ஒரு பக்கெட் தண்ணீர் என் கனவினை முழுமையாக்கியது! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 19 Second

அன்று பள்ளியின் முதல் நாள். ஆசிரியை மாணவர்களிடம், ‘நீ எதிர்காலத்தில் என்னவாகப் போகிறாய்’ என்று கேட்கிறார். ஒரு மாணவி குழந்தை மருத்துவர் என்றார். மற்றொரு மாணவியோ பெண் தொழில் முனைவோர் என்று பதில் அளிக்கிறார். அடுத்து வந்த மாணவியின் குரல் கணீரென்று ‘நான் விமானி ஆவேன்’ என்று ஒலித்தது. வகுப்பில் இருந்த மாணவர்கள் எல்லாரும் அந்த குரலுக்கு சொந்தக்காரரைப் பார்த்தனர். காரணம், இது சாத்தியமா என்ற கேள்வி தான் மற்ற மாணவர்களின் பார்வையில் மேலோங்கி இருந்தது. ஆனால் நாம் நினைத்தால் அது கண்டிப்பாக நடக்கும் என்பதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் ஜெய. இவர் நீலகிரி மாவட்டத்தின் முதல் பெண் விமானி என்கிற பெயரை பெற்றிருக்கிறார்.

‘‘எல்லோருக்கும் சிறு வயதில் பல கனவுகள் இருக்கும். அதில் எல்லா கனவுகளும் நிறைவேறும் என்று சொல்ல முடியாது. ஒன்று இரண்டு நிறைவேறலாம். ஆனால் பெரும்பாலும் பலருக்கு அவர்கள் கண்ட கனவுகள் நிகழ்வதற்கான வாய்ப்பு கிடைக்காமலே போய்விடுகிறது. அதை கடைசிவரை பின் தொடர்ந்து செல்ல முடியாமல் வாழ்க்கையின் போக்கில் செல்பவர்களே அதிகம். அப்படி சென்றவள் தான் நானும். ஆனால் எனக்கு ஒரு இரண்டாவது வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பினை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்பினேன். அதன் மூலம் என்னுடைய வாழ்க்கை மற்றவருக்கு பாடமாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. மேலும் நான் மற்ற பெண்களைப் போல் சாதாரண பெண்ணாக இருக்க விரும்பவில்லை. அப்போது நான் எடுத்த அந்த முடிவு தான் இன்று நான் சிறுவயதில் கண்ட கனவினை நிறைவேற்றியுள்ளது. நான் இன்று ஒரு விமானி’’ என்று உற்சாகத்தோடு பேசத் தொடங்குகிறார் ஜெய.

‘‘சொந்த ஊர் கோத்தகிரி அருகில் உள்ள நெடுகுளா குருக்கத்தி என்கிற கிராமம். படிச்சதெல்லாமே அங்க தான். பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதில் நான் என்னுடைய தனித்தன்மையை காட்ட வேண்டும்ன்னு நினைப்பேன். அதனால் பள்ளிகளில் நடக்கும் எல்லா போட்டிகளிலும், கலை நிகழ்ச்சிகளிலும் நான் கலந்துகொள்வேன். அதில் பரிசும் பெற்றிருக்கேன். இதற்கு முக்கிய காரணம் எங்க வீட்டில் என்னையும் சரி என் தம்பியையும் சரி ஒரே மாதிரி தான் வளர்த்தாங்க. ஆண் குழந்தை, பெண் குழந்தைன்னு அவங்க பேதம் பார்த்ததில்லை. அவனுக்கு எந்த மாதிரியான சுதந்திரம் இருந்ததோ அதே சுதந்திரம் எனக்கும் இருந்தது.

நான் எடுக்கும் முடிவுகளுக்கு என்றுமே என்னுடைய பெற்றோர் தடையாக இருந்ததில்லை. இதனாலேயே எனக்கு வாழ்க்கை மீது நிறைய கனவுகள் இருந்தது. முக்கியமாக என்னுடைய அம்மா வேலைக்கு செல்லும் இடத்தில் விமான ஓடுதளம் ஒன்று இருக்கும். அவங்க அலுவலகம் போகும் போது எல்லாம் அந்த ஓடுதளத்தைப் பார்த்து நீ படித்து விமானி ஆகி, என்னை ஃபிளைட்டில் கூட்டிக் கொண்டு போன்னு சொல்வார்.

சின்ன வயசில் இருக்கும் எல்லாரும் டாக்டராகவோ, ஆசிரியராகவோ அல்லது என்ஜினீயராகவோதான் ஆக வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு மட்டும் எதிர்காலத்தில் நான் ஒரு விமானி ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. ஆரம்பத்தில் என் அம்மாவுடைய கனவாக இருந்தாலும், போகப்போக அது என்னுடைய கனவாகவே மாறிடுச்சு’’ என்றவர் அந்த கனவினை எவ்வாறு நிறைவேற்றினார் என்பதை பகிர்ந்தார்.

