ஐ.நா. அறிக்கையின் அறிவுறுத்தல்: கட்டளையிட்டவர்களையும் விட்டுவிடாதே! -எம்.எஸ்.எம் ஐயூப்- (கட்டுரை)…!!

Read Time:20 Minute, 37 Second

ltte.war-006aதமக்கு எதிரானதாகக் கருதப்படும் வகையில் அமையவிருந்த ஒரு சர்வதேச விசாரணையை இலங்கை அரசாங்கம் தமது விசாரணையாக, உள்ளக விசாரணையாக மாற்றிக் கொண்டுள்ளது.
அதேவேளை, இதற்கு முன்னர் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரானதாக, ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் இம்முறை அவ் அரசாங்கத்தின் அனுசரணையுடனான ஒரு பிரேரணையே முன்வைக்கப்பட்டுள்ளது. அது இன்று நிறைவேற்றப்படவிருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் செய்ட் ராத் அல் ஹுஸைன், இலங்கையின் மனித உரிமை நிலை தொடர்பாக அவரது அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச விசாரணையின் அறிக்கையை, மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்தார்.

தேசிய மற்றும் சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட கலப்பு நீதிமன்றமொன்றின் மூலம் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் குற்ற விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என அதில் சிபாரிசு செய்யப்பட்டு இருந்தது.

இம்முறை, மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா முன்வைக்கவிருந்த பிரேரணையும் அதனை அடியொட்டியே அமைய விருந்தது.

ஆனால், இலங்கை அரசாங்கம், பிரேரணையின் அனுசரணையாளர்களாக இருக்கும் அமெரிக்கா, மசிடோனியா மற்றும் மொன்டநீக்ரோ ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, கலப்பு நீதிமன்றத்துக்குப் பதிலாக சர்வதேச நீதிபதிகள் அடங்கிய, ஆனால் இலங்கையின் அரசியலமைப்புக்குட்பட்ட ஒரு நீதிமன்றம் என்ற நிலைக்கு அதனைக் கொண்டு வந்துள்ளது.

எனவே, இம்முறை இலங்கை தொடர்பான அமெரிக்கப் பிரேரணை, இலங்கை அரசாங்கத்தின் இணக்கத்துடன் முன்வைக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி, இலங்கை அரசாங்கம் அதன் அனுசரணை நாடாகவும் மாறியிருக்கிறது.

எந்த விசாரணையை ஏற்றுக் கொண்டாலும் அது இலங்கையின் பாதுகாப்புப் படையினர் போர்க் குற்றங்களைப் புரிந்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்வதாகும் என்றும், எவ்வித விசாரணையையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது ஆதரவாளர்களும் கூறுகின்றனர்.

புலிகளை அழித்த போர் வீரர்களை விசாரணைக்குட்படுத்தக் கூடாது என்பதே அவர்களது நிலைப்பாடாக இருக்கிறது.

ஆனால், புலிகளைத் தோற்கடிப்பதற்காக நியாயமாக மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு நடவடிக்கையையும் விசாரிக்க வேண்டும் என மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையோ அல்லது அமெரிக்கப் பிரேரணையோ கூறுவதில்லை.

அதேவேளை, புலிகள் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக மேற்கோண்ட தாக்குதல்களை விசாரிக்க வேண்டும் என்றும் அவை கூறவில்லை.

போரின் போது இடம்பெற்ற அத்துமீறல்களை விசாரித்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றே அவை கூறுகின்றன.

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையை நிராகரிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

பின்னர், அமெரிக்கப் பிரேரணையை விமர்சித்தும் கருத்து வெளியிட்டு இருந்தார். அவரது பேச்சைக் கேட்டு, அரசாங்கம் அந்த அறிக்கையையும் அமெரிக்கப் பிரேரணையையும் நிராகரித்தாலும் மனித உரிமைகள் பேரவை அடுத்தக் கட்டத்துக்கு நகராமல் இருக்கப் போவதில்லை.

கடந்த மூன்று வருடங்களில் அமெரிக்கா சமர்ப்பித்த பிரேணைகளை மஹிந்தவின் அரசாங்கம் நிராகரித்தது. ஆனால், அதனால் இலங்கை தொடர்பான மனித உரிமைப் பேரவையினதும் அமெரிக்காவினதும் நிலைப்பாடு நாளுக்கு நாள் கடுமையாகியதேயொழிய, வேறெந்த நன்மையும் கிடைக்கவில்லை.

