வானவில் உணவுகள்!! (மருத்துவம்)

Read Time:14 Minute, 24 Second

உணவு முறை மாற்றம்!

மனித உடலிலுள்ள உறுப்புகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வேலை அல்லது இரண்டு மூன்று வேலைகளைச் செய்து கொண்டிருப்பவை. ஆனால், கல்லீரல் மட்டுமே ஏறக்குறைய 3500 வகையான உடலியங்கியல் செயல்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறது என்றால், அந்த உறுப்பின் அதி முக்கியத்துவம் நமக்கு விளங்கும். எனவே, கல்லீரலில் நோய் ஏற்படும்போது, ஒட்டுமொத்த உடலியங்கியல் நிகழ்வுகளும் பாதிப்படைகின்றன. கல்லீரல் நோய்களில், கடுமையான அழற்சி (Acue hepatitis) நீடித்த அழற்சி நிலை (Chronic hepatitis) திடீரென்று கல்லீரல் செயல்பாடுகளை முழுவதும் முடக்கி பாதிப்பை ஏற்படுத்தும்; அழற்சி (Fulminant hepatitis), அல்கஹால் மூலம் ஏற்படும் கல்லீரல் அழற்சி (Alcoholic hepatitis), கல்லீரல் இழை நார் வளர்ச்சி (Liver Cirrhosis), இவற்றால் ஏற்படும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட மேலும் பிற நோய்களும் உள்ளன.

வைரல் ஹெப்படைட்டிஸ் (Viral Hepatitis) எனப்படும் கல்லீரல் அழற்சியானது, கல்லீரலின் செல்களை சிறிது சிறிதாக அழித்து, செயல்திறனை இழக்கச் செய்துவிடும். மஞ்சள்காமாலை நோய் ஏற்படுவதற்கு பிரதான காரணமாக இருக்கும் இந்த ஹெப்படைட்டிஸ், A மற்றும் E வகை அல்லது B, C, D, G வகை ஹெப்படைட்டிஸ் வைரஸ்களால் ஏற்படுகிறது. இந்நோயின் அறிகுறிகளாகக் காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, உடல் எடை குறைவு, தசை இழிவு, பசியின்மை, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல் போன்றவைகள் காணப்படும்.

உணவுமுறை மாற்றத்தின் முக்கியத்துவம்ஹெப்படைட்டிஸ் நோய் ஏற்பட்டவர்களுக்கு உணவு முறை என்பது மிகுந்த கவனத்துடன் கொடுக்கப்பட வேண்டும். காரணம், தொடர்ச்சியான வாந்தி, குமட்டல், பசியின்மை போன்றவை நோய் பாதிக்கப்பட்டவரின் உணவு எடுத்துக்கொள்ளும் திறனைக் குறைத்துவிடும் என்பதுதான். இதனால், நோய் குணமாவது நீடிப்பதுடன், நுண்ணூட்டச்சத்துக் குறைபாடும் ஏற்பட்டு, வேறு சிறு பக்கவிளைவுகளும் ஏற்பட்டுவிடும் வாய்ப்புள்ளது.

வாய் வழியாக உணவு எடுத்துக்கொள்ள இயலாமல், குழாய் வழியாக உணவு செலுத்தப்படும் நிலையில், மருந்தாகவும், மருந்துணவாகவும் கொடுக்கப்பட்டுவிடும். அப்போது, உணவுகளும் உணவு முறை மாற்றமும் தேவைப்படாது. ஆனால், தீவிர நோய் நிலையிலிருந்து குணமடைந்து, உணவு உண்ணும் நிலைக்கு வந்தபிறகும், மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்தபிறகும், உடல் நிலைக்குத் தகுந்தவாறு உணவு முறை மாற்றம் செய்வது முக்கியம்.

இழந்த பேரூட்டம் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களை உடலுக்குக் கொடுக்கவும், செரிமான மண்டலத்தின் வழியாகக் கிடைக்கப்பெறும் நொதிகள் சரிவர கிடைக்கவும், உணவு மூலம் சத்துக்கள் உட்கிரகிப்பதற்கும், கல்லீரல் நோயால் பிற உறுப்புகளின் பாதிப்புத் தன்மையைக் குறைப்பதற்கும் ஏற்றவாறு உணவு முறை மாற்றம் தேவை.

கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகள்

உணவுகளில், புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக புரதம், அதிக கார்போஹைடிரேட், மிதமான குறைவான கொழுப்பு உணவுகள் அடங்கிய ஒருநாள் உணவுமுறை நல்லது. கல்லீரலின் மிக முக்கியமான பணிகளுள் ஒன்றுதான் தானியங்கள், கிழங்குகள், பருப்புகள், பால் போன்றவற்றிலுள்ள கார்போஹைடிரேட் சத்தினைப் பிரித்தெடுத்துக் கொடுத்து, ரத்தத்தில் சேர்த்துவிடுவது. ஆனால், அழற்சி நோய் இருக்கும் நிலையில், இப்பணி பாதிக்கப்படுவதால், கார்போஹைடிரேட் உள்ள உணவுகளைக் கவனத்துடன் கொடுக்க வேண்டும்.

