By 19 January 2018 0 Comments

சுமந்திரன் சுற்றும் வாளும், அகப்படும் ஊடகங்களும்.. -புருஜோத்தமன் தங்கமயில் (சிறப்புக் கட்டுரை)

தமிழ்த் தேசிய அரசியலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அரசியல் என்பது, கூட்டமைப்புக்கு எதிரான நிலையிலிருந்து, தமிழரசுக் கட்சிக்கு எதிரான நிலையாக மாறி, இன்றைக்கு அது, எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான அரசியலாக மாறி நிற்கின்றது.

ஒரு முனையில் சுமந்திரனும் மறுமுனையில் சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்களும் நிற்கின்றனர். (அவர்களோடு சந்தர்ப்பத்துக்குத் தகுந்த மாதிரி, தமிழ் மக்கள் பேரவையும் சில புலம்பெயர் தரப்புகளும் இணைகின்றன)

சுமந்திரனுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடுகளின் போக்கில், எதிர்முனையிலுள்ளவர்கள் அவ்வப்போது இணைந்தாலும், அவர்களுக்கு இடையில் தெளிவான புரிதலும், கூட்டுணர்வும் இல்லாத நிலையில், எதிர்முனையும் பல கூறுகளாகப் பிரிந்து கிடக்கின்றது.

கூட்டமைப்பின் முக்கிய முடிவுகளை, இரா.சம்பந்தனும் சுமந்திரனுமே அதிக தருணங்களில் எடுக்கின்றார்கள். அவர்கள் எடுக்கும் முடிவுகளைப் பங்காளிக் கட்சிகளிடமும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கொண்டு சேர்ப்பதற்காகவே ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்கள் கூட்டப்படுகின்றன.

தேர்தல் கால ஆசனப் பங்கீடுகளுக்காகக் கூட்டப்படும் கூட்டங்களைத் தவிர, நிலைமை பெரும்பாலும் இப்படித்தான் இருக்கின்றது. கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் முடிவுகள் தொடர்பில் பங்காளிக் கட்சிகளினால் முன்வைக்கப்படும் கேள்விகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டு பதிலளிப்பதோடு ஆரம்பிக்கும் சுமந்திரனின் முனைப்புப்பெறும் பயணம், கூட்டமைப்புக்கு மாற்றான தரப்பினரால், அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சேர்ப்பிக்கப்படுகின்றது.

சுமந்திரன், கடந்த ஐந்து ஆண்டுகளில் பெற்றிருக்கின்ற முக்கியத்துவம் இதன்போக்கில் வந்ததுதான்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான அலை, வடக்கில் மாத்திரமின்றித் தெற்கிலும் நிலையெடுக்க ஆரம்பித்த புள்ளியில், தமிழ் மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு வாக்களிப்புக்கு தயாரானார்கள்.

மஹிந்தவுக்கு எதிராக யார் நிறுத்தப்பட்டாலும், அவரை ஆதரிக்கும் நிலைப்பாடொன்றுக்கு 2013களிலேயே கூட்டமைப்பு வந்துவிட்ட போதிலும், ஜனாதிபதித் தேர்தலுக்கு ஆறு நாட்கள் இருக்கும் நிலையில், மைத்திரிபால சிறிசேனவுக்கான ஆதரவை, ஊடகங்களை அழைத்துச் சம்பந்தன் வெளியிட்டார்.

இது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சிவில் சமூக அமைப்புகள், புலம்பெயர் தரப்புகளினால் விமர்சிக்கப்பட்டது. அப்போது, கூட்டமைப்புக்குள் இருந்த சுரேஷ் பிரேமச்சந்திரனாலும் விமர்சிக்கப்பட்டது.

ஆனால், அந்த ஊடகச் சந்திப்புக்குப் பின்னால், சுமந்திரனின் பங்கு நிறையவே இருந்தது. தெற்கோடு வெளிப்படையான உரையாடலொன்றைச் செய்ய வேண்டும் என்றும், அதற்கான ஆரம்ப ஏற்பாடுகளாக மைத்திரிக்கான கூட்டமைப்பின் வெளிப்படையான ஆதரவைக் கொள்ள முடியும் என்றும் அவர் அப்போது கூறியிருந்தார்.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சுமந்திரன், கடந்த பொதுத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்த புள்ளியில், கூட்டமைப்புக்குள் இருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்களும், கூட்டமைப்புக்கு மாற்றான தரப்பு என்று தங்களை அடையாளப்படுத்தியவர்களும் சுமந்திரனை எதிர்முனையில் நிறுத்தியே தமது பிரசாரங்களை முன்னெடுக்க ஆரம்பித்தனர்.