இறுதியில் அரசாங்கத்தின் எதிர்ப்புப் புறக்கணிக்கப்பட்டு கடந்த வருடம் மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தினால் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையொன்றும் நடைபெற்றது.

கடந்த வருடம் நடைபெற்றது மனித உரிமை விசாரணையாகும். அது நீதிமன்றமொன்றினால் மேற்கொள்ளப்படும் குற்ற விசாரணையல்ல. இது அந்த அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்முறை அமெரிக்காவும் இலங்கையும் சேர்ந்து முன்வைத்துள்ள பிரேரணையின் மூலம் தான் குற்ற விசாரணைக்கான நீதிமன்றம் வரப் போகிறது. அதன் மூலம் தான் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதும் தண்டனைகள் விதிப்பதும் இடம்பெறும்.

மஹிந்த கூறுவதைப் போல், இம் முறையும் மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கையையும் அமெரிக்கப் பிரேரணையையும் நிராகரித்தால், குற்ற விசாரணையும் வெறுமனே சர்வதேச விசாரணையாகவே அமையும். அப்போது, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரும் கலப்பு நீதிமன்றமொன்றை சிபாரிசு செய்திருக்க மாட்டார்.

ஆனால், ஜனாதிபதி மைத்திரிபாலவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் புதிய அரசாங்கம், சர்வதேச சக்திகளுடன் சுமுகமான அணுகுமுறையைக் கொண்டிருந்ததினாலேயே உயர்ஸ்தானிகர், கலப்பு நீதிமன்றம் என்ற நிலைப்பாட்டுக்கு இறங்கி வந்தார்.

அதனை இலங்கையின் சட்ட வரம்புக்குட்பட்டு நடத்தும் நிலை இப்போது உருவாகி வருகிறது.

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் கலப்பு நீதிமன்றமொன்றை சிபாரிசு செய்தாலும் உள்ளக விசாரணைக்கான அமெரிக்கப் பிரேரணை நிறைவேறினால் அதுதான் நடைமுறைக்கு வரும்.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என கடந்த மூன்றாண்டுகளாக ஆர்ப்பாட்டம் நடத்திய உலகெங்கிலும் வாழும் புலிகளின் ஆதரவாளர்களும், அவர்களது கோரிக்கைக்கு அமைய கடந்த வருடம் நடைபெற்ற சர்வதேச விசாரணையின் அறிக்கையைக் கண்டு ஏமாற்றமடைந்திருப்பார்கள். ஏனெனில், அவ்வறிக்கையில் புலிகளுக்கு எதிராகவும் கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

சாதாரண மக்களைப் படுகொலை செய்தமை தொடர்பாக பாதுகாப்புப் படையினரைப் போலவே புலிகளுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சாதாரண மக்கள் செறிவாக வாழும் இடங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதாக, பாதுகாப்புப் படையினரைக் குற்றஞ்சாட்டும் அறிக்கை, சாதாரண மக்களைத் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அடைத்து வைத்துக் கொண்டு அவர்களைத் தாக்குதல்களுக்கு இரையாக்கியதாகப் புலிகளைக் குறை கூறுகிறது.

இந்த விடயத்தில், பொதுவாக புலிகளைக் குறை கூறுவதற்குப் பதிலாக மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், புலிகளின் தலைமையை நேரடியாகவும் குற்றஞ்சாட்டுகிறார்.

‘மக்கள் வெளியேறுவதைத் தடுப்பது தொடர்பாக புலிகளிடம் உயர் மட்டத்திலான கொள்கையொன்று இருந்ததாக நம்புவதற்கு, நியாயமான ஆதாரங்கள் இருப்பதை விசாரணை சுட்டிக் காட்டுகிறது’ என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மனிதநேய கடமைகளில் ஈடுபட்ட ஊழியர்கள் உட்பட சாதாரண மக்கள் பாதுகாப்புப் படையினராலும் அவர்களது துணையோடு செயற்பட்ட ஆயுதக் குழுக்களினாலும் கொல்லப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.

குறிப்பாக 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டதாக நம்புவதற்குப் போதிய ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிகிறது என அறிக்கையின் ஓரிடத்தில் குறிப்பிடப்படுகிறது.

புலிகளின் தலைவர்களான யோகி மற்றும் எழிலன் உட்படப் பலர் தொடர்பாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டே இங்கு குறிப்பிடப்படுகிறது என நம்பலாம்.

