By 13 May 2019 0 Comments

எமது குழந்தைகளின் எதிர்காலம்: வளமா, வங்குரோத்தா? (கட்டுரை)

குழந்தைகளின் எதிர்காலம் முற்றிலும் அவர்களின் கைகளில் இல்லை; அவர்களின் பெற்றோரின் கைகளிலும் இல்லை; அவர்கள் வாழும் சமூகத்திடமும் இல்லை. மாறாக, உலகத்தின் ஒவ்வோர் மூலையில் இடம்பெறும் சம்பவங்கள்தான், அவர்களின் வாழ்வில் தாக்கம் செலுத்துமாறு, உலகமும் உலக அரசியலும் மாறிவிட்டன.

உலகமயமாக்கலிலும் அதன் விளைவுகளிலும் தங்கியிருக்க வேண்டும் என்ற தவிர்க்க இயலாததாகி உள்ள நிலையில், எங்கோ நடப்பதன் பக்கவிளைவு, இங்கேயும் உணரப்படுகிறது.

தொடர்ந்து நெருக்கடிக்குள் இருக்கும் உலகப் பொருளாதாரம், உலக அரசியல் ஆதிக்கப் போட்டி, பயங்கரவாதம், ஒருசிலரின் கைகளில் தேங்கும் அபரிமிதமான செல்வம், புதிய தொழில்நுட்ப வடிவங்கள், காலநிலைமாற்ற விளைவுகள் எனப் பலவும் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தில், தாக்கம் செலுத்தப் போகின்றன. இவை எங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை, எவ்வாறு செதுக்குவன என, இக் கட்டுரை நோக்க விளைகிறது.

‘சமூகப் பயனான செயல்’ என்பது, சமூகம் வளமுறப் பங்களிப்பதும் எதிர்காலச் சந்ததிக்கு, நலமான உலகை விட்டுச் செல்வதுமே ஆகும். அநியாயங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக, விடாது போராடுவோர் இதையே மனதில் கொண்டுள்ளனர்.

எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவே நான் எழுதுகிறேன்; போராடுகிறேன். இது நம்மில், ஒவ்வொருவரின் வாழ்வியலிலும் தவிர்க்கவொண்ணா ஓர் அம்சமாதல் வேண்டும்.

அரசியல் அரங்கு: குறுக்கே தறித்த குரல்

இருபதாண்டுகளுக்கு முன்னர், உலகம், இப்போது உள்ளபடியேதான் இருக்கும் என்று, எதிர்வு கூறியிருக்க முடியாது. அதேபோலவே, இனிவரும் முப்பதாண்டுகளுக்குப் பிந்திய உலக அரசியல் அரங்கு குறித்து, எதிர்வு கூறுவதும் கடினமாகும்.

ஆனால், அது எத்திசையில் பயணிக்கக்கூடும் எனச் சமகால அரசியல் நிலைமைகளும் நிகழ்வுகளும் நகர்வுகளும் கோடிட்டுக் காட்டுகின்றன.

அமெரிக்க ஆதிக்கம், உடனடியாக முடிவுக்கு வராது. தன் உலக ஆதிக்கத்தைத் தக்கவைத்தல் கடினமாகையால், அது வன்முறை மூலமேனும் அதிகாரத்தைப் பேண முனையும். இது உலகை, இன்றுள்ளதைவிட அதிகளவான வன்முறைக் களங்களைத் திறக்க வைக்கும். போர்கள், ஏன் தொடங்கின என்பது தெரியும் முன்பே, அவை முடிந்துள்ளன எனக் கடந்த பத்தாண்டுகளில் கண்டுள்ளோம்; இனியும் அத்தகைய போர்கள் மூளும்.

சீனாவின் பட்டுப் பாதையும் அது சார்ந்த பூகோள அரசியல் நிகழ்வுகளும் உலகில் தாக்கம் செலுத்தும்.
அதேவேளை, அமெரிக்காவுக்கு எதிரான ஓர் ஐரோப்பா சாத்தியமாகி வருகிறது. அமெரிக்க நலன்களுக்கு மாறாக, ஐரோப்பிய நாடுகள் செயற்படும் காலம், தொலைவில் இல்லை.

