ஜனநாயகப் போராளியாகத் தடம் பதித்தவர் அமரர் நடராஜா ரவிராஜ்! 8ஆம் ஆண்டு நினைவு தினம்!!

Read Time:20 Minute, 55 Second

unnamed (52)ஜனநாயகப் போராளியாகத் தடம் பதித்தவர் அமரர் நடராஜா ரவிராஜ்! 8ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள் 10.11.2014

ஜனநாயகப் போராளியாகத் தடம் பதித்தவர் அமரர் நடராஜா ரவிராஜ்!பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் எனது தென்மராட்சி மண்ணை உலகுக்கே தெரிய படுத்திய ஒருவர் என்றால்மிகையாகாது.-கலாநிதி .ந. குமரகுருபரன்

எமது இளந் தலைமுறையின் விடிவு தேடி களமிறங்கி வீறு நடைபோட்ட ஓர் இளம் அரசியல் தலைவனான எனது நண்பன் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நடராஜா ரவிராஜ் காவியமாகி இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. இப்போது எமது ரவிராஜ் உயிரோடிருந்தால் வடக்கு அரசியல் தலைமைக்கு வீரியம் சேர்த்திருப்பார். நல்லதொரு அரசியல் தலைமையை வழங்கியிருப்பார்.

ஏனெனில் இறுக்கமான அரசியல் சூழ்நிலையிலும் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் பாதையில் இயல்பை யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு தனக்கேயுரித்தான ஆளுமையுடன் ஒரு ஜனநாயகப் போராளியாகத் தடம் பதித்து, போராடும் வல்லமையை அவர் கொண்டிருந்தார் என ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கலாநிதி நல்லையா குமரகுருபரன் அமரர் ரவிராஜை நினைவு கூர்ந்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் எனது தென்மராட்சி மண்ணை உலகுக்கே தெரிய படுத்திய ஒருவர் என்றால்மிகையாகாது.

நடராஜா, மங்களேஸ்வரி எனும் நல்லா சிரியர்களுக்கு, ஆசிரிய தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் ரவிராஜ். சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியிலும், பின் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியிலும் கல்வி கற்று, அதன்பின் சட்டக் கல்லூரியில் பயின்று 1989ஆம் ஆண்டு சட்டத்தரணியாகக் கொழும்பில் தனது பணியைத் தொடங்கினார்.

தன் இளமைக்கால காதலியையே திருமணம் செய்தார். அவரும் ஒரு பல்கலைகழக பட்டதாரி பிஷப்ஸ் கல்லூரியில் ஆசிரியை என்பதில் அவருக்கு நிறைந்த மகிழ்விருந்தது என்பதை அவரது நண்பனாக நான் அவரிடமிருந்து புரிந்துகொண்டேன். எப்போதேனும் பேசும் பொது கூறுவார்.

ஆசைக்கும் ஆஸ்திக்கும் மகளும் மகனும். மகனும் ரோயல் கல்லூரியின் நன் மாணவன் அவர் மறைந்தபோது மகளும் பிஷப்ஸ் காலேஜ் மாணவி. இன்று அவருடைய மகளும் ஒரு பிரித்தானிய பல்கலைக்கழக சட்டமாணி பட்டதாரி.தற்போது இலங்கையிலும் சட்டக் கல்லூரி இறுதிக்கட்ட பரீட்சிகளுக்கு தோற்றுகின்றார் வெகுவிரைவில் சட்டத்தரணி ஆகி சத்தியபிரமாணம் எடுத்திடுவார்.

அரசியல்வாதி ,சட்டத்தரணி என்பதற்கப்பால் நாம் இருவரும் நீண்டகாலமாக நல்ல நண்பர்கள்.கொழும்பில் கணக்காளர் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கு அவர்
வணிகசட்டம் விரிவுரை வகுப்புக்கள் செய்தபோது .நான் கணக்கியல்,பொருளாதாரம் ,விரிவுரை செய்தேன் .இருவரும் அவரது ஸ்கூட்டேரிலேயே செல்வதும் உண்டு .அவரேற்றுக்கொள்ளும் கொம்பனி கூட்டிணைப்பு வேலைகளை அவரது சட்ட வேலைப் பழு கருதி என்னிடம்எனது கணக்காளர் நிறுவனத்திடம் தந்துவிடுவார் .நாம் மனவிட்டு பலதும் பத்தும் அன்னியோன்ன்யமாக பேசம் நண்பர்கள் .அந்தவகைளும் அவரது இழப்பு எனக்கு பாரிய இழப்பாக அமைந்தது.

