By 7 June 2017 0 Comments

நீர்ப்பாசனத் திட்டங்கள் ஊடாக கிழக்குக்கு அரசாங்கம் கூறும் செய்தி..!! (கட்டுரை)

image_9bc5d521c0இலங்கையின் முதலாவது பிரதமராக இருந்த ‘தேசபிதா’ என்று எல்லோராலும் அழைக்கப்படுகிற டி.எஸ்.சேனாநாயக்க நாட்டின் வளர்ச்சிக்கு பாரியளவிலான சேவைகளைச் செய்திருக்கின்றார்.

முக்கியமாக நாட்டில் விவசாயத்துறையை கட்டியெழுப்புவதற்கு அவர் செய்த சேவை அளப்பரியது. இவரது பேரன்தான் இலங்கை நாட்டின் தற்போதைய நீர்ப்பாசன மற்றும் நீரியல்வளத்துறை இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க.

நீர்ப்பாசனம், நீர்வளத்துறை சார்ந்தும் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், பிரச்சினைகளும் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

அவை தொடர்ந்த வண்ணமும்தான் இருக்கின்றன. இருந்தாலும் இரண்டு வருடங்களாகிற நல்லாட்சி அரசாங்கத்தின் ஓர் இராஜாங்க அமைச்சர் ஏன் இப்போதுதான் கிழக்குக்கு விஜயம் செய்தார் என்பது கேள்வி. இது சாதாரணமான விஜயமாகக்கூட இருக்கலாம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டிலிருந்த சமயத்தில், திருகோணமலைக்குச் சென்ற இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க, மட்டக்களப்புக்கு வந்து, ஒருநாள் தங்கியிருந்து, மறுநாள் காலையில் மட்டக்களப்பு வல்லுநர்கள் மன்றத்தைச் சந்தித்திருக்கிறார்.

அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றனர். பின்னர் அரச அதிகாரிகளுடன் மாவட்ட அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.

அதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாரிய நீர்ப்பாசனக் குளங்களை முந்தனை ஆற்றுடன் இணைப்பதன் ஊடாக விவசாயச் செய்கையை அதிகரிக்கலாம் எனத் தெரிவித்த அவர், உன்னிச்சை, உறுகாமம், நவகிரி போன்ற குளங்களின் நீரை வீணாக்காது, முந்தனை ஆற்றுடன் இணைப்பதனூடாக அனைத்துப் பிரதேசங்களுக்குமான நீர்ப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதுடன், சீரான நீர்விநியோகத்தையும் மேற்கொள்ளமுடியும். முறையான திட்டமிடல்களின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நீர்ப்பாசன முறைகளை ஒழுங்குபடுத்தினால், இப்பிரதேசத்தின் நெற்செய்கையை மேலும் மேம்படுத்தவும் முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

திடீரென ஓர் இளம் அமைச்சர், மட்டக்களப்புக்கு வந்து இங்கு மேற்கொள்ளத்திட்டமிட்டிருக்கிற ஒரேயொரு, பெரிய திட்டமான முந்தனையாற்றுப்படுக்கைத் திட்டத்தைப் பற்றிப்பேசியதுடன், இங்குள்ள நீர்ப்பாசனம் தொடர்பான தேவைப்பாடுகள் குறித்தும் கலந்துரையாடியிருக்கிறார். ஆனால், அவர் அவை தொடர்பான எந்த விதமான சரியான தீர்மானங்களையும் அறிவிக்கவில்லை.

ஆனால், மாவட்டத்தின் அதிகாரிகளுக்காக இரண்டு மணிநேரம் ஒதுக்கப்பட்டிருந்த போதும், அரை மணிநேரத்திலேயே கூட்டம் முடிவடைந்தது. மாவட்ட அபிவிருத்தி என்ற விடயத்தை நீர்ப்பாசன அமைச்சர் எப்படிப் பார்க்க முடியும் என்று திணைக்களத்தின் தலைவர்கள், நினைத்தார்களோ என்னவோ வெறும் நீர்ப்பாசனம் சார் கூட்டமாக மாறிப்போனதற்கு அக்கறையற்ற தன்மை காரணமாக இருக்கலாம் என்று கருத்துகள் நிலவுகின்றன.

