By 25 January 2018 0 Comments

பி​ரச்சினைகள் கருக்கொள்ளும் வெறுப்பு பேச்சுகள்!!

வெறுப்புப் பேச்சு என்பது ஒரு தனிநபரையோ அல்லது குழுக்களையோ, மதம், நிறம், தேசியம், பால், பாலின நோக்குநிலை, அங்கவீனம் அல்லது வேறு விதமான விரோதத்ததைத் தூண்டும் பேச்சுகளே வெறுப்புப் பேச்சுகள் என வரையறுக்கப்பட்டுள்ளது.

குறித்த வெறுப்புப் பேச்சுகளுக்கு சொந்தக்காரர்கள் அரசியல்வாதிகளென பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பொதுவான பெறுபேறாகும்.
வெறுப்பு (hate speech) என்பது மனரீதியாக மிகவும் ஆழமான விருப்பமின்மை காரணமாகத் தோன்றும் உணர்ச்சியாகும்.

இது பொதுவாக நபர்கள், பொருட்கள் அல்லது எண்ணங்களின் மீது ஏற்படும். ஒருசாரார் மீது வெறுப்பை ஏற்படுத்தி அதன்மூலம் அழிவை உண்டு பண்ணும் ஒன்றே இந்த வெறுப்புப் பேச்சாகும். எங்கள் கலாசாரத்தைப் பொறுத்தவரை வெறுப்புப் பேச்சு உணர்ச்சியற்ற ஒன்றாக உள்ளது.

வெறுப்புப் பேச்சு, உணர்ச்சியற்ற ஒன்றெனக் கருதி, ஒதுக்கிவிடவும் முடியாது. காரணம் வெறுப்புப் பேச்சைத் துவேசப் பேச்சுகள் என்று சொல்வதில் தவறில்லை. அதாவது, இனங்களுக்கிடையே அல்லது மதங்களுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகளுக்கான ஆரம்பப் புள்ளியே இந்த வெறுப்புப் பேச்சுகளில் இருந்துதான் உருவாகின்றது.

வெறுப்புப் பேச்சுகள் சொற்களால் புண்படுத்துவதோடு மட்டுமல்லாது, பல வகையான செயல்பாடுகளாலும் வெளிப்படுகின்றது. இவற்றை அரசாங்கங்கள் சமூக அமைப்புகள் கூர்ந்து கவனித்தாலும், தக்க நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லை.

சிலர் இதனைக் குற்றம் என்ற கண்ணோட்டத்தில் கண்டாலும், இந்தக் கண்ணோட்டம், கருத்துச்சுதந்திரத்தைத் தடுப்பதாக மற்றுமொரு சாரார் எதிர்க்கின்றனர்.

வெறுப்பு பேச்சுகள், இலக்கு வைக்கப்பட்ட ஒரு குழுவை அல்லது தனிநபரை அவமானப்படுத்தி, அச்சுறுத்துவதுடன் அவர்களை அச்சத்திலும் வெட்கத்திலும் வாழும்படி செய்கிறது.

இந்தச் செயற்பாடு, தாங்கள் யார் என்பதை மறைக்கும்படி செய்துவிடுகிறது. வெறுப்புப் பேச்சு என்பது அரசியல் ஆதாயம் தேடுவோரின் முதன்மையான கருவியாக மாறியிருக்கும் சூழலில், பேச்சுச் சுதந்திரத்தையும் வெறுப்புப் பேச்சுகளையும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டியது அவசியம்.

உலக நாடுகளில், தேர்தல்களில் தற்போது, பிரபல்யமாகி வரும் ஒன்று தான் வெறுப்புப் பேச்சு, இந்த வெறுப்புப் பேச்சானது, இன்று அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளையும் விட்டுவைக்கவில்லை.

அது சாதாரண தேர்தல் தொடக்கம் ஜனாதிபதி தேர்தல் வரை, கோலோச்சுகின்றது. குறித்த வெறுப்புப் பேச்சைப் பயன்படுத்தியே தேர்தலில் வெற்றிபெறும் புதிய யுக்தி இன்று உலகநாடுகளில் கையாளப்பட்டு வருகின்றது.

