By 10 June 2018 0 Comments

பழங்குடிகளிடம் கற்றுக்கொள்வோம்!(மகளிர் பக்கம்)

இந்த உலகில் உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமான நீர், நிலம், காற்று அனைத்தையும் இன்று மாசுப்படுத்திவிட்டு, அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். இப்படியே போனால் உலகத்தில் மனிதர்கள் வாழவே முடியாத ஒரு சூழல் உருவாகும். சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இல்லாததுதான் காரணம். சுற்றுச்சூழலைக் காக்க நாம் என்ன செய்ய வேண்டும், காடு மலைகளில் வாழும் பழங்குடி மக்கள் எவ்வாறு இயற்கையைக் காத்து வருகிறார்கள், மாணவர்களும், ஆசிரியர்களும், அரசும் என்ன செய்ய வேண்டும் என பல தகவல்களை சமூக செயற்பாட்டாளர் ச.தனராஜ் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

‘‘உலகின் சமூக பொருளாதார அரசியல் நிலைபாடுகளினால், இன்று உலகமெங்கிலும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் உலகமயமாக்கலால் மக்களின் வாழ்வாதாரங்களும், இயற்கை வளங்களும், சுற்றுச்சூழலும் சிதைக்கப்பட்டு வருகின்றன. புயல், வெள்ளம், வறட்சி, பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை சீற்றம், புவிவெப்பமயமாக்கலினால் ஏற்பட்டுள்ள மிகவும் அபாயகரமான காலநிலை மாற்றங்கள் என பன்முனைத் தாக்குதல்களால் மனித சமூகம் இன்று சீர்குலைந்த நிலையில் உள்ளது. இயற்கை தனக்கு தானே பல மாற்றங்களை பேரழிவுகளை கொண்டிருந்தாலும் மனித நடவடிக்கையால் ஏற்படுள்ள இந்த சூழல் சீர்கேட்டை சரி செய்திடும் முழுமையான பொறுப்பும் கடமையும் மனித சமூகத்திற்குதான் உள்ளது’’ என்றவர் ஆதிவாசிகள் இயற்கையை எவ்வாறு காத்து வருகிறார்கள் என்று கூறினார்.

‘‘ஆதிவாசிகள் இன்னமும் பொதுசொத்துக்களான நிலம், நீர், வனங்களைத் தாயாகவும் தங்கள் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஆன்மாவாகவும் பார்க்கிறார்கள். மண்ணையும், மரத்தையும், மலைகளையும், நீராதாரங்களையும் பாதுகாத்து வருகிறார்கள். இவர்கள் ஆசைகளற்றவர்கள். முழு வனத்தையும், அங்குள்ள வழிப்பாதைகள், உண்ணத்தக்க, உண்ணக்கூடாத பொருட்கள், மூலிகைகள், வனவிலங்குகளின் நடமாட்டம், மரம், செடி, கொடி, மூலிகை, பல்லுயிர்களின் சூழல் குறித்த அபாரமான ஞானத்தைக் கொண்டவர்கள்’’ என்கிறார் தனராஜ். “நாங்க இல்லைனா காடு அழிஞ்சு போயிரும், எங்க தேவைக்கு அதிகமாக காட்டுல எந்தப் பொருளையும் நாங்க எடுக்க மாட்டோம்.

அப்படி எடுத்தா எங்களுக்கோ பிள்ளைங்களுக்கோ உடம்பு சரியில்லாமப் போயிரும் என்ற நம்பிக்கையும், வாழ்வியல் அறமும் பளியர் பழங்குடிகளிடம் இன்றும் உள்ளது. எந்தப் பச்சை மரத்தையும் அவர்கள் வெட்டுவதில்லை.இறந்தவர்களைக்கூட மரங்களின் வேர்களுக்குக் கீழேயே புதைக்கிறார்கள். அந்த மரங்களில் எங்கள் உயிர் இருக்கும் என உயிருக்கு உயிர் கொடுப்போம் என்கிறார்கள்’’ என்றார். ‘‘திண்டுக்கல் சிறுமலை வனத்தில் உள்ள சஞ்சீவி தோட்டத்தில் உள்ள எலுமிச்சை பழங்கள் அளவு சற்று பெரியதாகவும் அதிக மஞ்சள் நிறமுடையதாகவும் இருக்கும். இந்தப் பகுதியைச் சேர்ந்த மற்ற விவசாயிகள் எல்லாம் எலுமிச்சை பழம் ரேட் கூடுதலாக இருந்தால் பழம், காய், பிஞ்சு ஒண்ணுவிடாம எல்லாவற்றையும் பறித்து எடுத்து சிறுமலை சந்தைக்கு அனுப்பிவிடுவார்கள்.