அதேவேளை, வாகனங்களிலும் ஏனைய இடங்களிலும் தற்கொலைக் குண்டுகளை வெடிக்கச் செய்து புலிகளும் சாதாரண மக்களைப் படுகொலை செய்ததாகக் கூற்றஞ்சாட்டப்படுகிறது.

இது கெப்பத்திகொல்லாவ, தெஹிவளை போன்ற பல இடங்களில் இடம்பெற்ற பஸ் மற்றும் ரயில் குண்டு வெடிப்புக்களைக் குறிப்பதாகத் தெரிகிறது.

சாதாரண மக்களுக்கு உணவு மற்றும் மருந்து வகைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதில் கட்டுப்பாடுகளை விதித்ததாகப் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக குற்றஞ்சுமத்தும் அறிக்கை, இது போர் நடவடிக்கைக்காக மக்களைப் பட்டினியில் போடுவதற்குச் சமமாகும் என்றும் அது நிரூபிக்கப்பட்டால் போர் குற்றமாகும் என்றும் கூறுகிறது.

அதேவேளை, அறிக்கை அத்தியாவசியப் பொருட்கள் மக்களைச் சென்றடைவதை தடுத்ததாக புலிகளையும் குறை கூறுகிறது.

‘மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தாமல் இருப்பதற்குமான தமது கடமையை மதிக்க புலிகள் தவறிவிட்டனர் என்பதை நம்புவதற்கு நியாயமான ஆதாரங்கள் இருக்கின்றன’ என மனித உரிமை உயர்ஸ்தானிகர் தமது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

சாதாரண மக்களை கடத்திச் சென்று காணாமற்போகச் செய்ததாக பாதுகாப்புப் படையினரை அறிக்கை குறை கூறுகிறது.

அதேவேளை, சாதாரண மக்களைப் பலாத்காரமாக போர்க் கடமைகளில் ஈடுபடுத்தியதாகவும் சிறுவர்களைக் கடத்தச் சென்று போரில் ஈடுபடுத்தியதாகவும் புலிகளுக்கு எதிராகவும் குற்றம் சாட்டுகிறது.

ஆட்கடத்தலும் சிறுவர்களைப் படையில் சேர்ப்பதும் போரின் இறுதிக் கட்டத்தில் வெகுவாக அதிகரித்ததாகவும் அது கூறுகிறது.

சிறுவர்களைப் படையில் சேர்த்தமை தொடர்பாக, முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான குழுவையும் அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

கருணா குழு புலிகளிடமிருந்து பிரிந்ததன் பின்னரும் சிறுவர்களைப் படையில் சேர்த்ததாகவும் அதனை அரசாங்கம் அறிந்திருந்தும் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதனால் அரசாங்கமும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒப்பந்தத்தை மீறியுள்ளதாகவும் அறிக்கை மேலும் குற்றஞ்சாட்டுகிறது.

போரின் இறுதிக் கட்டத்தில் சாதாரண மக்களின் பாதுகாப்புக்கென போர்க் களத்தில் போர்த் தவிர்ப்புப் பிரதேசங்களை அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருந்தது.

ஆயினும், அந்தப் பிரதேசத்தில் புலிகளின் போர் நடவடிக்கைகள் இடம்பெற்றிருப்பின் பாதுகாப்புப் படையினர் அப் பிரதேசத்தை இலக்காக்கிக் கொள்வதற்கு அனுமதி இருக்கிறது என மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் கூறுகிறார்.

போர்த் தவிர்ப்புப் பிரதேசத்தில் இருந்த மருத்துவமனைகள், ஷெல் தாக்குதல்களுக்கு இலக்கானதாகக் கூறும் அறிக்கை, பாதுகாப்புப் படையினர் அவை இருக்கும் இடங்களை நன்றாக அறிந்திருந்ததாக மேலும் கூறுகிறது.

புலிகள், மருத்துவமனைகள் போன்ற சாதாரண மக்களின் நலனுக்காக உள்ள இடங்களைப் போருக்காகப் பாவித்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று கூறும் உயர்ஸ்தானிகர், ஆனால், புலிகள் அந்த இடங்களுக்கு மிகவும் அண்மித்த இடங்களில் தமது பதுங்கு குழிகளை அமைத்ததாகவும் அவற்றின் அருகே பீரங்கிகளை வைத்திருந்ததாகவும் கூறுகிறார்.

இதனால் மக்கள் தாக்குதலுக்கு இலக்காகும் அபாயம் ஏற்பட்டதாகவும் இது போர் தொடர்பான சர்வதேசச் சட்டத்தை மீறிய செயலாகும் எனவும் அவர் மேலும் தமது அறிக்கையில் கூறுகிறார்.

