இந்து மத சம்பிரதாயங்களை மாற்றிய, விடுதலைப் புலிகள் -கலையரசன் (கட்டுரை)!!

Read Time:12 Minute, 9 Second

timthumb (1)சிறு தெய்வங்களின் கோயில் போன்ற வடிவில் கட்டப் பட்டுள்ள மாலதி நினைவாலயம்

இந்தப் பதிவில், நான் எங்குமே புலிகளைப் பற்றிய அதீத நம்பிக்கையை விதைக்கவில்லை. ஒரு பழமைவாத சமுதாயத்தில், புலிகளின் சில நடவடிக்கைகள் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றி மட்டுமே, இதில் எழுதி இருக்கிறேன். விடுதலைப் புலிகள், தம்மை நாஸ்திகர்கள் என்று என்றுமே சொல்லிக் கொண்டதில்லை. தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த கோயில்களை மூடவில்லை.

புலிகள் கோயில் திருவிழாக்களை தடை செய்யவில்லை. ஆனால், கோயில்களுக்கு கிடைத்த வருமானத்தில் பெரும்பகுதியை, தமக்கு வரியாக கட்ட வேண்டுமென்று நிர்ப்பந்தித்தார்கள். கல்விச் சாலைகளை தேசியமயமாக்க துணிந்த சிங்கள அரசு கூட, கோயில்கள், தேவாலயங்களில் கை வைக்கவில்லை. ஏனென்றால், சிங்களப் பேரினவாத அரசு, ஒரு மதவாத அரசும் கூட.

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த, வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த தமிழ் சமூகத்தில், ஆஸ்திகர்கள் மேலாண்மை பெற்றிருந்தனர். இப்போது கூட, ஒரு சைவ மத ஆன்மீகவாதியான விக்னேஸ்வரன் தான், வடக்கு மாகாண சபையில் முதலமைச்சராக தெரிவாகி உள்ளார். அந்தளவுக்கு ஆஸ்திக கடும்போக்காளர்கள் ஆதிக்கம் செலுத்திய ஒரு சமூகத்தில், புலிகள் செய்த சில காரியங்கள் நாஸ்திகமாக தெரிந்திருக்கும்.

புலிகள் இயக்கப் போராளிகளாக இருந்த, சைவ மதத்தில் பிறந்த போராளிகள் மரணமடைந்தால், இந்து மத முறைப் படி அவர்களது உடல்களை எரிப்பதற்கு மாறாக மண்ணுக்குள் புதைத்தனர். இறந்த உடலை எரிப்பது இந்து மத நம்பிக்கை என்பதும், புதைப்பது கிறிஸ்தவ, இஸ்லாமிய மத நம்பிக்கை என்பதையும் நான் இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

ஆனால், வீரச் சாவடைந்த சைவ மதப் போராளிகளை புதைப்பதற்கு எதிராக, குறைந்தது ஒரு சைவ மத நம்பிக்கையாளர் கூட எதிர்ப்புக் காட்டவில்லை. அதே போன்று, கிறிஸ்தவ மத நம்பிக்கைக்கு விரோதமாக கருதப்படும் புலிகளின் தற்கொலை கலாச்சாரத்தை, ஒரு கிறிஸ்தவர் கூட எதிர்த்துப் பேசவில்லை.

அரசியல் இயக்கங்கள், மக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்தினால், மக்கள் கொந்தளிப்பார்கள் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. உலகம் முழுவதும், கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் நாஸ்திகம் திணிக்கப் படும் என்று, அப்பாவி மக்களை பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள்.

ஆனால், ஈழப் போராட்டம் நடந்த காலம் முழுவதும், புலிகள் திணித்த நாஸ்திக கொள்கைகளை, குறைந்தது ஒரு மத நம்பிக்கையாளர் கூட எதிர்த்துப் பேசவில்லை. இன்றைக்கும் பல தீவிரமான இந்து-கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்கள், ‘நாஸ்திகப்’ புலிகளின் ஆதரவாளர்களாக உள்ளனர். இது எதைக் காட்டுகின்றது?

