பிரபாகரன் இப்போது எங்கே?, 2009-க்கு பின் வெளிநாட்டு புலிகளின் ‘திடுக்’ வேலைகள் இங்கே.. (பாகம்- 1, 2)

Read Time:16 Minute, 32 Second

ltte-201406பல்லாயிரக் கணக்கானோர் உயிர்களை கொடுத்தும், உயிர்களை எடுத்தும் வளர்ந்த விடுதலைப் புலிகள் இயக்கம் 2009-ம் ஆண்டு மே மாதம், முள்ளிவாய்க்கால் பகுதியில் கனவு போல மறைந்து போனது. பல ஆண்டுகளாக இயக்கத்தில் இருந்து போராடியவர்கள், உயிரிழந்தோ, சரணடைந்தோ, அல்லது தப்பியோடியோ விட்ட துரதிஷ்டமான நிலையில்…

முள்ளி வாய்க்காலில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில், ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், சில தென்கிழக்காசிய நாடுகளிலும் சிலருக்கு அதிஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டியது.

2009-ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதி, இரவோடு இரவாக மில்லியனர்கள் ஆனவர்களும் உள்ளார்கள்.

இப்படியொரு சந்தர்ப்பம் (விடுதலைப் புலிகளின் அழிவு) ஏற்படும் என 2009-ம் ஆண்டு தொடக்கத்திலேயே ஊகித்து, புலிகளின் சொத்துக்களையும் பணத்தையும் தமது கன்ட்ரேலுக்குள் கொண்டுவந்தவர்களும் உள்ளார்கள்.

அதற்காக ஏப்ரல் மாதத்தில் இருந்து தினமும் காலையில் எழும்போது, “முடிந்ததா யுத்தம்? அழிந்ததா புலி?” என ஆவலுடன் செய்தி பார்த்தவர்களும் உள்ளார்கள்.

மே மாத தொடக்கத்தில் பிரபாகரனும், வேறு சிலரும் தப்பித்துப் போக ஒரு திட்டம் போடப்பட்டு, அதற்கு சுமார் 1 மில்லியன் டாலர் தேவை என்ற நிலையில், புலிகளின் வெளிநாட்டுப் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து, 18-ம் தேதி அந்தப் பணத்துக்கு தாமே உரிமையாளர் ஆனவர்களும் உள்ளார்கள்.

அந்த நேரத்தில் அவர்களிடம், 1 மில்லியன் என்ன, அதைவிட பலமடங்கு தொகை இருந்தது! அது அவர்களது சொந்தப் பணமல்ல, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுப் பணம்.

எப்படியோ, அவர்களில் பலர் எதிர்பார்த்தது போல, வன்னியில் யுத்தம் 2009-ம் ஆண்டு மே 18-ம் தேதியுடன் முடிந்தது. அதன் பின் வெளிநாடுகளில் தொடங்கியது, சிறப்பு யுத்தம் – பணத்துக்காக வெளிநாட்டுப் புலிகள் புரிந்த குருஷேத்திர யுத்தம்!

இதில் ஜெயித்தவர்கள் இருக்கிறார்கள். இருந்த பணத்தை இழந்தவர்கள் இருக்கிறார்கள். தப்பியோடியவர்கள், பிரிந்து போனவர்கள், புதிய கோஷ்டி தொடங்கியவர்கள் என்று தொடங்கி, மார்க்கெட் போன தென்னிந்திய நடிகைக்கு பிறந்தநாள் பரிசாக BMW கார் வாங்கிக் கொடுத்தவர்கூட இருக்கிறார்.

மிகவும் சுவாரசியமான யுத்தம் அது. ஆளையாள் ஏமாற்றிய சாதுர்யம்…

அதுவரை ஒன்றாக இருந்தவரையே வெளிநாட்டு உளவுத்துறையிடம் போட்டுக் கொடுத்து விட்டு, தாம் தப்பித்துக் கொண்ட கெட்டித்தனம்..

பணத்தை பறிக்கும் முயற்சி தோல்வியடைந்ததால், டஜன் கணக்கில் கொடுக்கப்பட்ட துரோகிப் பட்டங்கள்…

இறந்து போனவர்களில் இமெயில்களை ‘உடைத்த’ திறமை…

நேற்று ஏமாற்றி அடித்த சொத்தை இன்று வந்தவர் அடித்துக்கொண்டு போன கில்லாடித்தனம்…

இன்று வெளிநாட்டில் உள்ள சிலருக்கு, விடுதலைப் புலிகளின் யுத்தம் தோல்வியில் முடியவில்லை… அமோக வெற்றி!

