மயிலாடுதுறையில் போலீசார் மீது வெடிகுண்டு வீசிய ரவுடியின் கூட்டாளிகள் கைது…!!
மயிலாடுதுறையில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மணிகண்ட கணேஷ், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் ராமதாஸ், சரவணகுமார், ஏட்டுகள் முருகன், செல்வம், சுந்தரமூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதிக்கு போலீசார் சென்றனர். அங்கு உள்ள ஒரு பள்ளி அருகே சிலர் பதுங்கி இருந்தனர். அவர்கள், போலீஸ் வாகனத்தை கண்டதும் நாட்டு வெடி குண்டுகளை போலீசார் வந்த திசையில் வீசி அவர்களை கொலை செய்ய முயன்றனர். பின்னர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் மணல்மேடு அருகே ஆத்தூரை சேர்ந்த மனோகரன் (வயது42), சீர்காழி திட்டை பகுதியை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் (22), சீர்காழி தொடுவாய் கிராமத்தை சேர்ந்த ராஜா (39), கும்பகோணத்தை சேர்ந்த பாலமுருகன் (30), பழனிசாமி (28) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் 5 பேர் மீதும் மயிலாடுதுறை, மணல்மேடு, சீர்காழி, செம்பனார்கோவில், கும்பகோணம் ஆகிய போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், கொலை, கொள்ளை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி வினோத்தின் கூட்டாளிகள் என்பதும் தெரியவந்தது.
பின்னர் போலீசார், அவர்களிடம் இருந்த 3 நாட்டு வெடிகுண்டுகள், 3 அரிவாள்கள், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மணிகண்டகணேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகரன் உள்பட 5 பேரை கைது செய்தனர்.