பாதுகாப்பு வலய நிழற்படங்கள்: ஐ.நா.விடம் விளக்கம் கோரியது இலங்கை
பாதுகாப்பு வலயத்தில் நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பாக செய்மதி ஊடாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஐ.நா. வெளியிட்டமை தொடர்பாக இலங்கையிலுள்ள ஐ.நா. இணைப்பதிகாரி நெய்ல் புனேயிடம், இலங்கை அரசாங்கம் விளக்கம் கோரியுள்ளது. புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் மக்கள் இடம்பெயர்வது செய்மதிமூலம் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்டிருந்தன. இது தொடர்பாகவே இலங்கை அரசாங்கம் ஐ.நா. அதிகாரியிடம் விளக்கம் கோரியுள்ளது. “இரகசியமான ஆவணமொன்று எவ்வாறு ஊடகங்களுக்குக் கசிந்தது என்பது பற்றி விசாரணை நடத்துமாறு ஐ.நா.விடம் நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்” என நெய்ல் புனேயைச் சந்தித்த பின்னர் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார்.
இரகசியமான தகவல்கள் ஊடகங்களுக்குக் கசிவது இதுவே முதற்தடவை இல்லையெனக் குறிப்பிட்ட அமைச்சர், மோதல்களால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் பற்றிய எண்ணிக்கையடங்கிய ஐ.நா.வின் அறிக்கை உட்பட பல சந்தர்ப்பங்களில் தகவல்கள் ஊடகங்களுக்குக் கசிந்திருப்பதாகத் தெரிவித்தார்.
“ஐக்கிய நாடுகள் சபை இந்த விடயம் தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறியவேண்டும்” என அமைச்சர் கூறினார்.
இலங்கை அரசாங்கத்தின் இந்தக் கோரிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்குத் தான் அறிவித்திருப்பதாக கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் இணைப்பதிகாரி நெய்ல் புனே தெரிவித்துள்ளார்.
செய்மதிமூலம் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் நேற்று வெள்ளிக்கிழமை பல்வேறு இணையத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்தே இந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
Average Rating