ஆஸ்திகர்கள், மத நம்பிக்கையாளர்கள் ஆகியோர் வெறும் காகிதப் புலிகள். ஈழப் போராட்டத்தில், என்றுமே அவர்கள் ஒரு பலமான அரசியல் சக்தியாக இருக்கவில்லை. புலிகள் ஏற்கனவே ஆஸ்திக மேலாதிக்கவாதிகளின் வாலை நறுக்கி விட்டிருந்தனர். இதனால், நாஸ்திகர்களுக்கும் வேலை மிச்சம். தமிழர்கள் மத்தியில், புலிகள் ஒரு சமூகப் புரட்சியை நடத்தவில்லை. புலிகள் சோஷலிசப் புரட்சியாளர்களும் அல்ல. ஆனால், தமிழ் சமூகத்தில் இருந்த பிற்போக்கு அம்சங்களான, சாதியவாதம், மதவாதம்,ஆன்மீகவாதம் போன்றன மேலாண்மை பெற விடாமல் அடக்கி வைத்திருந்தார்கள். இல்லாவிட்டால், ஈழப் போராட்டம் என்றைக்கோ தோற்கடிக்கப் பட்டிருக்கும்.

இலங்கை, இந்தியாவில், இந்து மதம் வருவதற்கு முன்பு, இயற்கை வழிபாடு இருந்தது. மக்கள் தமக்காக போராடி மரணித்த போராளிகளை கடவுளாக வழிபட்டார்கள். அண்ணன் மார், மதுரை வீரன், காத்தவராயன் போன்ற தெய்வங்கள் எல்லாம் மக்களுக்காக மரணித்த போராளிகள் தான்.

பிற்காலத்தில் எமது மண்ணை ஆக்கிரமித்த இந்து பேரினவாதிகள், அந்த வழிபாடுகளை தடை செய்து விட்டார்கள். அவற்றை பின்பற்றிய மக்களை கொன்று குவித்தார்கள் (இனப் படுகொலை). எஞ்சியவர்களை பலவந்தமாக வாள்முனையில் இந்துக்களாக மதம் மாற்றி விட்டார்கள்.

இன்றைக்கும், இந்து மதத்திற்கு முன்பிருந்த மத நம்பிக்கையை, இந்துக்கள் ‘சிறு தெய்வ வழிபாடு’என்று ஒடுக்குகிறார்கள். ஈழத்தில் இருந்த ‘சிறு தெய்வங்கள்’ , ஆகம விதிப் படி பெருந் தெய்வங்களுக்கான கோயில்களாக மாற்றப் பட்டன. அந்த நடவடிக்கை, இன்றைய சிங்களப் பேரினவாத அரசின், பௌத்த மயமாக்கலுக்கு ஒப்பானது.

யாழ்ப்பாணத்தில், ஒரு சைவ மத அடிப்படைவாதியான ஆறுமுக நாவலர், சிறு தெய்வ வழிபாட்டை கடுமையாக எதிர்த்து வந்தார். சில வருடங்களுக்கு முன்னர், ஒரு பௌத்த மத அடிப்படைவாதியான மேர்வின் சில்வா, காளி கோயிலில் பலி கொடுப்பதை தடுத்த நேரம், எத்தனை ஈழத்து சைவர்கள் அதனை வரவேற்றார்கள் தெரியுமா? இந்த விஷயத்தில், பௌத்த – சைவ மத அடிப்படைவாதிகளுக்கு இடையில் எந்த வித்தியாசமும் இல்லை.

இந்து பேரினவாதிகளின் கொடுங்கோன்மை காரணமாக, ஏறக்குறைய அழிந்து விட்ட நிலையில் இருந்த ‘இயற்கை வழிபாட்டுக்கு’ புத்துயிர் கொடுத்தார்கள். ஈழத் தமிழர்களில் பெரும்பான்மையானோர் இந்துக்கள், கிறிஸ்தவர்கள். ஆனால், புலிகள் அவர்களது மத நம்பிக்கைகளை மதிக்கவில்லை. அதற்கு மாறாக, அவர்களது நம்பிக்கைகளுக்கு விரோதமாக நடந்து கொண்டார்கள்.

உதாரணத்திற்கு சில: போரில் வீரச் சாவடைந்த மாவீரர்களை, மக்கள் நினைவுகூரி வழிபட வைத்தார்கள். இது, இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே, இந்து மதம் ஒடுக்கிய சிறு தெய்வ வழிபாட்டின் நவீன வடிவம். புலிகள், அவர்களது மாவீரர்களின் கல்லறைகளை வழிபாட்டு ஸ்தலமாக்கினார்கள். அதுவும், ஆகம விதிப் படி இயங்கும் இந்து மதக் கோட்பாடுகளுக்கு முரணானது.