‘‘பள்ளி படித்து முடித்ததும் பொறியியல் பட்டப்படிப்பு படிச்சேன். அதன் பிறகு ஐ.டி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். வாழ்க்கை சுமூகமாகவும் வசதியாகவும் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில்தான் கொரோனா தாக்கியது. கொரோனாவில் வீட்டிற்குள் முடங்கியிருந்த நாட்கள் தான் எனக்கு என்னை பற்றி யோசிக்க வைத்தது. வேலைக்கு போனதால், எனக்கான நேரம் என்று ஒன்று இல்லாமலே இருந்தது. இந்த கொரோனா தான் என்னைப் பற்றியும் என் கனவு குறித்தும் யோசிக்க வைத்தது. ஒரு வேலையில் இருந்து கிடைக்கும் ஊதியமும் அந்த வேலை கொடுக்கும் வசதிகளும் இது போதும். வேறு என்ன வேண்டும் என்ற எண்ணத்தினை ஏற்படுத்திவிடும்.

வாழ்க்கையில் அடுத்து பெரிய கனவுகள் என்பதே இருக்காது. இதற்கு காரணம் நம்முடைய அன்றாட வேலைகளிலிருந்து விலகி நம்மை பற்றி யோசிக்க நேரம் இல்லாமல் இருப்பது தான். அந்த இடத்தை தான் எனக்கு கொரோனா நாட்கள் தந்தது. வீட்டிலிருந்த படியே வேலை செய்து வந்தாலும் எனக்குள் ஒரு கேள்வி வந்து கொண்டே இருந்தது. தினமும் ஒரே வேலை செய்கிறோம். இதனால் நான் என்னுடைய தனித்தன்மையை இழந்து விட்டேனா என்ற எண்ணம் ஏற்பட்டது.

இது எனக்கான வாழ்க்கை இல்லை என்பதை உணர்த்தியது. நான் என்னை எவ்வாறு மாற்றிக் கொள்ள வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தேன். அந்த நேரத்தில்தான் எனக்குள் இருந்த விமானியாக வேண்டும் என்கிற கனவு என் கண்முன் வந்தது. எந்த ஒரு விஷயத்தையும் முயற்சித்து தோல்வி அடைந்தால் கூட அதன் மீதான வருத்தம் இருக்காது. ஆனால் முயற்சிக்காமலேயே பிற்காலத்தில் முயற்சித்து பார்த்திருக்கலாம் என்கிற எண்ணம் வந்தால் அந்த கணத்தை தாங்க முடியாது.

அதனால் என்னுடைய விமானி என்ற கனவையும் முயற்சி செய்து பார்ப்போம்னு முடிவு செய்து, அதற்கான படிப்புகள் குறித்து தேடத் தொடங்கினேன். விமானியாவதற்கு தனிப்பட்ட தேர்வு எழுத வேண்டும். இதில் பத்தாம் வகுப்பில் வேதியியல் மற்றும் கணக்கு பாடங்களை முதன்மையாக தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும். உடனே நான் ஆன்லைன் முறையில் அதற்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். பகலில் ஐ.டி வேலைகளை பார்ப்பேன். இரவு முழுவதும் தேர்வுக்காக படிப்பேன்.

வேலை பார்த்துக் கொண்டு படிப்பது கஷ்டமாக இருந்தது. அதனால் என்னுடைய ஐ.டி வேலையை ராஜினாமா செய்தேன். நண்பர்கள் பலர் நல்ல வேலையை விட்டு விட்டாயேன்னு திட்டினார்கள். ஆனால் என் பெற்றோர் என் விருப்பத்தை புரிந்துகொண்டு எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். நான் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு விமானிக்கான பயிற்சி எடுக்க வேண்டும். அதற்கு தென் ஆப்பிரிக்காவுக்கு செல்ல நினைத்தேன்.

ஆனால் வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சியினை மேற்கொள்ள நிறைய செலவாகும். அதற்காக வங்கிக் கடன் தேடி அலைந்தேன். ஆனால் பலருக்கும் விமானிக்கான பயிற்சி படிப்பு இருப்பது தெரியவில்லை என்பதால் வங்கிகளில் கடன் தர யோசித்தார்கள். ஆனால் வெளிநாடுகளில் விமானிக்கான பயிற்சிக்கு வங்கிக் கடன் உள்ளது. நம் நாட்டில் தான் இல்லை. எங்களுக்கு இருந்த நிலத்தை விற்று தான் என் அப்பா என்னை தென் ஆப்பிரிக்காவிற்கு பயிற்சிக்காக அனுப்பி வைத்தார்’’ என்றவர் தான் முதல் முறையாக விமானம் ஓட்டியதை பற்றி நெகிழ்ச்சியோடு சொல்லத் தொடங்கினார்.