வெறுப்புப் பேச்சானது ஒருநாட்டைப் பார்த்து, இன்னொரு நாடு பின்பற்றும்அளவுக்கு மிகவும் பிரபலமாகி வருவது கவலையளிக்கும் நிலைமையாகும். உதாரணமாகக் கடந்த வருடம் இடம்பெற்ற அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில், இந்தமாதிரியான வெறுப்புப் பேச்சை அதிகம் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

சர்வதேசத்தில் இந்த வெறுப்புப் பேச்சைப் பயன்படுத்தித் தேர்தலில் வெற்றி பெறுவதைப் பார்த்து, ஏனையவர்களும் ஏனைய நாடுகளும் இதைப் பின்பற்றுகின்றன.

கடந்த பத்து வருடங்களில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியுடன் வெறுப்பு பேச்சும் வளரத்தொடங்கிவிட்டது. வெறுப்புப் பேச்சை உமிழும் முக்கிய ஊடகமாக, இந்தச் சமூகவலைத்தளங்களே காணப்படுகின்றன.

எனினும், எந்தவொரு நாடும் இந்த வெறுப்புப் பேச்சைத் தடைசெய்வதற்கான சட்டமூலத்தை இதுவரை கொண்டுவரவில்லை என்பதே கவலைத்தரும் விடயயமாகும்.

இலங்கையில் கூட 2012ஆம் ஆண்டு முதன் முதலாக இணையத் தளங்கள் மூலமாக ஆரம்பித்த, வெறுப்புப் பேச்சுகள், இறுதியில் ஞானசார தேரரின் மூலம் பூதாகாரமாக உருவெடுத்து, நாட்டைப் பாரியதோர் இனக் கலவரத்தின் விளிம்புக்கே இழுத்துச் சென்றதை யாரும் மறந்து விடமுடியாது.

மேலும் தென்னாசிய நாடுகளில் இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் அரசியல் மேடைகளில் வெறுப்புப் பேச்சுகள் தாராளமாகத் தாண்டவமாடுவது இயல்பாகக் காணப்படுகின்றது.

குறிப்பாக எந்தவொரு நாட்டிலும், வெறுப்புப் பேச்சுக்கு அதிகம் உள்ளாகுபவர்கள் பெண்களாகக் காணப்படுகின்றனர். இதற்குச் சிறந்த உதாரணமாக, கடந்த வருடம் நடைபெற்ற அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கிய முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிங்டனின் மனைவி ஹிலாரி கிளிங்டன் அதிகம் வெறுப்பு பேச்சுகளுக்கு இலக்கானார்.

இந்த நிலையில், இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பெண்களுக்கு முதன்முதலாக 25 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், பெண்கள் மீதான வெறுப்புப் பேச்சுகள் குறைவின்றி ஆங்காங்கே அரங்கேறத் தொடங்கிவிட்டன.

இந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வாறான கட்டுரை அமைவது சிறப்பான விடயமாகக் கருதுகின்றேன். இதற்கு உந்துகோலாக அமைந்தது, தேர்தல் முறைகளுக்கான சர்வதேச மன்றம் (IFES) நிறுவனத்தினால் கடந்த 8, 9ஆம் திகதிகளில் நீர்கொழும்பில் நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறையாகும்.

இந்தப் பயிற்சிப் பட்டறையில் ‘வெறுப்புப் பேச்சு’ குறித்து பல விடயங்கள் பேசப்பட்டன. உள்ளூர், வெளியூர் அரசியலில் வெறுப்புப் பேச்சுகள் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது பற்றிய கருத்துகள் இங்கு பகிர்ந்து கொள்ளப்பட்டன. இக் குறிப்புகளை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமென நினைக்கின்றேன்.

பிரபலமான வெறுப்புப் பேச்சுகளின் பட்டியலில், இந்தியாவின் அரியானா மாநிலத்தின் பா.ஜ.கட்சியைச் சேர்ந்த அமைச்சரின் வெறுப்புப் பேச்சால் கடும் சர்ச்சையே ஏற்பட்டது. அதாவது, ஹரியானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் “மாட்டுக்கறி உண்பவர்கள் ஹரியானா மாநிலத்துக்குள் வரக்கூடாது. நாங்கள் சில நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்த்து வருகிறோம். காரணம் அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் எங்களுக்கு ஒத்துவராது. அதேபோன்று, மாட்டுக்கறி உண்பவர்கள் எங்க மாநிலத்துக்குள் வரவேண்டாம்” எனப் பேசினார். இதுவும் மற்றைய மதத்தை அடிப்படையாக வைத்து பேசப்பட்ட வெறுப்புப் பேச்சுதான்.

