(VIDEO) பச்சிளம் சிசுவின் சடலத்துடன் கடைக்கு வந்த இளம்பெண் கைது!
அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் விக்டோரியாஸ் சீக்ரெட் என்ற உள்ளாடைக் கடை உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் திருடர்களை கண்காணிப்பதற்கென்று தனி காவலர்கள் பணியாற்றி வந்தனர்.
நேற்று மதியம் சுமார் 17 வயதுடைய இரண்டு இளம்பெண்கள் இந்தக் கடைக்கு வந்து துணிகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒரு பெண் வைத்திருந்த கைப்பையில் இருந்து துர்நாற்றம் வருவதைக் கண்ட அந்தக் காவலர் சந்தேகத்தில் அவர்களது பைகளை வாங்கிப் பிரித்துப் பார்த்தார். ஒரு பெண்ணின் பையில் பச்சிளம் சிசு ஒன்று இருந்ததைப் பார்த்து அதிர்ந்துபோன அவர் காவல்துறையினரை அழைத்துள்ளார்.
அந்தப் பெண்களில் ஒருவர், ஒரு நாள் முன்னதாகத்தான் இதனைப் பிரசவித்ததாகவும், அதனை என்ன செய்வது என்று தெரியாமல் இவ்வாறு கையில் தூக்கிக்கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளார்.
அந்தக் குழந்தை பிறந்தபோது உயிருடன் இருந்ததா? என்பது குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை.
அவர் கொடுத்த முகவரியில் இருந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டபோது அந்த எண்ணுக்குரியவர்களிடமிருந்து இதுகுறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
மற்றொரு பெண் கொடுத்த முகவரியில் தொலைபேசி எண் கொடுக்கப்படவில்லை. இந்த இரண்டு பெண்களும் களவு மற்றும் திருடப்பட்ட சொத்தினை தகாதமுறையில் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரசவித்ததாகக் கூறப்பட்ட பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது பையில் இருந்த சிசுவின் சடலம் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இறப்பிற்கான காரணம் தெரிந்தபின்னரே இதற்கான அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூயார்க் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Average Rating