மயக்க பிஸ்கட் கும்பல் கைவரிசை

Read Time:2 Minute, 56 Second

மும்பை ரெயிலில் சென்னை வந்த வாலிபரிடம் மயக்க பிஸ்கெட் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி ரூ.3 ஆயிரம் ரொக்கம் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நெல்லை மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்தவர் அப்துல்காதர் (வயது 28). இவர் மும்பையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் சென்னையில் நேர்முக தேர்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக மும்பை மெயில் ரெயில் மூலம் சென்னை வந்தார். அந்த ரெயில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. பயணிகள் இறங்கி சென்ற பின்னர், அந்த ரெயில் யார்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது எஸ்2 ரெயில் பெட்டியில் அப்துல் காதர் மயங்கிய நிலையில் இருப்பதை ரெயில்வே போலீசார் பார்த்தனர். உடனடியாக அவர் சென்னை அரசு பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மயக்கம் தெளிந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறியதாவது: மும்பையிலிருந்து ரெயிலில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது குண்டக்கல் ரெயில் நிலையத்தில் டிப்டாப் ஆசாமி ஒருவர் ஏறினார். என்னிடம் நட்பாக பேசி வந்த அவர், பிஸ்கட் கொடுத்தார். அதை நான் வாங்கி சாப்பிட்டேன். அதன் பின்னர் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது என்றார்.

அவரது பொருட்கள் பத்திரமாக உள்ளதா என்று போலீசார் கேட்ட போது, தனது பெட்டியை சோதித்து பார்த்த அவர், தாம்வைத்திருந்த 3 ஆயிரம் ரொக்கம், மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை காணவில்லை என்று கூறினார். இது குறித்து சென்ட்ரல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெயில் பயணிகளிடம் மயக்க பிஸ்கட் கொள்ளையர்கள் மீண்டும் கைவரிசை காட்டத் தொடங்கி யிருப்பது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பிரியங்கா கணவரை கடத்த சதி
Next post வங்காளதேசப் புயலுக்கு 10 ஆயிரம் பேர் பலியா?; நூற்றுக்கணக்கானவர்களை தேடும் பணி நீடிப்பு