ஆற்றலைப் பொருத்தவரையில் ஒருநாளைக்கு சுமார் 1000 முதல் 1500 கிலோ கலோரி கிடைக்குமாறு உணவுமுறை இருப்பது நல்லது. மசித்த, குழைத்த தானியக் கஞ்சி வகைகள், தானியமும் பருப்பும் சேர்த்து தாளிக்காமல் செய்த குழைவான சாதம், அதிக புளிப்பு, காரம் இல்லாமல் காய்கள் சேர்த்து செய்த ரசம் போன்றவற்றைக் கொடுக்கலாம்.

புரதமும் கொழுப்பு உணவுகளும்

கல்லீரல் அழற்சி நோய் மட்டும் இருக்கும் நிலையில், 0.8 கிராம் அளவில் ஒருநாளைக்கான புரதச்சத்து இருக்க வேண்டும். உள்ளுறுப்புகளில் ரத்தம் வடிதல், தொற்று, கை கால்களில் நீர் கோர்த்துக்கொண்டு வீக்கம் போன்ற அறிகுறிகள் இருக்கும் நிலையில் 1 அல்லது 1.5 கிராம் புரதம் பரிந்துரைக்கப்படுகிறது. இந்தப் புரதம், அழிந்த கல்லீரலின் செல்களை அகற்றி, புதிய செல்களை உருவாக்குவதற்கும், தசைகளிலிருந்து புரதச்சத்து உறிஞ்சப்பட்டு, உடல் நலிவடைந்து எடை குறைதல் போன்றவற்றைத் தவிர்க்கவும் பயன்படுகிறது. இதற்காக பருப்பு வகைகள், முட்டை, சிறு மீன்கள் போன்றவற்றை சிறிது சிறிதாகக் கொடுக்கலாம்.

கல்லீரல் தொடர்பான நோய்களில், பொதுவாகவே ரத்தத்தில் நச்சுப்பொருட்கள் அதிகரிக்கும் என்பதால், குறிப்பாக கொழுப்பு மற்றும் கலோரி எரித்தலின்போது உருவாகும் கீட்டோன்கள் அதிகரிக்கும் என்பதால், குறைந்த கொழுப்பே பரிந்துரைக்கப்படுகிறது. இந்த 25 சதவிகித கொழுப்புச் சத்தானது, கார்போஹைடிரேட் மற்றும் புரதத்திலிருந்தே கிடைக்குமாறு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

மசாலா, எண்ணெய் போன்றவை இல்லாமல் உணவு கொடுக்க வேண்டும். இதன் காரணமாகவே, வீட்டில் இருக்கும் பெரியவர்கள், தாளிப்பு இல்லாமல் சமைக்க வேண்டும் என்று கூறுவது வழக்கம். கொழுப்புணவுகள் அனுமதிக்கப்பட்ட பிறகு, விலங்குகளில் இருந்து பெறப்படும் கொழுப்பை விட, தாவர வகைகளிலிருந்து பெறப்படும் கொழுப்பு குறைந்த அளவில் கொடுப்பது நல்லது. அவற்றில் ஒமேகா கொழுப்பும் இருப்பதால், உடலுக்கு நன்மையே அளிக்கும்.

வைட்டமின்களும் தாது உப்புக்களும்

நுண்சத்துகளில், வைட்டமின்கள் மிக முக்கியமானவை. குறிப்பாக, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் B12 குறைபாடு ஏற்படும் என்பதால் இரத்த சோகை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இவற்றுடன், கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான A, D, E, K போன்றவையும் குறைபாடாகிவிடும். எனவே, மருந்துகள் வழியாக இச்சத்துக்கள் கொடுக்கப்படும். நோய்நிலை சற்றே குணமடைந்த பிறகு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப் பழங்கள், முழு தானியங்கள், பாலாடைக்கட்டி, முளைகட்டிய பருப்புவகைகள் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தாது உப்புக்களில் முதலில் பாதிக்கப்படுவது இரும்புச்சத்துதான். இருப்பினும், அதை சுழற்சி செய்யும் கல்லீரல் பாதிப்படைந்து இருப்பதால், அதிகப்படியான இரும்புச்சத்து மாத்திரைகளும், உணவுகளும் இரும்புச்சத்து மிகை நிலையை ஏற்படுத்திவிடும். எனவே, உடல்நிலைக்கு ஏற்ப, மருத்துவரின் பரிந்துரையுடன் பசலை, பாலக், ஈரல், எள் போன்ற இரும்புச்சத்துள்ள உணவுகளை சரியான அளவில் கொடுப்பது போதுமானது.

