்களின் விதைகளையும் கொடுக்கிறேன். இங்கு என்னோடு மூன்று பெண்கள் வேலை செய்யுறாங்க.

ஆரம்பத்தில் நாங்களும் செடிகள், மரக் கன்றுகள் மட்டும்தான் விற்பனை செய்து வந்தோம். ஆனால் என் தோட்டத்தில் செடி வாங்க வந்த ஒருத்தர் அன்பளிப்பிற்காக செடிகளை கேட்டார். அப்போது என்னிடம் ஐந்து செடிகள் மட்டும் தான் இருந்தது. அதோடு வேறு ஒருவரிடமிருந்து மேலும் சில செடிகளை வாங்கி அவரிடம் கொடுத்தேன். அதன் பிறகு தான் படிப்படியா இந்த அன்பளிப்பு வழங்குவதையும் செய்ய ஆரம்பித்தோம். கொரோனாவிற்கு முன் எனக்கு விதைகள் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அதிலும் நாட்டு விதைகள். அதில் என்னென்ன வகைகள் மற்றும் என்ன மாதிரியான விதைகள் என தேட ஆரம்பிச்சேன்.

அந்த சமயம்தான் கொரோனா வந்தது. பின்பு செடிகளுக்கு பதில் நாம ஏன் விதைகளை கொடுக்கக் கூடாதுன்னு தோணுச்சு. அதன் பலன்தான் அன்பளிப்பில் விதைகளை கொண்டு வந்தது. இந்த விதைகளை மூன்று விதமாக கொடுத்து வருகிறோம். ஒன்று பேப்பரினால் ஆன கவர்கள், அடுத்து கண்ணாடி குப்பிகள் மற்றும் மூன்றாவதாக வண்ண வண்ண சுருக்குப் பைகள். இதில் பேப்பர் கவர், சுருக்கு பைகள் எல்லாம் நாம் முன்பே குடுத்துட்டு இருந்தது தான்.

ஆனால் இந்த கண்ணாடி குப்பிகள் பொதுவா சின்னச் சின்ன பரிசு பொருட்கள், நமக்கு தெரிஞ்சவங்க நியாபகமா தரும் போது பார்த்து இருப்போம். அதில் ஏன் விதைகளை கொண்டு வர கூடாதுன்னு ஒரு எண்ணம் வந்துச்சு. இந்த கண்ணாடி குப்பிகள் எங்களுடைய சொந்த முயற்சி. அதுக்கான முத்திரையும் எங்களோட பெயரில் நாங்க வாங்கிட்டோம்.

இந்த விதைகள் குடுக்கும் போது பேப்பர் கவர் சாதாரணமா இருக்க கூடாது என்பதற்காக, அதில் என்ன விசேஷம், யாருடையது, என்பதனையும் ப்ரின்ட் எடுத்து அந்த விதைகளோடு கொடுக்கிறோம். சிலர் சில தீம்கள் வச்சு விசேஷங்கள் செய்வாங்க. அதுக்கு ஏற்ற மாதிரியும், புகைப்படங்களோடு அவர்களின் விருப்பத்திற்கேற்ப தான் நாங்க பேப்பர் அட்டையில் ப்ரின்ட் போடுவோம்’’ என்றவர் பரிசாக அளிக்கப்படும் விதைகளை தனிப்பட்ட முறையில் பராமரிக்கும் முறையையும் எடுத்துக் கூறினார்.

‘‘பொதுவாக விதைகளை ஒரு களிமண் பந்து போல் தருவாங்க. அதை நாம் மண்ணில் புதைத்தால் செடி முளைக்கும். ஆனால் விதைகளாக கண்ணாடிக் குப்பியில் போட்டு தரும் போது அதை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று பலருக்கு தெரியாது. அதனால் அன்பளிப்பிற்கு கொடுக்கும் போது எல்லா வித விதைகளையும் நாங்க தருவதில்லை. எளிதான முறையில் பராமரிக்கக்கூடிய விதைகளை மட்டும் தான் நான் தருகிறேன். நாட்டு விதைகளின் விலை அதிகம் என்று நினைத்துக் கொண்டு அதை வாங்க தயங்குகிறார்கள்.