ஆனால், ஆதிவாசிகள் அந்த எலுமிச்சைக் காய் பழுத்தால்தான் பறிப்பார்கள். கையைப் பழத்தில் வைத்தால் அது தானாக கையில விழும்படி வரவேண்டும். அதைப் பிய்த்து எடுக்கக்கூடாது. ஒவ்வொரு காயும் இந்தச் செடிக்கு பிள்ளைங்கதான். ‘செடியில இருக்கிற ஒவ்வொரு காயும் தாய்ப்பால் குடிக்கிற மாதிரி தண்ணியையும் சத்தையும் சாப்பிடுகிறது. அந்த எலுமிச்சையை காய் பக்குவத்திலேயே பறித்து எடுத்தால் அது தாய்ப்பால் குடிக்கிற தாய்க்கிட்ட இருந்து குழந்தையை பிரிச்சி எடுக்கிற மாதிரி. நாங்கள் அதைச் செய்யமாட்டோம்’ என்கிறவர்கள் ஆதிவாசிகள்’’ என அவர்களின் இயற்கை பாசத்தை விளக்கியவர், இயற்கை நமக்கு தந்துள்ள உரிமை குறித்து பேசினார்.

‘‘பூவிலிருந்து தேனை சேதாரமில்லாமல் எடுக்கும் தேனீயைப்போல வாழவே நமக்கு இயற் கையை பயன்படுத்த உரிமையுள்ளது. அடுத்த தலைமுறைகளுக்கும் இப்பூமியை பத்திரமாக கையளிக்க வேண்டாமா? அதை விடுத்து இந்த பூவுலகை சூறையாட நாம் யார்? இந்த இயற்கை ஒவ்வொரு மனிதனின் தேவையையும் பூர்த்தி செய்யும். ஆனால் ஒருபோதும் அவனின் பேராசையை திருப்தி செய்ய முடியாது. பேராசைக்கு இந்த உலகில் எதுவுமே இல்லை. மனிதர்கள் ஒட்டுமொத்தமாக நெறிபிறழ்ந்து வாழ்கிறார்கள். பேராசை கொடிய நோய். அதன் அறிகுறிகளே போர், பஞ்சம், தீவிரவாதம், ஏழ்மை. பெருகி வரும் மக்கள் தொகையும், ஒவ்வொரு மனிதரும் வாழும் முறை சூழலியலை தீர்மானிக்கிறது.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் சூழலுக்கு எந்த வகையிலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதனை ஆட்சியாளர்களும் மானுட சமூகமும் உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம். மரம் நடுவோம் இயற்கைக்கு திரும்புவோம் இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும். அரசு கல்வி பாடத்திட்டங்களில் சூழல் கல்வியோடு, பயிற்சியும் அளிக்க வேண்டும். மாணவர்களை மண்ணையும், நீரையும், விவசாயத்தை நேசிக்கும் ஆளுமைகளாக கல்விநிலையங்கள் மாற்ற வேண்டும். கல்வி என்பது தான் வாழ, தான் பிழைக்க என்ற நிலையில் மாறி சமூகம் வாழ, இயற்கை உயிர்ப்பித்து இருக்க, நீதியும், அமைதி எங்கும் தழைத்து ஓங்க சூழலை காக்கும் சமுதாயத்தால் மட்டுமே முடியும்.

அத்தகைய அறிவையும் புரிதலையும் எனக்கு வழங்கிய பழங்குடி மக்க ளிடம் நான் கற்றவற்றை, சுற்றுச்சூழல் வாழ்வியல் அறத்தை, மானுட, பூவுலகின் மேன்மைக்கான சூழலில் கல்வியை பள்ளி, கல்லூரி மாணவர் களிடையே கொண்டு சேர்க்கும் பணியினை செய்து வருகிறேன். இதுவரை சுமார் இரண்டு லட்சம் மாணவர்களிடையே இந்த சூழல் கல்வியை சேர்த்து இருக்கிறோம். தொடர்ந்து பழங்குடி மக்களையும், காடுகளையும் புரிந்து கொள்ளும் விதமாக இயற்கை வாழ்வியல் பயிற்சிகளை எவ்வித நிதியையும் எதிர்பாராமல் செய்து வருகிறேன். இதில் ஏராளமான மாணவர்கள், ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், இயற்கை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கலந்து கொண்டுள்ளனர்” என்கிறார்.Post a Comment

Protected by WP Anti Spam