கௌரவ முதலமைச்சர் திரு . விக்கினேஸ்வரன் அவர்களுக்கு ஒரு திறந்தமடல்.. -ர.பாலச்சந்திரன் (கட்டுரை)!!

Read Time:15 Minute, 30 Second

timthumbகௌரவ முதலமைச்சர் அவர்களுக்கு ஒரு திறந்தமடல்,

மதிப்பிற்குரியமுதலமைச்சர் ஐயா,
உங்களை முதலமைச்சர் வேட்பாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிந்துரை செய்ய முன்பே, தந்தை செல்வா நினைவுப் பேருரையில் நீங்கள் பேசியபோது நீங்கள் தான் முதலமைச்சராக வரவேண்டும் என்று கனவு கண்டவன் நான் அந்தகனவு நனவானதும் உண்மை.

சம்பந்தனும் சுமந்திரனும் பல்வேறு எதிர்ப்புக்களையும் தடைகளையும் மீறி உங்களை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தினார்கள். அவர்கள் அன்று எடுத்த தீர்க்கமான முடிவு தான், இன்று நீங்கள் வகிக்கும் பதவிக்கான முதற்படி.

நீங்கள் பதவிஏற்றதுமுதல் இன்றுவரை பலவிதமான அரசியல் முனைப்புக்களையும் யுக்திகளையும் பின்பற்றியுள்ளீர்கள் என்பதை பல்வேறு இடங்களில் நீங்கள் முன்வைத்த கருத்துக்கள் எடுத்துக் காட்டுகின்றது, முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஆளுனரோடு எதிர்ப்பு அரசியலில் ஆரம்பித்த நீங்கள் பின்னர் சற்றே இணைக்கப்பாட்டு அரசியல் சாயலை காட்டினீர்கள்,..

மிகஅண்மிய காலங்களில் நீங்கள் ஒருமுரண்பாட்டு அரசியலை முன்னெடுத்து வருகிறீர்கள், உங்களது இந்த முரண்பாட்டு அரசியல் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோடு ஆரம்பித்து பின்னர் மெதுவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களையும் குறை கூறும் நிலைபாட்டிற்கு வந்தது.

பிரதமர் ரணில் உங்களை ஒரு பொய்யன் என கூறியபிறகு அதற்கு மாறுத்தரமாக நீங்கள் எந்தவொரு அறிக்கையையும் வெளியிட்டதாக எனக்கு ஞாபகமில்லை. முரண்பாட்டு அரசியலிலும் நீங்கள் நிதானமாக தான் செயற்படுகிறீர்களா? என்ற கேள்வி எழுகிறது.

தந்தை செல்வா நினைவுப் பேருரையில் எந்தவொரு ஆயுத போராட்டத்தையும் நாம் வரவேற்பதில்லை என்று கூறிய நீங்கள் வடமாகாண சபைக்கான தேர்தல் பிரசார கூட்டமொன்றில் பிரபாகரன் ஒருமாவீரன் என்று நீங்கள் கூறியதாக ஊடகங்களில் வாசித்திருந்தேன்.

அதுவெல்லாம் பழையகதை என்று விட்டாலும் நீங்கள் தற்போதைய பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக நீங்கள் கொடுத்திருக்கும் அறிக்கை தமிழ் மக்களிடையே ஒரு குழப்பத்தை உண்டு பண்ணியிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியாத ஒன்றல்ல.

உங்களது அறிக்கையில் நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டீர்கள் என்றும் மக்கள் யாரை தெரிவு செய்தாலும் அவர்களுடன் சேர்ந்து நான் பணியாற்ற தயார் என்றும் கூறியிருந்தீர்கள்.

நீங்கள் கொடுத்த இந்த அறிக்கை தொடர்பில் எனக்கு சிலகேள்விகள் உண்டு.. அதை நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களில் ஒருவனாக உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.

1. வடமாகாண சபை தேர்தலில் நீங்கள் தமிழரசு கட்சியின் வேட்பாளராகத்தான் களமிறங்கினீர்கள், மக்கள் அளித்த வாக்கு தமிழரசு கட்சியின் கோட்பாட்டிற்கும் விஞ்ஞாபனத்திற்கும் ஆதரவாக அளித்த வாக்குகள் என்பதை நீங்கள் ஏற்று கொள்கிறீர்களா? அப்படியில்லை என்றால் மக்கள் ஏன் உங்களுக்கு வாக்களித்தார்கள் என்று உங்களால் சொல்ல முடியமா?

ஏனென்றால் நீங்கள் விடுத்துள்ள அறிக்கையை பார்த்தால் மக்களின் ஆணைக்கு அப்பால் சென்று நீங்கள் நடுநிலைமை வகிக்கிறீர்கள். நீங்கள் ஒரு குறித்த கட்சியின் கோட்பாட்டிற்கும் விஞ்ஞாபனத்திற்கும் பக்க சார்பாக இருந்ததால் தான் மக்கள் உங்களை தெரிவு செய்தார்கள் என்பதுதான் உண்மை;.