அவரது தந்தையார் நடராஜா மாஸ்டர் மாவிட்டபுரத்தை சேர்ந்தவர் ஆனால் எமது தென்மராட்சியில் சாவகச்சேரி யில் திருமணம் செய்தவர் என்பது பலருக்கு தெரியாது நடராஜா மாஸ்டரும் சாவகச்சேரியார் ஆகிவிட்டார் . முன்னாள் சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள்நீதியமைச்சர் வீ. குமாரசாமி எப்போதும் சொல்லுவார் குளைக்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது என்று. பனக்காட்டு நரியும் சலசலப்புக்கு அஞ்சாது என்று சொல்வார்கள். அதுதான் எனக்கும் ரவிக்கும் உள்ள சிறப்பியல்பு.

சட்டத்தரணி ரவிராஜ் சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டவாதியாக சில ஆண்டுகள் பணியாற்றினார். இக்காலம் சிங்கள மொழியறிவை இயன்றளவு பெற்றுக்கொண்டார். இதுவும் பின்னாளில் அரசியலுக்கு உதவியாய் அமைந்தது .

நண்பர் ரவிராஜ் சட்டத்தரணியாக இருந்து அரசியலில்
பிரவேசித்தார் . 1984 முதல் 1990 வரையிலும் 1993 முதல் 1997 வரையிலும் அவருடை தந்தையாரின் சகோதரர் சட்டத்தரணி மாவிட்டபுரம் .கணேசலிங்கத்தின் மனித உரிமைகள் இல்லத்தினூடாக கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதை க்குள்ளான அப்பாவித் தமிழ் இளைஞர்களை மீட்பதற்கு தனது சட்டதுறையை பயன்படுத்தினார்.

த .வி கூட்டணித்தலைவர் வழக்குரைஞர் திருவாளர் மு சிவசிதம்பரம் இப்பணியில் இவர் ஈடுபட ஆலோசனை வழங்கினார். 1987 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இணைந்தார். 1990 ஆம் ஆண்டு அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார்.

அக்காலத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான அப்பாவித் தமிழ் இளைஞர்களை மீட்பதற்கு தனது சட்டப்புலமையைப் பயன்படுத்தினார். குமார் பொன்னம்பலம் அவர்கள் வழியிலேயே அப்பாவித் தமிழர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளின் கைது விடயத்தில் ஓரளவேனும் வழக்குகளை எடுத்து விடுதலை பெற்றுக்கொடுக்க ஆர்வமுடன் செயற்பட்டார்.

இதனை விட அவர்களுக்கு ஆதரவளித்து வழிகாட்டுவதிலும் கொழும்பில் முன்னின்று பாடுபட்டு வந்தார். இப்பணியில் அவர் பெற்ற கசப்பான அனுபவங்கள் யாவும் இயல்பாகவே இனப்பற்று மிகுந்திருந்த அவரது உள்ளத்தை மேலும் உரமாக்கின. இதுவே அமரர் குமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் ஏன் எனக்கும் கூட ஏற்பட்டது.

பலரை தமிழரின் உரிமைகளை வென்றெடுக்கும் அரசியல் போராட்டக் களத்துக்கு உந்தித்தள்ளவும் இவை காரணிகளாக அமைந்தன. அமரர் குமார் பொன்னம்பலம் அவர்கள் மீதான கொலை தான் எனக்கு கூட அரசியற் செயற்பாட்டிற்கிருந்த வீரியத்தை ஏற்படுத்தியது. உந்தித்தளியது; இன்றைய பலர் அன்று தமிழர் தம் அரசியலில் இல்லை.