பொதுவாகவே கல்லீரல் மற்றும் பித்தப்பை தொடர்பான நோய்களில், உடலின் தாமிரச்சத்து (Copper) அதிகமாகிவிடுவதால், தாமிரச்சத்து அதிகமுள்ள ஆட்டிறைச்சி, பெரிய மீன்கள், சோயா, உலர்ந்த பீன்ஸ், பார்லி, காளான், தேன், உலர்ந்த பழங்கள், இனிப்பு வகைகள், சாக்லேட், பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். வெண்ணெய், உருளைக்கிழங்கு, தானியங்கள், பிற காய்கள் போன்றவை தாமிரச்சத்து குறைவாக உள்ள உணவுகள் என்பதால், அவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

உணவு முறையில் கவனிக்கப்பட வேண்டியவைகள்

*அதிக அளவு உணவை ஒரே முறை அல்லது இரண்டு முறைகள் கொடுக்காமல், ஆறு அல்லது ஏழு முறைகள் சிறிது சிறிதாகக் கொடுப்பது செரிமான மண்டலத்திற்கு நல்லது. மிகக் குறிப்பாக வாந்தி மற்றும் குமட்டல் பிரச்னைகள் இருப்பவர்களுக்கு இவ்வாறுதான் கொடுக்க வேண்டும்.

*உடல் உறுப்புகளின் சீரான இயக்கத்திற்கும், உயிர் வேதியியல் மாற்றங்களுக்கும் ஏற்றவாறு குறைவான இனிப்புள்ள கொய்யா, நாவல், இலந்தை, பேரிக்காய் போன்ற பழங்கள் மற்றும் பச்சை காய்கள் மற்றும் கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*கல்லீரலின் நொதிகளை சரியான அளவில் சுரக்க வைத்து, அழற்சி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் திறன்; பூண்டுக்கு இருப்பதால், இந்நோய் இருப்பவர்கள் பூண்டை தினசரி உணவில் எடுத்துக்கொள்ளவது நல்லது என்று ஈரானைச் சேர்ந்த சிராஜ் மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வறிக்கை ஒன்றும் உறுதிபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

*அது மட்டுமல்லாமல், உடலுக்குத் தேவையான அளவில் நீர் அருந்துவது உடலில் சேரும் நச்சுகளை வெளியேற்றும் என்பதால், நம் உடல் எடைக்குத் தகுந்த அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஹெப்படைட்டிஸ் நோயுள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவைகள்

கல்லீரல் அழற்சி நோய் உள்ளவர்கள், வறுத்த, பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மசாலா சேர்த்த உணவுகள், சர்க்கரை, காபி, டீ, சாக்லேட், குளிர்பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். கல்லீரலுக்கு எப்போதுமே தீமை செய்யும் பொருட்களாக கருதப்படும் மதுபானம், புகையிலை, பூச்சிக்கொல்லிகள், சுத்தமில்லாத குடிநீர், பதப்படுத்த உபயோகப்படும் பொருட்கள், அதிக உலோகம் சேர்ந்திருக்கும் மீன் வகைகள் போன்றவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.குறிப்பாக மதுப்பழக்கம் மற்றும் புகை பிடித்தல், போதை மருந்துகள் போன்றவைகளால்தான் பெரும்பான்மையான கல்லீரல் நோய்கள் ஏற்படுகிறது என்பதால், அவற்றை அறவே ஒதுக்க வேண்டும்.

எவ்விதத்திலெல்லாம் உடலில் உணவு வழியாகவோ அல்லது வெளிப்புறத் தோல் வழியாகவோ நச்சுக்கள் சேர்வதற்கு வாய்ப்புகள் உள்ளனவோ, அவற்றையெல்லாம் இந்நோயுள்ளவர்கள் தவிர்ப்பதுதான் நல்லது. வாசனைத் திரவியங்கள், புகையிலை, அழகுசாதனப் பொருட்கள் போன்றவை, ரத்தத்தின் நச்சுக்களை மேலும் அதிகரிக்கும். மேலும், கல்லீரலுக்கு அதிக பளுவைக் கொடுத்து, செயல்திறனைக் குறைக்கும் வேதிப்பொருட்கள் அதிகம் சேர்க்கப்பட்ட ரெடிமேட் உணவுகள், தரம் குறைந்த எண்ணெய் வகைகள் போன்றவையும் உணவுடன் சேர்த்துக்கொள்ளுதல் கூடாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மன அழுத்தத்தைக் கையாளும் வழிகள்! (மருத்துவம்)
Next post அம்மாவின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றணும்!! (மகளிர் பக்கம்)