2. தற்போதைய வடமாகாண சபையானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலத்தில் இயங்கும் மாகாணசபை என்பதை நீங்கள் மறுக்கிறீர்களா?

இன்று உங்களது மாகாணசபை முதல்வர் முதற்கொண்டு அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவு தேடி பிரச்சாரம் செய்கின்ற போது நீங்கள் மட்டும், நான் அப்படி செய்யமாட்டேன் என்று உங்களது உத்தியோகபூர்வ காகித தலைப்பை பாவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தீர்கள்.

வடமாகாண முதலமைச்சர் என்ற பதவி நீங்கள் எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்ய மாட்டீர்கள் என்று அறிக்கை விட்டீர்களோ அதே கட்சியை பிரதிநிதித்துவம் செய்தீர்கள் எனற ஒரே காரணத்தால் உங்களுக்கு கிடைத்த ஒன்றாகும்.

அப்படியிருக்க இந்த அறிக்கையை விடுவதற்கு நீங்கள் உங்கள் தனிப்பட்ட காகிதத் தலைப்பை பாவித்திருக்க வேண்டும். நீங்கள் உங்கள் உத்தியோகபூர்வ காகித தலைப்பை பாவித்தமையானது மக்கள் கொடுத்த ஆணைக்கு எதிராக நீங்கள் செயற்படுகிறீர்கள் என்றே எண்ண தோன்றுகின்றது.

இதே அறிக்கையை இளைப்பாறிய நீதியரசர் விக்னேஸ்வரன் கூறியிருந்தால் நான் இந்த மடலை வரைந்திருக்க மாட்டேன். இந்த அறிக்கை மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் விடுத்த அறிக்கை என்பதால் நான் இந்த மடலை வரைகிறேன்.

3. அடுத்ததாக மக்கள் யாரை தெரிவு செய்தாலும் நான் அவர்களோடு சேர்ந்து பணியாற்ற தயார் என சொல்லியிருந்தீர்கள் இது ஒரு தலைவரிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கும் கூற்றல்ல. ஏனென்றால் எப்போதும் தலைவர்கள் மக்களுக்கு வழிகாட்டுபவர்களாக இருக்க வேண்டுமே தவிர மக்களை குழப்பத்தில் தள்ளுபவர்களாக இருக்கக்கூடாது. உங்களுடைய இந்த நிலைப்பாடானது தமிழ் மக்களை குழப்பத்தில் தள்ளியுள்ளது.

கடந்த வடமாகாணசபை தேர்தலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் உங்களது அறிக்கையை போல் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்ததால் நீங்கள் இன்று முதலமைச்சர் ஆகியிருப்பீர்களா? நிச்சயமாக இல்லை. அன்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமை மக்களுக்கு தெளிவாக வழி காட்டியதினாலேயே நீங்கள் முதலமைச்சரானீர்கள்.

மக்கள் தெரிவு செய்பவர்கள் யாராயிருந்தாலும் அவர்களோடு இணைந்து செயற்படுவேன் என்று கூறுகின்றபோது, வட மகாணசபை மக்களுக்கு பிரயோஜனமற்றது என்று பிரச்சாரம் செய்யும் கஜேந்திரகுமார் பென்னம்பலமும் வடக்கு மக்களின் வளங்களை சுரண்டி வாழும் டக்ளஸ் தேவானந்தாவும் தெரிவு செய்யப்பட்டால் அவர்களோடும் இணைந்து அரசியல் செய்வதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்பதை தமிழ் மக்களுக்கு நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்

4. நீங்கள் முதலமைச்சர் வேட்பாளராக மேடைகளில் பேசிய போது தழிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரித்து பேசி வாக்குகளை பெற்று கொண்டீர்கள் என்பதை உங்களால் மறுக்க முடியாது. அப்படி ஆட்சிக்கு வந்த நீங்கள் இன்று பாராளுமன்ற தேர்தலில் தழிழ் தேசிய கூட்டமைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யமாட்டேன் என்று கூறுவது எந்தளவு தூரம் நியாயம்?

உங்களுக்கும் தழிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்திற்குமிடையில் கருத்து முறன்பாடுகள் இருக்கலாம், ஆனால் அவற்றை பேச வேண்டிய இடங்களில் பேசி தீர்க்கலாம் என்கிற இராஜதந்திரம் நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.

2013ம் ஆண்டு தந்தை செல்வா ஞாபாகார்த்த உரையில் நீங்கள் கூறிய கருத்தொன்றை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன் “எல்லாவிதங்களிலும் முரன்பட்டுக் கொள்ளுவோம் ஆனால் அந்த முரன்பாடுகள் எமது ஒற்றுமையை சீர்குலைக்க விட வேண்டாம்” (4. Let us disagree by all means but let us not allow those disagreements to spoil our unity) ஆனால் இன்று நீங்கள் கொடுத்த அறிக்கையானது எமது தமிழ் சமூகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் ஓர் காரியமாகவே எண்ணத் தோன்றுகின்றது.

