லெபனான் நாட்டில் இஸ்ரேல் விமானத்தாக்குதலில் 300 பேர் பலி

Read Time:6 Minute, 37 Second

Lepanan.Map1.jpgலெபனான் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 8 நாட்களாக விமானத்தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் மொத்தம் 300 பேர் பலியானார்கள். கிட்டத்தட்ட 500-க்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 2 பேரை பாலஸ்தீனிய தீவிரவாதிகள் கடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்களை விடுவிப்பதற்காக பாலஸ்தீனத்தில் உள்ள காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதன் பிறகு இந்தக்கடத்தலில் லெபனான் நாட்டில் உள்ள ஹெஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக இஸ்ரேலுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அதன்கோபம் லெபனான் மீது திரும்பியது.

பலியான வெளிநாட்டினர்

கடந்த 12-ந் தேதி லெபனான் தலைநகர் பெய்ரூட் விமான நிலையம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசித்தாக்குதல் நடத்தின. அது முதல் கடந்த 8 நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரைக்கும் மொத்தம் 300 பேர் பலியாகி உள்ளனர். 500-க்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். நேற்று ஒரு நாள் மட்டும் 54 பேர் பலியானார்கள். அவர்களில் 21 பேர் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள்.

இறந்தவர்களில் 271 பேர் அப்பாவி பொது மக்கள் ஆவார்கள். அவர்களில் 30 பேர் அன்னியநாட்டினர். 23 பேர் மட்டுமே ராணுவ வீரர்கள். 6 பேர் மட்டும் ஹெஸ்புல்லா தீவிரவாதிகள்.

பலியான வெளிநாட்டினரில் 7 பேர் கனடா குடியுரிமை பெற்ற லெபனான் நாட்டினர் ஆவார்கள். 6 பேர் பிரேசில் நாட்டினர். 2 பேர் குவைத் நாட்டுக்காரர்கள். ஒருவர் ஜோர்டான் நாட்டைச்சேர்ந்தவர் ஆவார். சிரியா, ஈராக் நாடுகளைச்சேர்ந்த தொழிலாளர்களும் பலியாகி உள்ளனர்.

வீடுகள் தரைமட்டம்

இஸ்ரேல் மீது ஹெஸ்புல்லா நடத்திய பதிலடிதாக்குதலில் 25 இஸ்ரேலியர்கள் பலியானார்கள். அவர்களில் 13 பேர் அப்பாவி பொதுமக்கள் ஆவார்கள். 12 பேர் மட்டுமே ராணுவ வீரர்கள் ஆவார்கள்.

பெய்ரூட் விமானநிலையம் மற்றும் ராணுவத்துக்கு சொந்தமான விமானநிலையம் ஆகியவை இந்த விமானத்தாக்குதலில் பலத்தசேதம் அடைந்தன. இதனால் அவை பயன்படுத்தமுடியாத அளவுக்கு சேதம் அடைந்தன. பெய்ரூட்டை இணைக்கும் 38-க்கும் மேற்பட்ட சாலைகள் துண்டிக்கப்பட்டன. 45 பாலங்கள் இடித்துத்தள்ளப்பட்டன. துறைமுகங்களும் சேதப்படுத்தப்பட்டன. 15 பெட்ரோல் நிலையங்கள் குண்டுவீசிக்கொளுத்தப்பட்டன. பெய்ரூட்டில் 5 லட்சம் மக்கள் வசித்த வீடுகள் தரைமட்டமாகிவிட்டன. தெற்கு லெபனானில் 100 வீடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டன.

தரைப்படை நுழைந்தது

தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் தரைப்படை புகுந்தது. அது ஹெஸ்புல்லா தீவிரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதற்கிடையில் காசாநகரில் இஸ்ரேலின் டாங்கிப்படைகள் புகுந்தன. டாங்கிப்படைகளுக்கும், பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கும் கடும் யுத்தம் நடந்தது. இதில் 2 ஹமாஸ் தீவிரவாதிகள் பலியானார்கள். 20 பாலஸ்தீனியர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் 5 பேர் சிறுவர்கள். காசாவில் கடந்த 8 நாட்களில் நடந்த தாக்குதலில் 90 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பாதிபேர் தீவிரவாதிகள்.

வெளியேற்றம்

லெபனான் மீதான விமானத்தாக்குதல் நீடிப்பதால் அங்கு வசிக்கும் வெளிநாட்டினரை வெளியேற்றும் பணியில் அந்தஅந்த நாட்டு அரசுகள் ஈடுபட்டு உள்ளன. 2 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் விமானம் மூலமாகவும், கப்பல்கள் வழியாகவும் வெளியேற்றப்பட்டனர்.

ரஷியா போர்விமானத்தை அனுப்பி அங்கு தங்கி இருக்கும் ரஷியர்களை வெளியேற்ற ஏற்பாடு செய்து உள்ளது. போலந்தும், பல்கேரியாவும் பஸ்களை வாடகைக்கு எடுத்து அனுப்பி உள்ளன.

குற்றச்சாட்டு

2 இஸ்ரேலிய வீரர்கள் கடத்தப்பட்டதில் லெபனானின் ஹெஸ்புல்லாவுக்கும், ஈரானுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவை ஒருங்கிணைந்து செயல்பட்டுத்தான் 2 இஸ்ரேலியர்களையும் கடத்தி உள்ளன என்று இஸ்ரேல் பிரதமர் எகுட் ஓல்மர்ட் குற்றஞ்சாட்டி உள்ளார். ஹெஸ்புல்லாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படமாட்டாது என்றும், அதற்கு இன்னும் காலம் கனியவில்லை என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேல் வீரர்கள் விடுதலை செய்யப்படும் வரை தாக்குதல் தொடர்ந்து நடைபெறும் என்று இஸ்ரேல் அறிவித்து உள்ளது.

ஐ.நா.சபை, லெபனானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக சர்வதேசப் படையை அனுப்பத் தீர்மானித்தது. ஆனால் அமெரிக்கா அதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது. தன்னை காத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது என்று அமெரிக்கா கூறி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வடகொரியாவில் வெள்ளத்துக்கு 100 பேர் பலி
Next post பாகிஸ்தானில் கற்பழிப்பில் ஈடுபட்ட 3 பேர் தூக்கிலிடப்பட்டனர்