பணம் பிரிக்கும் பிரச்னையில் இவர்கள் பல பிரிவுகளாக இருந்தாலும், இன்றைய தேதிவரை இவர்கள் அனைவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை, ‘பிரபாகரன்’ என்ற பெயரை நம்புவதுதான்!

காரணம், அந்த ‘பெயர்’தான், இவர்களின் மில்லியன்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது!

“தலைவர் வரட்டும், ஒரு டாலர் குறையாமல் கணக்கு முடித்து விடுகிறேன்”

“அடுத்த யுத்தத்துக்கு தேவை என்பதால் பணத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி தலைவர் நேற்றுதான் தென்னாபிரிக்காவில் இருந்து போன் பண்ணினார்”

மேலே குறிப்பிட்ட வார்த்தைகள் எல்லாம், சர்வ சாதாரணமாக சிலரது வாய்களில் இருந்து வெளியாகும்!

கேட்பவருக்கும் இது கப்சா என்று தெரியும். சொல்பவரும் சிரிப்பை அடக்கிக் கொண்டுதான் சீரியசாக சொல்வார்.

ஆனால் என்ன செய்வது? இருவருமே, “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்ற மந்திர வார்த்தையை வைத்துத்தான் தொழிலை நடத்துகிறார்கள்.

கணக்கு கேட்டவர், தலைவருடன் நேரில் பேசியவரின் கால்கள் தரையில் படுகிறதா என்பதை பார்த்துவிட்டு, கிளம்ப வேண்டியதுதான்.

“இவர்கள் இப்படியெல்லாம் ‘லீலைகள்’ செய்வதை பிரபாகரன் பார்த்துக் கொண்டு இருப்பாரா?” என்ற கேள்விக்கான பதிலில் உள்ளது,  “பிரபாகரன் இப்போது எங்கே?” என்ற கேள்விக்கான பதில்!

2009-ம் ஆண்டுக்குப் பின் வெளிநாட்டுப் புலிகள் சிலர் என்னவெல்லாம் செய்தார்கள், செய்கிறார்கள் என்பதை, இந்த தொடரில் தினமும் நீங்கள் படிக்கலாம். ஒரு பாகத்தில் ஒரு சம்பவம் என்ற விதத்தில் தருகிறோம். படித்துப் பாருங்களேன்!

தொடரும்..

பிரபாகரன் இப்போது எங்கே? 2009-க்கு பின் வெளிநாட்டு புலிகளின் ‘திடுக்’ வேலைகள் இங்கே! (பாகம்-2)

பிரபாகரன் இப்போது எங்கே? 2009-க்கு பின் வெளிநாட்டு புலிகளின் ‘திடுக்’ வேலைகள் இங்கே! (பாகம்-2)

வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கூட்டத்துக்குள் பாயும் வீரர்கள்!…

2009-ம் ஆண்டு மே மாதம் நடுப்பகுதியில், இலங்கை முள்ளிவாயக்கால் பகுதியில் முடிவுக்கு வந்தது, விடுதலைப் புலிகள் இயக்கம். யுத்தத்தின் இறுதி நாட்களில் சம்பவித்த பிரபாகரனின் மரணத்துக்கு சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார் காஸ்ட்ரோ.

இவர்தான், விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு செயல்பாடுகளுக்கு பொறுப்பாளராக இருந்தவர். (இவருக்கே தெரியாமல், பொட்டு அம்மான் தலைமையிலான புலிகளின் உளவுப்பிரிவினர், வெளிநாடுகளில் மற்றொரு நெட்வேர்க்கை இயக்கி வந்தனர். அதை வேறு ஒரு கட்டுரையில் விளக்கலாம்)

விடுதலைப் புலிகள் இயக்கம் 1990-களிலும், 2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்திலும் வெற்றி மேல் வெற்றி பெற்று வந்தபோது, வெளிநாட்டு செயல்பாடுகளை கவனித்தவர், கே.பி. (குமரன் பத்மநாதன், என்கிற செல்வராசா பத்மநாதன்).