பாதுகாப்புப் படையினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் பாலியல் வன்முறைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் மட்டும் புலிகளுக்கு எதிராக சுமத்தப்படவில்லை.

பாதுகாப்புப் படையினரும் புலிகளும் செய்ததாக இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனைத்தும் நீதிமன்றமொன்றினால் நிரூபிக்கப்பட்டால் அவை போர்க் குற்றங்களாகும் என்றும் அறிக்கை விவரிக்கிறது.

போர்க் குற்றங்கள் மற்றும் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்வதேச சட்ட மீறல்களை விசாரிப்பதற்காகப் போதிய சட்டங்கள் இலங்கையில் தற்போது இல்லை.

அதேவேளை, குற்றமிழைத்தவர்களைத் தான் தண்டிக்க முடியுமேயொழிய அதற்காகக் கட்டளையிட்டவர்களை விசாரிக்கவோ அல்லது தண்டிக்கவோ இலங்கையில் சட்டங்கள் இல்லை.

எனவே, அவ்வாறான சட்டங்களைக் கொண்டு வருமாறும், குற்றமிழைத்ததாக நியாயமாக நம்பக்கூடிய பாதுகாப்பு அதிகாரிகளையும் அரச அதிகாரிகளையும் நீக்குமாறும் அறிக்கை அரசாங்கத்தைக் கோருகிறது.

அதேவேளை, அண்மைக் காலத்தில் சமயத் தலங்களைத் தாக்கியோரையும் விசாரணைக்குட்படுத்துவது தொடர்பாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் அளுத்கமவில் பொதுபல சேனாவின் தூண்டுதலினால் முஸ்லிம்கள் தாக்கப்பட சம்பவம் குறிப்பாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல் விடயத்தில் தமது பொறுப்பை ஏற்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்தும் அறிக்கை ‘அதேபோல், புலிகளினால் சாதாரண மக்கள் மீதும் சமூகங்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட அழிவுகள் மற்றும் தீங்குகளைத் தமிழ்ச் சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ எனக் கூறுகிறது.

அந்தக் கோரிக்கைக்கு இணங்க இரு சாராரும் தத்தமது சமூகத்தால் ஏனைய சமூகங்களுக்கும் தமது சமூகத்துக்கும் ஏற்பட்ட அழிவுகளை ஏற்கத் தயாராகி வரும் ஒரு சிறந்த நிலைமை உருவாகி வருகிறது.

புதிய அரசாங்கம் வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றமொன்றின் மூலம் இக் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க முன்வந்தமை அரசாங்கம் அந்தப் பொறுப்பை ஏற்றதை எடுத்துக் காட்டுகிறது.

அதேவேளை, தமிழர்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அந்த ஏற்பாட்டை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த அறிக்கையை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியமானதோர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

‘நாம் கௌரவமாகவும் தன்மானத்துடனும் இலங்கையின் சம பிரஜைகளாகவும் வாழ்வதற்கான ஒரு கலாசாரத்தையும் சூழலையும் உருவாக்கும் வகையில், எமது கடந்த காலத்தைப் பிரதிபலிப்பதிலும் எமது சமூகத்தின் பிழைகள் மற்றும் எமது பெயரால் மேற்கொள்ளப்பட்ட சொல்லொணா குற்றங்களை உள்ளார்ந்து நோக்கும் ஒரு சந்தர்ப்பமாக இந்த சந்தர்ப்பத்தைப் பாவிப்பதிலும் தமிழ் மக்களை வழிநடத்தும் எமது பொறுப்பை நிறைவேற்ற நாம் ஏற்றுக் கொள்கிறோம்’ என அந்த அறிக்கையின் இறுதியில் கூறப்பட்டுள்ளது.

இது ஒரு சிறந்த நிலைமை தான். ஆனால், தமிழர்கள் மத்தியிலும் சிங்களவர்கள் மத்தியிலும் வாழும் தீவிரவாதிகள் இந்தச் சூழலை குழப்பும் அபாயம் இல்லாமலும் இல்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எஜமானியை கொத்த முயன்ற பாம்பை கடித்துக்கொன்று, உயிரை விட்ட நாய்..!!
Next post நமீதாவின் எல்லோரையும் அசர வைக்கும் இதுவரை யாருமே பார்க்காத படு பயங்கர கவர்ச்சி படங்கள்..!!