என் கணவர் மூடுன கடைய துணிஞ்சு தொறந்தேன்! (மகளிர் பக்கம்)

Read Time:16 Minute, 7 Second

“குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…” எனத் தேனொழுகப் பாடும் எம்எஸ் அம்மாவின் குரல் குட்டியம்மாளின் காலர் டியூனாக நம் மனதையும் கரைக்கிறது. ஆயில்… க்ரீஸ்… என அவரின் உடைகள் அழுக்கேறி இருந்தாலும்… பார்த்ததும் முகமெல்லாம் புன்னகைக்க பளிச்சென நம்மைக் கவர்கின்றார் குட்டியம்மாள்.மதுரையில் இருந்து தேனி செல்லும் நெடுஞ்சாலையில் இருக்கிறது.

குட்டியம்மாளின் பஞ்சர் கடை. டூ வீலர், கார், டெம்போ, லாரி, ஜேசிபி என எல்லா வாகனங்களுக்கும் பஞ்சர் பார்க்கிறார். அத்துடன் ஆயில் மாற்றுவது, க்ரீஸ் அடிப்பது, பிரேக் டைட் செய்வது, செயின் டைட் செய்வது என அத்தனையும் குட்டியம்மாளுக்கு அத்துபடி.“ட்யூப் போச்சுபா, ட்யூப் மாத்தணும்…” “ஏர் வாங்கியிருக்கு டயரை மாத்தணும்பா…” “கைய வச்சுப் பாருங்க டயர் புடைச்சுருக்கு…” “ஏர் லூப் வாங்கியிருக்குப்பா… ட்யூப் போட்டு ஓட்டுநா டயர் பால்ட் ஆகும். டயர மாத்துறது நல்லது…” ‘‘ஆட்டோவில் வெயிட் ஏத்தப் போறீங்களா? 60 தானே வைக்கிறேன். பயப்படாமல் ஓட்டுங்க…” இவையெல்லாம் வாடிக்கையாளர்களிடம் குட்டியம்மாள் பேசுகிற மொழி.

‘‘எவ்வளவு பெரிய வண்டி வந்தாலும் ஜாக்கியப் போட்டு ஏத்தி டயர கழட்டி பஞ்சர் ஒட்டி திரும்ப மாட்டிருவேன். என் கடைக்கு வரும் சிலர், என்னைப் பார்த்த பிறகும், பக்கத்தில் இருக்கும் ஆண்களிடம் “பஞ்சர் கடையில ஆள் இல்லையா” எனக் கேட்பார்கள். “அந்தா உட்கார்ந்துருக்கவுங்கதான் பஞ்சர் பாப்பாக” என என்னை கை காட்டியதும், என் அருகில் வந்து “அக்கா பெரிய டயர் கழட்டீரலாமா?” எனக் கேட்பார்கள். “கொண்டுவாங்கண்ணே பார்த்துருவோம்’’ என அசால்டாக சொல்வேன்” என்கிற குட்டியம்மாளிடம் பஞ்சர் பார்க்கும்
தொழிலுக்கு வந்த கதையை கேட்டபோது…

‘‘என் கணவர் பார்த்த தொழில் இது. திடீர்னு இறந்துட்டாரு. சாகும்போது அவருக்கு வயது 38. எனக்கு அவரைவிட ஆறு வயசு கம்மி. என் மகளுக்கு 5 வயது. மகனுக்கு 7. அப்பா இனி இல்லை என்பதை குழந்தைகள் உணர்வதற்குள் எல்லாம் முடிஞ்சுருச்சு. பிள்ளைகள வளத்து ஆளாக்கணுமே என்ன செய்யலாம்னு தவிச்சு நின்னேன். உறவுகள் பெரிசா கை கொடுக்கலை. சுற்றியிருந்தவர்கள் மகனை மாணவர்கள் விடுதியிலும், மகளை பெண்கள் விடுதியிலும் சேர்த்துவிட்டு, என்னை எங்காவது சோறாக்கும் வேலையில் சேர்க்க முடிவு செய்தார்கள்.

எனக்கோ துளியும் விருப்பமில்லை. பிள்ளைகளுக்கு அப்பாதான செத்துட்டாரு. அம்மா நான் உயிரோடதான இருக்கேன். பிள்ளைகளை நான் பார்த்துக்குறேன்னு அன்னைக்கு எந்திரிச்சு நின்னவதான். என் வீட்டுக்காரர் விட்டுட்டுப்போன இந்த பஞ்சர் கடைய எடுத்து நடத்தலாம்னு முடிவெடுத்தேன். ஆனால் தொழில் குறித்து எதுவுமே தெரியாது. வலியும் வேதனையும் இருந்தால் எதையும் கத்துக்கலாம்தானே!?’’

