By 1 February 2020 0 Comments

‘குப்பை அரசியல்’ காலம் !! (கட்டுரை)

கடந்த வாரத்தில் மூன்று நாள்கள், யாழ்ப்பாணம் நகர எல்லைக்குள், குப்பைகள் அகற்றப்படவில்லை. வர்த்தக நிலையங்கள் அதிகமுள்ள வீதிகளின் மத்தியில், குப்பைகள் பெருமளவில் கொட்டப்பட்டிருந்தன.

அதுபோல, வவுனியா நகரப் பகுதியிலும், ஒரு வாரமளவில் குப்பை அகற்றப்படாத நிலையொன்று அண்மையில் காணப்பட்டது.

இலங்கையில் குப்பை அகற்றுதல், மீள்சுழற்சி செய்வது தொடர்பிலான முறையான செயற்றிட்டங்கள், பெரியளவில் கடைப்பிடிக்கப்படுவதில்லை.

பெரும்பாலும் நகர எல்லைப் பகுதிகளில் இருந்து அகற்றப்படும் குப்பைகளை, நகரத்துக்கு அப்பாலுள்ள பகுதியொன்றில் கொட்டுவதையே, குப்பை அகற்றுதலாகக் கருதுகிறார்கள்.

அவ்வாறு சேரும் குப்பைகள், இரசாயன மாற்றங்களால் சூழலை மாசுபடுத்தி, மக்களைப் பலிவாங்கும் வரையில், அந்த விடயம் தொடர்பில், யாரும் பேசுவதும் இல்லை.

சிலவேளை, குப்பைகள் கொட்டப்படும் பகுதிகளுக்கு அண்மையிலுள்ள பிரதேச மக்கள், எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினால் அன்றி, அங்கு குப்பைகள் கொட்டப்படுவது நிறுத்தப்படுதில்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம், நகரங்கள் குப்பைகளால் நிறைந்து வழியும்.

அதுபோல, மாநகர சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களில் நிர்வாகக் குறைபாடு, துப்புரவுப் பணியாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையிலான சிக்கல்களாலும் குப்பை அகற்றுதல் நிறுத்தப்படுவதுண்டு.

அண்மையில், யாழ். மாநகர சபை எல்லைக்குள்ளும், வவுனியா நகர எல்லைக்குள்ளும் குப்பைகள் அகற்றப்படாமைக்கான காரணங்களாக, துப்புரவுப் பணியாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையிலான முரண்பாடுகள் முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டன. அதில், அரசியல் கட்சிகளில் தலையீடுகள் இருப்பதாகவும் பொதுவெளியில் குற்றமும் சாட்டப்பட்டது.

தனித்த வடக்கு மாகாண சபையில், அமோக ஆதரவோடு ஆட்சியமைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாகாண சபையின் ஆட்சிக் காலத்தில், பெரிதாக எந்தவித முன்னேற்றகரமான திட்டங்களையும் ஆற்றியிருக்கவில்லை. ஆட்சிக்காலத்தில் ஒரு சில வருடங்களுக்கு உள்ளேயே, ஊழல் குற்றச்சாட்டுகள், நிர்வாகக் குழறுபடிகள், அதிகார துஷ்பிரயோக‍ங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளால் சபை அமர்வுகள் ஸ்தம்பிக்கத் தொடங்கின.

இலங்கையின் ஏனைய மாகாண சபைகள், நியதிச் சட்டங்களை இயற்றி, மத்திய அரசாங்கத்தோடு முட்டிமோதி, அதிகாரத்தைப் பெற்று, பணிகளை ஆற்றிக் கொண்டிருந்த சமயத்தில், வடக்கு மாகாண சபையில், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

இன்னொரு பக்கம், நானூறுக்கும் அதிகமான தீர்மானங்களை நிறைவேற்றுவது தொடர்பிலான விடயங்களிலேயே காலம் கடத்தப்பட்டது. கிட்டத்தட்ட மாகாண சபையால் செய்யக்கூடிய, மக்கள் எதிர்பார்த்த பல விடயங்களை, அப்போதைய முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனும் அவரது சகபாடிகளும் தமிழரசுக் கட்சியும் தெரிந்து கொண்டே, குழப்பி ஒன்றுமில்லாமல் ஆக்கிக் கொண்டன.

