By 1 July 2015 0 Comments

வருகிறது தேர்தல் திருவிழா..!

785174362indexவருகிறது வருகிறதென எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலும் வந்துவிட்டது. வழமைபோல தேர்தல் காலத்தில் வெளிவருகின்ற குறும்படங்களுடன் பல்வேறு கட்சிகள் தேர்தல் விஞ்ஞாபனம் என்ற போர்வையில் தயாராகிக்கொண்டு வருகின்றன.

தென்னிலங்கையில் பல்வேறு ஊகங்களுக்கு மத்தியில் மஹிந்த அணி, மைத்திரி அணி, சந்திரிகா அணி என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மும்முனைப் போட்டிக்கு தயாராகிக்கொண்டு வருகிறது.

இதனைவிட வழமைபோல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியாளர்களை விமர்சித்து முஸ்லிம் வாக்குகளை கொள்ளையடிக்கும் தந்திரத்தை இம்முறையும் பயன்படுத்த தயாராகிவிட்டது.

இ.தொ.கா சுதந்திரக்கட்சியுடன் இணைவதாக அறிவித்துவிட்டது. புதிய கூட்டமைப்பென உல்டா காட்டிய மனோகணேசன் யானையில் ஏறிச்சவாரி செய்வதற்கு தயாராகிவிட்டார்.

இதனைவிட விகாரைக்குள்ளிருந்து அரசியல் செய்த மஹிந்த மிகப்பெரிய சவாலுடன் தேர்தலில் போட்டியிடுவதற்கு தன்னுடைய பரிவாரங்களுடன் ஹால்டன் இல்லத்திலிருந்து ரத யாத்திரையை தொடங்குவாரெனக் கூறப்படுகிறது.

இத்தகைய நிலையில் உதிரிக்கட்சிகள் சில வழமைபோல் தேர்தலில் போட்டியிட்டு தென்னிலங்கையில் சிலசமயங்களில் ஒரு சில ஆசனங்களையும், இல்லாவிட்டால் கட்டுப்பணம் இழக்கின்ற தன்மையையும் கொண்டிருக்க வாய்ப்பிருக்கின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை மட்டுமே விமர்சித்த ஜே.வி.பிக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமது கட்சியைத்தவிர அனைத்து கட்சிகளையும் வசைமாரி செய்து தேர்தல் வேலை செய்ய வேண்டியிருக்கிறது.

கடந்தகாலத் தேர்தல்களில் அதிகம் விமர்சிக்கப்பட்ட மறைமுக எதிர்ப்பு தேர்தல் விஞ்ஞாபனங்களாகிய இனவாதம், மதவாதம், புலி, மஹிந்த, குடும்ப ஆட்சி, ஊழல் ஆகியன இன்றி தேர்தலை கட்சிகள் சந்திக்க வேண்டிய நிலையில் காணப்படுகின்றன.

இப்படியான ஒரு நிலையில் தென்னிலங்கை கட்சிகள் இம்முறை வெளிநாட்டு ஆதிக்கம் என்ற தேர்தல் விஞ்ஞாபனத்துடன் மிகவும் வீராவேசத்துடன் தேர்தலை எதிர்கொள்கின்றன.

தென்னிலங்கையிலே இப்படியென்றால் வடக்கு கிழக்கில் சொல்லவே தேவையில்லை. வடக்கு கிழக்கை தற்சமயம் ஆளுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடே இன்னும் முடியவில்லை.

வழமைபோல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஏகாதிபத்தியக் கட்சியாகிய தமிழரசுக்கட்சி பல முட்டுக்கட்டைகளை மற்றக்கட்சிகள் மீது போட்டுள்ளதால், தேர்தல் வேட்புமனு பட்டியல் வெளியிடப்படுவதற்கு இடையில் சுவாரஸ்யமான பல காட்சிகளை காணலாம்.

இம்முறை யாழ்ப்பாணத்தில் 7 ஆசனங்கள் மட்டுமே என்ற நிலையில் ஆசனப்பங்கீட்டிலே மிகவும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனைவிட வழமையான பாணியில் தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரிக்க முடியாமல் உள்ளது.

ஏனெனில் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கூற்றை அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் போட்டால் அது டக்ளஸ் தேவானந்தாவிற்கு வாய்ப்பாகிவிடும்.