இந்த இடத்தில்தான் மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு எல்லையாக இருக்கிற பொலநறுவையை அண்டிய பகுதிகளில் குளங்களுக்குச் செல்லும் நீரைச் சட்ட விரோதமான முறையில் மறித்து விவசாயம் செய்வதனால் ஏற்பட்ட பிரச்சினை தொக்கி நிற்கிறது.

இந்தச் சட்டவிரோத நடவடிக்கை காரணமாக வாகனேரி மற்றும் புணானை நீர்ப்பாசன திட்டத்தின் கீழுள்ள சுமார் 10 ஆயிரம் ஏக்கர் வேளாண்மை கருகி நாசமாகும் நிலை உருவாகியிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்திருந்தனர்.

பொலன்னறுவை, மாதுறுஓயாவிலிருந்து மட்டக்களப்பு, வாகனேரிக் குளத்துக்கு கொண்டுவரப்படும் நீரை புணானை மேற்கு மற்றும் மயிலந்தனை பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மறித்து வேளாண்மைச் செய்கை நடைபெற்று வருகிறது.

மாதுறுஓயா குளத்திலிருந்து சிறுபோகச் செய்கைக்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரி மற்றும் புணானை குளங்களுக்கு வருடாந்தம் நீர் வழங்கப்பட்டு விவசாய செய்கை நடைபெறுகிறது.

மதுறுஓயா குளத்திலிருந்து இம்முறை திறக்கப்பட்ட 16 ஆயிரம் ஏக்கர் கனஅடி நீர் மயிலந்தனைப் பகுதியில் சட்டவிரோதமாக மறிக்கப்பட்டதால் விலாலோடை அணை உடைப்பெடுத்து நீர் கடலுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது.

மயிலந்தனை பகுதியில் இராணுவத்தினர் விவசாயம் செய்வதனால் குறித்த பகுதியில் தடுப்பு அணை ஏற்படுத்தி கூடுதலான நீர் தேக்கி வைக்கப்பட்டிருந்ததால் விலாலோடை அணை உடைப்பெடுத்து விவசாயத்துக்கு கொண்டுவரப்பட்ட நீர் உப்பாற்றில் கலந்து கடலுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக விவசாயத்தை சிறந்த முறையில் மேற்கொள்ள முடியாமல் வேளாண்மை கருகிப் போகும் நிலையும் ஏற்பட்டது.
இச் சிறுபோகத்தில் மாதுறு ஓயா குளத்திலிருந்து 16 ஆயிரம் ஏக்கர் கனஅடி நீர் மூலம் வாகனேரி திட்டத்தின் கீழ் 8,456 ஏக்கரிலும் புணானை திட்டத்தின் கீழ் 1,565 ஏக்கரிலும் சிறுபோக வேளாண்மை செய்யத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

பொலன்னறுவை, மாதுறுஓயா நீர்பாசன திட்டத்திலிருந்து வாகனேரி நீர்ப்பாசன திட்டத்துக்கு வருடாந்தம் 40 ஆயிரம் ஏக்கர் கனஅடி நீர் வழங்கப்பட்டு, விவசாயிகள், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். ஆனால், வரட்சி காரணமாக இந்த ஆண்டு 16 ஆயிரம் ஏக்கர் கனஅடி நீர் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.

மாதுறுஓயாவிலிருந்து வரும் நீர் கடலுக்குச் செல்லாமல் விவசாயிகளின் ஒத்துழைப்புடன் 17,000 உரப்பை கொண்டு விலாலோடை அணையை அமைத்து, இடையிலுள்ள சட்டவிரோத தடுப்பு அணைகள் அகற்றப்பட்ட நிலையில் மயிலந்தனையில் அமைக்கப்பட்ட அணையினை மாத்திரம் விவசாயிகளால் அகற்ற முடியாமல் போனது. இந்த நிலையில் விலாலோடை அணைக்கட்டு உடைப்பெடுத்த அபாயம் உருவாகியிருக்கிறது.

இருப்பினும் அபாய நிலை விவசாய அமைப்புகள் முன்வைத்த வேண்டுகோள்களுக்கமைய கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் இப்பிரச்சினை தொடர்பில் இராணுவத்தின் 23ஆவது படைப்பிரிவு கட்டளை அதிகாரியுடன் கலந்துரையாடி சுமூக நிலைக்குக் கொண்டுவந்து தணித்து வைக்கப்பட்டது.