அன்றைய தருணத்திலிருந்து, இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வரை, அந்த நிலைமையே நீடிக்கின்றது. இன்றைக்கு, கூட்டமைப்பு என்பது, சம்பந்தனும் சுமந்திரனும் என்கிற நிலைமை கட்டமைக்கப்பட்டுவிட்டது.

சுமந்திரன் எதிர்ப்புகள் இல்லாத அரசியலைச் செய்ய நினைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் ஏதோவொரு தரப்பு, தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் முன்வைக்க வேண்டும் என்று விரும்புகின்றார்.

ஆனால், அந்தத் தரப்பு பலவீனமான தரப்பாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றார். பல, பலவீனமான தரப்புகள் ஒன்றாக இணைந்து, பலமான தரப்பாக மாறும் வாய்ப்புகள் உருவாகும் போதெல்லாம், அதைக் கலைத்தும் விட்டிருக்கின்றார்.

ஆக, பலமற்ற பல எதிரிகளை வைத்துக் கொண்டு, அவர்கள் மூலம் பலம்பெறுவதை அவர் விரும்புகின்றார். அதனூடு மக்களிடம் பெரும் ஆளுமையாகவும் வளர நினைக்கின்றார்.

“…புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில், ஒற்றையாட்சி இலங்கைக்குப் பொருத்தமற்றது என்று கூறப்பட்டுள்ளது. ‘ஏக்கிய இராஜ்ய’ என்பது ஒற்றையாட்சி அல்ல; அது, ஒருமித்த நாடு என்றும் இடைக்கால அறிக்கையில் எழுதப்பட்டிருக்கின்றது. ஒருமித்த நாடு என்பதற்கே நாங்கள் இணங்கினோம். ஆனால், நாங்கள் ஒற்றையாட்சிக்கு இணங்கிவிட்டோம் என ஊடகங்கள் பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறுகின்றன. இடைக்கால அறிக்கையில், தமிழ் மக்கள் ஏற்காத ஒரு விடயம் கூட இடம்பெறவில்லை. எனவே, ஊடகங்கள் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும். நீங்களாகத் திருந்த வேண்டும். இல்லையேல் திருத்தப்படுவீர்கள். மக்களாக ஊடகங்களைத் தூக்கியெறியும் நிலை உருவாகும்…”

யாழ்ப்பாணத்தில், சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டமொன்றில் உரையாற்றும்போது, சுமந்திரன் ஊடகங்களை நோக்கி, மேற்கண்டவாறு எச்சரிக்கும் தொனியில் கூறியிருந்தார்.

ஊடகங்கள், தங்களை எவ்வளவுதான் விமர்சித்தாலும், ஊடகங்களோடு நெருக்கமான உறவொன்றைப் பேண வேண்டும் என்றே பெரும்பாலான அரசியல்வாதிகள் நினைப்பார்கள்.

தேர்தல் காலங்களில், ஊடகங்கள் தங்களைக் கைவிட்டுவிட்டன என்கிற கோபம் உள்ளூர இருந்தாலும், அரசியல்வாதிகள் அந்த ஊடகங்களோடு மீண்டும் மீண்டும் நெருக்கமான உறவைப் பேணுவது சார்ந்தே, சிந்தித்து வந்திருக்கின்றார்கள்.

ஆனால், சமகாலத்தில் இரண்டு பேர், ஊடகங்களை நோக்கி வெளிப்படையான எதிர்விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்கள். அதில், ஒருவர் ரணில் விக்கிரமசிங்க; மற்றையவர் சுமந்திரன்.

ஊடகங்களையும் அதன் ஆசிரியர்களையும் பெயர் குறிப்பிட்டு, தனது நாடாளுமன்ற உரைகளிலேயே ரணில் விமர்சித்திருக்கின்றார். அதற்கான, ஊடகங்களின் எதிர்வினை சார்ந்து, அவர் அலட்டிக்கொண்டதுமில்லை.

