By 17 February 2020 0 Comments

வாழ்வென்பது பெருங்கனவு! (மகளிர் பக்கம்)

‘நமது இன்றைய செயல்களுக்கு நேற்றைய கனவுகளே பொறுப்பு’ என்பது ஆங்கிலக் கவிஞர் கீட்ஸின் அழகான கவிதை வரிகள். ஆம், எதை நாம் நினைத்துக் கனவு காண்கிறோமோ அதற்கான குறிக்கோளை நோக்கிச் சரியான திட்டமிடலுடன் காய் நகர்த்தினால் வாழ்க்கையில் சோதனை என்ற படிக்கட்டுகள் நம்மைத் தானாகச் சிகரத்தின் உச்சிக்குக் கொண்டு செல்லும் என்கிறார் இளம் வயதில் வாழ்க்கைப் புயலைப் பயத்தில் துவண்டுவிடாமல் தனது திறமையால் கடந்து வந்த பிராம்ப்ட் இன்ஃபோடெக் (Prompt Infotech) நிறுவனத்தின் சாஃப்ட்வேர் செக்யூரிட்டி அனலிஸ்ட் (Software Security Analyst) சௌமிதா செந்தில்ராஜ். அவர் தன் வாழ்வின் பெருங்கனவை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

‘‘தொழில்முனைவோரின் சொர்க்கமான கோயம்புத்தூர்தான் பிறப்பு வளர்ப்பு எல்லாமே. அப்பா செந்தில்ராஜின் வருவாயை மட்டுமே நம்பியிருந்த நடுத்தரக் குடும்பம். கிடைத்த சொற்ப வருமானத்தில் கஷ்டம் என்றால் என்னவென்று எங்களுக்குத் தெரியாமலே குடும்பப் பாரத்தை மொத்தமாகச் சுமந்து கொண்டவர் அம்மா சசிகலா. இவர்களுக்கு மூத்த மகளாகப் பிறந்தேன்.

எதிர்காலத்தில் என்ன ஆகப்போகிறாய் என்று பள்ளியிலும் வெளியிலும் பலரும் கேட்கும்போது பத்திரிகை நிருபராகவோ அல்லது ரேடியோ ஜாக்கி ஆகவோ பணியாற்ற போகிறேன் என்று நான் கூறுவேன். ஏனென்றால், வாயாடி, சாமர்த்தியமாகப் பேசுகிறாய், எல்லாரையும் சமாளிக்கிறாய் என எனக்குள் இருந்த தகவல் தொடர்பு திறமைகளைத் தெரிவித்தவர் என் அம்மாதான். நான் வக்கீல் ஆக வேண்டும் என்பது என் அம்மாவின் விருப்பமாக இருந்தது. எனக்கோ கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களில் ஆர்வம் அதிகமாகவே இருந்தது. அதை பற்றி நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. அதுவே எனக்கு விருப்பப்பட்ட ஒரு பாடமாகவும் மாறியது.

காலங்கள் உருண்டோடக் கல்லூரியில் இளநிலை தகவல் தொழில்நுட்பப் பிரிவின் முதலாமாண்டில் அடியெடுத்து வைத்தேன். ஒரு சில மாதங்கள் நல்லபடியாகத்தான் சென்றது. யார் கண்பட்டதோ கடவுள் என்ன நினைத்தாரோ அம்மா படுத்தப்படுக்கையானார். தங்கை எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். அம்மாவைக் கவனித்துக்கொண்டு படிப்பிலும் கவனம் செலுத்தி வீட்டுவேலைகளையும் பார்க்க வேண்டிய பாரம் என் முதுகை அழுத்தியது. இருபத்தைந்து நாட்கள் போராட்டத்திற்குப் பின் எங்களைப் பிரிந்தார் அம்மா. மனைவி பிரிந்த வேதனை என் அப்பாவைத் தாங்க முடியாத சோகத்தில் ஆழ்த்தியது. அவரைத் தேற்றும் வழிவகையும் எங்களுக்குத் தெரியவில்லை. அப்படியே பணிக்குச் செல்லாமல் முடங்கிப்போனார்.