குட்டியம்மாள் தன் வாழ்வியல் அனுபவத்தை தெளிவாக நம்மிடம் பேசுகிறார். ‘‘கிணத்துக்குள்ள தள்ளிவிட்டு தப்பின்னு சொன்னா, உயிர் பிழைக்கிற வழியத்தான நாம பார்ப்போம். என் சூழ்நிலையும் அதுதான். நானாக கத்துக்கிட்ட நீச்சல்தான் இது…’’ அழுத்தமாகப் பேசும் குட்டியம்மாளிடம் உங்க கணவர் இருந்தபோதே நீங்க ஏன் இந்தத் தொழிலை கத்துக்கலை என்றதற்கு? ‘‘என்னை அவர் எதுவும் தெரியாதவளா கைல வச்சு ரொம்பவே தாங்கீட்டாரு. அதுக்குக் காரணமும் இருக்கு. ஏன்னா அவர் போலியோவில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. அவரைக் கல்யாணம் செய்துக்க எந்தப் பெண்ணும் முன்வராத நிலையில், நான் மட்டுமே திருமணம் செய்ய சம்மதிச்சேன். அதனால் அவருக்கு என் மேல் கொள்ளை அன்பு…’’ சொல்லும்போதே குட்டியம்மாளின் கண்களில் கணவர் மீதிருந்த காதல் அப்பட்டமாய் தெரிகிறது.

‘‘எனக்கு ஊர் சிவகாசி. அவருக்கு மதுரை. எல்லோரையும் பெண் பார்க்கத்தானே வருவார்கள். நான் மாப்பிள்ளையை பார்க்கப் போனேன். அவர் மாற்றுத்திறனாளியா இருந்தாலும் கடின உழைப்பாளி. சொந்தமாக பஞ்சர் கடை வைத்து, சொந்த உழைப்பில் மூன்று சக்கர வண்டி வாங்கியிருந்தார். எனக்கும் அப்பாவுக்கும் அவரை பிடித்திருந்தது. என் குடும்பச் சூழ்நிலையும் வறுமைதான். வீட்டில் நான் இரண்டாவது பெண். எனக்கு பின்பு நான்கு பெண்கள். சிவகாசியில் இருந்த வரை பட்டாசு கம்பெனி வேலைக்கு போனேன். அதில் வந்த வருமானத்தை சேமிச்சு 3 சவரன் நகை வாங்கி வைத்தேன். அதை போட்டுதான் என்னை கல்யாணம் செய்து கொடுத்தனர்.

திருமணத்திற்குப் பிறகு அவரின் கேரக்டர் புடிச்சுப்போயி உசுருக்கு மேல அவரை நேசிச்சேன். எந்த இடத்திலும் அவரை விட்டுக்கொடுத்ததில்லை. அவரும் என்னை ரொம்ப நேசிச்சாரு. நான் ஆசைப்பட்டு எது கேட்டாலும் ஞாபகம் வச்சு வாங்கீட்டு வந்துருவாரு. அவரோடு வாழ்ந்த 10 வருடமும் அன்பையும், காதலையும் என் மேல கொட்டுனாரு. ஒரு மகாராணியாகவே அவரோடு வாழ்ந்தேன். அதிகபட்சம் என்னை டெய்லரிங் பழக மட்டுமே அனுமதித்தார். இன்னைக்கு அவரில்லாம தனியா தவிக்கிறேன்…’’ கண்ணீரால் குட்டியம்மாளின் கண்கள் குளமாக, கண்ணீரைத் துடைக்கிற அவரின் கரங்களில் தர்மதுரை என்கிற கணவரின் பெயரை ‘தர்மா’ என பச்சை குத்தியிருப்பது பளிச்செனத் தெரிகிறது.