சொல்லப்போனால் கலப்பின விதைகளை விட நாட்டு விதைகளின் விலை குறைவு. கலப்பின விதைகளில் மருந்து பயன்படுத்தி இருப்பதால், அதில் பூச்சிகள் அரிக்காது. ஆனால் அதுவே நாட்டு விதைகளில் எந்த வித மருந்துகளும் தெளிப்பதில்லை என்பதால், எளிதில் பூச்சிகள் அரிச்சிடும். அதனாலேயே இதனை உடனே வாங்கி உபயோகப்படுத்தி விடுவார்கள். எங்களிடமும் அவை சீக்கிரம் விற்றுவிடும். விதைகள் பொறுத்தவரை அதில் தண்ணீர் படாமல் பாதுகாத்தால், 8 மாதங்கள் வரை அதை எளிதாக பராமரிக்கலாம்’’ என்கிறார்.

‘‘இன்றைய காலத்தில் திருமணம் மற்றும் வேறு எந்த விசேஷம் என்றாலும், நிறைய செலவு செய்து செய்றாங்க. அதில் அவங்க விருப்பத்திற்கேற்ப நாங்கள் செய்து தருவது தான் இந்த ‘தேங்க்யூ கார்ட்’ ( Thank you Card). இதில் இன்னும் சில இயற்கை முறையில் செய்யப்பட்ட பற்குச்சி, சோப்பு, வாஸ்து செடிகளையும் அன்பளிப்பாக கொடுத்து வருகிறோம். இவைகள் எல்லாம் பெரிய பெரிய ஆர்டர்கள் என்றும் இல்லாமல், குறைந்த பட்சம் பத்து எண்ணிக்கையிலிருந்து ஆரம்பிப்போம்.

இந்த lucky bamboo வாஸ்துக்காக நிறைய கடைகளில் வைத்திருப்பார்கள். மூங்கிலால் ஆன பற்குச்சி ஏற்கனவே சந்தைகளில் அறிமுகத்தில் உள்ளது. இருப்பினும் அதில் புதுசா நாங்க கொண்டு வந்தது, லேசர் கதிர்கள் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் விரும்பும் பெயர்களை அதில் அச்சிட்டு தருகிறோம். இந்த பற்குச்சிகள் மக்கும் குணம் கொண்டது, முற்றிலும் இயற்கை பொருட்களால் தயாரானது.

கோடைகாலம், குளிர்காலம் என காலநிலைகளுக்கு ஏற்ப விதைகளை மாற்றி குடுப்போம். உதாரணத்திற்கு கோடைகாலங்களில் தர்பூசணி, முலாம்பழம், பப்பாளி விதைகளை தருவோம். விதைகளை வாங்குற மக்கள் எல்லாம், தோட்டம் வச்சிருக்க வாய்ப்புகள் இல்லை என்பதாலும் அதிகபட்சமா நகரங்களில் இருப்பவர்கள் தான் இந்த மாதிரியான அன்பளிப்புகளையும் கொடுக்கின்றனர் என்பதை மனதில் கொண்டு அவங்களுக்கு ஏற்றது போலவும், முதன்முறையா தோட்டம் அமைப்பவர்களுக்கு ஏற்பவும் எளிதில் வளரக்கூடிய விதைகளா குடுப்போம்.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல, ஆரம்பிக்கும் போதே சிலருக்கு செடிகள் நல்ல முறையில் வளரவில்லை என்றால் அவர்களுக்கு தோட்டம் அமைக்கு எண்ணமே போய்விடும். அதனால் நாங்கள் கொடுக்கும் விதைகள் எல்லா காலம் மற்றும் இடங்களில் வளரக்கூடியதாக தான் இருக்கும். இது போக சுத்தமான தேங்காய் எண்ணெயினைக் கொண்டு இருபது முதல் முப்பது வகையான சோப்புகளை தயாரிக்கிறோம்’’ என்ற பவன் குமார் சில அரிய வகை விதைகளையும் விற்பனை செய்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post புதிய மெத்தை வாங்குபவர்கள் கவனிக்க! (மகளிர் பக்கம்)
Next post செக்ஸில் பிரச்சினையா ? (அவ்வப்போது கிளாமர்)