இலங்கையின் அனேகமான பிரதேசங்களின் நீரைக் கடலுக்குக் கொண்டு செல்கின்ற, அனைத்துவிதமான இயற்கை அனர்த்தங்களையும் எதிர்கொள்ளும் மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இருந்து வருகிறது. இந்த மாவட்டத்துக்கு அம்பாறை, பொலநறுவை, பதுளை எனப்பல மாவட்டங்களிலிருந்தும் நீர் வருகிறது.

இருப்பினும் இவ்வருடம் நாட்டில் வரட்சி காரணமாக அவற்றின் அளவுகள் குறைக்கப்பட்டும், நீர் வழங்க அனுமதியின்றியும் சிறுபோக செய்கை நடைபெற்று வருகிறது. இதை எதிர் கொள்வதற்கு கடந்த வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட பாரிய, சிறிய குளங்களின் அபிவிருத்தி கைகொடுக்கிறது என்பது ஒரு பக்கம்.

ஆனால், இச்சம்பவம் நடைபெற்று சரியாக ஒரு வார காலத்துக்குள் நீர்ப்பாசன மற்றும் நீரியல் வளத்துறை இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க இந்தப் பிரச்சினைகளைத் தணித்து வைக்கத்தான் வந்திருக்கிறார் என்றும் எண்ணம் தோன்றுகிறது. இருந்தாலும் எந்த ஓர் இடத்திலும் இந்தப்பிரச்சினை சுட்டிக்காட்டப்படவேயில்லை. ஏன் என்பது தெரியவேயில்லை.

அமைச்சரைச் சந்தித்த மட்டக்களப்பு துறைசார் வல்லுநர்கள் மன்றத்தின் பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாவட்டத்தின் நீர்ப்பாசனத் துறையில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்திகள் தொடர்பாகக் கலந்துரையாடியதுடன், பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்திருக்கின்றனர்.

உன்னிச்சைக் குளம் மேலும் இரண்டு அடி உயர்த்தப்படுவது, மாவிலாற்றை திசை திருப்பி ஆண்டான்குளம், தோணிதாண்டமடு, மாணிக்கங்குளம், கட்டுமுறிவு ஆகிய குளங்களின் நீர்வளத்தை அதிகரிப்பது. கட்டுமுறிவு மற்றும் வாகனேரி குளங்களிலிருந்து பாசன நிலங்களுக்கான முழுமையான கொங்கிறீட் கால்வாய்கள் அமைக்கப்படவேண்டும்.

மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குட்பட்ட மதுரங்கேணி, கிரிமிச்சை,புழுக்குணாவ, அடைச்சகல் மற்றும் மியாங்குளம் போன்ற குளங்களை மேம்படுத்தி அதன் கொள்ளளவை அதிகரிப்பதன் மூலம் மேலதிக நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்திக் கொடுக்கமுடியும்.
கமநலசேவைத் திணைக்களத்துக்கு உட்பட்ட தூர்ந்துபோயுள்ள 300 சிறிய குளங்களை புனர்நிர்மாணம் செய்து நடுத்தர குளங்களாக மாற்றுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

மாவட்டம் பூராக இவ்வாறான ஏறத்தாள 900 சிறிய குளங்கள் இருந்தபோதும் பராமரிப்பின்மையால் தற்போது பெயரளவில் எஞ்சியுள்ள 300 குளங்களையாவது புனர்நிர்மாணம் செய்யவேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முந்தனையாற்றுப் படுக்கைத் திட்டத்தில் றூகம் – கித்துள் நீர்த்தேக்க இணைப்புத் திட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் நிறைவுறும் பட்சத்தில் விவசாயச் செய்கை அதிகரிக்கும். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறத்தாள 190,000 ஏக்கர் பயிர் செய்யக்கூடிய நிலங்கள் இருந்தபோதும் தற்போது ஏறத்தாள 60,000 ஏக்கர் மட்டுமே பயிரிடப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட நீர்ப்பாசனத் துறை அபிவிருத்திகள் மூலம் ஏறத்தாள 100,000 ஏக்கர் பயிர்ச்செய்கை செய்யமுடியும் என மட்டக்களப்பு துறைசார் வல்லுநர்கள் மன்றம் எதிர்பார்க்கின்றது. இதனூடாக நாட்டின் மொத்த நெல்லுற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பங்களிப்பான 4-5 வீதம் இருமடங்காகும் என மன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அரசியலை ஒதுக்கிவிட்டு அபிவிருத்தியைப்பற்றி சிந்திக்க முடியாது, அந்தவகையில் அரசியலும் அபிவிருத்தியும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவைகளே.