இது, அமெரிக்க சார்பு எதிர் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கை வகுப்புப் பிரச்சினையாக, ஐரோப்பியக் கொள்கை வகுப்பாளர்களிடையே எழுவதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும்.

இப்போட்டிகளும் ஆதிக்க அவாவும், மூன்றாம் உலகில் எதிரொலிக்கும். எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம், எங்கள் கைகளில் என ஒதுங்கி நிற்கவியலா வண்ணம், நுண்ணரசியல் எம் வாழ்வைத் தின்னும்.

உலகம் இன்னமும் கொலனியாதிக்கத்தில் இருந்து விடுபடவில்லை. கொலனியம் நவீன வடிவங்களில் தொடர்கிறது. முன்பு கொலனியம் செய்ததை, இப்போது பல்தேசியக் கம்பெனிகள் செய்கின்றன.

மூன்றாமுலக நாடுகளில் உள்ள உழைப்பாளர்கள், நவீன அடிமைகளாகி உள்ளார்கள். அதிகார ஆவல் உலகெங்கும் பரந்து விரிந்துள்ளது. அரசியல் ஓர் ஆயுதமாயுள்ளது. முன்னர் அரசியலுக்குப் பிற விடயங்கள் ஆயுதங்களாய் இருந்தன. இப்போது அரசியலே பிரதான ஆயுதமாகி உள்ளது. இது இன்னும் பலகாலம் தொடரும்.

அரசியல் நீக்கிய, சமூக அக்கறையற்ற, தனிமனித நலன்களை முன்னிறுத்தும் கல்வியையும் வாழ்வியலையும் அரசாங்கங்கள் பிள்ளைகளுக்கு வழங்குகின்றன. இதில் இருந்து, எங்கள் பிள்ளைகளைக் காக்க வேண்டும். இது இன்றும் நாளையும் என்றென்றுக்கும் பெற்றோருக்கான பிரதான சவாலாக இருக்கும்.

வேறுபாடின்றி, அனைத்து அரசாங்கங்களும் கீழ்ப்படிவான குடிமக்களையே விரும்புகின்றன. கீழ்ப்படிவானோரை உற்பத்தி செய்யும் ஆலைகளாகக் கல்விக் கூடங்கள் இருக்கின்றன. இக் கல்விக்கூடங்களிலிருந்து எங்கள் பிள்ளைகளை மீட்பது எப்படி? நீதிக்கும் அநீதிக்கும், சரிக்கும் பிழைக்கும், உண்மைக்கும் பொய்க்கும் இடையில் வேறுபாடு காணத்தக்க அறஞ்சார்ந்த அடிப்படைகளை அறியும் குழந்தைகளை நாம் எவ்வாறு உருவாக்கப் போகிறோம? இவை பெரிய சவால்கள்.

பொருளாதாரம்: நிச்சயமின்மையின் நிச்சயம்

உலகப் பொருளாதாரம், தாராளவாதத்தின் உச்சத்தை அடைந்துவிட்டது. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற முகவர்கள் மூலம், உலகைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கான விதிகளை, நவதாராளவாதம் நிலைநிறுத்தியுள்ளது.

மூன்றாமுலக நாடுகள் கடனில் தள்ளாடுகின்றன. சமூக நலன்கள் ஒவ்வொன்றாகக் காவுகொள்ளப்படுகின்றன. அனைத்தையும் தனியாரிடம் கொடுத்துவிட்டு, மக்களை ஒட்டாண்டி ஆக்கும் செயலையே அரசாங்கங்கள் நவதாராளவாத முகவர்களின் உதவியோடு செய்கின்றன.

சுத்தமான குடிநீர், இலவசக் கல்வி, இலவச மருத்துவம் என்பன ‘முன்பொருகாலத்தில் இருந்தன’ என, எங்கள் பிள்ளைகள் வரலாற்றுப் புத்தகங்களில் படிக்கும் அபாயத்தை எதிர்நோக்குகிறோம். அனைத்தையும் பண்டமாக்கி, விலைக்கு விற்கும் சமூகத்தையே, எங்கள் குழந்தைகள் கொண்டிருக்கப் போகிறார்கள்.