‘‘பள்ளிக்கூடம் படிக்கும் போது கலை நிகழ்ச்சிக்காக சிம்லாவிற்கு விமானத்தில் சென்றோம். அது தான் என்னுடைய முதல் விமானப் பயணம். நான் பயணம் செய்த விமானத்தை தென் ஆப்பிரிக்காவில் பயிற்சியின் போது இயக்கிய போது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. விமானத்தை உச்சபட்ச வேகத்தில் இயக்கிதான் தரையிலிருந்து மேலெழும்பி பறக்க வைப்போம். அந்த தருணத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்த ஒரு கணத்திற்காகத்தான் இரண்டரை வருடங்கள் காத்திருந்தேன். சாலையில் ஒரு மைல் கடக்கும் போது அது பெரிய விஷயமாக தெரியாது. ஆனால் ஒரு மைல் விமான ஓடுபாதை உங்களை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லும் என்பார்கள்.

அதை நான் பறக்கும் போது உணர்ந்தேன். பயிற்சி எடுக்கும் போது பயிற்றுநர் உடன் இருந்து விமானத்தை இயக்குவது பற்றி சொல்லித் தருவார். பயிற்சி முடிந்ததும், ஒரு நாள் திடீரென்று நீ தனியாக விமானத்தை இயக்குன்னு சொல்வார்கள். எனக்கான அந்த ஆணை வந்த போது நான் பேரானந்தத்தில் திளைத்தேன். அவர்கள் சொல்வது நிஜம் தானா என்று என்னால் நம்பவே முடியல. விமானத்தை தனியாக ஓட்டிச் சென்று தரை இறக்கினேன்.

எங்களின் பயிற்சி முடிந்து நாங்க தனியாக விமானத்தினை இயக்கியதை கொண்டாட, ஒரு தோள்பட்டையில் அதற்கான அங்கீகாரப் பட்டையினை அளித்து ஒரு பக்கெட் தண்ணீரை மேலே ஊற்றுவார்கள். இந்த மாதிரி தண்ணீர் ஊற்றும் போது நான் சாதித்து விட்டேன் என்ற எண்ணம் தான் என் மனதிற்குள் வந்தது. அதன் பிறகு பல நாட்கள் விமானம் ஓட்டி முழுமையாக என் பயிற்சியினை முடித்தேன். அது முடிந்ததும் இரண்டாவது தோள்பட்டையில் அதற்கான அங்கீகாரம் கொடுப்பார்கள். இதுதான் விமானத்தினை இயக்குவதற்கான லைசென்ஸ். இதிலும் எனக்கு ஒரு நெகிழ்ச்சிகரமான சம்பவம் இருந்தது. விமானம் பயிற்சியளித்த இருவரில் ஒருவர் இந்தியர்.

அவரிடம் பயிற்சி பெற்ற முதல் இந்தியரும் நான்தான். என்னுடைய இரண்டாவது அங்கீகாரப் பட்டையை நான் எடுக்க சென்ற போது அவர் அவருடைய அங்்கீகாரப் பட்டையினை அளித்து என்னை பாராட்டினார். இந்த இரண்டு அங்கீகாரப் பட்டையினைப் பெற்ற பிறகுதான் சிறிய ரக தனியார் விமானங்களை நான் இயக்கலாம். இதை வைத்து அடுத்து பயணிகள் விமானம் இயக்குவதற்கான பயிற்சியில் ஈடுபட்டு அதற்கான லைசென்ஸ் வாங்கினால் நான் பயணிகள் விமானியாகி விடுவேன்.

தற்போது பல பெண்கள் விமானியாக ஆசைப்படுகின்றனர். சொல்லப்போனால் வெளிநாடுகளில் விட இந்தியாவில் தான் அதிகமாக பெண் விமான ஓட்டுநர்கள் உள்ளனர். அதனால் பெண்களே உங்களுக்கு விமானியாக வேண்டும் என்ற ஆசை இருந்தால் தாராளமாக நீங்களும் பயிற்சியினை மேற்கொண்டு விமானத்தை இயக்கலாம்’’ என்று தன்னம்பிக்கையோடு சொல்கிறார் ஜெயஸ்ரீ.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அம்மாவின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றணும்!! (மகளிர் பக்கம்)
Next post மாதவிலக்கு!! (அவ்வப்போது கிளாமர்)