மட்டக்களப்பு மாவட்டமானது யுத்த காலங்களிலும் சரி, யுத்த நிறுத்த காலத்தில் ஏற்பட்ட சுனாமிக்காலத்திலும் சரி, அதன் பின்னரான இன்றைய காலகட்டத்திலும் சரி பல்வேறு நிதி வரவுகளைக் கண்டுகொண்டே இருக்கிறது.

ஆனாலும் பெற்ற நிதிகள் செலவு செய்யப்பட்டனவே தவிர நிலைத்திருக்கும் அபிவிருத்தியை நோக்கி எத்தனை வீதம் முன்னேறியிருக்கிறது என்ற கேள்வியை மட்டுமே கேட்க முடிகிறது. இந்த நிதிகள் மக்களின் பிடிமானமில்லாப் போக்கில் எந்த வித மாற்றத்தினையும் கொண்டுவரவில்லை.

இன்றும் நிதிக் கம்பனிகளையும், வங்கிகளையும் நாடிக் கடன்பெற்று காலம் கடத்துபவர்களாகவே மக்கள் வாழ்கின்ற நிலைமையில் மாற்றத்தினை கொண்டவருவதற்கு உற்பத்தித்துறையானது மேம்படுத்தப்படுவதுடன், மக்களின் மனோநிலையிலும் முயற்சியிலும் மாற்றம் ஏற்படுத்தப்படவேண்டும்.

கால ஓட்டத்தின் வேகத்தில் செல்ல முடியாதவர்கள் காணாமல் போவார்கள் என்ற வார்த்தை அர்த்தம் பொதியாததல்ல. கிழக்கைப் பொறுத்தவரையில் விவசாயமும் மீன்பிடியும் முக்கியம் பெறுகின்றன. இதில் விவசாயத்துறைக்கு நீர்ப்பாசனம் என்பது மிகவும் இன்றியமையாதது. இதன் மேம்பாடு மக்களையும் முன்னேற்றும்.

தமிழர் பிரதேசங்களைப் பொறுத்தவரையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரியளவான வரவேற்பு இருந்தது என்று சொல்லிக் கொள்வதற்கு முடிவதில்லை. ஏன் பெரும்பான்மைக்கட்சிகள் எதற்கும் பெரியளவுக்கு வரவேற்பில்லை.

இருந்தாலும் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களை அக் கட்சியைப்பிரதிநிதித்துவப்படுத்தி ஏதோ பெற்றுக்கொள்கிறார்கள். அதுவும் வேறு கட்சிகளை இணைத்துக்கொள்வதன் மூலம். அது போன்றதொரு நிலை கரணமாக அவர்களது கட்சிகளுக்குரியவர்களாக தேர்தலின் பின்னர் மாறி விடுகின்றனர்.

இந்த நிலையில், ஐக்கிய தேசியக்கட்சியினைப்பலப்படுத்திக்கொள்ளவேண்டிய தேவை உருவாகியிருக்கிறது. இந்தப் பலப்படுத்தலை கிழக்கிலிருந்து ஆரம்பிப்பதற்கான முயற்சியாகக் கூட வசந்த சேனாநாயக்கவின் விஜயங்கள் அமைந்திருக்கலாம். ஆனாலும் மாற்றத்தினை ஏற்படுத்துவது தேசபிதாவின் வாரிசாக இருப்பது சிறப்புதான். அது நடக்குமா இல்லையா என்பது கேள்விக்குறி.

இந்த இடத்தில்தான் ஜனாதிபதியின் மாவட்டத்தைச் சேர்ந்த தேசபிதாவினது பேரனின் மட்டக்களப்பு விஜயம் மாவட்ட அபிவிருத்தியில் பங்காற்றுமா? தேசபிதா சேனாநாயக்காவின் பேரன் கொண்டு வந்த செய்தி என்ன என்றெல்லாம் பல கேள்விகள் எழுந்த வண்ணமிருக்கின்றன.Post a Comment

Protected by WP Anti Spam