தென் மாகாண சபை உள்ளிட்ட தெற்கு மாகாண சபைகள், மத்திய அரசாங்கத்துக்கு எதிராக நீதிமன்ற வழக்குகளின் வழி, அதிகாரங்களைப் பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது, அதிகார துஷ்பிரயோகத்துக்காக, வடக்கு முதலமைச்சர் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொண்டிருந்தார். இதுதான், மாகாண சபையில் கூட்டமைப்புக்கு ஏக அங்கிகாரம் வழங்கிய தமிழ் மக்களுக்குப் பரிசாகக் கிடைத்தது. அதன் தொடர்ச்சிகளை, உள்ளூராட்சி மன்றங்களின் அமர்வுகளும் தற்போது பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.

தமிழ்த் தேசியப் போராட்டத்தின் கூறுகளை, அனைத்துக் கட்டங்களிலும் கொண்டு சுமத்தல் என்பது, தவிர்க்க முடியாதது; அத்தியாவசியமானது. ஆனால், ஒரு நிர்வாக அலகின் அடிப்படை என்ன, அது எதை இலக்காகக் கொண்டிருக்கின்றது என்ற விடயங்களை மறந்துவிட்டு, தமிழ்த் தேசியப் போராட்டத்தை அதற்குள் சொருகுவதாக காட்சிப்படுத்துவது, மிகவும் அபத்தமானது.

உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச மக்களின் வரிகளைப் பெற்று இயங்குவன. கழிவகற்றல், சுகாதாரம் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டவை. அங்கு, அவற்றைப் புறக்கணித்துவிட்டு, தமிழ்த் தேசியம் பேசுவதாலோ, அர்த்தமற்ற தீர்மானங்களை நிறைவேற்றுவதாலோ எந்தப் பயனும் இல்லை.

மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட 400க்கும் அதிகமான தீர்மானங்களில், 90 சதவீதத்துக்கும் அதிகமானவை, மாகாண அதிகாரங்களுக்கு அப்பாலானவை. அவற்றின் அடிப்படைகள் குறித்து, அப்போதே கேள்விகளை எழுப்பியிருந்தால், சபை அமர்வுகளுக்காகச் செலவளிக்கப்பட்ட கோடிக்கணக்கான நிதியும் ஆயிரக்கணக்கான மணிநேரமும் சேமிக்கப்பட்டிருக்கும்.

ஆரம்பத்தில், தீர்மானங்கள் சார்ந்து எழுப்பிவிடப்பட்ட உணர்ச்சியூட்டல்கள், சபை உறுப்பினர்களை அதுவொரு தலையாய கடமையாகக் கருத வைத்துவிட்டன.

ஒவ்வோர் அமர்விலும் ஏதோவோர் உணர்வூட்டும் தீர்மானத்தை முன்வைக்கவில்லை என்றால், தங்களது தமிழ்த் தேசியப் போராட்டத்துக்கான அர்ப்பணிப்பு, கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுவிடும் என்று, உறுப்பினர்கள் பயப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.

ஆக, மாகாண சபை அவர்களுக்கு வழங்கும் அதிகாரங்கள், நிதி பற்றியெல்லாம் சிந்திப்பதைத் தவறவிட்டார்கள். ஊடகங்களில் கவனம் பெறுவதற்கு, என்ன செய்ய வேண்டுமோ அதில், கவனமாக இருந்தார்கள். அதன் பிரதிபலிப்புகளை, உள்ளூராட்சி மன்ற அமர்வுகளில் இப்போது, அவர்களின் இளவல்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

உள்ளூராட்சி மன்றங்களில், சாதிகளைப் பற்றியும் அடுத்தவர் பிறப்பின் இரகசியங்களைப் பற்றியும் ஆராய்வதற்காக நேரத்தைச் செலவிட்டால், அந்த மன்றங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசத்தின் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதற்கு எப்படி நேரம் கிடைக்கும்? அவை, பிரச்சினைகளாகவே தொடர்ந்து, மக்களையே அசௌகரியப்படுத்தும்.

இலங்கை பூராவுமுள்ள உள்ளூராட்சி மன்றங்களில், அடிதடி தொடங்கி தனிப்பட்ட பிரச்சினைகளை விவாதிப்பது வரையில் நடைபெறுவதுதான். ஆனால், போரால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் அடிப்படைகளை, மீண்டும் முதல் படியில் இருந்து தொடங்க வேண்டிய நிலையில், அதன் ஆரம்பக் கட்டங்களில் பங்களிக்க வேண்டிய தரப்புகளில் ஒன்றான உள்ளூராட்சி மன்றங்கள், அதை மறந்துவிட்டுச் செயற்படுவது என்பது, அயோக்கியத்தனமானது.
மன்ற அமர்வுகளுக்கு அப்பால், கட்சிசார் அரசியலை முன்னெடுப்பது பற்றி, யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், உள்ளூராட்சி மன்றங்களில் இருந்து கொண்டு, ஐக்கிய நாடுகளில் பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகளின் அதிகாரத் தோரணையை, அவர்கள் வெளிப்படுத்தும்போதுதான், அரசியல் கோமாளித்தனங்கள் வெளிப்பட்டு, மக்களைக் கோபப்படுத்துகின்றன.