இதன் காரணமாக இம்முறை தேர்தல் விஞ்ஞாபனம் இன்றியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களம் இறங்க இருக்கின்றது. இதனைவிட வடமாகாணசபை உறுப்பினர்கள் முதலமைச்சரின் அனுமதியின்றி தேர்தல் பரப்புரைகளில் கலந்து கொள்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவிலே பழமை வாய்த மதவாதக் கட்சியாக இருக்கின்ற பாரதிய ஜனதாக்கட்சி பலமுறை நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியதுடன், ஆட்சியைக் கைப்பற்றி கொண்டு நடத்துவதில் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியது.

அந்த கட்சியினுடைய ஜாம்பவான்கள் என்று கூறப்படுகின்ற வாஜ்பாய், அத்வானி ஆகியோர் ரத யாத்திரை நடத்தியோ அல்லது தாமரைச் சின்னத்தை காட்டியோ ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை.

குஜராத் மாநிலத்தை அபிவிருத்தி பாதையில் கொண்டு சென்ற நரேந்திரமோடியை வேட்பாளராகக் கொண்டு பாரதிய ஜனதாக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.

இதேபோல தமிழ்நாட்டில் காலாகாலமாக எம்.ஜி.ஆர், இரட்டைஇலை, அண்ணா என்ற வாக்கு மந்திரங்களைக் காட்டி வாக்குகளை சுவீகரித்துக் கொண்ட அ.தி.மு.க தற்சமயம் “அம்மா” என்ற தனிநபர் செல்வாக்குடன் வெற்றிவாகை சூடிக்கொண்டிருக்கின்றது.

அதற்கு எடுத்துக்காட்டாக அண்மையில் நடந்து முடிந்து ஆர்.கே.நகர் சட்டசபை இடைத்தேர்தலில் ஜெயலலிதா பெற்ற அமோகவெற்றியைக் கூறலாம்.

தற்சமயம் இலங்கையிலும் இப்படியானவொரு தேர்தல் புறச்சூழலிலேயே நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தோன்ற இருக்கின்றன.

இதன் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோல்விப் பயத்தில் ஒருவருக்கொருவர் உள்குத்து வேலைகளில் இறங்கியுள்ளனர்.

கடந்த காலத்தில் அரசுடன் இணைந்து போட்டியிட்ட ஜனநாயக் முற்போக்குக் கட்சி தற்சமயம் தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மிகவும் சவாலான ஒரு களச்சூழல் உருவாகியுள்ளது.

ஒரு காலத்தில் 22 ஆசனங்களை வடக்கு கிழக்கில் வைத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது இறங்கு முகத்தில் சென்று ஆசனங்களை இழந்து கொண்டுவருகின்றது.

ஆட்சி அதிகாரத்துடன் இருந்தவர்கள் ஆட்சி அதிகாரமின்றியும், ஆட்சி அதிகாரமின்றிய த.தே.கூ ஆட்சியுடனும் முதற்தடவையாக பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்குகின்றது.

ஒல்லித் தேங்காயை கட்டிக்கொண்டே இவ்வளவு காலமும் தேர்தல் கடலைக் கடந்த த.தே.கூ தற்சமயம் பாறாங்கல்லைக் கட்டிக்கொண்டு பாராளுமன்றத் தேர்தலை எதிர்நோக்குகின்றது.

அகச்சூழல், புறச்சூழல், மேல்சூழல், கீழ்ச்சூழல் ஆகியன சாதகமற்ற நிலையிலும் ஜனநாயக முற்போக்கு சக்திகளுடைய தேர்தல் சூழல் சாதகமான நிலையிலும் இருக்கின்ற காரணத்தினால் த.தே.கூ அதிரடியான சில முடிவுகளை அறிவிக்கவுள்ளது.

அதில் மிக முக்கியமானது த.தே.கூ விலுள்ள மற்றைய கட்சிகளைக் கழட்டிவிட்டு இலங்கை தமிழரசுக்கட்சி என்ற பெயரில் வீட்டுச்சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டால் மட்டுமே தற்சமயம் இருக்கின்ற தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றிவாகை சூடலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

இல்லாவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்சமயம் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகையில் ஒரு விழுக்காட்டை வடக்கு கிழக்கில் எதிர்நோக்கும். இது ஜனநாயக முற்போக்கு சக்திகளினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கச் செய்யும்.

எது எப்படியிருப்பினும் எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆந் திகதி எத்தகைய அலை அடிக்கப்போகின்றது என்பது தெரிந்துவிடும்.

வீரசங்கிலியன்Post a Comment

Protected by WP Anti Spam