நண்பர் ரவிராஜ் குமார் அண்ணன் மீது பேரபிமானம் கொண்டவர். அன்பு கொண்டவர். 1994 இல் அண்ணல் குமார் பொன்னம்பலம் தலைமையில் நாம் கொழும்பில் போட்டியிட்ட போது எம்மோடு இணைந்து போட்டியிட்ட மூன்று தமிழர் விடுதலை கூட்டணி பிரமுகர்களில் ரவிராஜும் திருமதி யோகேஸ்வரனும் குறிப்பிடத்தக்கவர்கள்.

இதுவே நண்பர் ரவிராஜிற்கு முதலாவது பாராளுமன்ற தேர்தல். நானும் சட்டத்தரணிகள் அண்ணன் மோத்திலால் நேருவும் அண்ணன் விநாயக மூர்த்தியும் 1989 பாரளுமன்றத் தேர்தலிலேயே அண்ணல் குமாரின் வெற்றிக்காக இணைந்து போட்டியிட்டிருக்கின்றோம்.

நண்பர் ரவிராஜ் 1997 ஆம் ஆண்டு யாழ். மாநகரசபை பிரதி முதல்வராகவும், 1998 இல் யாழ். மாநகரசபை முதல்வரானார். யாழ்ப்பாண மாநகர முதல்வராகப் பதவியேற்றது முதல் தமிழர் அரசியலில் அவர் பிரகாசிக்கத் தொடங்கினார்.

அடுத்தடுத்து திருமதியோகேஸ்வரன், சட்டத்தரணி சிவபாலன் எனும் இரு யாழ்ப்பாண மாநகரமுதல்வர்களை தமிழர் விடுதலைக் கூட்டணி இழந்திற்று. புதிய முதல்வராய் ரவிராஜ் போர்ச் சூழலில் நலிவுற்றிருந்த மாநகர சபையின் பணிகளை மீளக் கட்டியெழுப்புவதில் மும்முரமாக ஈடுபட்டார்..
அவருக்கு யாழ் மாநகர முதல்வருக்கான உத்தியோக பூர்வ வாகனம் வழங்கப்படவில்லை என்று அவர் கொழும்பில் யூனியன் ப்ளேஸ் அமைச்சுக்கு முன்னால் சத்தியாக்கிரகம் இருந்த பொது அண்ணன் குமாரும் நானும் சென்று அமர்ந்திருந்தோம்.

அது எமத தனிப்பட்ட நட்பின்பாலானதும் கூட மறைவிற்கு சிலகால் முன்பும் மலையக மக்களின் சம்பள உயர்வுக்கோரிக்கயுடனான சத்தியாக்கிரகம் ஹட்டனில் இடம்பெற்ற பொது நானும் ரவியும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் விநாயக மூர்த்தி அண்ணனும் கலந்துகொண்டோம்.

2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு இருமுறையும்வெற்றி பெற்றார். போராட்டத்தையும், அதற்கான நியாயங்களையும் மக்கள் அனுபவித்துவந்த சொல்லொணாத் துன்பங்களையும் சிங்கள மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் உரிய முறையில் கொண்டு சென்றார்.

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் அவற்றினை மிக லாவகமாகக் கையாண்டு தனது கருத்துக்களைக் கேட்போர் மனதில் உறைக்கவும், உணரவும் வைத்தார். தமிழர் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் உள்நாட்டு, வெளி நாட்டு ஊடகங்களைச் செம்மையான முறையில் பயன்படுத்தினார். குறிப்பாகச் சிங்கள ஊடகங்களை மிகச் செம்மையான முறையில் பயன்படுத்தி தமிழர் போராட்டத்தின் நியாயங்களையும், தமிழர் தாயகத்தின் உண்மை நிலைமைகளையும் உடனுக்குடன் சிங்கள மக்களிடம் எடுத்துக் கூறினார்.

ஆதலினால் சிங்கள ஊடகங்கள் இவரைத் தமது நிகழ்ச்சிகளில் இணைத்துக்கொண்டன. உண்மையை சிங்கள உலகம் அகிலமும் அறிந்து கொள்வது இராணுவத்துக்கும் அரசிற்கும் தலையிடியாய் அமைந்தது. இவரது இந்தப் பணிதான் அவரது உயிரைப் பறிப்பதற்குரிய முதன்மைக் காரணியாக இருந்தது எனக் கருதப்பட்டது. உயர் பாது காப்பு பிரதேச அவலங்கள் அக்காலத்தில் அவர் இடித்து உரைத்த ஒருமுக்கிய விடயம்.

