வள்ளியூரில் நூதன முறையில் நடித்து பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையன் கைது!!
வள்ளியூரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி அரிமுத்து (வயது 58). நேற்று மாலை அரிமுத்து மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது டிப்–டாப்பாக உடை அணிந்து அதிகாரி போல ஒரு வாலிபர் அவரது வீட்டுக்கு சென்றார். தான் ஆதார் அட்டை கணக்கெடுக்கும் அதிகாரி என்று கூறி விட்டு வீட்டில் உள்ளவர்களின் விபரத்தை கேட்டுள்ளார். நைசாக வீட்டில் பீரோ இருந்த அறையையும் நோட்டமிட்டுள்ளார்.
அவர் மீது சந்தேகம் அடைந்த அரிமுத்து, அந்த வாலிபரை தனியாக இருக்க விடாமல், பிறகு வாருங்கள். இப்போது வெளியே போங்கள் என்று கூறியுள்ளார்.
கொள்ளையடிக்கும் திட்டத்துடன் வந்த அந்த வாலிபர், தனது எண்ணம் நிறைவேறாது என்பதை அறிந்து, கைக்கு கிடைத்ததை அபகரித்துச்செல்வோம் என்று நினைத்து அரிமுத்துவின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓட முயன்றார்.
உஷாராக இருந்த அரிமுத்து தங்கசங்கிலியை கையால் பிடித்துக்கொண்டு ‘திருடன்’ ’திருடன்’ என்று கூச்சல் போட்டு அலறினார்.
இதனால் கொள்ளையன் தங்க சங்கிலியை விட்டு விட்டு தப்பித்தால் போதும் என்று வீட்டை விட்டு ஓடினான்.
ஆனால் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பக்கத்து வீட்டுக்காரர்கள், ஓடிவந்து கொள்ளையனை விரட்டிச்சென்று பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
வள்ளியூர் போலீசார் அந்த கொள்ளையனை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவனது பெயர் வேலாயுதம் (வயது 35), சொந்த ஊர் கன்னியாகுமரி என்றும் தெரியவந்தது.
அவன் வேறு ஏதேனும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளானா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating