By 10 November 2016 0 Comments

ஜே.ஆரின் ஆட்சியில் தலைதூக்கிய இனவாதம்…!! கட்டுரை

article_1478491477-untitleசிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகளைப் பறித்து, அவரை ஏழாண்டு அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் தள்ளும் செயலை வெற்றிகரமாக ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி செய்து முடித்திருந்தது. சிறிமாவுக்கு நடந்த ‘அநீதி’க்கு எதிரான முதற்குரல் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியிடமிருந்து வந்திருந்தது. இந்திரா காந்தியின் எதிர்ப்புக்கு அவரும் பெண், சிறிமாவோவும் பெண்; இருவரும் கணவனை இழந்தவர்கள், இந்திராகாந்தியும் இதுபோன்றதொரு அரசியல் பழிவாங்கலைச் சந்தித்தவர் என்று பலரும் ஊகித்த காரணங்களுக்கப்பால் அரசியல் காரணமும் இருந்தது. பண்டிட் ஜவஹர்லால் நேரு மற்றும் எஸ்.டபிள்யு.ஆர்.டீ. பண்டாரநாயக்க ஆகியோரிடையே நல்லதொரு இணக்கப்பாடு இருந்தது.

இருவரது சோசலிஸ, அணிசாரக் கொள்கைச் சார்பு, இந்த உறவு பலப்படக் காரணமாக இருக்கலாம். நேருவின் அணிசேராக் கொள்கையின்பால் இலங்கையை இணைத்துக் கொண்டதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பங்கு முக்கியமானது. இதன் தொடர்ச்சியாக சிறிமாவோ தனது ஆட்சிக்காலத்தில் அணிசேரா நாடுகளின் மாநாட்டை இலங்கையிலும் நடத்தியிருந்தார். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்ப காலங்களிலிருந்தே மேற்கு சார்புடைய கொள்கைகளை உடையதாகவே அடையாளப்படுத்தப்பட்டு வந்ததுடன், முதலாளித்துவக் கட்சியாகவே இன்றும் அடையாளப்படுத்தப்படுகிறது. இதேவேளை 1977 இல் இந்தியப் பொதுத்தேர்தலில் இந்திராகாந்தி தோல்வியடைந்து, பெரும்பான்மை பெற்ற ஜனதாக் கட்சி, மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சியமைத்திருந்தது. இதே ஆண்டு இலங்கைப் பொதுத்தேர்தலில் ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, வரலாறு காணாத வெற்றியைப் பெற்றிருந்தது.

இலங்கையின் தேர்தல் பிரசாரத்தின் போதுகூட ஜே.ஆர் ஜெயவர்த்தன, இந்தியாவில் பசுவும் கன்றும் தோற்றுவிட்டது (இந்திரா காந்தியினதும் சஞ்சய் காந்தியினதும் தோல்வியைச் சுட்டி) இலங்கையிலும் இது நடக்கும் என்று (சிறிமாவோ பண்டாரநாயக்கவையும் அநுர பண்டாரநாயக்கவையும் சுட்டி) பேசியிருந்தார். ஜே.ஆர் ஜெயவர்த்தனவுக்கும் மொரார்ஜி தேசாய்க்குமிடையில் நல்லதொரு புரிந்துணர்வு உருவாகியிருந்தது. இருநாட்டுத் தலைவர்களும் மற்றைய நாட்டுக்கு பரஸ்பரம் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

மொரார்ஜியும் ஜே.ஆரும்

1978 ஒக்டோபரில் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன, இந்திய விஜயத்தை மேற்கொண்டு பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாயைச் சந்தித்திருந்தார். அதன்போது மொரார்ஜி தேசாயை இலங்கையின் சுதந்திர தினத்தில் விசேட அதிதியாகக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார். 1979 பெப்ரவரியில் இலங்கை சுதந்திரதினத்தில் விசேட அதிதியாக ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அழைப்பின்பேரில் கலந்துகொள்ள இலங்கை வந்த அன்றைய பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய், இலங்கை நாடாளுமன்றத்திலும் உரையாற்றியிருந்தார். இலங்கைவந்த பாரதப் பிரதமர், இலங்கை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இந்தியா மத்தியஸ்தம் வகிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், இதை ஜே.ஆர் ஜெயவர்த்தன மறுத்துவிட்டார்.

ஆனாலும் இது இருவரிடையேயான பரஸ்பரப் புரிந்துணர்வைப் பாதிக்கவில்லை. இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியா மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என்ற பாரதப் பிரதமரின் அழைப்புப் பற்றிக் கருத்துத் தெரிவித்த தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரும், இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், “தாம் உள்நாட்டுக்குள் சர்வகட்சி மாநாடு ஒன்று கூட்டப்பட்டு அதன் மூலமான தீர்வொன்றையே விரும்புகின்றோம். ஆயினும் இந்தியாவின் மத்தியஸ்தத்தை இலங்கை அரசாங்கம் ஏற்குமானால் அதுபற்றித் தமக்கேதும் ஆட்சேபனை இல்லை ” எனத் தெரிவித்தார்.

இன்றைக்கு தொடர்ந்து ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் உள்நாட்டுப் பொறிமுறை மூலமே தீர்வு என்று ஒற்றைக்காலில் நிற்கின்றன. ஆனால், தமிழ்த் தலைவர்கள் இதனை அன்றே உறுதியாகச் சொல்லியிருந்தார்கள். அன்று, உள்நாட்டுப் பொறிமுறை மூலமான தீர்வையே தமிழ்த்தலைவர்களும் விரும்பினார்கள். அவர்களுக்கு உள்நாட்டுப் பொறிமுறையின் மேல் அன்று நம்பிக்கையும் இருந்தது. இத்தனைக்கும் இரண்டு தசாப்தகாலத்துக்கும் மேலாக தொடர்ந்து ஏமாற்றப்பட்டிருப்பினும் அவர்கள் அந்த நம்பிக்கையை இழக்கவில்லை. இன்று அந்தச் சூழல் இல்லாமல் போனதற்கு தமிழ்த்தலைமைகளையும் தமிழ் மக்களையும் இலங்கை அரசாங்கம் குற்றம்சொல்ல முடியாது. அன்று தமிழ்த்தலைவர்கள் காட்டிய நல்லெண்ணத்தையையும் தமிழ்த்தலைவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையையும் இல்லாமல் செய்தது யார் என்ற கேள்வியை தமிழ்த் தலைமைகளையும் தமிழ் மக்களையும் சாடுவோரும் இலங்கை அரசாங்கமும் தம்மைத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

ஜனதா கட்சியின் ஆட்சியில் உட்பூசல்களால் கவிழ்க்கப்பட்டு, மறுதேர்தல் நடத்தப்பட்டு, மீண்டும் 1980 ஜனவரியில் இந்திரா காந்தி பாரதப் பிரதமராகிறார். மொரார்ஜி தேசாயோடு இருந்த பரஸ்பர நட்புறவு ஜே. ஆருக்கு, இந்திரா காந்தியோடு இருக்கவில்லை. மறுபுறத்தில், இந்திரா காந்திக்கு சிறிமாவோ பண்டாரநாயக்கவோடு பரஸ்பர நல்லுறவு இருந்தது. ஆகவே, இந்திரா காந்தி, சிறிமாவோவின் குடியியல் உரிமைகள் பறிக்கப்பட்டதை கண்டித்தமைக்குப் பின்னால் இந்த அரசியல்ப் பின்னணி முக்கிய பங்கு வகித்திருக்கும் எனலாம். எது எவ்வாறெனினும், இவை ஜே.ஆரை அசைப்பதாக அமையவில்லை. தான் செய்ய நினைத்தவைகளை தயவு தாட்சண்யமின்றி தனது பெரும்பான்மைப் பலத்தைக்கொண்டு ஜே.ஆர். நடத்திக்கொண்டிருந்தார்.

ஜே.ஆரின் பொருளாதார தாராளமயமாக்கல்

சிறிமாவோவினதும் ‘தோழர்களினதும்’ ஆட்சியில் மூடப்பட்டு, அதனால் முடங்கிப்போயிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை திறந்த தாராளவாத பொருளாதார முறைக்கு மாற்றுவதில் ஜே.ஆர் ஆட்சிப்படியேறிய நாள் முதலே அக்கறை காட்டினார். உடனடியாகத் திறந்த வர்த்தக வலையங்களை உருவாக்கி, முதலீட்டினை ஈர்க்கும் செயற்பாடுகளைத் துரிதகதியில் ஆரம்பித்திருந்தார். இதேவேளை, டட்லி சேனநாயக்கவின் கனவுத் திட்டமான மகாவலி அபிவிருத்தியை துரித கதியில் மேற்கொண்டு செல்வதிலும் முனைப்புக் காட்டினார். மேற்குலகுடனான ஜே.ஆரினதும் ஐக்கிய தேசியக் கட்சியினதும் நட்புறவு இந்தத் திட்டங்களுக்கு நிதிவசதிகளைப் பெற்றுத்தந்தது. மகாவலி அபிவிருத்திக்கென தனி அமைச்சு அமைக்கப்பட்டு, அது காமினி திசாநாயக்கவின் பொறுப்பில் விடப்பட்டது. ஜே.ஆரின் இந்த முயற்சியின் விளைவாகவே விக்டோரியா, கொத்மலை, மாதுறு ஓயா, ரன்தெனிகலை நீர்த்தேக்கங்களும் அணைகளும் உருவாயின. இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் இவற்றின் பங்கு அளப்பரியது.

