பொய்ப்பீரங்கிகளுக்குப் பிறகுதான், நீங்கள் எல்லாம் அணிதிரளப் போகிறீங்களோ மக்காள்? -வடபுலத்தான் (கட்டுரை)!!

Read Time:6 Minute, 45 Second

timthumbநவம்பர் மாதம் பிறந்து விட்டுது எண்டால் “பொய்ப்புலி”களுக்குக் கொண்டாட்டம் தான்.

“மரம் நடுகிறது, விளக்குக் கொழுத்திறது, வீதிகளையும் வளவுகளையும் துப்புரவு செய்யிறது” எண்டு சொல்லி மாவீரர் நாளைக் கொண்டாடுகிற மாதிரி ஒரு ஷோ காட்டுவினம்.

இதைப் பார்த்திரட்டு ராணுவமும் கொஞ்சம் உஷாராகி ‘எங்க செய்யில் செய்து பாருங்கோ பாப்பம்.. ஆராவது விளக்குக் கொழுத்திற கெட்டித்தனத்தை காட்டுங்கோ, அப்ப தெரியும் என்ன நடக்கும்’ எண்டு சொல்லிற மாதிரி ஒரு போர்க்கோலம் பூணும்.

‘இதுக்குத்தானே காத்திருந்தோம் கந்தசாமி’ எண்ட மாதிரி தமிழ்த்தேசியவாதிகளும், இணையப் போராளிகளும், புத்திஜீவிப் பிரமுகர்களும் “குய்யோ முறையோ” எண்டு கத்தத் தொடங்கி விடுவினம்.

பிறகென்ன பேப்பர்காரப் பெடியளுக்கும் கொண்டாட்டம் தான்.

இந்த அமர்க்களம் ஒரு பத்துப் பதினைஞ்சு நாளைக்கு நடக்கும்.

பிறகு ஒண்டும் நடக்காது. எல்லாம் வழமையாகி விடும்.

இந்த மாதிரியான ஒரு வாய்ப்பாடு இப்ப நாலஞ்சு வரிசமாக நடந்து கொண்டிருக்கு.

நல்லூர்த் திருவிழாவைப் போல, வற்றாப்பளை அம்மன் பொங்கலைப் போல, மடுமாதா திருநாளைப் போல.. இதுவும் ஒரு வருடாந்தத் திருவிழாப் போலத்தான்.

இப்பிடியே நவம்பர் திருவிழா, ஜெனிவாத் திவிருவிழா, தேர்தல் திருவிழா எண்டு சனங்களுக்குத் தண்ணி காட்டுகிற – அம்மாக்குழல் ஊதிக் காட்டுகிற – விளையாட்டுகளைக் காட்டத் தொடங்கீடுவினம்.

எங்கட சனங்களும் “எப்பவும் நாங்கள் இழிச்சவாய்களாகத் தான் இருப்பம்” எண்ட மாதிரி எல்லாத்துக்கும் தலையாட்டுவினம்.

தப்பித்தவறியும் ‘இதெல்லாம் சரியா? இப்பிடித் திருவிழாக் கொண்டாடுகிறவை எல்லாம், முந்திப் புலிகள் போராடேக்க, போர் செய்யேக்கை என்ன செய்து கொண்டிருந்தவை? அந்த நாளையில இவை புலிகளோட சேர்ந்து முன்னரங்கில நிண்டிருந்தால் இப்ப கையில தமிழீழம் கிடைச்சிருக்குமே!

இபிபடி இப்ப கிடந்து ஆமியொடயும் பொலிசோடயும் மல்லுக்கட்டத் தேவையில்லை. மாவீரர் நாளுக்கு ஒளிச்சுப் பயந்து பதுங்கி விளக்கைக் கொளுத்திற அவலமும் வந்திருக்காது.

