By 20 May 2015 0 Comments

விடுதலை..!! -நோர்வே நக்கீரா (சிறுகதை)!!

timthumbகொலை, கொள்ளை, வல்லுறவுகள், பலாற்காரம், கலாச்சாரச்சீரழிவுகள், நிரம்பிய என்தேசத்தில் அவள் மட்டும் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருந்தாள். காலம் கலைந்து கோலத்தில் தொலைந்த தேசத்தில் சிதையேறிய சீதையின் யாக்கை, சுதந்திர வேட்கை தந்த வாழ்க்கை. ஒற்றைக்குடிசை, ஓழுகும் ஓலைக்கூரை, 24மணிநேரமும் திறந்தே கிடக்கும் கதவுகள், அடிமைத்தேசத்தில் ஒரு சுதந்திரக்குடிசை (தமிழீழம்).பாண்டு மைந்தர்களுக்கே கிடைக்காதது இப்பத்தினித் தெய்வத்துக்குக் கிடைத்தது எப்படி?

உப்பளமாகிப் போன கன்னங்களில் வற்றாத அருவி. இதயத்தில் பற்றாத பாசம். எரியும் இதயத்தீயின் அனல் அவள் கண்களூடாகக் கனன்று கொண்டிருந்தது. அன்று அவள் ஊர்வீதிகளில் உலாவந்தபோது கை கூப்பிக்கும்பிட்டவர்கள் இன்று அவளை வேற்றுக்கிரகத்தவளாக நோக்குகிறார்கள். போற்றிப்புகழ்ந்தவர்கள் அனைவரும் தூற்றித் துப்புகிறார்கள்.

அன்று அவள் விடுதலையை மனதில் மணந்தாள், வெடிகலங்களை தோழ்களில் சுமந்தாள். வெடி பொருட்களைச் சுமந்தும் வெடிக்காத அவள் மனமும் தேகமும் இன்று வெடித்துச் சிதறுகிறது. எந்த மக்களை மனதில் சுமந்து வெடிபொருள்களுள் தன்னைப் புதைத்தாளே அதேமக்கள் இன்று அவளை வெடிக்க வைக்கிறார்கள், துடிக்க வைக்கிறார்கள்.

விரத்தியுடன் வீட்டின் மூலையைத் திரும்பிப்பார்க்கிறாள். அன்று அவளுக்குக் கம்பீரம் தந்த உடை, தேசத்தின் சுதந்திர உணர்வுபோல் கிளிந்து தந்தலாகி அவளை கேட்கிறது என்னை ஒருதரம் அணிவாயா? என்று. எம்பிள்ளைகள் என்று தூக்கிக் கொண்டாடியவர்கள் அவளைத் தொப்பென்று தரையில் போட்டு உடைத்துவிட்டார்களே.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று சும்மாவா சொன்னார்கள். முன்னறிந்து தானே சொன்னார்கள். அவள் அன்று அதைக் கேட்கவே இல்லை. பின்-புத்தி பின்புத்தியானது. தேசத்தைச் சுமந்ததால் அவள் இழந்தது பெற்றோர், சகோதரங்கள், உறவுகள், நட்பு, கௌரவம். மிஞ்சி இருப்பது இக்கொட்டில் வீடும், கூட்டைவிட்டு வெளியேறாக அவளின் ஆத்மாவும்தான்.

சுதந்திரத்தைச் சுமந்தவளுக்கு சுதந்திரம் கிடைத்தது அவள் நேசித்த மக்களிடம் இருந்து. விடுதலை நாட்டுக்குக் கிடைக்காவிட்டாலும் அவள் குடிசைக்குக் கிடைத்தது குடியரசுநாட்டில். நோர்வேயின் விடுதலைக்காகப் போராடிய மக்ஸ் மானுசுக்கு கிடைத்தது வெறும் பதக்கமும் வேலையே கிடைக்காததால் பட்டிணிச்சாவும்.

முழு இந்தியாவையும் தன் முதுகில் சுமந்து, இந்திய மக்களை மனதில் நேசித்த மாகாத்மா காந்திக்குக் கிடைத்தது நேசித்து நெஞ்சில் சுதந்திர இந்தியனால் துப்பாக்கிக் குண்டு. விடுதலையின் பரிசுகள் இப்படித்தானே இருக்கிறது.

மாற்றம் வேண்டியவளுக்கு மாறுபட்டவாழ்க்கை. அனைவரும் விளக்கணைக்கும் போது இவள் விளக்கேற்றுவாள். ஊரே உறங்கும்போது இவள் விழித்திருப்பாள். அன்று காவலுக்காய்.. இன்று யாருக்காய்…?? அன்று வாழ்த்தியவர்கள் தூற்றவும், அன்றைய எதிரிகள் இன்றைய நண்பர்களாகவும், நேசித்த நாட்டை தூசித்த மனத்துடன் முரண்பாடுகளுக்குள் மூழ்கிக் கிடக்கிறாள்.

யாரோ முன்பின்னறியாதவனின் உடற்பசி தீரும் போதுதானே இவளின் வயிற்றுப்பசி தீருகிறது. அன்று ஓடியோடியே அவளுக்கு உணவு கொடுத்தவர்களை இன்று காணோம். ஊரே மரணத்துக்கு ஒத்திகை பார்க்கும் போது முன்பின்னறியாதவர்களின் உணர்வுகளின் உயிர்ப்புக்காக இவள் விழித்திருப்பாள். உயிருள்ள பிணமிவளில் யார் யாரோவின் உணர்வுகள் உயிர்க்கும். எத்தனை இராணுவத்தை சுட்டு வீழ்த்தியிருப்பாள் அதே இராணுவத்தின் வருகைக்காகக் கும்மிருட்டில் காத்திருப்பாள்.