தலைதூக்கிய இனவாதம்

ஒருபுறத்தில் அடைபட்டுக் கிடந்த பொருளாதாரக் கதவுகளை திறந்துவிட்ட ஜே.ஆர், மறுபுறத்தில் தனது அரசாங்கத்துக்குள் இருந்து வந்த இனவெறியைக் கண்டுகொள்ளவில்லை. தமிழ் மக்கள் மீது இனவெறுப்பைக் கட்டவிழ்த்து விடும் முகமாக அமைச்சர் சிறில் மத்யூ, வடமாகாணத்தில் தமிழர்கள் அங்குள்ள பௌத்த புனித ஸ்தலங்களை அழித்தொழிப்பதாக நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார். பௌத்தம் என்பது இலங்கை அரசியல் தலைவர்களுக்கு பெரும்பான்மை மக்களை மந்தைகளாக மேய்கக்கூடியதொரு உணர்வுபூர்வமான ஆயுதமாக பயன்பட்டது என்பதுதான் உண்மை.

நாட்டிலே எப்போது சிறுபான்மையினத்தவர் மீது இனவெறியைத் தூண்டிவிடவேண்டுமானாலும் அதற்குப் பௌத்த விகாரைகளையும் புத்தர் சிலைகளையும் பௌத்த பிக்குகளையும் மறைமுகமாகப் பயன்படுத்துவது இலங்கை அரசியலில் சர்வசாதாரணமாகிவிட்டது.

சிறில் மத்யூ உள்ளிட்ட இனவாதிகளின் ஆட்டம்

அமைச்சர் சிறில் மத்யூ உள்ளிட்ட பேரினவாதிகளின் இனவெறி இத்துடன் நின்றுவிடவில்லை. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஒடுக்குமுறைகளுள் முக்கியமானது பல்கலைக்கழக அனுமதிகள் தொடர்பிலான தரப்படுத்தல் முறையாகும். இந்தத் தரப்படுத்தல் முறையினால் திறமையும் கடின உழைப்புமிருந்தும் தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு மட்டுப்படுத்தப்பட்டது. தாம் ஆட்சிக்கு வந்தால் தரப்படுத்தலை இல்லாதொழிப்போம் என்று சொன்ன ஐக்கிய தேசியக் கட்சி, 1977 இல் ஆட்சியமைத்ததன் பின் சிறிமாவோ அறிமுகப்படுத்திய தரப்படுத்தல் முறையை இல்லாதொழித்தது.

அதற்குப் பதிலாக பல்கலைக்கழக அனுமதிகளின் எண்ணிக்கையை அதிகரித்ததுடன், பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களுக்கு சிறப்புரிமைகள் சிலதை வழங்கும் புதுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் பின் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் எண்ணிக்கை சற்றே அதிகரித்திருந்தது. பல்கலைக்கழக அனுமதி பெற்ற தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையானது சிங்களப் பேரினவாதிகளைக் கோபம் கொள்ளச் செய்தது. அத்தகைய பேரினவாதிகளின் குரலாக அமைச்சர் சிறில் மத்யூ போன்றவர்கள் பேசத்தொடங்கினார்கள். தமிழ்ப் பரீட்சகர்கள் தமிழ் மாணவர்களுக்கு அதிக புள்ளிகளை அள்ளி வழங்குவதன் மூலம் அவர்களை அதிகளவில் பல்கலைக்கழகம் அனுப்புகிறார்கள் என்ற கருத்தை மீண்டும் பரப்புரை செய்தார்கள். சிறிமாவோவின் ஆட்சியில் தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இதே ஆதாரமற்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அவ்வாறு நடப்பதற்கு சாத்தியமேயில்லை எனப் பல நடுநிலையாளர்கள் ஆதாரபூர்வமாக இந்தக் குற்றச்சாட்டினை மறுத்திருந்தார்கள். ஆயினும், இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் பெரும்பான்மை மக்களிடம் இலகுவாகப் பரப்பப்படக் கூடியதாகவும் அவர்களை நம்பவைக்கக் கூடியதாகவும் இருந்தமையினால், மீண்டும் சிறில் மத்யூ உள்ளிட்டோர் இந்த பொய்ப்பிரசாரத்தை முன்னெடுத்தார்கள். இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் சிறில் மத்யூ, நாடாளுமன்றத்தில் முன்வைத்தபோது, தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். சிவசிதம்பரம் கொதித்தெழுந்தார். “நாம் எதனையும் ஏற்றுக்கொள்வோம்; ஆனால், நேர்மையற்றவர்கள் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் பரீட்சகர்கள் நேர்மையற்ற முறையில் தமிழ் மாணவர்களுக்கு அதிக புள்ளிகளை வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு இத்தோடு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஒரு நாளைக்கு 18 – 19 மணித்தியாலங்கள் செலவழித்து கஷ்டப்பட்டு படித்துப் புள்ளிகள் பெறும் மாணவர்களை நோகடிக்கும், இழிவுசெய்யும் கருத்துக்கள் இவை” என்று உறுதியாகப் பதிலுரைத்தார்.