உருப்படியில்லாத மாகாணசபையில ஒதுக்கின காசையே செலவழிக்க வக்கில்லாத – அதிகாரமில்லாத – நாலு அமைச்சுப் பதவிகளுக்கும் அடிபட்டிருக்கத் தேவையில்லை.

ஆனால் அப்ப முன்னுக்கு நிண்டு போராடுறதுக்கு தெம்போ திராணியோ இல்லை.

அண்டைக்கு போராட்டம் உச்சத்தில நிக்கேக்க, இவையெல்லாம் பியர்க் கடைக்குள்ளையும், பல்கலைக்கழக விரிவுரை மண்டபங்களுக்கையும், சந்தியிலையும் நிண்டு தங்கட காரியத்தைப் பார்த்த ஆட்கள்.

சிலபேர் கடல் கடந்து இந்தியாவுக்குப் போயிருந்து போட்டு இப்ப வந்து குடை பிடிக்கினம்.

வேற சிலபேர் கண்டம் கடந்து துரப்போயிருந்து போட்டு; இப்ப வந்து நாட்டுப்பற்று, இனப்பற்றில புரக்கேறி அந்தரப்படுகினம்.

எல்லாம் புலி இல்லாத காலத்தால வந்த வினை.

புலிகள் இப்ப இருந்திருந்தால் இந்த மாதிரிப் பம்மாத்துக் கோஷ்டிக்கு நெற்றியில பொட்டு வைச்சிருப்பாங்கள்.

இல்லாட்டிக்கு உயிரோட கொள்ளி தான்.

ஆனால், புலி இல்லாவிட்டாலும் புலியை வைச்சுப் பிழைக்கிற இந்தக் கில்லாடிகள் அப்பவே புலிகளுக்குத் தண்ணி காட்டி ‘உங்களின்ரை ஆதரவாளர்கள் நாங்கள். உங்களுக்காகவே நாங்கள்’ எண்டு நடிச்சவையல்லோ.

இந்த நடிப்பில மயங்கித் தானே புலிகள் அழிஞ்சவை எண்டு சொல்லிறார் சுந்தரமூர்த்தி அண்ணை.

அப்படிப் புலிகளையே மருட்டி மயக்கின இந்தக் கோஷ்டிக்கு, சாதாரண அப்பாவிச் சனங்களை மருட்டி மயக்கிறதில என்ன பிரச்சின எண்டு கேட்கிறார்.

சுந்தரமூர்த்தி அண்ணையின்ரை கேள்வி நியாயம் தான்.

இப்பிடித்தான் இவையின்ரை ஏமாத்து விளையாட்டுகள்.

தாங்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருந்து கொண்டு தான் இவை அரசியலைப் பேசுகினம.

இவையின்ரை உரிமைக் கோரிக்கை எல்லாம் பேப்பரில எழுதிறதும், மேடையில பேசிறதும், நாலு பேர் சந்திச்சால் கூடியிருந்து மகிந்தற்றை மண்டையை உடைப்பம்.. ஜெனீவாவுக்கு சிவத்தைக் கம்பளத்தை விரிப்பம்.. எண்ட கணக்கில புலம்பிறதும் தான்.

அதுக்கு அங்கால ஒரு பயல் துணிஞ்சு நிண்டு போராடவோ, ஒரு காரியத்தைச் செய்யவோ மாட்டாங்கள்.

ஆனால, தமிழர்கள் வீரர்கள். அசகாய சூரர்கள். வீழ்நது கிடப்பமோ.
வெற்றி வரும்வரை ஓயமாட்டோம் எண்டெல்லாம் முழங்குவாங்கள்.

இந்தப் பொய்ப்பீரங்கிகளுக்குப் பிறகுதான்.. நீங்கள் எல்லாம், அணிதிரளப் போகிறீங்களோ மக்காள்?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தர்மபுரி அருகே கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை!!
Next post “சுடிதாரை” தேர்வு செய்வது, எப்படி தெரியுமா?..!!