பருவ வயதில் நானும் என் தங்கையும் வருமானம் இல்லாமல் தத்தளித்த கொடுமையான காலகட்டம். எனினும் சிறுவயதிலேயே உறுதியான மனம் படைத்தவள் எனக் கூறப்பட்ட நான் தளர்ந்துவிடாமல் இதுதான் வாழ்க்கை எனப் புரிந்துகொண்டு அதனை எதிர்கொள்ளத் துணிந்தேன். படிப்பு, வீட்டு வேலைகள், தங்கையை பார்த்துக் கொள்வதுன்னு வேலைகள் சரியாக இருந்தாலும், வருமானத்திற்கு என்ன செய்வது? அப்பாவும் சேமிப்பு என்று எதுவும் பழக்கப்படுத்திக்கொள்ளவில்லை’’ என்றவர் மாலை நேரத்தில் வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்.

‘‘கல்லூரி பேராசிரியர் எனது நிலைமையை புரிந்துகொண்டு ஒரு வீட்டில் சில குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்க ஏற்பாடு செய்தார். அந்த வருமானம் ஓரளவு கைகொடுத்தது. என் வயது மாணவர்கள் மகிழ்ச்சியாக தங்களின் கல்லூரி காலத்தை கழித்துக் கொண்டிருக்க… என் எண்ணம் முழுவதும் இந்த நிலைமையை சரி செய்ய என்ன வழிகள் உள்ளது என்றே இருந்தது. இந்த நேரத்தில், எனது தாத்தாவை நான் மறக்காமல் குறிப்பிட்டே ஆகவேண்டும். எழுபத்தைந்து வயது முதுமையிலும் எங்களுக்காக வாட்ச்மேன் வேலைக்குச் சென்றார். இப்படியாகக் கல்லூரி மூன்றாமாண்டுவரை எதிர்நீச்சல் அடித்தேன். ஆனால் அடுத்த இடி தலையில் இறங்கியது. அம்மாவைப் போலவே நோய்வாய்ப்பட்டு அப்பா எங்களை நிர்கதியாக்கிவிட்டு காலமானார்.

எங்களது நிலைமையைப் பார்த்து பலரும், ‘இந்த ரெண்டு பொண்ணுகளும் எங்கெல்லாம் சிக்கி, யார் கையிலெல்லாம் அகப்பட்டுச் சீரழியப்போகிறதோ’ என எங்கள் காதுபடவே பேசினர். நான் துவண்டுவிடவில்லை. என் தங்கையையும் உற்சாகப்படுத்தி முழு மூச்சாகப் படிப்பில் கவனம் செலுத்தினேன். கல்லூரி நேர்காணலில் புனேயில் உள்ள பிரபல பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ேவலைக் கிடைத்தது. இதனிடையே தேர்வில் கல்லூரியில் முதல் மாணவியாகவும் தங்கப் பதக்கமும் பெற்றேன். மனது நிறைவாக இருந்தாலும், வேலைக்கு சேர இடைப்பட்ட ஆறு மாதம் எப்படிக் கழிப்பது என்ற சிந்தனைக்கு மீண்டும் கல்லூரி பேராசிரியர் கைகொடுத்தார்.

அவர் அறிவுரையின் பேரில் பிராம்ப்ட் இன்ஃபோடெக் (Prompt Infotech) ஐடி கம்பெனி உரிமையாளர் சங்கர்ராஜ் சுப்பிரமணியனைச் சந்தித்தேன். என் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு, பணிக்கு அமர்த்திக்கொண்டார். ஆனால் என்னுள் கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் எனது கண்டுபிடிப்புகளே தலைசிறந்து விளங்க வேண்டும் எனும் பேரார்வமும் அதீத ஈடுபாடும் ஊறிப்போயிருந்தது. பிராம்ப்ட் இன்ஃபோடெக்கில் அதற்கான வாய்ப்பும் அமைந்தது. இதனிடையே புனேயிலிருந்து வேலைக்கான அப்பாயின்மென்ட் ஆர்டர் வந்தது. சங்கர்ராஜ் சாரிடம் கூறினேன், எங்குச் சென்றாலும் முன்னேற்றம் காண்பாய் என வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்’’ என்றவர் புனேவிலும் தனக்கான ஒரு வழியை அமைத்துக் கொண்டுள்ளார்.

