By 18 July 2006

இந்தோனேசியாவில் `சுனாமி’ தாக்குதலில் 306 பேர் பலி: கடலில் மூழ்கிய 160 பேர் கதி என்ன?

indonesia.jpgஇந்தோனேசியாவில் 2004-ம் ஆண்டு நில நடுக்கம் ஏற்பட்டு அதை தொடர்ந்து உருவான சுனாமி பேரலையால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் 2 லட்சத்து 83 ஆயிரம் பேர் பலியானார்கள். இதன் பிறகு அந்த பகுதியில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்பட்டு வருகி றது. நேற்று மதியம் 1.50 மணிக்கு இந்தோனேசியா நாட்டில் உள்ள ஜாவா தீவு அருகே கடலில் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இது 7.7 ரிக்டர் ஸ்கேல் ஆக பதிவாகியது.

கடந்த முறை சுனாமி ஏற்பட்ட போதும் கடலில்தான் பூகம்பம் ஏற்பட்டது. அதே போல இந்த முறையும் கடலில் பூகம்பம் ஏற்பட்டதால் சுனாமி ஏற்படலாம் என்ற அச்சம் நிலவியது.

அதை போலவே நில நடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களுக்கு பிறகு சுமத்ரா தீவின் தென் கிழக்கு பகுதியில் கடலில் லேசான கொந்தளிப்பு ஏற்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் ராட்சத அலைகள் உருவானது. கடல் முழுவதும் ஒரு வித கறுப்பு நிறமாக மாறியது. அதன் பின் 6 அடி உயரத்துக்கு சுனாமி பேரலை எழுந்து கடற்கரையை நோக்கி வந்தது.

இதை பார்த்ததும் கடற்கரையில் இருந்தவர்கள் `சுனாமி, சுனாமி’ என்று அலறிக் கொண்டே ஓடினார்கள். ஆனால் அவர்களை முந்தி வேகமாக ஓடி வந்த அலைகள் வாரி சுருட்டிக் கொண்டு கடலுக்குள் இழுத்து சென்றது.

ஜாவா தீவில் பான்கன்டரன் என்ற கடற்கரை நகரம் உள்ளது. இங்கு பல சுற்றுலா விடுதிகள் உள்ளன. சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் விடுதிக்கு வந்து இருந்தனர். அவர்கள் கடற்கரையில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தனர். அவர்களையும் இழுத்து சென்றது.

அதே போல இதை சுற்றி யுள்ள கடற்கரை பகுதிகளில் 150 மைல் தூரத்துக்கு சுனாமி அலை ஏற்பட்டது. 300 அடியில் இருந்து கிலோ மீட்டர் தூரம் வரை ராட்ச அலைகள் நிலப்பகுதிக்குள் புகுந்தன. இதில் பல கடற்கரை கிராமங்களில் கடலோரம் இருந்த வீடுகள் அடித்து செல்லப்பட்டன. மீனவர்களும் அலை களால் இழுத்து செல்லப்பட்டனர்.

இது வரை 306 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 160 பேரை காணவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்களும் இறந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. மீட்புபடையினரும், செஞ்சிலுவை சங்கத்தினரும் அவர்களை தேடி வருகிறார்கள்.

அலையில் இழுத்து செல்லப்பட்டவர்களில் உடல்கள் ஒவ்வொன்றாக கரையில் ஒதுங்கி வருகிறது. அவற்றை மீட்பு குழுவினர் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்ற வண்ணம் உள்ளனர்.

பான்கன்டரன் நகரில் மட்டும் 172 பேர் இறந்துள்ளனர். அவர்களின் உடல்கள் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளன. மஞ்சள் பிளாஸ்டிக் பையில் உடலை அடைத்து அடுக்கி வைத்து உள்ளனர். சியாமிஸ் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் 90 பேர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல பிணங்கள் மரங்களில் தொங்கியபடி கிடந்தன.

கிராமபகுதிகளில் இறந்தவர்கள் பற்றி சரியான விவரங்கள் இன்னும் தெரிய வில்லை. தகவல் தொடர்பு வசதிகள் இல்லாததால் அங்கு ஏற்பட்டுள்ள சேதங்களை தெரிந்து கொள்ள முடியவில்லை. கிராம பகுதி களுக்கும் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். ராணுவத்தினர் இன்று முழு வீச்சில் மீட்பு பணிகளில் ஈடு படுத்தப்பட்டனர்.

கடலில் மிதக்கும் பிணங்களை தேடுவதற்காகவும், மீட்பு படையினர் படகுகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சாவு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று துணை அதிபர் ஜுசுப்கல்லா கூறினார்.

அலையினால் இழுத்து செல்லப்பட்டும், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது.

முதல் நில நடுக்கம் ஏற் பட்ட பிறகு 7 முறை நிலஅதிர்வு இருந்தது. எனவே மீண்டும் சுனாமி வரலாம் என்ற அச்சம் மக்களிடையே நிலவியது. இதனால் அவர்கள் விடிய, விடிய தூங்காமல் இருந்தனர். கடற்கரையை விட்டு நீண்ட தூரம் உள்ளே வந்து பாதுகாப்பான இடங்களில் தங்கினார்கள்.

சுனாமி ஏற்பட்டதுமே பலர் ஓடிச்சென்று அருகில் இருந்த மலைகளில் ஏறினார்கள். இரவு முழுவதும் அவர்கள் அங்கேயே தங்கி இருந்தனர். சிலர் உயரமான மரங்களில் ஏறி அமர்ந்தனர். 23 ஆயிரம் பேர் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். இன்றும் மக்கள் பீதியிலேயே அங்கும் இங்கும் அலைந்தனர்.

கடந்த முறை ஏற்பட்ட சுனாமி பாதிப்பை மக்கள் உணர்ந்து இருந்ததால் இந்த முறை நில நடுக்கம் ஏற்பட்டதுமே சுனாமி வரலாம் என கருதி உஷராக இருந்தனர். இதனால் தான் உயர் சேதம் குறைவாக இருந்தது.

இந்தோனேசியாவில் இன்னும் சுனாமி எச்சரிக்கை கருவி பொருத்தப்படவில்லை. அது இருந்து முன் கூட்டியே எச்சரித்து இருந்தால் இன்னும் சேதம் குறைவாக இருந்திருக்கும் என்று நிபுணர்கள் கூறினார்கள்.Comments are closed.