இதேபோல் கடந்த வருடங்களில், வெறுப்புப் பேச்சுகளால் இனங்களுக்கிடையில் முறுகலைத் தோற்றுவித்து, இலங்கையில் பிரபலமானவர்களுள் ஞானசார தேரர் முக்கிய இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக சில சிறுபான்மை அரசியல்வாதிகளும் முன்னிலையில் உள்ளனர்.

2013ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளராக விளங்கும் ஞானசார தேரர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் தலைதூக்கி, பல வெறுப்பான கருத்துகளை வெளிப்படுத்தி, அதன் மூலம் முஸ்லிம் சமூக மக்கள் மத்தியில் ஒரு வெறுப்பையும் கலக்கத்தையும் தோற்றுவித்ததை அவ்வளவு இலகுவில் மறந்து விடமுடியாது.

இதன் நீட்சியே, இப்போது சமூக மட்டத்தில் ஒரு நிறுவன மயப்பட்டதாகவும் இருக்கின்றது என்றால் மறுப்பதற்கில்லை.

ஞானசாரரைத் தொடர்ந்து ‘சிங்களே’ அமைப்பின் தலைவர் டான் பிரியசாத்தும், ‘தௌஹீத் ஜமாத்’ அமைப்பைச் சேர்ந்த அப்துல் ராசிக்கும் தம் பங்குக்கு மதங்களுக்கிடையே கலவரம் ஏற்படும் அளவுக்கு வெறுப்புப் பேச்சுகளைப் பொதுஇடங்களில் பேசிவிட்டுச் சிறைக்குச் சென்றனர்.

எனினும் நீதிமன்றத்தின் பலத்த எச்சரிக்கையின் பின்னர், பிணையில் வெளியே வந்தனர். இவ்வாறான வெறுப்புப் பேச்சுகளுக்கு, இலங்கையும் விதிவிலக்கல்ல என்பதையே இந்தச் சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தேர்தல்க் காலத்தை மையப்படுத்தியதாகவே உள்நாடு முதல் உலக நாடுகள் வரை வெறுப்புப் பேச்சுகளுக்கு முன்னுரிமை இருப்பதை அவதானிக்கலாம். ஆனால், தெற்காசிய நாடுகளில் குறிப்பாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இதன் தீவிரம் தற்போது அதிகரித்தே காணப்படுகின்றது.

இலங்கை அரசியல் சூழலில், இந்த வெறுப்பு உமிழும் உரைகள் தேர்தல் காலத்துக்கு அப்பாலும் அரசியலில் நிலைத்திருப்பதை அவதானிக்கலாம்.

எது எவ்வாறாயினும், இத்தகைய வெறுப்பு உமிழும் உரைகளைத் தடுக்கும் தனியான சட்டங்களைக் கொண்டு வருவதனால் மாத்திரம் அதை நிறுத்தி விட முடியாது.

ஏனெனில், அங்கு கருத்துச் சுதந்திரத்துக்கு இடமில்லாமல் போகிறது. வெறுப்பு எனும் ‘கறுப்பு’ உணர்வைத் துடைத்தெறிய வேண்டும். அது முடியுமா, ஏன் முடியாது?

குழந்தைகளாக இருக்கும்போது, அந்த உணர்வு இல்லையே. வளர வளரத்தானே வெறுப்பு உணர்வும் வேர்விட்டுப் படர்ந்து, விருட்சமாக வளர்ந்தது. வெறுப்பு என்ற விரும்பத்தகாத ஒரு குணத்தை மட்டும், கைவிட்டுப் பாருங்கள். உலகிலுள்ள அனைவருமே உங்களுக்கு நண்பர்களாகத்தான் இருப்பார்கள்.

குழந்தைகளாக இருக்கும்போது மனதில் துளிர்விடாத வெறுப்பு, சூழ்நிலையின் தாக்கத்தாலும் உடன் பழகுபவர்களாலும் வளர்ப்பாலும் நம்மனதில் மெல்லமெல்லக் குடிபுகுகிறது. விளைவு?