‘‘புனே புது உலகம், புதிய மனிதர்கள், புதிய பாஷை… தொடக்கத்தில் எல்லாமே தடுமாற்றமாக இருந்தது. அச்சமென்பதையே அறியாத நான் கடுமையாக உழைத்தேன். அங்குதான் தகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன, எந்தப் பயன்பாட்டிற்கு எப்படிப்பட்ட மென்பொருள் உருவாக்குவது, யார் யாரெல்லாம் தேவை, குறிப்பிட்ட அவகாசத்தில் எப்படித் திட்டமிடுகின்றன, எவ்வாறு செயல்முறைப்படுத்தப்படுகிறது… என அனைத்து விவரங்களும் தெள்ளத்தெளிவாகக் கற்றுத் தேர்ந்தேன்.

அந்த நிறுவனம் மூலமாகப் பெரிய பெரிய கம்பெனிகளின், கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்முறைகள் என என் அறிவுக்கு நல்ல தீனி கிடைத்தது. சம்பளம் என்னவோ கைநிறைய கிடைத்தாலும், புனே போன்ற நகரங்களில் அந்தச் சம்பளம் கைக்கும் வாய்க்கும் எட்டாமலே இருந்தது. அதனால், கோவைக்கு ரயில் ஏறினேன். இங்கு வந்தவுடன் பிராம்ப்ட் இன்ஃபோடெக் சங்கர்ராஜ் சாரிடம் பேசினேன். அங்கு மறுபடியும் எனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினேன். இந்த நிறுவனத்தின் மூலம், நான் இதுவரை15 நாடுகளில் பயணம் செய்துள்ளேன், பல சர்வதேச வாடிக்கையாளர்களைச் சந்தித்து அவர்களுடன் பல திட்டங்களில் பணிபுரிந்தேன், மேலும் எனது அறிவை சர்வதேச அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

எங்கள் திட்டங்களில் என்னுடன் பணிபுரியும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த டெவலப்பர்கள் மற்றும் பயிற்சியாளர்களை உள்ளடக்கிய சர்வதேச மென்பொருள் மேம்பாட்டுக் குழுவிற்கும் நான் தலைமை தாங்குகிறேன். ஐந்தாண்டுகள், பதினைந்து வெளிநாடுகள், கணக்கில்லாத தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் என எங்கள் குழுவின் அயராத உழைப்பால் பிராம்ப்ட் இன்ஃபோடெக் இந்திய அளவில் தலைசிறந்த பத்து நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. அதில் எனது பங்கும் உள்ளது என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

எனது தங்கை கல்லூரி இறுதியாண்டு முடிக்கும் நிலையில் சென்னையில் அவளுக்கும் நேர்முகத் தேர்வில் பணி கிடைத்துள்ளது. இந்த சோதனையான ஆறாண்டு காலத்தில் எங்களைப் பலரும் இழிவாகப் பேசிய நிலையிலும் தோல்வியை எனது பக்கத்தில் வரவிடாமல் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளை நோக்கி செயல்பட்டதால், அடுத்தடுத்து முன்னேற்றத்தை சுவைக்க முடிந்தது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தொழில் ஒரு முக்கிய விஷயம். அதை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். உங்கள் முழு திறனையும் எடுத்துகாட்ட சுதந்திரம் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவதோடு, உங்களை ஆதரிக்கும், ஊக்குவிக்கும் நபர்களை உங்கள் பக்கத்திலேயே வைத்திருப்பது மிகவும் முக்கியமானது.
எனவே, பெண்களுக்கு நான் கூறவிரும்புவ தெல்லாம் ஒன்றே ஒன்றுதான், இயற்கையிலேயே பயந்த சுபாவம் கொண்டவர்கள் பெண்கள் எனும் கருத்தைத் தகர்த்து, குடும்பம் என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கிறோம் என்ற நினைப்பை உதறி, உங்களைச் சுற்றி அமைக்கப்பட்ட கற்பனை எல்லைகளை உடைத்து சீறிப் புறப்படுங்கள். எதை நீ நினைக்கிறாயோ அதற்கான குறிக்கோளை நோக்கி சரியான திட்டமிடலுடன் நீங்கள் காய் நகர்த்தினால் வாழ்க்கையில் சோதனை என்ற படிக்கட்டுகள் உங்களைத் தானாகச் சிகரத்தின் உச்சிக்குக் கொண்டு செல்லும்’’ என்றார் நம்பிக்கை நாயகி சௌமிதா செந்தில்ராஜ்.Post a Comment

Protected by WP Anti Spam