இவரது காலத்தில் எல்லாமே ஒழுங்காக நடந்து கொண்டிருக்க, 2002-ம் ஆண்டு இலங்கை அரசுடன் சமாதான பேச்சுவார்த்தைகள் தொடங்கின.

பேச்சுவார்த்தை குழு தாய்லாந்து (பாங்காக்) சென்றபோது, கே.பி. தாய்லாந்தில் இருந்தார். பேச்சுவார்த்தை குழுவில் ஒருவராக சென்ற புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன், பேச்சு வார்த்தை முடிந்து வன்னி திரும்பியதும், முதல் வேலையாக கே.பி. பற்றி பிரபாகரனிடம் வத்தி வைத்தார்.

அதற்கு வன்னியில் இருந்த வேறு சில தளபதிகளும் ஒத்து ஊதவே, கே.பி.யிடம் இருந்த பொறுப்புகள் அனைத்தையும் பறித்து பிரபாகரன் கொடுத்த நபர்தான், காஸ்ட்ரோ.

imagesCAM7NBMGஇவரது நிஜப் பெயர் வீரகத்தி மணிவண்ணன். யுத்தத்தில் ஷெல் விழுந்ததால், இடுப்புக்கு கீழ் செயலிழந்த நிலையில், சக்கர நாற்காலியில் இருந்தவர். திறமை என்பதை விட விசுவாசம் என்பதற்கு மதிப்புக் கொடுத்து, இவரிடம் வெளிநாட்டு செயல்பாட்டு பொறுப்பை கொடுத்தார் பிரபாகரன்.

அதற்குமுன் வெளிநாட்டு பொறுப்பாளராக இருந்த கே.பி., வெளிநாடுகளில் இருந்தே அனைத்தையும் மேற்பார்வை பார்த்துக்கொண்டு இருந்தார். அவ்வப்போது பிரிட்டன், பிரான்ஸ், கனடா என்று பயணம் செய்து, எல்லாமே சரியாக இயங்குகிறதா என பார்க்க கூடியவராக இருந்தார்.

ஆனால், காஸ்ட்ரோவோ, இலங்கை, வன்னிக்கு உள்ளேயே சக்கர நாற்காலியில் இருந்தபடி நிர்வாகத்தை கவனிக்க வேண்டிய நிலையில் இருந்தார். இதனால், வெளிநாடுகளில் ஆளாளுக்கு தமது இஷ்டப்படி ராஜாங்கம் நடத்த முடிந்தது. வெளிநாடுகளில் நடந்த பல கதைகள் காஸ்ட்ரோவின் காதுகள் வரை போவதில்லை. போனாலும், மிக தாமதமாகவே போகும். அதற்குமுன் அந்த விவகாரம் முடிந்து வேறு விவகாரம் தொடங்கிவிடும்.

இப்படியான நிலையில், ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து ‘பழம் தின்று கொட்டை போட்டவர்களை’ விட, தாமே வன்னியில் இருந்து ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து, அவரது கையில் நிர்வாகத்தை கொடுத்தால் என்ன என்று யோசித்தார் காஸ்ட்ரோ.

அதற்காக அவர் தேர்ந்தெடுத்த நபர்தான், பேரின்பநாயகம் சிவபரன்.

இவர்தான் தற்போது, விடுதலைப் புலிகளின் சொத்துக்களில் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நெடியவன்.

இந்த நெடியவன், காஸ்ட்ரோவுக்கு ஒரு விதத்தில் உறவினர்கூட. இவரை காஸ்ட்ரோ தேர்ந்தெடுத்தபோது, நெடியவன் வன்னியில் என்ன செய்து கொண்டிருந்தார்?

கிட்டத்தட்ட ஒரு டூரிஸ்ட் கைடு போல இருந்தார்.

சமாதான பேச்சுவார்த்தை நடநத காலம் ஆகையால், வெளிநாடுகளில் இருந்த இலங்கை தமிழர்கள் எந்த சிக்கலும் இன்றி இலங்கைக்கு செல்லக்கூடிய நிலை காணப்பட்டது. அப்படி வன்னிக்கு வரும் வெளிநாட்டு தமிழர்களை அழைத்துச் சென்று விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட சிறுவர் இல்லங்கள் போன்ற இடங்களை சுற்றிக் காட்டும் பொறுப்பில் இருந்தார் நெடியவன்.

இதுதான், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவரது பணி!