நுகர்வுக் கலாசாரம் வாழ்வியலாகி விட்டது. தொலைக்காட்சி விளம்பரங்கள், நிபுணர்களின் கருத்துகள் எனப் பலவும் பல்வேறு கோணங்களில் நுகர்வை ஊக்குவிக்கின்றன.

தொழிற்றுறை, சேவைத் தொழில்களை நோக்கி நகர்கிறது. உணவு, மரபணு மாற்றிய உணவாகிறது. இந்தப் பயிருக்கு, இந்தப் பசளை, இந்தப் பூச்சி கொல்லி என, எமது விவசாயத்தை, பல்தேசியக் கம்பெனிகளே தீர்மானிக்கின்றன. மீள்பாவனைக்கு உதவாத விதைகள், மண்ணையும் மனிதத்துவத்தையும் இயற்கை விவசாயத்தையும் குழி தோண்டிப் புதைத்துள்ளன.

எமக்கான உணவு, அந்த உணவு ஏற்படுத்தும் நோய், அந்த நோய்க்கான மருத்துவம் என அனைத்தும், சுழற்சி முறையில் தீர்மானிக்கப்படுகின்றன. இயற்கையோடு இயைந்த வாழ்வை, எமது பிள்ளைகளுக்கு எவ்வாறு இயலுமானதாக்குவது?

தொழில்நுட்பம்: அபாயத்தின் திசைவழிகள்

நாங்கள் நான்காவது தொழிற்புரட்சிக் காலத்தில் இருக்கிறோம். இதன்போது, எட்டியுள்ள விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சிகள் வியக்க வைப்பன. இவ் வளர்ச்சி, உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் உச்சத்தைக் குறிக்கிறது.

இந்த வளர்ச்சிப் போக்கு, விஞ்ஞானத்தின் உதவியுடன் நவீன முறைகளில் சுரண்டுவதை இயலுமாக்குகிறது. இத்தொழில்நுட்ப வளர்ச்சி, சமூகத்தை இலத்திரனியல் முறையில் ஒன்றிணைப்பதன் மூலம், ஒவ்வொரு தனிமனிதனையும் முழுமையாகக் கண்காணிக்க வல்லது. அதன் வழி, சமூகத்தைக் கட்டுப்படுத்தலை மேலும் ஆழமாயும் நுட்பமாயும் விரிவாயும் செய்கிறது.

இப்போது, தானியங்கு தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மூலம், புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளது. தொழில்கள் தானியங்கலுக்கு உட்படுகின்றன. இதுவரை தானியங்கலுக்குள் உட்புகாத துறைகளில், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மூலம், தானியங்கல் செயல்முறை வந்துள்ளது.

தொழிற்றுறையும் மருத்துவத்துறையும் முக்கியமானவை. வேறுபாடின்றி, அனைத்துத் துறைகளையும் தானியங்கல் தொழில்நுட்பம் ஆக்கிரமிப்பதால், இலட்சக்கணக்கானோர் வேலையிழக்கின்றனர்.

முரண்நகை ஏதெனில், பிற துறைகளின் ஊழியர்களின் வேலைகளைத் தின்று வளர்ந்த தகவல் தொழில்நுட்பம், இப்போது செயற்கை நுண்ணறிவுத் திறனாலும் தானியங்கல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாலும் பாரிய வேலையிழப்புகளைச் சந்திக்கிறது.

கவனிக்க வேண்டியது யாதெனில், குறைந்த தொழிலாளர்கள் மூலம் அதிகபட்ச உற்பத்தி, உற்பத்திச் செலவைக் குறைத்தல், உற்பத்தித் திறனை அதிகரித்தல், மனிதர்களை இயந்திரங்களால் மாற்றீடு செய்தல் என்பவற்றைக் கொண்ட முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கு, மனிதரின் வேலைவாய்ப்பை அழிக்கிறது.

எதிர்காலத்தில், மனிதர்களின் வேலைகளை இயந்திரங்கள் பார்த்தால், மனிதர்களுடைய வேலை என்ன?
அதேவேளை, செயற்கை நுண்ணறிவு வழித் தானியங்கி, மனிதனைப் போல சிந்திக்கவும் செயற்படவும் வல்லது. இது அறஞ்சார்ந்த கேள்விகளை எழுப்புகிறது. இக்கேள்விகள், எங்கள் பிள்ளைகளின் எதிர்காலமும் வாழ்வியலும் தொடர்பானவை.

