இத்தாலி, கானா 2-வது சுற்றுக்கு தகுதி செக் குடியரசு, அமெரிக்கா வெளியேறியது

Read Time:5 Minute, 3 Second

W.Football1.jpg18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதன் 14-வது நாள நடந்த முதல் ஆட்டத்தில் `இ’ பிரிவில் இடம் பிடித்துள்ள செக் குடியரசு- இத்தாலி அணிகள் மோதின. இந்த ஆட்டம் ஹம்பர்க்கில் நடந்தது. செக் குடியரசு அணி தனது முதல் ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்க அணியை தோற்கடித்து இருந்தது. 2-வது ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் கானாவிடம் தோல்வி கண்டு இருந்தது. இத்தாலி அணி தனது முதல் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் கானாவை தோற்கடித்து இருந்தது. 2-வது ஆட்டத்தில் அமெரிக்காவுடன் 1-1 என்ற கோல் கணக்கில் `டிரா’ கண்டு இருந்தது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி 2-வது சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால் ஆட்டம் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக இருந்தது. இரு அணியினரும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டத்தின் 26-வது நிமிடத்தில் இத்தாலி அணி முதல் கோல் போட்டது. அந்த அணி வீரர் மார்கோமாடெராசி இந்த கோலை அடித்தார். முதல் பாதியில் இத்தாலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னணி வகித்தது.

செக் குடியரசு அணி பதில் கோல் திருப்ப கடும் முயற்சி எடுத்தது. ஆனால் அந்த முயற்சிகளை இத்தாலி அணி வீரர்கள் சிறந்த ஆட்டத்தால் தடுத்து நிறுத்தினார்கள். ஆட்டத்தில் 87-வது நிமிடத்தில் இத்தாலி அணி 2-வது கோலை அடித்தது. இந்த கோலை அந்த அணி வீரர் பிலிப்போ இன்சாகி அடித்தார். பின்னர் இரு அணியினராலும் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் இத்தாலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு அணியை தோற்கடித்தது.

மற்றொரு `இ’ பிரிவு ஆட்டத்தில் கானா- அமெரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டம் நுரெம்பெர்க்கில் நடந்தது. கானா அணி தனது முதல் ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் இத்தாலியிடம் தோல்வி கண்டு இருந்தது. 2-வது ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு அணியை தோற்கடித்து இருந்தது. அமெரிக்க அணி தனது முதல் ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு அணியிடம் தோல்வி கண்டு இருந்தது. 2-வது ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் இத்தாலியுடன் `டிரா’ கண்டு இருந்தது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பதால் கானா அணி கோல் அடிக்க துடிப்புடன் ஆடியது. அதன் பலனாக கானா அணி 22-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. இந்த கோலை ஹமினு டிரமன் அடித்தார். இதற்கு பதில் கோலை அமெரிக்கா 43-வது நிமிடத்தில் திருப்பியது. அந்த அணி வீரர் கிளின்ட் இந்த கோலை அடித்தார். முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.

பின் பாதி ஆட்டத்தில் கானா அணி வெற்றிக்காக கடுமையாக போராடியது. 47-வது நிமிடத்தில் கானா அணி 2-வது கோல் போட்டது. இந்த கோலை அந்த அணி வீரர் ஸ்டீபன் அப்பியா பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அடித்தார். இதற்கு பதில் கோல் திருப்ப அமெரிக்கா எடுத்த முயற்சி கடைசி வரை கைகூடவில்லை. முடிவில் கானா அணி 2-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது.

`இ’ பிரிவில் லீக் ஆட்டங்கள் முடிவில் இத்தாலி 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. கானா 6 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்தது. இரு அணிகளும் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன. 3 புள்ளிகளுடன் 3-வது இடம் பெற்ற செக் குடியரசு, 1 புள்ளியுடன் கடைசி இடம் பெற்ற அமெரிக்கா ஆகியவை போட்டியில் இருந்து வெளியேறின.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விடுதலை புலிகள் கருணாநிதிக்கு சொந்தம் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் அவரது நண்பர்கள் -ஜெயலலிதா காட்டமான தாக்கு
Next post இந்தோனேஷியாவில் கடலில் மூழ்கிய படகில் இருந்து 73 பேரை கடற்படை மீட்டது.