ஆளரவம்…… தயங்கித் தயங்கியபடி படலையில் யாரே. அவள் முகத்தில் மகிழ்ச்சி. நாளைய உணவுக்கு வழிகிடைத்தது. தன்னைச் சுதாகரித்துக் கொண்டு முகத்தை அலசிக்கொண்டு
“வாங்கோ வாங்கோ”
கும்மிருட்டில் யாரென்று தெரியவில்லை. வந்தவர் பேசவே இல்லை பணநோட்டுகளை நீட்டினார். வாங்கிக் கொண்டவள் உள்ளே சென்று அரிக்கன் இலாப்பின் வெளிச்சத்தில் எண்ணிப்பாத்துவிட்டு “மிக மிக அதிகமாக இருக்கிறதே என்றாள். இலட்சக்கணக்கில் எனக்கெதற்கு”

“பறுவாயில்லை வைத்திரு…. என் நின்மதிக்கும் மகிழ்ச்சிக்கும் இது உனக்கப் போதாது. உணர்வுகளுடன் வந்திருக்கிறேன் உயிர்தா”
அவர் முன்பு அவளிடம் வந்தவராகத் தெரியவில்லை. ஆனால் அவள் அக்குரலை எங்கே கேட்டிருக்கிறாள். ஆனால் எங்கு என்பதை அவளால் அறியமுடியவில்லை.
“சரி வாங்கே ரூமுக்கு”
தயங்கித்தயங்கியே பின்தொடர்ந்தவர் உள்ளே வரமுன்னர் அவள் தயாராகிவிட்டாள். ஆனால் அவர் யார் என்பது கேள்வியாகவே அவளுக்கு இருந்தது.
“இவ்வளவு பணத்துடன்…? கொள்ளையடித்து பணமோ? நாளை பொலிஸ் இங்குவருமோ?”
கேள்விகள் அவளை வேள்விகள் செய்தன. வந்தவர் அனுபவம் இல்லாதவர் போல் இருக்கவேண்டும் அவளே அவரை அணைத்துக் கொண்டாள். அவளைத் தொடர்ந்து அவரும்…..!!!!

அந்தத் தொடுகை அவளுள் உடலில் உயிரோடி முளைத்தது. புத்துயிரில் புதுஸ்பரிசம் பெற்றவள் போல் ஏங்கினாள்…தவித்தாள்….ஆர்பத்தில் துடித்தாள். இருட்டில் முகம் தெரியவே இல்லை. என்றோ எதிர்பார்த்தது அன்று கிடைத்தது போல் ஒரு உணர்வின் உச்சத்தில் உப்பரிகையில் உதிர்ந்தாள். என்றுமே கிடைக்காத சுகம், என்றோ தொட்ட ஸ்பரிசம், இளமைக்குள் அவள் ஊஞ்சலாடினாள். அடைமழை ஒய்ந்து அடக்கியது. போரின் பின் அமைதி..விடுதலை. அவர் அவள் படுக்கையிலேயே தூங்கிவிட்டார். மெதுவாக எழுத்து அரிக்கன் இலாம்பை எடுத்து வந்து அவரின் முகத்தைப் பார்த்தவளின் கைகால்கள் நடுங்கத் தொடங்கின. வியர்த்து விறுவிறுத்தாள். அவள் எண்ணியது சரியாகவே இருந்தது. கையில் இருந்து அரிக்கன் இலாப்பை அப்படியே போட்டுவிட்டு அவரைக் கட்டியணைத்து முத்துதங்களை முகிழ்ந்தாள்;. அந்த முத்தங்களை ஏற்கும் நிலையில் அவர் இல்லை. அவரின் உடல் அசையவே இல்லை. வெப்பத்துடன் வந்துவரின் உடல்வெப்பம் எல்லாம் அவளின் அடங்கிவிட்டது. உடல் குளிரத் தொடங்கிவிட்டது.

அவரின் காலைப்பிடித்துபடி கதறத்தொடங்கினாள் கண்ணீராற்றில் கன்னியாக. போருக்குப் பயந்து புறமுதுகிட்ட, அவள் உயிருக்குயிராக நேசித்த அவளின் காதலன் கடசி நேரத்தில் அவளைக் காணவந்திருக்கிறான். வெளிநாட்டு வாழ்க்கை கொடுக்காத விடுதலையை அவள் கொடுத்தாள். விடுதலையை நேசித்தவள் தான் நேசித்த நாட்டிலேயே விடு-தலையானாள். விழுந்து கிடந்து அரிக்கன் இலாம்பைக் கூடக் கவனிக்காது புரண்டு புரண்டு கத்தினாள்….கதறினாள்…மயங்கிப்போனாள்.

” எந்த விடுதலையைத் தேடி வந்தீர்கள். இவ்வளவு காலமும் எங்கே ஐயா இருந்தீர்கள்? இந்தநிலையில்தான் என்னை நீங்கள் பார்க்க வேண்டுமா?”

இவளது விடுதலைக்குரல் அவனுக்குக் கேட்காது. ஊரால் உலகால் உறவால் போரால் சேர்த்து வைக்கப்படாத உண்மைக்காதலை அரிக்கன் இலாம்பில் இருந்து பற்றிப்படர்ந்த தூய்மையான விடுதலைத் தீ சேர்த்து வைத்தது.

குறிப்பு:- இது ஒரு குறியீட்டுக்கதை என்பதால் அவளை தமிழீழர்களின் போராட்டமாகப் பாருங்கள். இன்னொரு பரிமாணத்தைக் காண்பீர்கள்
–நோர்வே நக்கீரா 07.05.2015–Post a Comment

Protected by WP Anti Spam