ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பு: சயான் மாநகராட்சி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை!!
மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில், அந்த பெண் மீண்டும் கர்ப்பம் ஆனார். ஸ்கேன் பரிசோதனையில் அவரது வயிற்றில் இரட்டைக்குழந்தைகள் வளர்வது தெரியவந்தது. மேலும் அந்த குழந்தைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு இருப்பதும் தெரியவந்தது. இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.
இந்தநிலையில் கடந்த 10-ந்தேதி அந்த பெண்ணுக்கு மும்பை சயான் மாநகராட்சி மருத்துவமனையில் பிரசவம் ஆனது. இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். அந்த குழந்தைகளின் நெஞ்சு, இடுப்பு பகுதி ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு இருந்தது. குழந்தைகளின் கல்லீரல் இணைந்திருந்தது.
இதனையடுத்து சயான் மருத்துவமனை டாக்டர்கள் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் பிரித்தெடுக்க முடிவு செய்தனர். அதன்படி குழந்தை பிறந்து 6 நாட்களுக்கு பின்னர் அறுவை சிகிச்சை நடந்தது. குழந்தைகளின் உடலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறாத வகையில் நவீன அறுவை சிகிச்சை கருவிகள் உதவியுடன் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். பல மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகளும் வெற்றிகரமாக தனித்தனியாக பிரிக்கப்பட்டன.
இதையடுத்து குழந்தைகளை தீவிரமாக டாக்டர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது, இரண்டு பெண் குழந்தைகளும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், வேகமாக குணமடைந்து வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதன் மூலம் குழந்தைகளின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Average Rating