சுமந்திரனோ, கடந்த காலங்களில் ஊடகத்தின் பெயர், ஆசிரியரின் பெயர்களை வெளிப்படையாகக் கூறி விமர்சிக்கா விட்டாலும், பருமட்டாக எந்த ஊடகம் என்பதைத் தனது உரையில் குறிப்பிட்டு வந்திருப்பதுடன், எள்ளல் தொனியையும் கையாண்டிருக்கின்றார்.

ஆனால், கடந்த ஒரு வருட காலமாக, குறிப்பாக, புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பிலான பேச்சு மேலெழுந்த பின்னர், அவரும் ஊடகங்களை நோக்கிப் பெயர் குறிப்பிட்டு, நேரடியாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்.

ஊடகங்கள் பொய்களையும், தான் கூறியவற்றைத் திரித்தும் கூறுவதாகவும் குற்றஞ்சாட்டவும் ஆரம்பித்து விட்டார்.

இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை பற்றிய உரையாடல்களை, ஊடகங்களைக் கேள்வியெழுப்ப வைத்து, அந்தக் கேள்விக்கான பதில்களை மக்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்கும் உத்தி.

அதைப் பிரசாரக் கூட்டங்களின் மூலமும், மக்கள் சந்திப்புகள் மூலமும் நிகழ்ந்த முடியும் என்று நம்புகின்றார். கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதற்கான கருவிகளாகவும் கையாள முடியும் என்று அவர் நம்புகின்றார். இதை அவர், வெளிப்படையாகவும் அறிவிக்கச் செய்திருக்கின்றார்.

அதாவது, இந்தத் தேர்தலில் கூட்டமைப்பின் வெற்றி என்பது புதிய அரசமைப்புக்கான அடுத்த கட்ட நகர்வுக்கானது என்று கூறிவருகின்றார்.

இரண்டாவது காரணம், இந்தத் தேர்தலில் தனக்கு எதிரான தரப்பினர்களின் குரல்களை, ஈனமாகக் கேட்க வைப்பது. அதாவது, ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் அதிகம் இடம்பிடிப்பது தானாக இருக்க வேண்டும் என்பதாகும்.

அதற்காக ஊடகங்களை நோக்கி, சுமந்திரன் வாளைச் சுற்ற ஆரம்பிக்கின்றார். அப்போது, ஊடகங்களும் இன்னும் வேகமாக சுமந்திரனுக்கு எதிராக வாளைச் சுற்ற ஆரம்பிக்கின்றன. இந்த வாள்ச் சண்டைச் சத்தத்தில், விக்னேஸ்வரன், முன்னணி, பேரவை உள்ளிட்ட தரப்புகளின் குரல்கள் அடிபட்டுப்போகின்றன.

உள்ளூராட்சித் தேர்தல் களேபரங்கள் சமூக ஊடகங்களிலும், பிரதான ஊடகங்களிலுமே நிகழ்கின்றன.

இதில், சமூக ஊடகங்களின் உரையாடல் என்பது வாக்களிக்கும் பெரும்பான்மையான மக்களிடம் சென்று சேர்வதில்லை. வாக்களிக்கும் மக்களில் குறிப்பிட்டளவானவர்களிடம், பிரதான ஊடகங்களே கொண்டுசென்று சேர்க்கின்றன.

அப்படியான நிலையில், பிரதான இடங்களில் இடம்பிடித்தல் என்பது, இந்தத் தேர்தலில் அவசியானது. ஏனெனில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு, ஒரு மாதம் கடந்து விட்ட போதிலும், தேர்தலுக்கான அறிகுறியைச் சந்திக்காத தமிழ்க் கிராமங்களே வடக்கு – கிழக்கில் அதிகம் காணப்படுகின்றன.

நிலைமை அப்படியிருக்க, அவர்களிடம் சென்று சேர்வதற்கு பிரதான ஊடகங்களை எந்த வழியிலேனும் துணைக்கு வைத்துக்கொள்வது என்கிற திட்டம் அசாத்தியமானது. அந்தத் திட்டத்தின்படி, தன்னுடைய அரசியலையும் வெற்றியையும் உறுதி செய்ய நினைக்கின்றார் சுமந்திரன்.

அந்தத் திட்டத்துக்குள் வீழும் ஊடகங்கள், எழுந்திருக்கும் போது, சுமந்திரன் இன்னொரு புதிய எதிரியைக் கண்டடைந்திருப்பார்.Post a Comment

Protected by WP Anti Spam