இவரை நார்வேக்கு அனுப்பி வைத்தார் காஸ்ட்ரோ. அதன்பின், விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு செயல்பாடு முழுவதும் நெடியவனின் கைகளுக்கு போனது. வெளிநாடுகளில் உள்ள புலிகள் அமைப்புகளில், நெடியவன் இன்றி ஓரணுவும் அசையாது என்ற நிலை ஏற்பட்டது.

இதன் பின்னர்தான், வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு அடி-மேல்-அடி விழத் தொடங்கியது. ஒவ்வொரு நாடாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத பட்டியலில் சேர்த்து தடை செய்ய தொடங்கின.

imagesCA3HFDPUவெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலி அபிமானிகள் பலர், இந்த‘காஸ்ட்ரோ-நெடியவன்’ ஆபரேஷன், இயக்கத்தையே அழித்துவிடும் என தகவல் மேல் தகவலாக வன்னிக்கு அனுப்பினர். ஆனால் பிரபாகரன், விசுவாசியான காஸ்ட்ரோவை மாற்ற விரும்பவில்லை.

‘நொந்து போன’ ஓரிருவர், இது பற்றி நேரில் சொல்லிவிட்டு வரலாம் என வெளிநாடுகளில் இருந்து வன்னிக்கும் சென்றனர்.

அவர்கள் நந்தவனத்தில் (காஸ்ட்ரோ துறையின் அலுவலகத்தின் பெயர்) வைத்து ‘திருச்சாத்து’ வாங்கிக் கொண்டு, உயிரைக் கெட்டியாக பிடித்தபடி தப்பித்தோம், பிழைத்தோம் என்று அடுத்த பிளேனைப் பிடித்து பறந்து விட்டனர்.

இப்படியான நிலையில்தான், இறுதி யுத்தம் தொடங்கியது. விடுதலைப் புலிகள் இயக்கம் பின்வாங்கி, பின்வாங்கி, முல்லைத்தீவுக்குள் வந்து விட்டது.

யுத்த நிலைமைதான் இப்படியென்றால், வெளிநாடுகளில் நிலைமை அதைவிட மோசம்.

வெளிநாடுகளில் தமிழ் மக்களின் எழுச்சி ஏற்பட்டிருந்தது. ஆனால், அதை சரியான முறையில் பயன்படுத்த காஸ்ட்ரோவால் நியமிக்கப்பட்ட ஆட்களுக்கு தெரியவில்லை. வெளிநாட்டு அரசுகளுடனோ, உளவுத்துறைகளுடனோ, இவர்களுக்கு சரியான தொடர்பு ஏதுமில்லை. செல்வாக்கும் இல்லை.

nediyavanநெடியவன்’

என்ன காரணம்?

யுத்தம் தொடங்குவதற்கு முன்னரே, வெளிநாட்டு பொறுப்பாளர்களுக்கு ஒரு உரை நிகழ்த்தி அதன் சி.டி.-யை அனுப்பி வைத்திருந்தார் காஸ்ட்ரோ. அதிலுள்ள ஒரு பிரபல வாக்கியம் என்ன தெரியுமா?

“படித்தவனை நம்பாதீர்கள். உங்களுடன் சேர்த்துக் கொள்ளாதீர்கள். படித்தவன் கவிழ்த்து விடுவான்”

இதனால், வெளிநாடுகளில் காஸ்ட்ரோவின் ஆட்கள், வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கூட்டத்துக்குள் பாயும் வீரர்களாக இருந்தார்களே தவிர, டிப்ளமேட்டிக் சர்க்கிள்களில் வலம்வரும் ஆட்களாக இல்லை.

கனடாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யப் போகிறார்கள் என இரண்டு நாட்களுக்கு முன்னரே தெரிந்திருந்தது. ஆனால், அதை தடுத்து லாபி செய்யும் அளவுக்கு இவர்களுக்கு செல்வாக்கு கிடையாது. மற்ற நாடுகளிலும் அதுதான், நிலைமை.

இதற்கு சில உதாரணங்கள் சொல்லலாம். அதை அடுத்த பாகத்தில் தொடரலாம்… (தொடரும்)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாவீரன் நெப்போலியன் பயன்படுத்திய வெடிப் பொருட்கள்: எகிப்து கடலில் கிடைத்தன
Next post இத்தாலியில் புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகில் 30 சடலங்கள் மீட்பு