தமிழர்கள் வெள்ளைவான் நபர்களினால் கடத்தப்பட்டு, காணாமல் போய்கொண்டிருந்த கால கட்டத்தில் 2006 செப்டெம்பர் மாதம்முதல் தலை நகர் செயற்ற்பாடுகளிலும் ஆர்ப்பாட்டங்களிலும் தம்பி ரவிராஜும் எம்மோடு இணைந்து கொண்டார் வழமைபோல் முன்னணியில் இணைந்து தலமை கொடுத்து செயற்பட்டார். .

இவரது இந்தப் பணியும் அவரது உயிரைப் பறிப்பதற்குரிய காரணியாக இருந்தது என கருதப்பட்டது. ஆனாலும் அவரது ஒலிபரப்பு ஒலிபரப்பு விவாதங்களிலான ஆணித்தரமான கருத்துக்கள் சிந்தனைத்தெளிவுள்ள சிங்கள மக்கள் புரிந்த்துகொண்டார்கள்.அடிப்படை இனவாதிகளால் புரிந்து கொள்ளப்பட முடியவுமில்லை . ஆனால் அவர் தமிழ் மக்களின் வாழ்வின் துன்பத்தை அரசியல் ஆக்கிரமிப்புக்களை யதார்த்தநிலமைகளை உலகிற்ற்க்கு உன்னத மொழிகளில் எடுத்துச் சொன்னதை ஜீரணிக்க முடியாத சக்திகள் தன் அவரை இல்லாமற்ற் செய்ய முன்னின்றிருக்க முடியும்.

தெற்கிலுள்ள சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்கள் அவரை விடுதலைப் புலியாகவே கருதினர். ரவிராஜ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நேரமான காலை 8.30 மணிக்கு முன்னதாக காலை 7 மணி தொடக்கம் 8 மணிவரை அவர் நேர்காணல் அளித்தார்.

அந்த இறுதி நேர்காணலில் தமிழ்த் தேசிய இனத்தின் பல்வேறு பிரச்சனை பற்றியும் தனது ஆணித்தரமான கருத்துக்களை எடுத்துரைத்தார். தமிழர் உரிமைக்காகப் போராடுபவர்கள் சிங்கள மக்களின் விரோதிகள் என்ற சிங்கள கோட்பாட்டாளரின் கூற்றைப் பொய்யென்று சிங்கள ஊடகங்களினூடாக எடுத்துக்கூறி, இனங்களுக்கிடையிலான நல்லுறவை ரவி ராஜ் வளர்த்து வந்தார்.

மனித உரிமைகள் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்த ரவிராஜ் மனித உரிமை அமைப்புகளில் இணைந்து இலங்கையிலுள்ள சகல மக்களதும் உரிமைக்காகக் குரல் கொடுத்து வந்தார். 2003இல் ஜனவரி முதல்வாரம் நான் அமரர் குமார் பொன்னம்பலம் நினைவு தின உரையாற்றுவதற்காக கனேடா நாட்டிற்கு சென்றிருந்த போது கனேடாவில் ரவிராஜ் அவர்களின் நிலைப்பாடு நாங்கள் சூரன்கள் அல்ல எமது தலையை மற்றவர்கள் ஆட்டுவதற்கு என்றிருந்தது.

எனது விஜயத்திற்கு சில மாதங்கள் முன் ரவிராஜ் கனடா சென்று இருந்தபோது கூறிய சர்ச்சையை எழுப்பி நான் பேட்டி அளிக்க சென்ற வானொலி நிலையங்களில் கேட்டார்கள். “புலிகளால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைகள் அல்ல நாம் – ரவிராஜ்” என்ற தலைப்பில்31.07.2003இல் ஒரு செய்தி. “ஜனநாயகத்தில் அது அவருடைய கருத்துச் சுதந்திரம்”என்று கூறியிருந்தேன். .