5. வட மாகாணசபை தமிழ் மக்களிற்கு செய்த சேவை ஒன்றுமில்லை என்பது இன்று தேர்தல் களங்களில் தழிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக இருக்கின்ற குற்றச்சாட்டுக்களில் ஒன்றாகும.; இந்த குற்றச்சாட்டு பொய் என்று நிருபிப்பதற்காகவேனும் நீங்கள் தேர்தல் பிரச்சார மேடையில் ஏறியிருக்க வேண்டும்.

ஏனென்றால் இந்த குற்றச்சாட்டை இன்றுவரை நீங்கள் வெளிப்படையாக எதிர்த்தது கிடையாது அப்படியென்றால் நீங்கள் வினைத்திறன் குன்றிய முதலமைச்சர் என்பதை ஏற்றுகொள்கிறீர்களா?

6. அன்மைக் காலங்களில் இடம்பெற்ற எல்ல தேர்தல்களிலும் தமிழ் மக்கள் பெருமளவு வாக்களித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே, இதுதான் வரலாறு கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பல முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேறு கட்சிகளில் அதே மாவட்டங்களில் தேர்தலில் நின்றார்கள.;

அவர்கள் அனைவரும் மக்களால் தோற்க்கடிக்கப்பட்டார்கள், இன்று நீங்களோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேறெந்த தலைவர்களோ கூட்டமைப்பிலிருந்து விலகி தனியே நின்றால் மக்கள் அங்கிகாரம் உங்களுக்கும் அவர்களுக்கும் கிடைக்குமா என்பது சந்தேகமே?

சுயநல நோக்கங்களிற்காக மக்கள் நலன்களை புறக்கணித்துவிட கூடாது இதற்கு உதாரணமாக ஜி ஜி பொன்னம்பலம் மற்றும் தந்தை செல்வாவிற்குமிடையில் ஏற்பட்ட பிளவை காரணம் காட்டி அப்படி ஒரு நிகழ்வு இனிமேல் எமக்குள் வரக்கூடாது என்ற தொனியில் நீங்கள் 2013ம் ஆண்டு தந்தை செல்வா ஞாபகார்த்த உரையில் கூறியிருந்தீர்கள.; ஆனால் உங்களது அறிக்கையில் வாசிக்கின்ற போது தந்தை செல்வா நினைவு பேருரையில் நீங்கள் தெரிவித்த கருத்துக்களிலிருந்து மாறிவிட்டீர்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

7. உங்கள் வாசஸ்தலத்தில் உங்களுக்கு தெரியாத வகையில் நீங்கள் பேசுவதை பதிவு செய்த காட்சிகள் இன்றைக்கு இணையத்தளங்களில் உலா வருகின்றது.

நீங்கள் ஒரு முன்னாள் நிதியரசர் என்ற வகையில் அந்த காரியத்தை செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் யார் உங்களோடு கதைத்தார்கள் என்று உங்களுக்கு நன்றாக தெரியும். எனவே அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் யார் என்பதை தமிழ் மக்களுக்கு நீங்கள் காட்ட வேண்டும்.

உங்களால் அப்படி செய்ய முடியாமல் போனால் அது நீங்கள் வகித்த நீதியரசர் என்ற உன்னத பதவிக்கு இழைக்கின்ற துரோகமாக எணணப்படுவது மாத்திரமல்ல வட மாகாண முதலைமைச்சர் இன்று ஒரு விலை போகும் நபராக மாறிவிட்டார் என்று தமிழ் சமூகம் எடுக்கும் முடிவு உங்களால் திருத்தியெழுத முடியாத தீர்ப்பாக மாறிவிடும்.

எனவே தமிழர்களி;ன் நன்மை கருதி தமிழ் தேசிய கூட்டமைப்பை அடுத்த பாராளுமன்றத்தில் ஒரு சக்தி வாய்ந்த பலமிக்க கட்சியாக அமர்த்துவதில் ஒரு தமிழனாக தங்களுக்கு இருக்கும் கடமையை தட்டிக்கழிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்

தங்களுக்கு அனுப்பும் இம் மடலை தமிழ் மக்கள் நலன்கருதி ஊடகங்களிற்கும் அனுப்பி வைக்கிறேன் என்பதனை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நன்றி
ர.பாலச்சந்திரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொள்ளுப்பிட்டியில் ஆணின் சடலம் மீட்பு!!
Next post புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு: இன்றையதினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடந்தது என்ன? (முதல்கட்ட முழுமையான தகவல் & வீடியோ)!!