உதாரணமாக, உணர்ச்சியற்ற தர்க்கரீதியாக மட்டுமே சிந்திக்கத் தெரிந்த இயந்திரத்துடன், மனிதர் உரையாடுவது விசித்திரமானது; அது விசித்திரமானது மட்டுமல்ல, விபரீதமானதும் கூட.

மனிதர் மனிதருடன் உரையாடாது, உணர்வுகளைப் பகிராது, அனைத்தையும் மின்வெளியில் மட்டும் பகிரவும், தமது பிரச்சினைகளின் தீர்வை, இயந்திரங்களிடம் எதிர்பார்த்திருப்பதை வாழ்வாகக் கொள்ளவும் பழகிய ஒருகாலம், எவ்வாறு இருக்கும் என ஒருகணம் யோசித்துப் பாருங்கள்.

காலநிலை மாற்றம்: எமது பொறுப்பும் எம்மீதான பழியும்

காலநிலை மாற்றத்தின் கொடிய விளைவுகளை எமது காலத்திலேயே அனுபவிக்கிறோம். இது பற்றி அதிகளவில் பேசியாயிற்று. ஆனால், எம்மால் அதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

புவி வெப்பமடைதலைக் குறைக்கும் நடவடிக்கைகளைச் செயற்படுத்த முடியவில்லை. அதற்கான அரசியல் தைரியமும் சமூகப் பொறுப்பும் எம்மிடம் இல்லை.

“அனைத்தையும் விஞ்ஞான ரீதியாகத் தீர்க்க முடியும்” என்று சொல்லியபடி, மேலும் அதிக கரியமில வாயுவை உமிழ்வித்துப் புவிவெப்பநிலையை ஏற்றியவாறு இருக்கிறோம்.

இனியும் ‘காலநிலை மாற்றம்’ என்று சொல்வதைத் தவிர்த்து, இதைக் ‘காலநிலை நெருக்கடி’ என்றோ, ‘காலநிலை அபாயம்’ என்றோதான் சொல்ல வேண்டியுள்ளது.

இதை மிகவும் தீவிரத்துடன் முன்னெடுக்க வேண்டும். எதிர்காலத் தலைமுறை, காலநிலை மாற்றம் குறித்து, நாம் வாளாவிருந்ததற்கு எம்மைப் பழிசொல்லும். எமது இலாப வெறியும் சுயநலமுமே இன்றுவரை அது பற்றிக் காத்திரமான நடவடிக்கை எடுக்காமைக்குக் காரணம் ஆகும்.

நாம் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் நாம் எமது எதிர்காலச் சந்ததி மீது, ஒரு மனிதகுலப் பேரவலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்வோமாக.

நிறைவாக,

எமது குழந்தைகளின் எதிர்காலத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் உலக அரசியல் நிகழ்வுகள், செல்வாக்குச் செலுத்தியே தீரும். பொருளாதாரம் முதல் காலநிலை மாற்றம் வரை, அனைத்தையும் அரசியல் அதிகாரங்களே தீர்மானிக்கும்.

எமது குழந்தைகளின் எதிர்காலத்தை, இலாபவெறி பிடித்த அதிகாரத்துக்காக எதையும் செய்கின்ற மனிதர்களிடம் விடுவதன் ஆபத்தை, நாம் உணர்வோம். அதன் தீய விளைவுகளை, நாம் அனுபவித்துள்ளோம். எமது குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்குவதும் வங்குரோத்தாக்குவதும் எம் கைகளிலேயே உள்ளது.

அநியாயத்துக்கு எதிராகவும் நீதிக்காகவும் நியாயத்துக்காவும் குரல் கொடுப்பதும் போராடுவதுமே எமது பிள்ளைகளுக்காக நாம் செய்ய வேண்டிய முக்கிய பணி.

‘செயல்’ ஒன்றுதான் சிறந்த சொல்.Post a Comment

Protected by WP Anti Spam