இதனாலேயே பக்கத்து வீட்டுக்காரரிலிருந்து, பக்கத்து நாடு வரை எமது வெறுப்புப் பேச்சு வியாபித்துள்ளது.
வெறுப்புப் பேச்சுப் பேசுவது தவறு என்பது அனைத்து நாடுகளிலும் கொள்கையாகக் காணப்படுகின்ற போதிலும், இதைச் சட்டரீதியாகத் தடுப்பதற்கான சட்டமூலத்தை எந்த நாடும் கொண்டுவரவில்லை என்பது வியப்புக்குரிய விடயமாகும்.

இந்த நிலையில், வெறுப்புப் பேச்சுக்கு ஊடகங்கள் முக்கியதுவத்தை வழங்க வேண்டுமா அல்லது இது குறித்துக் கண்டும் காணாமல் செல்வதா என்பது தொடர்பில் ஆராய்ந்தால், அடிப்படை உரிமையின் கீழ்வரும் பேச்சுச் சுதந்திரத்தைக் காரணம் காட்டிக் கொட்டப்படும் வெறுப்புப் பேச்சுகளால் ஊடகங்கள் தமது வர்த்தகத்தை அதிகரிப்பதிலேயே முழு மூச்சாகக் கொண்டு இயங்குவதை அவதானிக்கலாம்.

அதாவது, ஓர் அரசியல்வாதியையோ அல்லது ஒரு மதத்தையோ பற்றி வெறுப்புப் பேச்சுகள் பேசப்படும் பொழுது, அதனை ஊதிப் பெருப்பித்து, இரு தரப்புக்குமிடையில் மோதலை உருவாக்கும் நிலையில் ஊடகங்களின் செயற்பாடு காணப்படுகின்றது.

எனவே ஊடகங்கள், இந்த வெறுப்புப் பேச்சுகளை ஊதிப் பெருப்பிக்காமல் செய்திப்படுத்த முன்வரவேண்டும். எந்த நாட்டுக் கலாசாரத்துக்கும் பொருத்தமற்றதான, வெறுப்புப் பேச்சைப் பேசுபவர்கள், இதைக் கைவிடுமளவுக்கு ஊடகங்களின் செயற்பாடு அமையவேண்டும்.

இலங்கையின் புத்திஜீவிகளாலும் துறைசார்ந்த வல்லுநர்களாலும் மிதவாத அரசியல்வாதிகளாலும் பிரஸ்தாபிக்கப்பட்டதும் வரவேற்கப்பட்டதும் எதிர்பார்க்கப்பட்டதுமான வெறுப்புணர்வு உத்தேச சட்டமூலத்துக்கு சமூகங்களுக்கு இடையிலான மோதல்களைத் தூண்டும் வெறுப்புப் பேச்சுகளைத் தடுப்பதற்காக, தண்டனைக் கோவையிலும் குற்றவியல் நடைமுறைக் கோவையிலும் மாற்றங்களை கொண்டு வருவதற்காக, 2015 ஆம் ஆண்டு அரசாங்கம் முன்வைத்த இரு நகல் சட்டமூலங்களை அரசாங்கமே வாபஸ் பெறும் சூழிநிலை உருவானது.

இந்தச் சட்ட மூலம் தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்படப் பல கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. வெறுப்புப் பேச்சுக்கு எதிரான இந்தச் சட்டத் திருத்தத்தால் பேச்சுச் சுதந்திரத்துக்கு ஆபத்து ஏற்படும் என்றே, இந்தச் சட்டமூலத்தை எதிர்த்தவர்கள் தமது பக்க நியாயத்தை முன்வைத்தனர்.
அரசாங்கம் அந்த நியாயத்தை ஏற்றுக் கொண்டுள்ள போதிலும், அதைப் புதிய வடிவத்தில் முன்வைக்கவுள்ளதாக அப்போதைய நாடாளுமன்றச் சீர்திருத்தங்கள் மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கருணாரத்ன பரனவிதான கூறியிருந்தார்.

எனவே, இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் மோதல்களுக்கும் மனிதனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சினைகள் தோன்றுவதற்கும் கருவாக அமையும் வெறுப்புப் பேச்சுகளைச் சமூகத்தின் மத்தியிலிருந்து விரட்டுவது எமது அனைவரதும் தலையாய கடமை என்பதை ஆணித்தரமாக வலியுறுத்துவோம்.Post a Comment

Protected by WP Anti Spam