ஆனாலும் அவர் யதார்த்தத்தை தமிழ் மக்களின் அவலங்களை ஆக்கிரமிப்புக்களை புரிந்து, உணர்ந்து. உண்மை நிலையை உள்வாங்கிக் கொண்டார், என்பது தான் உண்மை .அவர் ஒரு யதார்த்தவாதி .ஆனால் விடுதலைப் புலிகள் தமிழருக்காக இன்னுயிரீந்த இவருக்கு மாமனிதர் விருதை வழங்கினார்கள் என்பது யதார்த்தம் .

இலங்கை இனப்பிரச்சினைக்கு போர் மூலம் ஒரு போதும் தீர்வு காணமுடியாது என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த அவர் ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறையின் கீழ் அதிகாரங்களைப் பகிர்வதன் மூலமே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியுமென அமரர் நடராஜா ரவிராஜ் நம்பினார்.

தமிழர் பிரச்சினைக்கு யுத்தம் மூலம் தீர்வு காணமுடியாது என ராவிராஜ் தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துக் கூறி வந்ததால் தான் அவர் கொல்லப்பட்டார் எனக் கருதிய தென்னிலங்கை சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் அவரது புகழுடலை விகாரமாதேவி பூங்காவுக்குச் சுமந்து சென்று யுத்தம் பிரச்சினைக்குத் தீர்வாகாது எனக் கோஷமெழுப்பினர். கொழும்பில் நடந்த அவரின் இறுதி அஞ்சலி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்களும் தலைவர்களும் கலந்து கொண்டனர். இது ரவிராஜ் இன உணர்வுள்ள ஒரு தமிழனாகவும், நாட்டுப்பற்றுள்ள ஒரு இலங்கையராகவும் திகழ்ந்தமையை எடுத்துக் காட்டியது.

“என் அப்பாவை இழந்து துன்பத்தில் வீழ்ந்து விட்டோம் எல்லோரும் இப்போது வருகிறார்கள். அப்பாவின் உடல் புதைக்கப்பட்டு விடும். அத்தோடு எல்லோரும் மறந்து விடுவார்கள்´” இந்த அர்த்தமுள்ள வார்த்தைகள் ரவிராஜின் இறுதி நிகழ்வின்போது அவரது மகள் பிரவீனாவால் கூறப்பட்டவை. அவர் கூறியது போல ரவிராஜை மட்டுமல்ல தமிழ்மக்களின் விடிவுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்த அனைத்து உடன் பிறப்புக்களையும் கூட நாம் மறந்து விட்டோம். இவ்வாறே இன்றைய நிலைமைகள் தமிழர்களின் விடியலை நேசிக்கும் ஒவ்வொருவரையும் எண்ணவும், ஏங்கவும் வைக்கின்றன.

இன்று போல் ஆசுவாசமான அமைதியான நிம்மதியான அரசியற் காலகட்டத்தில் ரவிராஜும் நானும் அரசியலுக்கு வந்தவர்களல்ல. நான் தமிழினத்தின் துன்பங்கள் துயரங்களுடாக 1990க்ளுக்கு பின் குமார் பொன்னம்பலம் அவர்களின் தமிழ் தேசிய அரசியலோடு ஒன்றி வந்தவன். அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தலை நகரில் எத்தனை ஆர்ப்பாட்டங்களை போரட்டங்களை நடத்தியவர்கள். இன்று நிலமை அப்படியல்ல அத்தனை அச்சுறுத்தல்களும் இல்லை. ஆதலினாற்தானே நாம் எமது ரவிராஜையும் எனது அண்ணல் குமார் பொன்னம்பலத்தையும் இழந்தோம்;

“சத்திய இலட்சியத்துக்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை மரணம் என்றும் அழித்து விடுவதில்லை”. சரித்திரநாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள் என்று கூறப்பட்ட வார்த்தைகள். தமிழர் வாழ்விலும் வரலாற்றிலும் ரவிராஜ் என்றும் நிலைத்திருப்பார் என்பதையே உணர்த்தி நிற்கின்றன என நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முத்த போராட்டத்திற்கு ஆதரவாக கட்டிப்பிடி போராட்டம்!!
Next post மண்ணாடிப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சு இருந்தும் டிரைவர் இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் பரிதவிப்பு!!