அரசியல் கட்சிகள் தொடங்கி, அனைத்துச் சமூகக் கட்டமைப்புகளும் தங்களின் கடமைகளை வரையறுத்துக் கொள்வது உண்மையிலேயே நல்லது.

உள்ளூராட்சி மன்றங்கள் தொடங்கி, அனைத்து நிர்வாகக் கட்டமைப்புகள் வரையில், அதன் அதிகார எல்லைகளை அறிந்து பணியாற்றுவதற்கான கடப்பாட்டை அது ஊக்குவிக்கும்.

அப்போதுதான், ஒவ்வொரு நபரும், தன்னுடைய அடிப்படைக் கடமை என்ன என்பதை அறிந்து செயற்படுவார்கள். அதன் பின்னர், அரசியல் பேசுவார்கள்.

உள்ளூராட்சி மன்றத்தில், தன்னுடைய வட்டாரத்தின் சுகாதாரப் பிரச்சினைகளை, குப்பை அகற்றுதல் பிரச்சினைகளை மறந்துவிட்டு, ஜெனீவாத் தீர்மானம் குறித்து அங்கு பேசுவதால், எந்தப் பிரயோசனமும் இல்லை.

இரண்டு வருடங்களுக்கு முன்னர், வடக்கிலுள்ள முன்னணி ஊடகத்துறை விரிவுரையாளர் ஒருவர், இந்தப் பத்தியாளரிடம் கூறினார். “…வடக்கு மாகாண சபையின் குழப்பங்களைப் பார்க்கிற எந்த மக்களுக்கும் தமிழ்த் தலைமைகளின் நிர்வாகத்திறன் தொடர்பிலான கேள்வி இலகுவாக எழும். இதை ஊக்குவிப்பது போலவே, நடைபெறுகின்ற அனைத்துக் குழறுபடிகளும் தலைமைகளுக்கு இடையிலான தன்முனைப்புப் (ஈகோ) போட்டியும் காணப்படுகின்றன. அவை, அவர்களுக்குக் கீழுள்ள அடுத்த கட்டத் தலைமைகளுக்கும் பரவும். அது, தமிழ் மக்களின் நிர்வாகத்திறன் தொடர்பிலான கேள்வியை, உலகளாவிய ரீதியில் எழுப்ப வைக்கும். அப்போது, எதுக்குமே இலாயக்கற்ற தரப்பாகத் தமிழ் மக்களை உலகம் அடையாளப்படுத்தும். அதையே எமது பொது எதிரி வேண்டி நிற்கிறான். அதை உணராமல், அதற்கு இசைந்தாடும் வேலைகளை, எமது தலைமைகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. உண்மையிலேயே இதுவொரு சாபக்கேடான நிலை…” என்றார்.

குறித்த ஊடக விரிவுரையாளரின் கருத்து தொடர்பில், எனக்கு இப்போதும் மாற்றுக் கருத்துகள் ஏதும் இல்லை. தனிப்பட்ட ரீதியில், ஒவ்வொரு தமிழ் மக்களிடமும் அந்த எண்ணம் இருக்கின்றது.

ஏன், அந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் தலைமைகளிடமும் அவர்களின் சிஷ்யப்பிள்ளைகளிடமும்கூட இருக்கின்றது. ஆனால், அவர்களிடம் தேர்தல் அரசியல் என்கிற தொற்று ஏற்படும்போது, எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, சகதிக்குள் புரளத் தயாராகிறார்கள்.
எல்லாவிதமான சித்து வேலைகளையும் தார்மீகங்களுக்கு அப்பால் நின்று செய்யவும் துணிகிறார்கள். குப்பை அகற்றும் விடயம் தொடங்கி, ஒவ்வொரு பிரச்சினையிலும் தார்மீகங்களுக்கு அப்பாலான சகதி அரசியல் கலந்திருக்கின்றது.

அது, உண்மையான போராட்டங்களை, எதிரிகளிடம் எதிர்காலத்தில் காட்டிக் கொடுப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்யும். அப்போது, எல்லோரும் சகதிக்குள் உழல வேண்டி வரலாம்.Post a Comment

Protected by WP Anti Spam