‘‘கண்ணைக் கட்டி காட்டில் விட்ட நிலைதான் எனக்கு. சொந்தக்காரங்க முன்னாடி கேள்விக்குறியா பிள்ளைகளோடு நிக்கிறேன். பிள்ளைகளையும் படிக்க வைக்கணும். நேரத்துக்கு சாப்பாடு கொடுக்கணும். யோசித்ததில் கை கொடுத்தது அவரோட தொழில் மட்டும்தான். இது நானா துணிஞ்சு எடுத்த முடிவு. ஹைவேஸ்ல ஒரு பொம்பளையா தனியா இந்தத் தொழிலை செய்ய முடியுமா என எல்லோரும் என்னை பின்னுக்கு இழுக்க, அந்த நேரம் எனக்கு கை கொடுக்க யாரும் முன் வரல. சுற்றி இருப்பவர்களால் என்னை கொல்லத்தானே முடியும். வாழ வைக்க முடியுமா?’’ வார்த்தைகள் அழுத்தமாக வந்து விழுகிறது குட்டியம்மாளிடம் இருந்து.

‘‘அவர் இறந்த 16ம் நாள் பிள்ளைகளை ஸ்கூலில் விடப்போனேன். அப்பா இருந்தால் இந்நேரம் எங்களை வண்டியில கொண்டுவந்து விடும்னு மகள் சொல்ல, அன்னைக்கு அவரோட மூன்று சக்கர வண்டில சைடில் இருந்த இரண்டு டயரையும் கழட்டிப் போட்டுட்டு தைரியமாக வண்டிய ஓட்ட ஆரம்பிச்சேன். வெளியில் வராமல் இருந்த 30 நாளும், யு டியூப் பார்த்து பஞ்சர் ஒட்டும் வேலைகளை ஓரளவு தெரிஞ்சுக்கிட்டேன்.

என் கணவர் மூடுன கடைய துணிஞ்சு தொறந்தேன். ஏற்கனவே அவர் கடைக்கு அட்வான்ஸ் ஐம்பதாயிரம் கொடுத்திருந்தார். வாடகை மூன்றாயிரம் கொடுத்து வந்தார். தனியொருத்தியா நானே தொழிலை எடுத்து செய்ய ஆரம்பித்தேன். மாத சம்பளத்திற்கு வயதான தாத்தா ஒருவரை வேலைக்கு வைத்தேன். அவரின் மேற்பார்வையில் பஞ்சர் வேலைகளை எடுத்து செய்ய ஆரம்பித்து, அவர் மூலமாகவே டயரை கழட்டுவது, மாட்டுவது, பஞ்சர் ஒட்டுவது, காத்து அடிப்பதென எல்லாவற்றையும் மூன்றே மாதத்தில் கற்றேன். பெரியவரும் பொறுமையா எல்லாத்தையும் எனக்கு சொல்லிக் கொடுத்தாரு.

இறந்து போறதுக்கு 6 மாதம் முன்னாடிதான் இந்த மெஷினெல்லாம் வாங்கிப் போட்டாரு. அவரு வாங்கிப் போட்ட சாமான்களைத்தான் நானும் உபயோகப்படுத்திக்கிட்டு இருக்கேன். ஆரம்பத்தில் வந்த கஷ்டமர்களிடம் ‘என் வீட்டுக்காரர் இறந்துட்டாரு. அவர் பார்த்த தொழிலை நான் எடுத்து செய்துக்கிட்டு இருக்கேன். அதனால் மெதுவாத்தான் செஞ்சு தருவேன். பொறுமையாக இருக்கணும்’ என சொல்லிட்டுதான் பஞ்சர் ஒட்டவே இறங்குவேன்.

பலரும் எனக்கு நம்பிக்கை கொடுத்து பொறுமையாக இருப்பாங்க. காசு வாங்காமலே முதலில் ஒட்டிக் கொடுத்தேன். அடிபட்டு அடிபட்டுதான் நிறைய கத்துக்கிட்டேன். பழக பழகக் கூடுதலாகவும் நிறையத் தெரிந்தது. இன்னைக்கு தொழிலை நான் கையில் எடுத்து ஐந்து வருஷமாச்சு. செத்தாலும் அவர் என் கூடத்தான் வாழ்ந்துகிட்டு இருக்காரு. அவருதான் எனக்கு உதவியும் செஞ்சுக்கிட்டு இருக்காரு…’’ மீண்டும் கண்ணீரோடு புன்னகைக்கிறார் குட்டியம்மாள்.