இறந்த போராளிகளை எரிக்காமல் புதைப்பது, இந்து மத நம்பிக்கை அல்ல . அது தமிழர்களின் பழைமையான இயற்கை வழிபாட்டுக்குரியது. இருப்பினும், ஒரு சைவத் தமிழர், எந்தளவு தீவிரமாக புலிகளை ஆதரித்தாலும், இறந்த பின்னர் தனது உடலை புதைக்க வேண்டுமென்று கூற மாட்டார். வாயளவில் தமிழ் தேசியம் பேசினாலும், பலர் இன்றைக்கும் மனதளவில் மதத் தேசியவாதிகளாகத் தான் இருக்கின்றனர்.

தற்கொலை செய்வது கிறிஸ்தவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாத விடயம். சைனட் கடித்து தற்கொலை செய்வது, தற்கொலைப் போராளியாக குண்டுவைப்பது, மரணித்த போராளிகளின் சமாதிகளை வணங்குவது இவை எல்லாம் கிறிஸ்தவ மத நம்பிக்கைக்கு விரோதமானவை. புலிகள் கிறிஸ்தவர்களும் பொங்கல் பண்டிகை கொண்டாட வைத்தார்கள்.

முன்னரே சில கத்தோலிக்க தேவாலயங்களால் அனுமதிக்கப் பட்டிருந்தாலும், அடிப்படையில் அது ஒரு கிறிஸ்தவ நம்பிக்கைக்கு விரோதமான இயற்கை வழிபாடு (Pagan festival) என்பதில் மாற்றுக் கருத்துக் கொண்டிருக்கவில்லை. இப்படி நிறைய உதாரணங்களை கூறலாம்.

மேலும், புலிகளின் முகாம்களில், எந்தவொரு மத வழிபாடும் நடப்பதில்லை. போராளிகளை அதற்கு அனுமதிப்பதுமில்லை. முகாமில் ஒரு பக்திப் பாடலைக் கூட கேட்க முடியாது. (போராளிகள் சினிமாப் பாடல்களையும் கேட்க முடியாது. இயக்கப் பாடல்களை மட்டுமே கேட்பதற்கு அனுமதி கொடுத்தார்கள்.) புலிகளின் முகாம் அமைந்திருக்கும் வளாகத்திற்குள், ஒரு கோயிலையோ, அல்லது தேவாலயத்தையோ காண முடியாது.

இன்று புலிகளின் முகாம்கள் இருந்த, அதே இடத்தில் முகாம் அமைத்துள்ள சிங்களப் படையினர், அங்கே புத்த கோயில்களை கட்டி உள்ளனர். இந்தப் புத்த கோயில்கள், ஒரு பக்கம் ஆக்கிரமிப்பின் சின்னமாக நிறுவப் பட்டாலும், மறு பக்கம் படைவீரர்களின் மத வழிபாட்டு சுதந்திரம் என்று நியாயம் கற்பிக்கப் படுகின்றது. இலங்கை முழுவதும் உள்ள ஸ்ரீலங்கா இராணுவ முகாம்களில், எல்லா இடங்களிலும் புத்த கோயில்களும், சில இடங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களும் உள்ளன.

முப்பது வருடங்கள் ஈழப் போர் நடந்த காலத்தில், தமிழ் ஆஸ்திகர்கள் அடங்கிக் கிடந்தார்கள். யாருமே தங்களை கட்டுப்படுத்திய அதிகாரத்தை எதிர்த்து முணுமுணுக்கவில்லை. ஒரே சமயத்தில், இந்து, கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்களை எதிர்த்து நிற்கும் தைரியம் புலிகளிடம் இருந்தது.

புலிகள் தமது மதச் சார்பற்ற கொள்கைகளை, பெரும்பான்மை தமிழ் மக்கள் ஏற்க வைத்தனர். அது ஈழத்தில் மத நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தில், தமிழ் நாஸ்திகர்களுக்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி.

-கலையரசன்-

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பார்ட்டிகளில்; பெண்கள் பேசும், விசித்திரமான விஷயங்கள்…!!
Next post லாட்டரி சீட்டு வியாபாரியிடம் மோதிரம்–ரூ.1000 கேட்டு சப்–இன்ஸ்பெக்டர் மிரட்டல்!!