ஆனால், சிறில் மத்யூ உள்ளிட்ட சிங்களப் பேரினவாதிகளின் பிரசாரம் இறுதியில் வெற்றிகண்டது. சிறிமாவின் தரப்படுத்தல் முறையை இல்லாதொழித்த ஐக்கிய தேசியக் கட்சி, மாவட்டக் கோட்டா முறையை அறிமுகப்படுத்தியது. இதன்படி பல்கலைக்கழக மொத்த அனுமதியில் 30 சதவீதம் மட்டுமே தேசியளவில் திறமை அடிப்படையில் வழங்கப்படும் எனவும் 55 சதவீதம் மாவட்ட சனத்தொகையின் அடிப்படையில் மாவட்ட கோட்டாக்களாகவும் மீதி 15 சதவீதம் பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களுக்கும் வழங்கப்படும் எனும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சிறிமாவின் மொழிவாரித் தரப்படுத்தலளவுக்கு தமிழ் மாணவர்கள் பாதிக்கப்படவில்லை என்றாலும், தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியை இம்முறையும் பாதிக்கவே செய்தது.

இத்தோடு, சிறில் மத்யூ உள்ளிட்ட பேரினவாதிகளின் செயற்பாடுகள் நின்றுவிடவில்லை. இலங்கை ஒரு சிங்கள – பௌத்த நாடு என்பதை அவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்திக் கொண்டே இருந்தார்கள். ஒருமுறை நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் சிறில் மத்யூ, “இலங்கை ஒரு காலத்தில் ‘சிங்ஹலே’ என்றே அழைக்கப்பட்டது. இது பௌத்த நாடு. இந்த விடயத்தை எவரும் மறுக்கமுடியாது. எந்த ஆட்சியாளர்களும் இந்தக் கருத்தை மறக்கவும் முடியாது. அப்படி எந்த ஆட்சியாளராவது இதனை மறந்தால் அவர்களால் 24 மணிநேரத்துக்கு மேலாக ஆட்சியில் நீடிக்க முடியாது. கண்டிய ஒப்பந்தத்தின்படி இலங்கையானது சிங்களவர்களுக்கான பௌத்தநாடு என்ற உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது” என்று பேசினார். இத்தகைய மிகப்பாரதூரமான இனவாதவெறியைக் கக்கியவர்கள் இவர்கள்.

சிங்கள – பௌத்த மக்களிடம் உணர்ச்சிகரப் பிரசாரங்கள் மூலம் இந்த இனவெறியை பரப்பினார்கள். இதற்காக சிறில் மத்யூ, “சிங்களவர்களே! பௌத்தத்தைப் பாதுகாக்க எழுக” என்ற புத்தகத்தையும் எழுதினார். இந்த இனவாதம் கக்கும் விஷச்செடிகளை ஜே.ஆர் தனது அமைச்சரவையில் வைத்திருந்தார். சிங்கள – பௌத்த தீவிரவாத சக்திகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக ஜே.ஆர் இவர்களைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், அதற்கு ஜே.ஆர் கொடுத்த விலை மிகப்பெரியது. இந்தநாட்டு, மக்களின் அமைதி, நிம்மதி, உதிரம், உயிர் எனப் பெரும் விலையை, இந்த இனவாதம் பலியெடுத்த காலம் வெகுதொலைவில் இருக்கவில்லை.

1983 இல் ‘கறுப்பு ஜூலை’ எனும் திட்டமிட்ட இனவழிப்பை முன்னின்று செய்தவர்கள் எனக்குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்களின் சிறில் மத்யூ முக்கியமானவர். ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின் கறுப்புப் பக்கங்கள் மெதுவாகத் திறக்கத் தொடங்கின.Post a Comment

Protected by WP Anti Spam