‘‘காலை 9 மணிக்கு கடையைத் திறந்தால் இரவு 8 மணிக்கு மூடுவேன். வண்டி பஞ்சராகி வந்தால்தான் வருமானம். டயருக்குள் கம்பிய அழுத்திக் குத்தி இறக்கி ட்யூப் மாத்துவது, பஞ்சர் ஒட்டுவதுன்னு அசால்டா வேலை செய்வேன். ரோட்டில் வண்டி பிரேக் டவுன் ஆனால் போனில் அழைப்பு வரும். பம்புடன் டூவீலரில் சென்று ஜாக்கியத் தூக்கி மாட்டி டயரைக் கழற்றி சரிசெய்து திரும்பவும் மாட்டிக் கொடுத்துட்டு வருவேன். சிலநேரம், இரவு 2 மணி 3 மணிக்கெல்லாம் கஷ்டமர் போன் செய்து கெஞ்சுவாங்க. ‘குழந்தைகளோடு குடும்பமா வந்து மாட்டிக்கிட்டோம் அக்கா’ எனப் பெண்களைவிட்டு பேசவைப்பார்கள். மனசு கேட்காமல் இரவு கிளம்பி வந்து கடையை திறந்து, டூல்ஸை எடுத்து, ஜாக்கியப் போட்டு ஏத்தி டயரை கழட்டி சரி செய்து மாட்டுவேன். அந்த நேரம் அவர்கள் என்னை தெய்வமாக பார்ப்பாங்க.

டூவீலருன்னா நூறு கிடைக்கும். மற்ற வாகனங்களுக்கு 150 வாங்குவேன். வண்டி இருக்கும் இடத்துக்கே போனா கூடுதலா 100 வாங்குவேன். வண்டி உடைக்கிற இடத்தில் செகன்ஸ்ல நல்ல டயர்களை வாங்கிவந்து, டயர் பழுதாகி வருபவர்கள் கேட்டால் கூட விலை வைத்துக் கொடுப்பேன். ஞாயிற்றுக் கிழமைனா வருமானம் 1500 வரை வரும். மற்ற நாளில் 500 வந்தாலே பெரிய விஷயம். கடை வாடகை, கரன்ட் பில் போக மீதிதான் என் குடும்பச் செலவுக்கு. சில நாட்கள் வண்டியே வராமலும் கடைய மூடுவேன். ஆனாலும் தொழிலை விடுறதா இல்லை. ஏன்ன இது அவர் பார்த்த தொழில். கடையும் பார்த்துக்கிட்டு, குழந்தைகளையும் பார்த்துக்கிட்டு, வீட்டையும் கவனிக்க எனக்கு வசதியாக இருக்கு.

அரசுப் பள்ளியில் மகள் ஏழாவதும், மகன் எட்டாவதும் இப்ப படிக்கிறாங்க. மகளுக்கு டாக்டராகும் கனவும், மகனுக்கு போலீஸ் கனவும் இருக்கு. ரெண்டுமே நிறைவேறணும். நாளைக்கு தர்மா பிள்ளைகள் நல்லா வந்துருச்சுன்னு எல்லோரும் சொல்லணும். அந்த கனவை துரத்திக்கிட்டு மூவருமா ஓடிக்கிட்டு இருக்கோம். ஆசை பெருசா இருந்தால்தானே அதைத் தேடி ஓட முடியும்…’’ மீண்டும் அதே பளிச் புன்னகை குட்டியம்மாளிடம் இருந்து வெளிப்படுகிறது.

‘‘என்னோட வலியும் வேதனையும்தான் என்னை இவ்வளவு தூரம் ஆளாக்கியிருக்கு. இன்னைக்கு நான் வாழ்றதப் பார்த்து அதே உறவுகள் பாராட்டுறாங்க. ஊடகங்கள் தேடிவந்து என்னை பேட்டி எடுக்குது.ஷீட்டு போட்ட வீடுதான் எங்களுது. மழை பெய்தால் ஆங்காங்கே ஒழுகும். குழந்தைகள் பாத்திரத்தை வைப்பார்கள். எனக்கு உழைக்கும் திறன் இருக்குன்னு விதவை பென்ஷன் தர மறுக்கிறார்கள். பலமுறை விண்ணப்பித்தும் ரிஜக்ட் ஆயிருச்சு. பெண்களுக்கு அரசாங்கம் எத்தனையோ நல்லது செய்யுது. ரோட்டுல ஒரு பெட்டி இறக்கி கொடுத்துட்டா, கடை வாடகை இல்லாமல் குழந்தைகளோடு நான் பொழைச்சுக்குவேன்…’’ கோரிக்கை வைத்து நம்பிக்கையை விதைத்து விடைகொடுத்தார் குட்டியம்மாள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஏன் வேண்டும் உச்சகட்டம் ? (அவ்வப்போது கிளாமர்)
Next post குழந்தைகளின் சர்வரோக நிவாரணி! (மகளிர் பக்கம்)